Search
Sunday 12 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா

புதிய சிந்தனையை உருவாக்கவும் விடுதலைக்கு வழிதேடவும் புதுவாழ்வு காணவும் எழுக தமிழா

மு .திருநாவுக்கரசு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது தமிழ் தேசியப் போராட்டத்தின் முடிவல்ல ; அது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான புதிய மடை திறப்பு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வதற்கு 90 ஆண்டுகளுக்கு முன்பு, 1919ஆம் ஆண்டு 10 நிமிட நேரம் நிகழ்ந்த துப்பாகிச்சூட்டில் 1500 பொதுமக்களை படுகொலை செய்த ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு புதிய மடை திறப்பாக அமைந்தது .

அதைவிடப் பாரியதாக திட்டமிடப்பட்ட வகையில் சுமாராக ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையானது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு பாரிய மடை திறப்பாக அமைந்துள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட புதிய மடை திறப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழீழப் போராட்டத்தை புதிய உத்வேகத்துடன், புதிய சூழலுக்கேற்ப , ஒரு புதிய பாதையில் முன்னெடுக்கவல்ல ஆற்றலையும் செயற்திறனையும் தமிழ் தலைவர்கள் காட்ட தவறினர். அத்துடன் அவர்கள் ஓடுகாலிகளாய் தமிழ் மக்களை விட்டுவிலகி சிங்கள இனவாத ஆட்சியாளர்களை நோக்கி ஓடினர்.

இவர்களின் இத்தகைய பிறழ்விலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுத் தேவை எழுந்தது.

இதனால் திசை மாறிப்போன தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அதன் கூட்டாளிகள் படிப்படியாக வெளியேறி இறுதியில் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு பொதுமக்கள் அமைப்பை உருவாக்கினர். வட மாகாணசபை முதல்வராக இருந்த திரு. விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு .கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் என்போர் இணைந்து தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிக்கினர். இத்தமிழ் மக்கள் பேரவை “”எழுக தமிழ்”” பேரணிகளை நடத்தத் தொடங்கியது. தமிழ் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது.

இவ்வாறு தமிழ் மக்களுக்கு புதிய நம்பிக்கை ஊட்ட தொடங்கிய தமிழ் மக்கள் பேரவைக்குள் ஏற்பட்டிருக்கும் உடைவுகள் , முறிவுறிவுகள் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் மேலும் கவலை அளிக்கவல்ல கசப்பான பக்கங்களை தோற்றுவித்துள்ளன.

மேற்படி மூன்று தலைவர்களும் எப்பாடுபட்டேனும் தங்களுக்கு இடையேயான முறிவுதறிவுகளை கடந்து ஒன்றுபட்ட வகையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று வரலாறு இவர்களுக்கு ஆணையிடுகிறது.

தமிழ் மக்களின் விடிவுக்காக ஒன்றுபட்டு போராடுவதற்கான பரந்த மனப்பாங்கையும் ,ஆளுமையையும், ஆற்றலையும் வெளிக்காட்டாது தங்களுக்கிடையே அரசியல் ஆதிக்கப் போட்டிகளுக்குள்ளும்
தங்களுக்கு இடையேயான குத்து வெட்டுக்களுக்குள்ளும் தமிழ் மக்களின் போராட்டத்தை சிக்கவைத்துச் சீரழிப்பார்களேயானால் தமிழ் மக்களை ஏமாற்றிய பாவத்துக்கும் பழிக்கும் இவர்கள் அனைவரும் உள்ளாக நேரும்.

“” எழுக தமிழ்”” என்பது ஒரு விபத்தல்ல; அது வரலாற்று தேவையும் வரலாற்றின் கட்டளையும் ஆகும்.

தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்று தமிழ் மக்களின் உரிமைக்காக போராட புறப்பட்ட தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழித்தொழிக்கும் சிங்கள ஆட்சியாளர்களை நோக்கி ஓடப் புறப்பட்ட பின்னணியில் எழுந்த “”எழுக தமிழ்”” என்பது ஒரு விபத்து அல்ல என்பதையும் அதற்கு இருக்கக்கூடிய ஆழ, அகலத்தையும் , வரலாற்று உள்ளடக்கத்தையும் சரிவரப் புரிந்தாக வேண்டும்.

இரத்தம் தோய்ந்த வகையிலான இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்து முடிந்த போது தமிழினம் அதற்கு ஈடுகொடுத்துத் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியதற்கான ஒரு புதிய கட்டத்திற்கு தள்ளப்பட்டது. அந்தப் புதிய கட்டத்திற்கு தன்னை பகுதியாக்கி அதிலிருந்து பெரிதும் முன்னேறுவதற்கான ஓர் அழைப்பாய் “”எழுக தமிழ்”” என்பது எழ வேண்டி இருந்தது.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் ஏற்படும் தொடர் தோல்விகளில் இருந்தும் நமது கடந்தகால வரலாற்றில் ஏற்பட்டிருக்கக் கூடிய நல்லவை – கெட்டவை ,எழுச்சி – வீழ்ச்சி ,வீக்க தூக்கம் என்பனவற்றில் இருந்தெல்லாம் படிப்பினைகளை பெற்றும், உலகை அறிந்தும் , உன்னை உணர்ந்தும் புதிய பொலிவுடன் எழுக தமிழா என்பதே இந்த “”எழுக தமிழின்”” வரலாற்று உள்ளடக்கமாகும்.

இதற்கு ஆழ்ந்த கோட்பாட்டு பார்வையும் கூரிய வரலாற்று நோக்கும் அவசியமாகும். அரசியலை கோட்பாட்டு ரீதியாகவும் , கோட்பாட்டை நடைமுறையுடன் இணைத்து வரலாற்று ரீதியாகவும் பார்க்கும் பார்வை ஈழத் தமிழர்களின் அரசியலில் மிகவும் அரிதானது. இன்றைய இந்த தலைமுறையும் இன்றைய தலைவர்களும் இன்றைய அறிஞர்களும் அந்த தவறை ஒருபோதும் இழைக்கக் கூடாது.

தமிழா ! உன்னை நீ அறிவாயாக. நீ தொன்மையான வரலாற்று வளர்ச்சியின் வழியில் உருவாக்கிய செழுமையான பண்பாட்டின் சொந்தக்காரன். பூமியைக் கடந்து அண்ட கோளங்களை தழுவி சிந்திக்கும் ஆற்றலையும் கூடவே செயல் திறன்களையும் கொண்ட வரலாறு உனக்கு உண்டு. பல நூற்றாண்டு கால அடிமைத்தன வாழ்வினால் உனது திறன் மற்றும் ஆற்றல்கள் எல்லாம் முனை மழுங்கி மங்கிப் போய்விட்டன. பல நூற்றாண்டு காலமாய் அரசற்ற நிலையில் உள்ளார்ந்த அறிவியல் விஞ்ஞான பண்பாட்டு ஆக்கத்திறன்களை வளர்க்க வழியின்றி வெறுமனே உடல் உழைப்பையும் மூளை உழைப்பையும் விற்று ஒருவகை நடைப்பிணங்களாக வாழும் துயரம் உண்டு.

பல நூற்றாண்டுகால அந்நிய ஆதிக்கத்தன் கீழ் அடிமைத்தனத்தை சிந்தனை முறையாயும் , எஜமானிய விசுவாசத்தை வாழ்க்கை முறையையும் கொண்ட அறிஞர்களும் தலைவர்களும் தோன்றும் நிலை ஏற்பட்டது. இப்பின்னணியில் மக்கள் மத்தியில் பல் வகையான ஆக்கத்திறன் வளர்ச்சியும் வளர்ப்பாரின்றி மழுங்கடிக்கப்பட்டும் மூடுண்டும் போயின . ஒரு நூற்றாண்டு கால அரசியல் தோல்விகளுக்கும் அழிவுகளுக்குமான வேரும் விழுதுகளும் இப்பின்னணியில் உண்டு.

இவற்றையெல்லாம் அடையாளங்கண்டு மீட்சியடைய எழுக தமிழா.

எதிரியின் அரசியல் ஆதிக்க இரும்புப் பிடிக்குள் அகப்பட்டு இனரீதியாக நசுக்கப்பட்டும் நிலை இருக்கும் வரை எமது பிள்ளைகளின் மேம்பட்ட அறிவியல், விஞ்ஞான மற்றும் படைப்பாற்றலகள் வளர்ச்சியடைய முடியாது.

யூதர்கள் ஒரு சிறிய இனம். உலக சனத்தொகையில் அவர்கள் ஒரு கோடியே 50 லட்சம். அதில் இஸ்ரேலில் மட்டும் 65 இலட்சம் யூதர்கள் அரசமைத்து வாழ்கிறார்கள். உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளையும் சிந்தனையாளர்களையும் அந்த இனம் படைத்திருக்கின்றது. அவர்களது புவியியல், அரசியல் வரலாற்று நிர்ப்பந்தங்கள் ஒருபுறம் உந்த மறுபுறம் அவர்களது பண்பாட்டுப் பாரம்பரிய பொக்கிஷத்தில் இருந்து அறிவியல் – விஞ்ஞான ஆக்கத்திறன் வளர்ச்சியை அவர்களால் அடைய முடிகிறது.

சுமாராக 60 லட்சம் யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், புதிய சூழலுக்கேற்ப புதிய சிந்தனையுடன் யூத தேசியவாதத்தை செய்து சத்தியத்தை கட்டமைப்பு செய்து யூதர்கள் விடுதலை அடைந்தார்கள். அவ்வாறு விடுதலை அடைந்த யூத அரசு உலகெங்குமுள்ள யூதர்களின் பாதுகாப்பு கவசமாகியது.

அடிமை தளையை உடைத்து எமது சந்ததியினரை இனப்படுகொலை களிலிருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு புது வாழ்வு காட்டவும் எழுத தமிழா.

எமது பிள்ளைகளினதும் பிள்ளைகளின் பிள்ளைகளினதும் பேரப்பிள்ளைகளினதும் எதிர்காலச் சந்ததியினரதும் அறிவியல் – விஞ்ஞான, பண்பாட்டு வளர்ச்சிக்கான கதவுகளை திறக்க எழுக தமிழா .

உலகளாவிய தரத்திலான தலைமுறையை உருவாக்கவல்ல தலைமுறையை உருவாக்க எழுக தமிழா.

பரந்த உலகம் தழுவிய மனிதகுல நாகரீக வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்ய எழுக தமிழா.

முழு உலகம் தழுவிய பூகோளக் கண்ணோட்டத்துடனும் மனித குல நாகரிகம் தழுவிய பரந்த கண்ணோட்டத்துடனும் புதிய தேசியவாதத்தை கட்டமைப்பு செய்ய எழுக தமிழா.

தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் சமூக சாதி ஏற்றத்தாழ்வுகளை களையவும் ஒவ்வொரு மனிதனுக்குமான கௌரவம் மிக்க தலைநிமிர்ந்த வாழ்வையும் மற்றும் அனைவருக்குமான சம வாய்ப்பையும் சம சந்தர்ப்பத்தையும் உருவாக்க எழுக தமிழா.

அனைத்து வகையான மேலாதிக்கங்களை உடைக்கவும் , புதிய சிந்தனையை உருவாக்கவும் எழுக தமிழா.

ஜனநாயகத்தைப் பற்றிப்பிடிக்கவும் அதனை உண்மையான மேம்பட்ட நிலைக்கு வளர்த்தெடுக்கவும் எழுக தமிழா.

தேசிய இன விடுதலையின்றி அடிமை வாழ்வின் கீழ் மேற்படி எத்தகைய வளர்ச்சிக்கும் இடமில்லை என்பதால் விடுதலைக்காக எழுக தமிழா.

விடுதலை அடைவதற்கு உகந்த வகையில் நடைமுறைக்குப் பொருத்தமான வெளியுறவுக் கொள்கையினை புத்தி பூர்வமாய் வரைந்திட எழுக தமிழா.

கற்பனைகளை கைவிட்டு, மனோரம்யா கனவுகளை களைந்து, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்து தமிழ் மக்களின் விடுதலைக்காக அறிவுபூர்வமாச் சிந்திக்க எழுக தமிழா.

இழைக்கப்படும் அநீதிகளை உலகுக்கு பறைசாற்றவும், இனப்படுகொலையில் இருந்து விடுதலை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவும், உனது தேவைகளை உலகுக்கு உணர்த்தவும் எழுக தமிழ் பேரணியில் பங்கெடுக்க எழுக தமிழா.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *