தலைப்பு செய்திகள்

புதிய அரசியல் கூட்டிற்கான முயற்சிகள்

புதிய அரசியல் கூட்டிற்கான முயற்சிகள்

யதீந்திரா
புதிய அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்ளுராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெறலாம் என்னும் எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறானதொரு கூட்டில் அவசரம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் இந்த பத்தியாளர் அறிந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக கொள்கை நிலையில் ஒன்றுபடக் கூடிய புதிய அரசியல் கூட்டு தொடர்பில் பல மாதங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல கூட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவருமான சிவகரனின் ஏற்பாட்டில் பல்வேறு சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. சிவகரன் இதற்கான ஒரு ஒருங்கிணைப்பாளராக தொழிற்பட்ட தகவல் அரசியல் கட்சிகளோடு தொடர்புடைய பலருக்கும் நன்கு தெரிந்த விடயம்.

இது ஒரு புறமிருக்க தமிழரசு கட்சியின் தலைமையோடு கடுமையாக முரண்பட்டுக் கொண்டிருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனும் புதிய அரசியல் கூட்டு தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தற்போது தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய கூட்டிற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன. இந்தக் கூட்டில் தற்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்திருக்கின்றன. எனினும் இந்தக் கூட்டிற்கான பொதுச் சின்னம் தொடர்பில் இதுவரை அறியக் கிடைக்கவில்லை. இதே வேளை பிறிதொரு பக்கத்தில் தனித்துவமான அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கும் உயத சூரியன் சின்னத்தின் கீழ் இருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒரு தளமாகக் கொண்டு புதிய கூட்டணி ஒன்றை கட்டியெழுப்புவது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. அதே போன்று அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றுபடச் செய்ய வேண்டுமென்னும் அடிப்படையிலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே வேளை இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையின் மீது அதிருப்தியுடைய பலர் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழரசு கட்சி என்னும் பெயரில் பிறிதொரு அணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

LGE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக எவ்வாறு சில முயற்சிகள் இடம்பெறுகின்றனவோ அதே போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகளை உள்வாங்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன. எவ்வாறு பலர் புதிய கூட்டு ஒன்று தொடர்பில் கலந்துரையாடி வருகின்றனரோ அதே போன்று கூட்டமைப்பு வெளியில் இருப்பவர்களை உள்ளுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு மாற்றாக, வரதராஜப் பெருமாள் தலைமையில் உருவாக்கப்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியை கூட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்தக் கட்சி சில மாதங்களுக்கு முன்னர் தனது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என்று மாற்றியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாயின் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டுமென்று சம்ந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில் இதுவரை சுரேஸ் பிரேமச்சந்திரன் உத்தியோகபூர்வமாக கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. தாங்கள் தமிழரசு கட்சிச் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்று மட்டுமே சுரேஸ் அறிவித்திருக்கின்றார். அப்படிப் பார்த்தால் சுரேஸ் இப்போதும் கூட்டமைப்புக்குள்தான் இருக்கிறார். ஆனாலும் சுரேசின் நிலைப்பாட்டிற்கு தொடர்ந்தும் கூட்டமைப்புக்குள் இருக்க முடியாது. கூட்டமைப்புக்குள் சுரேஸ் இனி இருக்கப் போவதில்லை என்னும் அடிப்படையில்தான் வரதரை உள்வாங்கும் யோசனையும் சாதகமாக பரிசீலிக்கப்படுகிறது.

இந்த விடயங்களை சாதாரண தமிழ் மக்கள் எவ்வாறு நோக்குவார்கள் என்பதை எவராலும் தற்போதைக்கு ஊகிக்க முடியாது. மக்கள் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்பததை ஊகிக்கவல்ல அரசியல் விற்பண்ணர்கள் எவரும் இல்லை. பொதுவான அவதானம், மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. இந்த பத்தியாளரது அவதானத்திலும் அது சரியான கணிப்பே ஆனால் அந்த அதிருப்திகள் வாக்குகளாக திரண்டு எவர் பக்கம் போகும் என்பதை அனுமானிப்பது இயலாத காரியம். ஆனால் பொதுவாக மக்கள் பலமான அரசியல் கூட்டுக்களை விரும்புகின்றனர் எனலாம். அதற்கு பலமான ஒன்றால்தான் தங்களுக்கான பாதுகாப்பை வழங்க முடியுமென்று அவர்கள் நம்புவதே காரணமாக இருக்கலாம். இதவும் கூட எனது ஊகம்தான். இவ்வாறானதொரு நிலையில்தான் பல்வேறு உள் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் கூட்டமைப்பால் தொடர்ந்தும் மக்களிடம் செல்ல முடிந்திருக்கிறது. வெற்றிபெற முடிந்திருக்கிறது.

TNA-5

மக்களின் பாதுகாப்பு என்பது வெறுமனே மக்களுக்கு கொள்கை பற்றி வகுப்பெடுப்பதல்ல மாறாக அந்த மக்களின் அடிப்படையான சமூக, பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அந்த கட்சியிடம் அல்லது கூட்டிடம் என்ன வேலைத்திட்டங்கள் உண்டு என்பதும்தான். ஆனால் அப்படியான வேலைத்திட்டம் கூட்டமைப்பிடம் இல்லை. இதுவும் கூட்டமைப்பின் மீது மக்கள் அதிருப்தியடைவதற்கான பிரதான காரணமாகும். இங்கு மக்கள் என்று நான் குறிப்பிடுவது மாதம் பல ஆயிரங்களை சம்பளமாகப் பெறும் அரசாங்க அடியாட்களை அல்ல மாறாக சாதாரண ஏழை மக்களை. சாதாரண மக்கள் கொள்கை நிலைப்பாடுகளை அவதானித்து வாக்களிப்பதுமல்ல. தேர்தல்களின் போது தேர்தல் விஞ்ஞாபானங்களை வாசித்து வாக்களிப்பவர்கள் மிகவும் குறைவு. படித்தவர்கள் என்பவர்கள் கூட தேர்தல் விஞ்ஞாபனங்களில் அக்கறை செலுத்துவதில்லை. ஏனெனில் தேர்தல் காலங்களில் முன்வைக்கப்படும் விஞ்ஞாபனங்களை எவருமே பெறுமதியான உறுதிப்பாடுகளாக எடுப்பதில்லை. இந்த பின்புலத்தில்தான் இவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாக செயற்படுகின்றனர் என்னும் எதிர்த்தரப்பு விமர்சனங்கள் மக்கள் மத்தியில் பெரியளவில் செல்வாக்குச் செலுத்துவதில்லை. நான் கூறும் விடயங்கள் தேர்தல் காலங்களில் சாதாரணமாக பார்க்கக் கூடிய விடயம். இவ்வாறானதொரு பின்னணியில் கூட்டமைப்பின் மீதான அதிருப்திகளை எவ்வாறு வாக்குகளாக திரட்டிக் கொள்ளப் போகின்றனர்? அதற்காக புதிய கூட்டு எவ்வாறான உக்திகளை கையாளப் போகின்றது என்பதைக் கொண்டுதான் கூட்டமைப்பை அசைக்க முடியும். தற்போதைய நிலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியேறினாலும் கூட்டமைப்பால் தொடர்ந்தும் கூட்டமைப்பாக இயங்க முடியும். இந்த நிலையில் உருவாகும் ஒரு அரசியல் கூட்டு அல்லது இரண்டு கூட்டுக்களினதும் பிரதான எதிரி கூட்டமைப்பாகவே இருக்கப் போகிறது.

இந்த இடத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்பது சிலரது வாதம். புதிய கூட்டு மிகவும் வலுவான நிலையில் மக்களிடம் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு பின்னடைவையும் ஏற்படுத்தி விடலாம் என்பது அவர்களது வாதம். எனவேதான் தமிழரசு கட்சியின் தலைமையுடன் முரண்பாடுடைய அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கியதாக ஒரு பரந்தளவிலான கூட்டாக இதனை உருவாக்க வேண்டும். உடன்பட்டுச் செல்லக் கூடிய அனைவரையும் உள்வாங்க வேண்டும் என்கின்றனர். முக்கியமாக கிழக்கிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் இவ்வாறானதொரு பார்வையே மேலோங்கிக் காணப்படுகிறது. என்னதான் கொள்கை தொடர்பில் விவாதங்களை அடுக்கிக் கொண்டு போனாலும் தேர்தலை எதிர்கொண்டால் கணிசமான வெற்றியை பெற வேண்டும். தேர்தல் வெற்றியே இறுதியில் ஒரு நிலைப்பாட்டிற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுகின்றது. அந்த வகையில் நோக்கினால் புதிய கூட்டிற்கும் தேர்தலில் வெற்றி அவசியம். தனித்து தேர்தல்களை எதிர்கொள்ள முடியாத போதுதான் கூட்டுக்கள் தேவைப்படுகின்றன என்னும் யாதார்த்தத்தை எவராலும் புறம்தள்ள முடியாது. எனவே உருவாகப் போகும் அரசியல் கூட்டுக்கள் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ளுவதற்கான தந்திரோபாயங்கள்தான். அந்த வகையில் புதிய அரசியல் கூட்டு சரியான தந்திரோபங்களுடன், மக்களின் பிரச்சினைகளுக்கு நெருக்கமாக செல்லுமாயின் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியை அப்படியே வாக்குகளாக திரட்டிக் கொள்ளலாம். கூட்டமைப்பின் மீதான அதிருப்திகளை சரியாக அணுக முடியாமையின் காரணமாகவே இதுவரை கூட்டமைப்பின் செல்வாக்கு சரியாமல் இருக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *