Search
Tuesday 14 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பிரிட்டனின் பொறுப்புக் கூறல் கடப்பாடு

பிரிட்டனின் பொறுப்புக் கூறல் கடப்பாடு

இலங்கையில் பிணக்கைத் தீர்த்து, மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் தடுக்கும் வரலாற்றுக் கடப்பாடும் பொறுப்பும் பிரிட் டனுக்கு உண்டு.

 இவ்வாறு மீண்டும் பிரிட்டிஷ்  பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பொறிஸ் ஜோன் ஸனுக்குத் தெரிவித்திருக்கின்றார் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கட்சியின் ஸ்தாப கரும், அதன்  செயலாளர் நாயகமுமாகிய நீதியரசர் சி.வீ.விக் னேஸ்வரன்.

பிரிட்டிஷ் பிரதமராக பொறிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட் டமையைப்  பாராட்டி எழுதப்பட்ட வாழ்த்துக் கடிதத்தில் மிக மென்மையான சொல்லாடல்களில் இந்த விவகாரம் விவரிக் கப்பட்டிருந்தாயினும், தமிழர் தரப்பிலிருந்து பிரிட்டனுக்கு இடித் துரைக்கப்பட்ட ஒரு செய்தியாகவே இது கவனிக்கப்பட வேண்டும்.

பிரிட்டனின் பொதுத் தேர்தலை ஒட்டி கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பொறிஸ் ஜோன்ஸனும், அவரது பிரதான அரசியல் எதிரியான தொழில்கட்சித் தலைவர் ஜேர்மி கோர்பினும் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இருவருமே இலங்கைத் தமிழர்கள் மீது பெரும்  பச்சாதாபம் காட்டுபவர்கள் போலவும், தமிழர்கள் விடயத்தில் அதிக அக் கறையும் ஈடுபாடும் சிரத்தையும் கொண்டவர்கள் போலவும் காட்டிக் கொள்ளும் விதத்தில் கருத்து வெளிப்பாடுகளை தேர் தல் சமயத்தில் முன்வைத்து வந்தனர். அந்தக் கரிசனை எல் லாம் பிரிட்டனில் வதியும் சில பத்தாயிரம் இலங்கைத் தமிழர்களின் வாக்குகளை எப்படியாவது சுருட்டிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாய மனநிலையில் எழுந்த அதிகப் பிரசங்கித்தனமான கவனிப்புகள் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

தமது தேர்தல் சமயத்தில் வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான அட்சர கணித கணக்குகள் அவர்களை அப்படிப் பேசவைத்தன.

ஆனாலும் இலங்கையில் தமிழர்கள் படும் சொல்லொணா துன்ப, துயரங்கள் பற்றிய விடயங்களில் அவர்களது உண்மையான ஈடுபாடு யாது என்பதைத் தேர்தல்கள் முடிந்த பிறகு அத் தகைய விடயங்களில் அவர்கள் காட்டும் உதாசீனப் போக்கில் நாம் அறிந்து, உணர்ந்து கொள்ளமுடியும்.

எது, எப்படியாயினும், இலங்கைத் தமிழர்களின் இன்றைய கையறு நிலைக்கு முக்கியமான காரணமானவர்கள் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள்தான் என்பது மறுக்கவே முடியாத உண்மை.

அதனைத் தமக்கேயுரித்தான நளிமான  மென்மையான  சொல்லாடல்களில் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் மென் போக்காக முன்வைத்துள்ளார்.

‘‘பிரிட்டனின் கொலனித்துவ நாடாக்கப்பட்டவற்றுள் இலங்கை யும் ஒன்று. 1833இல் இங்கு பிரிட்டனால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக மாற்றங்களே இலங்கையில் இனப்பூசல் ஏற்படக் கார ணம் என்பது பொதுவாக நம்பப்படும் விடயம்.

அந்தக் காலம் வரை தனி நாடாக இருந்த வடக்கும், கிழக்கும் எஞ்சிய சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசத்துடன் இணைக் கப்படாமல் தொடர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் இருக்க அனு மதிக்கப்பட்டிருக்குமானால் இந்தத் தீவில் இனப்பூசல்களை நாம் தவிர்த்திருக்கலாம்.’’

 இப்படி அந்தக் கடிதத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் சுட்டி யிருப்பது முழுவதும் உண்மையாகும். பதினாறாம் நூற்றாண் டின் ஆரம்பம் வரை இலங்கைத் தீவின் வடக்கும், கிழக்கும் தமிழர்களின் தனியரசாக  இறைமையுள்ள தாயகமாக  விளங்கி வந்தன.

அந்த இறைமை அந்நிய ஆக்கிரமிப்பாளர்களான போர்த்துக் கேயராலும் பின்னர் அவர்களிடமிருந்து ஒல்லாந்தரினாலும் வல்வந்தமாகக் கவரப்பட்டன.

இந்த மண்ணை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் 1619இல் இறுதிப் போர் நடத்தி தமிழ் இராச்சியத்தைத் தோற்கடித்து, தமிழ் மன்னன் சங்கிலி குமாரனைத் தூக்கிலிட்டனர்.

ஆயினும் அவர்களும், அவர்கள் பின் அதனைக் கைப்பற்றிய ஒல்லாந்தரும் தமிழர் தாயகத்தின் பிரதேச ஒருமைப்பாட்டையும் தமிழரின் இன அடையாளத்தையும் அங்கீகரித்தே நின்றார்கள். தமிழர் தேசத்தின் இறைமையை அவர்கள் பலவந்தமாகக் கைப்பற்றிய போதிலும், அந்தத் தேசத்தைத் தனியான நிர்வாக அலகாக  தனித்துவ உரிமையுடனேயே  கட்டி ஆண்டனர்.

 1799இல் தீவின் ஆட்சி அதிகாரத்தை ஒல்லாந்தரிடமிருந்து பிடுங்கிக் கொண்ட ஆங்கிலேய குடியேற்ற சாம்ராச்சியம்தான் பின்னர் தன் கைவரிசையைக் காட்டியது.

இந்தத் தீவில் இந்த இரண்டு இனங்களுக்கும் இடையில் வெவ்வேறான கலாசாரங்கள், பண்பியல்புகள், வாழ்க்கை முறைகள், தாயகங்கள், மொழிகள்,இறைமைகள் இருந்தபோதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், தமது நிர்வாக ஆளுகைக் கான வசதி கருதி 1833இல் இரண்டு தேசங்களையும் ஒன் றாக்கி ஒற்றையாட்சி அமைப்பைத் திணித்தனர்.

நாட்டுக்கு சுதந்திரமளித்து 1948இல் இந்தத் தீவை விட்டு வெளியேறியபோது தமிழர் தேசத்தின் இறைமையையும் சேர்த்து எண்ணிக்கையில் பெரும்பான்மையினரைக் கொண்ட சிங்கள தேசத்திடம் சிறையிட்டுச் சென்றது ஆங்கிலேய கொலனித்துவம்.

அந்நிய குடியேற்றவாதம் தனது நிர்வாக நோக்கங்களுக்காக திணித்த ஒற்றையாட்சியே தமிழரின் இறைமை மீட்புப் போருக் கான தேசியப் போராட்டத்துக்கு வழிவகுத்து அடித்தளமிட்டது. அதனையே பிரிட்டனின் கடப்பாடு மற்றும் பொறுப்புக்கான காரணமாக முன்வைக்கிறார் விக்னேஸ்வரன். அது முற்றிலும் சரியான விடயமே.

இந்தத் தவறுக்கான பொறுப்புக் கூறலை பிரிட்டன் முதலில் நிலைநிறுத்தட்டும்.

காலைக்கதிர் ஆசிரியர் தலையங்கம் 23/12/2019


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *