Search
Wednesday 21 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]
தலைப்பு செய்திகள்

பாரிசவாத நோய் என்றால் என்ன? உங்களையும், மற்றவர்களையும் பாதுக்காக நீங்கள் அவசியம் அறியவேண்டியவை

பாரிசவாத நோய் என்றால் என்ன? உங்களையும், மற்றவர்களையும் பாதுக்காக நீங்கள் அவசியம் அறியவேண்டியவை

மருத்துவர் சி. யமுனாநந்தா

மனித உடலின் மிகவும் பிரதானமான உறுப்புக்களில் மூளையும் ஒன்றாகும். இது உடற்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுடன் எமது எண்ணங்கள், கற்றல், உணர்தல், தொடர்பாடல் முதலிய உளத்தொழிற்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றது. மூளைக்குத் தேவையான முக்கியமான போசணைப் பொருட்களும் ஒட்சிசனும் குருதியின் மூலம் மூளைக்குத் தொடர்ச்சியாகக் கடத்தப்படுதல் அவசியமாகும். மூளைக்குக் குருதிச் சுற்றோட்டம் இல்லாதுவிடின் மூளைக்கலங்கள் பழுதடைந்துவிடுகின்றன அல்லது அழிவடைந்து விடுகின்றன. மூளையின் குருதிச்சுற்றோட்டம் தடைப்படுவதனால் அதன் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு உடலின் ஒரு பகுதி தனது செயலை இழக்கும் நிலை பாரிசவாதம் (stroke) ஆகும். உதாரணமாக உடலவயங்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு பாரிசவாதம் ஏற்படின் அவ்வவயங்களின் தொழிற்பாடு பாதிக்கப்படும் அல்லது செயலிழந்துவிடும்.

பாரிசவாதம் இரு வகைகளில் ஏற்படலாம். அவையாவன :

1) மூளைக்குரிய குருதிக்குழாய்கள் அடைபட்டு குருதிச்சுற்றோட்டம் தடைபடுவதனால் ஏற்படும் பாரிசவாதம் (‘ischaemic’ stroke).

2) மூளைக்குரிய குருதிக்குழாய்கள் வெடித்து இரத்தக்கசிவு ஏற்படுவதனால் ஏற்படும் பாரிசவாதம் (‘haemorrhagic’ stroke).

1) குருதிச்சுற்றோட்டம் தடைப்படுவதனால் ஏற்படும் பாரிசவாதம் (‘ischaemic’ stroke)

stroke_isc_webகுருதிச்சுற்றோட்டம் தடைபடுவதனால் ஏற்படும் பாரிசவாதத்தில் (‘ischaemic’ stroke) இரத்தக்கட்டியொன்று (thrombus) குருதிக்குழாய்களை அடைப்பதனால் மூளைக்குச் செல்லும் குருதி தடைபட்டு மூளைக்கலங்கள் பாதிப்படைகின்றன. இதுவே பொதுவாக ஏற்படும் பாரிசவாதமாகும். 80% அதிகமானோர் இவ்வகைக்குரிய பாரிசவாதத்தினாலேயே பாதிக்கப்படுகின்றனர்.

இரத்தக்கட்டியானது வெவ்வேறு இடங்களில் தோன்றலாம்.
*இரத்தக்கட்டியானது மூளையின் பிரதான குருதிக்குழாயைத் தடைசெய்யலாம்.
*இரத்தக்கட்டியானது இதயத்தில் அல்லது கழுத்துப்பகுதியிலுள்ள பெரிய குருதிக்குழாய்களில் ஏற்பட்டு குருதிச்சுற்றோட்டத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு மூளையிலுள்ள சிறிய குருதிக்குழாய்களை அடைக்கலாம். இது ‘embolism’ எனப்படும்.
*இரத்தக்கட்டியானது மூளையின் உள்ளீட்டிலுள்ள மிகச் சிறிய குருதிக்குழாய்களையும் அடைக்கலாம். இது (Lacunar Stroke) எனப்படும்.

2)குருதிக்குழாய்கள் வெடித்து குருதிக்கசிவு ஏற்படுவதனால் ஏற்படும் பாரிசவாதம் (‘haemorrhagic’ stroke)

Hemorrhagic Strokeகுருதிக்குழாய்கள் வெடித்து குருதிக்கசிவு ஏற்படுவதனால் ஏற்படும் பாரிசவாதம் (‘haemorrhagic’ stroke) ஆகும். இது 15% மானவர்களில் காணப்படுகின்றது. குருதியமுக்கம் சடுதியாக அதிகரிக்கப்படுவதனால் குருதிக்குழாய்கள் வெடித்து மூளையினுள் குருதிக்கசிவு ஏற்படும். இங்கு கசிவடையும் இரத்தத்தின் அமுக்கவிளைவு மூளைக்கலங்களைப் பாதிப்படையச் செய்கின்றது.

சிறியளவிலான பாரிசவாதம் ‘mini stroke’ என்பது

தற்காலிகமாக சிறிது நேரத்திற்கு குருதிச்சுற்றோட்டம் தடைப்படும்போது ஏற்படும் தாக்கம் – (transient ischaemic attack /TIA)

சிறியளவிலான பாரிசவாதம் (mini stroke) என்பது சிறிது நேரத்திற்கு குருதிச்சுற்றோட்டம் தடைப்பட்டு, ஆனால் மீண்டும் உடனடியாக குருதிச்சுற்றோட்டம் சீராகும்போது தற்காலிகமாக பாரிசவாதத்திற்குரிய குணங்குறிகள் தோன்றி மறையும் செயற்பாடாகும். இது பாரிசவாதத்தைப் போன்றது. ஆனால் சில நிமிடங்கள் அல்லது மணித்தியாலங்கள் நிலைத்திருந்து விரைவில் மறைந்துவிடும்.

பாரிசவாதத்தின் உடனடிப் பாதிப்புக்கள்:

FAST* முகம், கை, கால்களில் ஏற்படும் விறைப்பு அல்லது பலவீனம் குறிப்பாக உடலில் ஒரு பக்கத்தில் ஏற்படும்.
* கதைப்பதில் அல்லது விளங்கிக் கொள்வதில் மாறாட்டம் அல்லது சிரமம் ஏற்படும்.
*ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வையிழப்பு ஏற்படும். அனேகமாகத் தாம் பார்க்கும் பொருட்களில் அரைப்பங்கையே காண்பார்கள். சில வேளைகளில் பொருட்கள் இரண்டாகத் தென்படும்.
* நடப்பதில் சிரமம், தலைச்சுற்று, சமநிலை ஒருங்கிணைத்தல் தொழிற்பாடுகள் பாதிக்கப்படல், விழுங்குவதில் கடினம் என்பன ஏற்படும்.
* சடுதியான, உக்கிரமான தலையிடி ஏற்படலாம்.

எமது உடலின் வலது பக்கத்தை இடதுபக்க மூளையும், இடது பக்கத்தை வலதுபக்க மூளையும் கட்டுப்படுத்துகின்றது. மூளையின் வெவ்வேறு பகுதிகள் உடலின் வெவ்வேறு பகுதிகளில் செயற்பாடுகளையும், உளத்தொழிற்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றது.

எனவே இடதுபக்க மூளை பாதிக்கப்படும்போது உடலின் வலது பக்கம் பாதிக்கப்படுகின்றது. வலதுபக்க மூளை பாதிக்கப்படும்போது உடலின் இடது பக்கம் பாதிக்கப்படுகின்றது.

எமது சகல செயற்பாடுகளையும் மூளையே கட்டுப்படுத்துகின்றது. உதாரணமாக எமது அசைவு, சமநிலை, உணர்வு, கேட்டல், பார்த்தல், சிந்தித்தல், விளங்கிக் கொள்ளல், ஞாபகப்படுத்தல் என்பவற்றை மூளையே கட்டுப்படுத்துகின்றது.

அதிகமானோரில் மொழி-பேச்சு, விளங்கிக்கொள்ளுதல், வாசித்தல், எழுதுதல் என்பன இடதுபக்க மூளையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வலதுபக்க மூளையானது உணர்வுகளுக்குரிய பயிற்றப்பட்ட செயற்பாடுகளுக்கும் (பார்த்தல், கேட்டல், தொடுகைக்கான துலங்கல்), கணிப்பீட்டுக்குரிய செயற்பாடுகளுக்கும் (அளவு, வேகம், தூரம் அல்லது வெளியில் நிலையைக் கணித்தல்) பொறுப்பானது.

இடதுமூளையின் கதைப்பதற்குப் பொறுப்பான பகுதி பாதிப்படையின் நோயாளிக்குக் கதைக்க முடியாதிருக்கும். ஆனால் விளங்கிக் கொள்வதற்கான பகுதி பாதிப்படையவில்லையாயின் அவரினால் மற்றையவர்கள் கதைப்பதினை விளங்கிக்கொள்ள முடியும்.

பாரிசவாதத்தினை விரைவாக அடையாளங்கண்டு விரைவாகச் சிகிச்சையளித்தல் அவசியமானதாகும் (Act ”FAST”)

F – Facial weakness
முக அசைவுகளின் பலவீனம்
சிரிக்க முடியாதிருத்தல், வாய் ஒரு பக்கத்திற்கு இழுக்கப்படுதல்.

A – Arm weakness
அவயங்களின் பலவீனம்
கைகளை உயர்த்த முடியாதிருத்தல், கால்களை உயர்த்த முடியாதிருத்தல், ஒரு பக்க அவயங்கள் பலவீனமுறல் அல்லது ஒரு பக்கத்திற்கு இழுக்கப்படுதல்.

S – Speech weakness
தெளிவாகப் பேச முடியாதிருத்தல், கதைப்பதனை விளங்காது இருத்தல்.

T – Test all three functions
மேற்குறித்த மூன்று தொழிற்பாடுகளையும் பரிசோதித்து ஏதாவது வேறுபாடு காணப்படின் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறப்படல் வேண்டும்.

சிகிச்சை முறைகள்

tpa-intravenous-therapyகுருதிக்குழாய்களில் குருதிக்கட்டிகள் படிவடைவதனால் ஏற்படும் பாரிசவாதத்திற்கு குருதிக் கட்டிகளைக் கரைக்கும் ஆர் ரி பி ஏ  (rtPA – recombinant tissue Plasminogen Activator) ஊசிமருந்தைப் பயன்படுத்தலாம். rtPA மருந்தானது அதன் சிறந்த விளைவைப்பெற, பாரிசவாதம் ஏற்பட்டு 4½ மணித்தியாலங்களுள் வழங்கப்படல் வேண்டும். இம்மருந்தை ஏற்றுவதற்கு முன்னர் குருதிச் சீனியினளவு, ஐ என் ஆர் INR, குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கை, கணணிய மூளை ஊடுகதிர்ப்படங்கள் (CT Scan) என்பன பரிசோதிக்கப்படும்.

மேலும் ஆர். ரி. பி. ஏ (rtPA – recombinant tissue Plasminogen Activator) என்பது மூளைக்குரிய குருதிச்சுற்றோட்டத்தினை தடைசெய்யும் குருதிக் கட்டிகளைக் கரைக்கும் மருந்துவகையினை குருதிச்சுற்றோட்டம் தடைப்பட்டு மூளை பாதிப்படைவதற்கு முன்னர் குருதிக் கட்டிகளைக் கரைப்பதற்கு பயன்படுத்தலாம். இதன்மூலம் நிரந்தரமாக மூளைக்கு ஏற்படக்கூடிய காயத்தைக் குறைத்து தொடர்ந்து ஏற்படக்கூடிய இயலாமையைத் தவிர்த்துக் கொள்ளலாம். எனவே பாரிசவாதத்திற்குரிய முதற்குணங்குறிகள் தென்பட்டவுடனேயே வைத்தியசாலைக்கு விரைதல் மிகவும் முக்கியமானதாகும். விரைவான சிகிச்சையினால் பாரிசவாதத்தின் பாதகமான பின் விளைவுகளை தவிர்க்கலாம்.

பாரிசவாதத்திற்கு சிகிச்சை அளிக்க அல்லது தடுக்க சத்திரசிகிச்சை சிலவேளைகளில் பயன்படுகின்றது. மூளையினுள் பாரிய குருதிப்போக்கு ஏற்பட்டிருப்பின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணரினால் குருதிக்கட்டியானது அகற்றப்படும்.

இச் சிகிச்சை வசதிகள் யாழ். போதனா வைத்தியசாலையிலும் உண்டு. எனவே பாரிசவாத நோய் அறிகுறி தென்பட்டவுடன் விரைவாக வைத்திய சிகிச்சையினை அணுகலாம்.

பாரிசவாத நோயாளிகளிற்கான தாதிய பராமரிப்பு

nurse-patient_fullதாதியர்கள் பாரிசவாத நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவது மட்டுமல்லாது அவர்களுடைய பொது ஆரோக்கியம், போசணை, மலசலங்கழித்தல் தொழிற்பாடுகளையும் கவனித்துப் பராமரிப்பர். சுயநினைவற்ற தீவிரமான இயலாமையையுடைய, விழுங்குவதில் சிரமமுள்ள, தொடர்பாடலில் சிரமமுள்ள, மலசலங்கழித்தலில் சிரமமுள்ள நோயாளிகளுக்கு இப்பராமரிப்பு மிகவும் அவசியமாகும். நோயாளிகள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக, கூறுவதனை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருப்பின் அவர்களைப் பராமரிப்பது சிக்கலாகி விடுகின்றது.

சுயநினைவற்ற நோயாளி நேராக நிமிர்ந்து படுத்திருப்பின் நாக்கு பின்புறம் மடிந்து தொண்டையை அடைத்து மூச்சுவிடக் கடினமாக இருக்கும். எனவே நோயாளியைப் பக்கவாட்டிற்குத் திருப்பி வாய்குள் சேரும் திரவப் பதார்த்தங்களை ஒருபக்கமாக வழியவிடப்பட்டு அகற்றல் வேண்டும். இதன்மூலம் இத் திரவப் பதார்த்தங்கள் மூச்சுக் குழாயினுள் சென்று நுரையீரலை அடைவது தடுக்கப்படும்.

ஒரு நாளைக்கு மூன்றுமுறை வாயைச் சுத்தமாகப் பராமரித்தல் தாதியர்களின் இன்னொரு கடமையாகும். வாயைச் சுத்தப்படுத்துவதற்கு சுத்தமான துணியினால் சுற்றப்பட்ட பற்தூரிகை அல்லது இடுக்கி, வாய் கழுவும் திரவம் அல்லது உப்பும் எலுமிச்சம்பழச்சாறும் கலந்தநீர் என்பன பயன்படுத்தப்படும். கிளிசரீனை வாய் உடபரப்பிலும், உதடுகளிலும் பூசுதல் வாய் வரட்சியடைந்து தோல் உரிவதனைத் தடுக்கும்.

மூன்றிலொன்றிற்கும் அதிகமான பாரிசவாத நோயாளிகள் விழுங்குவதில் சிரமத்தினை எதிர்கொள்கின்றனர்.

சுயநினைவுடைய நோயாளி சாப்பிடும்போது அவருக்குச் சரியாக விழுங்க முடியாதுவிடின் சுவாசப்பையினுள் உணவு அல்லது நீர் உட்சென்று சுவாசப்பைகளை அடைத்துவிடும். இதனால் சுவாசப்பையில் தொற்று ஏற்பட்டுவிடும். எனவே இவர்களுக்கு குழாய்மூலம் உணவூட்டல் தேவைப்படும்.

விழுங்குவதில் சிரமம் காணப்படும் நோயாளிகளுக்குத் திரவப்பதார்த்தங்கள் கடினமாகத் தோன்றும் ஏனெனில், திரவப் பதார்த்தங்கள் வாயினுள் விரைவாக அசைந்து செல்வதனால் பலவீனமடைந்த குரல்வளை மூடிக்கு, ஒருங்கிணைந்து தொழிற்பட்டு சுவாசப்பாதையை மூடுவதற்கு நேரம் போதாதிருக்கும். ஆனால் தடிப்பான உணவுப் பதார்த்தங்கள் மெதுவாக அசைந்து செல்வதனால் குரல்வளை ஒருங்கிணைந்து செயற்பட நேரம் போதுமானதாக இருப்பதனால் விழுங்க முடிகின்றது. இதனாலேயே சில நோயாளிகளுக்குத் திரவத்தைக் கட்டியாக்கக்கூடிய பதார்த்தங்களைக் கலந்து ஆரம்பத்தில் சில காலங்களுக்கு உணவூட்டப்படும்.

அரைத்திண்மப் பதார்த்தங்களான ஜெலி, மசிக்கப்பட்ட பப்பாசிப்பழம், தடித்த சூப் என்பன அவர்களுக்கு இலகுவில் எடுக்கக்கூடியதொன்றாகும்.

உணவைப் பாதுகாப்பாக விழுங்குவதற்கான நுட்பங்கள்:
* உணவுவேளையில் அமைதியாகவும், தளர்வாகவும் இருக்குமாறு ஒழுங்குபடுத்துங்கள். நோயாளியை அவசரப்படுத்த வேண்டாம்.
* நோயாளிக்கு அடிக்கடி சிறியளவில் உணவு ஊட்டலாம்.
* ஒரு தடவையில் ஒரு தேக்கரண்டி நிரம்பிய உணவைக் கொடுத்து மறுகரண்டி கொடுக்கமுன் முன்னர் கொடுக்கப்பட்ட உணவை முழுதாக விழுங்கிவிட்டாரா என உறுதிப்படுத்தல் வேண்டும்.
* உணவையும், நீரையும் ஒரே தடவையில் ஒன்றாகக் கொடுக்க வேண்டாம்.
* உணவுண்ணும்போது நோயாளியைக் கதைக்கவிட வேண்டாம்.
* உணவுண்டபின் நோயாளியை ½ மணித்தியாலங்களுக்கு நிமிர்த்தி நேராக இருத்தி வைத்திருத்தல் வேண்டும்.

நோயாளியின் பலவீனமடைந்த அவயத்தினை சரியானநிலையில், மேலும் பாதிப்படையாமலும், நோவுண்டாகமலும் பராமரிக்க வேண்டும். நோயாளி படுக்கையிலேயே இருப்பாராயின் அவருக்குப் படுக்கைப்புண் ஏற்படுவதைத் தடுக்கவும், குருதிக் குழாய்களினுள் இரத்தம் உறைவதனைத் தடுக்கவும் அவரை ஒழுங்காக இரு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை பக்கத்திற்குப் பக்கம் திருப்பி விடுதல் வேண்டும். இதற்காக காற்று மெத்தை அல்லது நீர் மெத்தை போன்ற விசேட மெத்தைகளையும் அமத்தி அணியப்படும் காலுறைகளையும் பயன்படுத்தலாம்.

வயது, தந்தைவழிப் பரம்பரை இயல்பு, குடும்பத்தில் யாருக்காயினும் பாரிசவாதம் அல்லது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல் என்பன மாற்றப்பட முடியாத பாதகமான காரணிகளாகும். ஆயினும் ஏனைய பாதகமான காரணிகளைக் கட்டுப்படுத்துவதன்மூலம் பாரிசவாதம் ஏற்படுவதற்கான மொத்த அபாயத்தைக் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைக்க முடியும்.

பாரிசவாதம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்க மேற்கொள்ள வேண்டியவை:

CSFiji_Poster-2* உயர்குருதி அமுக்கம் சலரோகம் அல்லது அதிக கொலஸ்ரோல் இருக்கின்றதா என அறிந்து அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் வேண்டும்.
* புகைத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
* மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
* ஒழுங்காக உடற்பயிற்சி செயதல் வேண்டும்.
* மனதை நெருக்கீடு இல்லாது வைத்திருத்தல்.
* பழவகைகள் மரக்கறி நிறைந்த உப்பு, கொழுப்புக் குறைவான ஆரோக்கியமான உணவு வகைகளை புசிக்க வேண்டும்.

80%மான பாரிசவாதம் வருமுன் தடுக்கப்படக் கூடியது. எமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றியமைத்தல் பாரிசவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறிப்பிடக் கூடியளவிற்கு குறைக்கும். பாதகமான காரணிகளையும், குறிப்பிட்ட மருத்துவநிலைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். பாரிசவாதம் உருவாகும் சந்தர்ப்பத்தைக் குறைப்பதில் உதவும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *