Search
Thursday 17 January 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பரம்பொருளின் பேருண்மையை உணர்த்திநிற்கும் சிவராத்திரியும் தமிழ் இலக்கிய சான்றுகளும்

பரம்பொருளின் பேருண்மையை உணர்த்திநிற்கும் சிவராத்திரியும் தமிழ் இலக்கிய சான்றுகளும்

பிறேமலதா பஞ்சாட்சரம்

“தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி”   என்று மாணிக்கவாசகர்  சிவபெருமானை ஏற்றிப்  புகழ்கின்றார். இப் பாடலடியானது சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட சைவ சமயமானது   ஆதியில் தென்னாட்டிலே தோன்றியது என்பதைச் சொல்கின்றது . அதாவது தமிழரின் பூர்வீக நிலமாகிய   குமரிக்கண்டத்திலேயே தமிழ்மொழி தோன்றியது. அத்  தமிழ் மொழி முதல் சங்கம் , இடைச் சங்கம் , கடைச்சங்கம் போன்றவற்றால்  வளம் பெற்றது.

முதற்சங்க காலப்பகுதி கி.மு. 9000 (நக்கீரரனாரால் கணிக்கப் பெற்றது) ஆண்டுகள் பழமை வாய்ந்ததுடன் சிவனை (விரிசடைக் கடவுள்) தலைவராகக் கொண்டு   அகத்தியரால்  நிறுவப் பட்டது . இதன் அமைவிடம் தென்  மதுரை ஆகும். இத் தென் மதுரையானது கடலுக்குள் மூழ்கி போன குமரி கண்டத்தில் அமையப் பெற்ற  பாண்டிய அரசர்களின் முதல் தலை நகரம் ஆகும். இதனை குறிக்கும் முகமாகவே மாணிக்க வாசகர் ‘தென்னாடுடைய சிவனே’ என சிவனை விளிகின்றார்.

சங்க கால இலக்கண நூலான தொல்காப்பியத்தில் (7000 ஆண்டுகள் பழமையானதென தமிழக அறிஞர் திரு குணா அவர்களால் நிறுவப்பட்டுள்ளது)    காணப்படும் கடவுள், கந்தழி, சுட்டிறந்தவன் என்பன சைவசித்தாந்தக் கருத்துகள் செறிந்த இறைவனைச் சுட்டுகின்ற தமிழ்ப் பதங்களாகும். தொண்ணூற்றாறு தத்துவங்களையும் கடந்தவன் (எல்லாவற்றையும் கடந்தவன்) என்ற அருமையான பொருட்செறிவுடைய பதமே கடவுள். சுட்டிறந்தவன் என்பது எல்லாவற்றையும்  கடந்தது நிற்கும் இறைவன் தோற்றக்கேடில்லாதவன் என்ற பொருளைத் தருகின்றது. மேலும் தொல்காப்பியர்  “வினையின் நீங்கி விளக்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்” என்று சிவனை கூறுகின்றார்

“ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து

தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து

கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி

மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி

படுபறை பல இயம்ப…. என கலித்தொகையிலும் ,

“நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் …..”என்று ஐங்குறுநூறிலும்,   சிறுபாணாற்றுப்படையில்  “நீலநாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வர் எனவும் “எரி எள்ளு அன்ன நிறத்தன்” என பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்தும்  சிவனை புகழ்ந்து பாடுகின்றன.

இச் சங்க கால நூல்களின் மூலம் சிவவழிபாட்டின் தொன்மையை  நாம் அறிந்து கொள்ள முடிவதோடு  சங்க காலத்திற்கு பின்னரான தமிழ் இலக்கிய நூல்களான சங்க மருவிய கால மணிமேகலை மற்றும் தேவாரங்கள் பெரிய புராணம் எல்லாமும் சிவனை துதித்து பாடுகின்றன.

“மன்னு மாமலை மகேந்திர மதனிற்

சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்….”

திருவாசகத்தின் குறிப்புப்படி, தென்னாட்டிலேயே மகேந்திரமலையில் சிவபெருமான் ஆகமங்களை சொன்னார் என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. தென்னாட்டை தாக்கிய கடற்கோளில் இந்த மகேந்திரமலை மூழ்கிற்று என்பர் ஆய்வாளர்கள்.

தமிழில் இவை எழுதாக் கிளவியாக தலைமுறை தலைமுறையாக பயன்பாட்டில் இருந்து கடற்கோளில் மறைய பின்னர் மாணிக்கவாசகருக்கே அவ்வாகமப் பொருள் சிவபெருமானே குருவாக எழுந்தருளி உணர்த்துகின்றார்.

 சிவன்- இலிங்கம்- சிவலிங்கம் 

சிவன் என்பது தமிழ்ச் சொல்  சிவப்பு எனும் சொல்லில் இருந்து சிவன் என்ற பதம் உருவானது என கொள்ளப் படுகின்றது. அதாவது சிவன் செந்நிற உடல் கொண்டவர், தீயாகியவர் என்னும் காரணத்தாலேயே இப்பெயர் தோன்றியிருக்க வேண்டும்.  இதற்கு மேலும் வலுசேர்ப்பதாக தமிழ் நாட்டிலுள்ள   திருவண்ணமலையிலுள்ள அண்ணாமலை சிவனின் வடிவம் மலையே இலிங்கம் என சைவர்கள் கூறுவார்கள் .

sivalingam

இலிங்கம் என்பது ஒரு தமிழ்ச் சொல், லிங்கம் அல்ல.இலிங்கம் எனும் சொல் வடமொழியிலிருந்து வந்தது என்பதை ஏற்றுக்கொள்ளல் ஆகாது. கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது எனலாம்.

இலிங்கம் என்பது இலக்கு அல்லது இலங்கு பொருள்படும்.  இலக்கு என்ற பதத்திற்க்கு குறிக்கோள் என்னும் பொருளும் இலங்குதல் என்னும் பதத்திற்கு  ஒளிர்தல் அல்லது  விளங்குதல் என்றும் பொருள் படும். அதாவது

மேலும் தமிழில் இலிங்கம், சத்திலிங்கம், சிவலிங்கம் என்று மூன்று சொற்கள் உள்ளன. இதில்  இலிங்கம் என்பதற்கு  உயிர், அணு எனும் ஒத்த பதங்களும் உண்டு. இலிங்கம் என்றால் உயிரின் அணு, ஒளி, ஒலி. அதிலிருந்து வந்ததுதான் சத்தி இலிங்கம், சிவ இலிங்கம் என்ற சொற்கள்.

அதாவது இலிங்க வடிவமென்பது  ஆன்மா வாகிய உயிர் எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்கும் சின்னமாக உள்ளது எனலாம். ஒவ்வொரு அணுவும் ஒரே மாதிரி இருக்கும். ஓர் அணுவைப் பிளந்து பார்த்தால் அது பிரிகின்ற தோற்றம்தான் இலிங்கம். உயிரின் இரகசியம்தான் இலிங்கம். இதனயே சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில்  “காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”. என்கிறார்.

திருவண்ணாமலைக்கும் சிவராத்திரிக்குமுள்ள தொடர்பு

thiruvannamalaiதிருவண்ணாமலை சிவனுக்கும் சிவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்புள்ளதை சைவ சமயம் கூறுகின்றது.  படைத்தல் கடவுளாகிய நான்முகனுக்கும்  , காத்தல் கடவுளாகிய  திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது, சிவன் நெருப்பு பிளம்பாக தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ காணுபவரே பெரியவர் என்று கூற சிவ பெருமானின் திருவடியை (அடியைக்) காண திருமால் பன்றி வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். நான்முகன்  அன்ன வடிவெடுத்து பறந்து சென்று சிவனின்   முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டுகள்   பயணம் செய்தும் அவருடைய  அடி, முடியைக் காணாமல் திருமாலும் நான்முகனும் தமது தவறை உணர்ந்து வருந்தி  நிற்க நெருப்பு பிளம்பாக நின்ற  சிவன் அவர்களுக்கு  இலிங்கமாக காட்சி கொடுத்த நாளே சிவராத்திரியாக க்   கொண்டாடப் படுகின்றது.

மாணிக்கவாசகர் தில்லையிலே பாடிய திருவாசகத்தின் போற்றி திருவகவலில்…

“நான்முகன் முதலா வானவர் தொழுது எழ

ஈர் அடியாலே மூவுலகு அளந்து

நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்

போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று

அடிமுடி அறியும் ஆதரவு அதனில்

கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து

ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து

ஊழி முதல்வ சயசய என்று

வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்

வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில் … “

என்று சிவன் ஒளிப்பிழப்பாக தோன்றிய சிவராத்திரி  பற்றி  மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.  திருவாசகத்தின்    தனிச்சிறப்பு  எதுவெனில்  “சிவன் தன்னுடைய சிந்தையிலே நின்றதனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருத்தாள்களை வணங்கி,தான்  உரைத்த திருப்பாடல்கள் அவை எனவும்  அவற்றை சிவபெருமானே நேரில் வந்து, தன்னுடைய திருக்கரத்தினால் எழுதி, அந்நூலின் “திருக்கடைக்காப்புப்பகுதியில், “இவை எழுதியது, அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து” என்று கையெழுத்திட்டு அருளிய நூல் ஆதலாலும் அந்நூலின் பொருளைத் தில்லை மூவாயிரவர் கேட்டபோது, நூலின் பொருள், திருச்சிற்றம்பலத்து இறைவனே என்று மாணிக்கவாசகரால் சுட்டிக்காட்டப் பட்ட பெருமையுடையதுமாகையால் அத் திருவாசகத்து போற்றி திருவகவல் கூறும் சிவனின் சிவராத்திரி தினத்தின் பெருமையையும் மகிமையையும் அறிந்து   இப்புண்ணிய நாளில் ஆதி இறையாகிய சிவனை வழிபடுவோமாக .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *