Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நெருக்கடியான நிலைக்குள் தமிழ் தேசிய அரசியல்: புரிந்துகொள்வார்களா தலைமைகள்…?

நெருக்கடியான நிலைக்குள் தமிழ் தேசிய அரசியல்: புரிந்துகொள்வார்களா தலைமைகள்…?

-நரேன்-

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இந்த நாட்டில் தமிழ் தேசிய இனத்திற்கும், சிங்கள தேசிய இனத்திற்கும் இடையில் இருந்த கசப்புணர்வு பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் சிங்கள மக்களிடம் சுதந்திரம் என்ற பேரில் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறியதில் இருந்து அது தீவிரம் பெற்றது. இந்த நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலியுறுத்தி உருவாகிய ஐக்கிய தேசியக் கட்சியும், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மேலைத்தேச சார்ப்பு நிலைக்கு எதிராக சுதந்திரம் என்ற கோசத்துடன் உருவாகிய சிறிலங்கா சுதந்திர கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்தாது ஒடுக்கி ஆளும் நடவடிக்கையையே மேற்கொண்டு வந்தன. தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஆளுவதை மையமாக கொண்டு ஆட்சி செய்தமையால் பௌத்த மேலாதிக்கவாத சிந்தனைகள் தெற்கில் பரவலடைய காரணமாக அமைந்திருந்தது. அதனடிப்படையில் தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காகவும், இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்காகவும் ஜனநாயக ரீதியாகவும், ஆயுத வழியாகவும் போராடியிருந்தது. சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் முன்னைய மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தால் தமிழ் மக்களின் ஆயுத வழிப்போராட்டம் அடக்கப்பட்டது. அதனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் 2009 மே 18 இற்கு பின்னர் வேறு வடிவம் பெற்றிருந்தது.

சர்வதேச நாடுகளை நம்பிய ஒரு ஜனநாயக வழிப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய இனம் தள்ளப்பட்டிருந்தது. இதற்கு தமிழ் மக்களை வழிநடத்தக் கூடிய ஒரு சிறந்த ஜனநாயக கட்டமைப்பு இருந்திருக்கவில்லை. போர் முடிந்த கையுடன் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேலே இருந்தது. யுத்தம் நடைபெற்ற போது முள்ளியவாய்காலில் பல்லாயிரக்கண்கான மக்கள் செத்து மடிந்த போது போரை நிறுத்துவதற்கும், தமிழ் மக்களின் அழிவை தடுத்பதற்கும் கடுமையாக முயற்சி செய்யாது, தமது பாராளுமன்ற கதிரைகளை சூடேற்றிக் கொண்டு, இருந்த கூட்டமைப்பை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்குஏற்பட்டது. அதற்கு காரணம் அந்த அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தமையே. இன்று யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் ஆகின்ற நிலையில் அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கைக்கான அமைப்பாக தொழிற்பட்டிருக்கிறதா…?, மாறி வந்த சர்வதேச அரசியல் சூழலை சரியாக பயன்படுத்தியதா…?, தாம் ஆதரித்து கொண்டு வந்த இந்த அரசாங்கத்தின் மூலம் ஏதாவது சாதிக்க முடிந்ததா…? என்ற பல கேள்விகள் தற்போது எழுகிறது. இந்த கேள்விகளுக்கான விடைகளை தேடும் போது கூட்டமைப்பு தலைவரின் இராஜதந்திரம் என்ன…? என்ற கேள்வியே எழுகிறது. பொறுமையாக இருங்கள். எல்லாம் நல்லபடியாக நடைபெறுகிறது. நாம் இராஜ தந்திர ரீதியாக நகர்கின்றோம் எனக் கூறிய இரா.சம்மந்தன் தனது இராஜ தந்திரத்தால் இந்த 8 வருடத்தில் எதைச் சாதித்தார் என்ற கேள்வி பரவலாக மக்களிடம் எழுந்துள்ளது.

இன்று தமிழர் அரசியல் 2017 ஆம் ஆண்டு வேறு வடிவத்தை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. சர்வதேச நாடுகளை நம்பிய ஒரு ஜனநாயக அரசியலை 7 வருடமாக முன்னெடுத்திருந்த போதும் தலைமைகளின் பலவீனம் காரணமாக அந்த நகர்வு தோற்றுள்ளது என்ற கருதமுடிகிறது. தற்போதைய சூழலில் சர்வதேசம் நல்லாட்சி எனக் கூறும் இந்த அரசாங்கம் பக்கம் சார்ந்து செயற்படுவதாகவே தமிழ் மக்கள் கருதுகிறார்கள். அதனை மறுத்து விடவும் முடியாது. ஏனெனில் இந்த நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் என்பவற்றில் அரசாங்கம் கேட்கும் கால அவகாசங்களையும், அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் அரசாங்கத்தின் இழுதடிப்பு நடவடிக்கைகளை கண்டும் காணாமல் இருப்பதுடன் அரசாங்கத்திற்கு ஆதரவையும் வழங்குகிறது. சர்வதேச நாடுகளின் இந்து சமுத்திர கடலாதிக்க பூகோள அரசியல் சதுரங்க விளையாட்டில் தமிழ் மக்கள் துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்பட்டனர். இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் அமைந்திருப்பதை தமிழ் தலைமை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நோக்கவேண்டியுள்ளது. . உள்நாட்டிலும் மக்கள் கொடுத்த ஆணையைப் பயன்படுத்தி உரிய அழுத்தங்களை கொடுப்பதற்கு முறையான நடவடிக்கைகளை கூட்டமைப்பின் தலைவர் மேற்கொண்டதாக தெரியவில்லை. மக்களின் ஆணையின் மூலம் கிடைக்கப்பெற்ற எதிர்கட்சித் தலைவர் என்னும் பதவியைக் கொண்டும் சர்வதேச சமூகத்திற்கு உரிய அழுத்தங்களை கொடுத்திருப்பதாகவும் தெரியவில்லை. இதனால் தற்போது தமிழ் மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சர்வதேச அழுத்தம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதன்காரணமாக மீண்டும் சர்வதேசத்தை தமிழ் மக்கள் பக்கம் கவனம் செலுத்த வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தலைமைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் அந்த அழுத்தத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை ஒரு நியாயமான தீர்வினை வழங்குவதற்கு இணங்க வைக்க வேண்டிய பொறுப்பும் தமிழ் தலைமைகளுக்கு உள்ளது. தமிழ் தலைமைகள் இந்த பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கும் ஒன்றுகூடல்களுக்கும் தமிழ் மக்கள் தயாராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2017 ஆம் ஆண்டு தமிழர் அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் மக்களை அணிதிரட்டுவதற்கும், அவர்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கும், ஒரு விடுதலைப் போராட்டத்தில் மக்களைப் பங்காளர்களாக்கி அவர்களுக்கு தலைமை கொடுத்து வழிநடத்தும் ஆற்றலும், ஆளுமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைக்கும் என்று கூறிய இரா.சம்பந்தன் அதற்கு ஏற்ற வகையில் காய்களை நகர்த்தியதாகவோ அழுத்தங்களை பிரயோகித்ததாகவோ தெரியவில்லை.

புதிய அரசியலமைப்பில் இந்த அரசாங்கம் தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்து பௌத்த சாசனத்திற்கு முன்னுரிமையளித்து, ஒற்றையாட்சி முறையையே ஏற்படுத்த முனைகிறது. இது தான் தற்போதைய ஜதார்த்தம் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். இதன்காரணமாகவே மேற்குறித்த கேள்விகளும் சந்தேகங்களும் எழுகின்றன.

தென்னிலங்கை அரசியல் சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையத் தான் தீர்வு என்றால் இவ்வளவு காலம் தமிழ் சமூகம் போராடியிருக்க வேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பின் தலைவரும் நாங்கள் எங்களுக்கு உரித்துடையதைத் தான் கேட்கிறோம். யாசகம் கேட்கவில்லை. எமக்கு உரியதை யதாரும் மறுக்க முடியாது என்று சொல்லியிருக்க வேண்டிய தேவையும் இல்லை. தனிநாடு கேட்டு போராடிய ஒரு சமூகம் அதில் இருந்து இறங்கி வந்து சகல தேசிய இனங்களும் கைகோர்த்து நடப்பதற்கு ஒரு யோசனையை முன்வைத்துள்ள நிலையில் அதனை ஒடுக்குகின்ற அரசாங்கம் ஏற்றுக் கொள்ள செய்வதிலும் இணங்க வைப்பதிலுமே ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாசைகள் ஓரளவிற்காவது நிறைவேறும். தற்போதைய சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் புதிய அரசியலமைப்புக்கு எதிராக செயற்படக் கூடிய நிலையில் இல்லை. புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்களிப்புக்கு வரும் பட்சத்தில் கூட அதனை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும். இதை அடிப்படையாக வைத்து நாம் இன்னும் முன்னேறுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் அதன் மூலம் இந்த நாட்டில் இதுவரை இருந்து வந்த இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதாகவே இந்த அரசாங்கம் காட்ட முயலும். அதன் பின் கத்துவதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்து கொண்டு கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக செயற்படும் பட்சத்தில் தமிழ் மக்கள் தமது நியாயமான கோரிக்கைகாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து செயற்படுவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. அல்லது தமிழ் மக்களை வழிநடத்தக் கூடிய வேறு ஓரு தலைமை உருவாகியிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் ஆகிய நான்கு கட்சிகளின் கூட்டாக இருக்கிறது. ஆனால் தீர்வு உள்ளிட்ட பேச்சுக்கள், இராஜதந்திர நகர்வுகளை தமிழரசுக் கட்சி தான் செய்கிறது என அவர்கள் மேல் குற்றம் சாட்டிவிட்டு ஏனைய பங்காளிக் கட்சிகள் தப்பிக்க முயற்சிக்கின்றன. அதற்கு காரணம் ஏனைய கட்சிகளின் கருத்துக்களையறியாது தமிழரசுக்கட்சியின் இரா.சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் கட்சி ஜனநாயகம் இன்றி செயற்படுவதே காரணம் என பலரும் கூறுகிறார்கள். இருப்பினும் தமிழரசுக் கட்சி மேல் தனித்து குற்றத்தை போட்டுவிடுவது சரியா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் அல்லது அவர்கள் தீர்வு விடயத்தில் மேற்கொள்ளும் செயற்பாடுகள் தவறானவை என சில பங்காளிக்கட்சிகள் வெளிப்படையாக குற்றம் சாட்டுகின்றன. இவை ஒன்றும் புதிதல்ல. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்த நிலையே இருந்து வருகிறது. தற்போது அது கொஞ்சம் தீவிரம் பெற்றிருக்கிறது. அப்படியாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சரியாக கொண்டு செல்ல வைக்க வேண்டிய பொறுப்பு பங்காளிக்கட்சிகளுக்கு இல்லையா…?. கூட்டமைப்பின் உட்கட்சிப் பிரச்சனையில் பங்காளிக்கட்சிகள் ஒவ்வொன்றும் தாங்கள் தமிழரசுக் கட்சியின் ஏகபோகவாதத்தை முறியடிப்பதற்கும், அதனை ஜனநாயக வழிப்படுத்துவதற்கும் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பது இன்றுவரையில் சிதம்பர இரகசியமாகவே இருக்கிறது.

கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தமிழரசுக் கட்சியினர் சொல்வதைக் கேட்கவில்லை. பிழையாகத் தான் செயற்படுகிறார்கள் என்றால் வெளியேறி ஒரு எதிர்ப்பை காட்டி மக்களுக்கு தெளிவுபடுத்தி மக்கள் விரும்புகின்ற ஒரு தீர்வை நோக்கி வழிநடத்த வேண்டிய பொறுப்பும், தர்மீக கடமையும் ஏனைய பங்காளிக்கட்சிகளுக்கு இருக்கிறது. இந்தக் கடமையில் இருந்து அவர்கள் தப்ப முடியாது.

மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான விடுதலையும் உரிமையும் கிடைக்கும் வரை இந்த ஐக்கியம் நீடிக்க வேண்டும் என்றே வாக்களித்துள்ளார்கள். அந்த உரிமைகள் மற்றும் விடுதலை உணர்வுகள் ஆகியவற்றை சமரசம் செய்து கொள்ளும் அரசியல் தலைமையை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இதற்கு சிறந்த உதாரணம் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். அது அனைத்து தமிழ் மக்களும் தங்களது தலைமைக்கு கொடுத்த எச்சரிக்கை மணி. இதனை பேரவையினர் உட்பட அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். இருக்கின்ற தலைமை சரிவரா விட்டால் புதிய தலைமையை உருவாக்குவதற்கும் மக்கள் தயாராகவே இருப்பார்கள்.

மக்களை சரியாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு தலைமைகளிடம் இருக்கின்றது. அதை விடுத்து தனது தலைமையை அல்லது ஒரு சிலரை குற்றம் சாட்டிக் கொண்டு, அவர்கள் அந்த தவறை செய்வதற்குரிய பலத்தை கொடுத்துக் கொண்டிருப்பது என்பதும் தவறானதே. இது குறித்து பங்காளிக் கட்சித் தலைவர்கள் இனியாவது சிந்திக்க வேண்டும். புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் உடைய அபிலாசைகளில் சமரசம் செய்து கொள்ளாத தீர்வு நோக்கி தமிழ் மக்களை வழிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய நிலையில் தமிழ் தலைமைகள் இருக்க வேண்டும்.

மறுபுறம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராகவும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகவும் உள்ள சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை இனியும் தொடர்ந்து விமர்சிப்பதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. அவர் தான் பிரதிநித்துவப்படுத்தும் அந்தக் கட்சி தலைமையுடன் பேசி தமிழ் மக்கள் நலன்சார்ந்து இணைந்து பயணிக்க வேண்டும். அல்லாது விடின், வடமாகாண முதலமைச்சர் அவர்களின் கருத்துக்கள் மேல் தமிழ் மக்கள் தற்போது நம்பிக்கை வைத்துள்ளார்கள். புலம்பெயர் நாடுகளிலும் அவருக்கான ஆதரவு என்பது தற்போது அதிகரித்து வருகிறது. அவற்றை சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்கள் நிரந்தரமான நியாயபூர்வமான தீர்வை நோக்கி நகர ஒரு தலைமைத்துவத்தை சரியாக வழங்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. கூட்டமைப்புக்குள் உள்ள அதிருப்தியாளர்களையும், பேரவைக்குள் உள்ளவர்களையும் இணைத்து ஒரு அரசியல் பாதையில் பயணித்து 2017 ஆம் ஆண்டு தீர்வைப் பெற கடும் அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அதை விடுத்து கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு அதனை விமர்சிப்பதால் தற்போதைய அரசியல் சூழலில் எதையும் சாதித்து விட முடியாது. முதலமைச்சரும் சரி, பங்காளிக் கட்சிகளும் சரி கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு தலைமை மேல் பழியைப் போட்டு விட்டு தாம் தாம் தப்ப முயல்வது என்பது தமது இருப்புக்கான ஒரு அரசியல் நகர்வு என்ற எண்ணவேண்டியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே தமிழ் தேசிய அரசியல் பயணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கும் பெரும் பங்குண்டு. தொடர் தோல்விகளுடன் மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்டிராத போதும் கூட்டமைப்பின் எதிர்கட்சியாக அதுவே திகழ்கிறது. இதனால் கூட்டமைப்பின் தவறுகளை தெளிவுபடுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு அரசியலை அந்தக் கட்சி கொண்டு செல்ல வேண்டும். அதனை விடுத்து அந்தக் கட்சியும் கூட்டமைப்பு தலைமையின் கருத்துக்களுக்கு வியாக்கியானம் கொடுத்துக் கொண்டிருப்பதால் எதையும் அடைய முடியாது. தமிழ் மக்களின் அரசியல் தளம் என்பது தளம்பிக் கொண்டிருக்கக் கூடிய இந்த சூழலில் தான் அரசாங்கம் புதிய அரசியலமைப்புக்கான காய்நகர்த்தல்களை மிகவும் சாதுருயமாக மேற்கொள்கிறது. இதில் உள்ள சூட்சுமங்களை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டிய முக்கியமான கட்டத்தில் தமிழ் தலைமைகள் இருக்கின்றன. இதை அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஆக, தமிழ் தேசிய அரசியல் என்பது நெருக்கடியான நிலைக்குள் வந்து நிற்கின்றது. இதனை சரியான பாதைக்கு யார் எவ்வாறு கொண்டு செல்லப் போகிறார்கள் என்பதே எல்லோரிடமும் எழும் கேள்வி.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *