Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

புரிந்து கொள்வார்களா தமிழ் தலைவர்கள்…?

புரிந்து கொள்வார்களா தமிழ் தலைவர்கள்…?

நரேன்

ஜெனீவா திருவிழா முடிவடைந்து மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் மக்களின் போராட்டம் தொடர்ந்தும் எவ்வித தொய்வுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜெனீவா கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் மக்கள் தாங்களாகவே விலகிச் சென்று விடுவார்கள் என்று நம்பியிருந்த அரசாங்கத்திற்கு வடக்கு, கிழக்கு மக்கள் தங்களது மனவுறுதியின் மூலம் ஒரு தெளிவான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரத்திற்கும், வாழ்வுரிமைக்கும் அடிப்படையான காணிகளை ஒருபோதும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாதை தங்களது உறுதியான போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு நியாயம் கேட்டு வீதிகளில் இருக்கிறார்கள். இவைகள் வேறு யாருக்காகவோ அல்லது ஏதோவொரு அரசியல் கட்சியின் தேவையை பூர்த்தி செய்வதற்கோ மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் அல்ல.

யுத்தம் என்ற பெயரில் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு பின்னர் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களை தொடர்ந்தும் அடக்கி வைத்து அவர்களை பெரும்பான்மை தேசியவாதத்துடன் இரண்டறக் கலப்பதற்கான முயற்சிகளுக்கு எதிரான செயற்பாடாகவே மக்களின் இந்த போராட்டங்களை பார்க்க வேண்டியிருக்கிறது. சொந்த மண்ணில் காலாதி காலமாக தமது மூதாதையரை அடியொற்றி வாழ்ந்த பிரதேசத்தில் தமக்குரிய காணியில் தம் சந்ததியை வாழ வைப்பதற்காக மக்கள் நிலமீட்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு தற்காப்பு நடவடிக்கைகாக ஆயுதம் ஏந்திய குழுவுடன் இணைந்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அல்லது அவ்வாறு இணைந்திருந்தவர்களை அல்லது செயற்பட்டவர்களுக்கு ஆதரவானவர்களை சுற்றி வளைப்பின் போதும், வீடுகளில் புகுந்தும், சரணடைந்திருந்த நிலையிலும், சாதாரண அப்பாவிகளையும் தனது பாதுக்கப்பிற்குள் எடுத்துக் கொண்ட பாதுகாப்பு தரப்பினர் அவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அதற்கு எதிராக அவர்களது உறவுகள் நியாயம் கேட்டும், தமது உறவுகளை திரும்ப தருமாறு நீதி கேட்டும் வழிமேல் விழி வைத்து வீதிகளில் காத்து இருக்கின்றனர்.

மேற்படி இரண்டு போராட்டங்களுமே மக்கள் தங்களினுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலேயே முன்னெடுத்துள்ளனர். யுத்தம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்த நிலையிலும் நாட்டில் எத்தகைய அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத சூழலிலும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட காணிகளை மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்படாமைக்கு எத்தகைய நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு தன்னிடம் இருந்தவர்களையும், ஆவணங்களையும் காணவில்லை என்று சொல்வது அவர்கள் பொறுப்பற்று இருக்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஒரு அரச நிர்வாகத்தில் ஏனைய திணைக்களங்கள் இத்தகைய காரணங்களைச் சொன்னால் அதனை ஓரளவுக்கு ஏற்க முடியும். ஒரு பாதுகாப்பு தரப்பு இத்தகைய காரணங்களை சொல்லுகின்ற போது பல கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளை அல்லது இத்தகைய சந்தேகங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குரிய சிறப்புரிமையை பயன்படுத்தி கேட்காமல் இருப்பது கவலையளிக்கிறது.

மக்களின் உடைய இத்தகைய போராட்டங்கள் ஐ.நாவுக்காக நடத்தப்பட்டதில்லை. அது மக்களால் உரிமைக்காகவும், நீதி கோரியும் நடத்தப்படுகிறது. இந்த போராட்டங்களை ஒழுங்கமைத்து அந்த மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தமிழ் தலைமைகளுக்கு குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு இருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. ஆணை வழங்கிய மக்களை வழிநடத்த தவறியிருக்கிறார்கள். எதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார்களோ அதை பெற்றுக் கொடுப்பதற்கு தன்னுடைய அரசியல் பலத்தையோ அல்லது மக்கள் பலத்தையோ அல்லது இரண்டையுமோ பயன்படுத்துவதில் இருந்து கூட்டமைப்பின் தலைவர் தவறியிருக்கிறார்.

இத்தகைய பின்னனியில் தான் தற்போதைய சர்வதேச மன்னிப்புச் சபையின் வருகையும், அவர்கள் போராட்ட களத்தில் இருக்கும் மக்களை சந்தித்தமையும், அவர்கள் வெளியிட்ட கருத்துக்களையும் அணுக வேண்டியிருக்கிறது. போராட்ட களத்தில் உள்ள மக்களை சந்தித்த பின்னர் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் சனின் செட்டி அவர்கள் மக்களின் போராட்டம் நியாயமானது என்றும், அவர்களுக்கு ஆதரவாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பணியாற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார். போராடுகின்ற மக்களுக்கு தார்மீக ஆதரவை வழங்கியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை உலகின் பல நாடுகளில் உள்ள தலைவர்களுக்கும் தங்களது அவதானிப்புக்களை எடுத்துச் சொல்வார் என்றும் நம்பலாம். அதனூடாக இலங்கைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுத்தங்களும் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வாதங்களையும், தன்னுடைய அழுத்தங்களையும் பயன்படுத்தி தனது உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து எவ்வாறு அரசாங்கத்துடன் பேரம் பேசப்போகிறது என்பதே இன்றைய பிரதான கேள்வி.

மக்கள் போராட்டங்களில் எத்தகைய பங்களிப்பும் செய்யாமல் அவர்களிடம் இருந்து வெகுதூரம் அன்னியப்பட்டிருக்கும் தலைமை எவ்வாறு மீண்டும் தனது மக்களை சந்தித்து தலைமை தாங்கும் திறமையை வெளிப்படுத்தப் போகிறது. மறுபுறத்தில் தமிழ் தலைமைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளையும், எதிர்பார்ப்புக்களையும், உரிமைகளையும் எடுத்துச் சொல்லி அவர்களை இணங்க வைப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக உருவாகிய தமிழ் மக்கள் பேரவையும் மக்களின் இந்த போராட்டங்களில் இருந்து இன்று விலகியே இருக்கின்றது. இவைகளை வலியுறுத்துவதற்காக தமிழ் மக்கள் பேரவை வடக்கு, கிழக்கில் இரண்டு பேரணிகளையும் நடத்தியிருந்தது. ஆனால் அவர்களும் கூட இந்த மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்க முன்வராமல் இருப்பது தமிழினத்தின் சாபக் கேடு.

ஒட்டுமொத்தத்தில் பொறுப்பை யாரிடமோ கையில் கொடுத்துவிட்டு யாரோ ஒருவர் செய்ய வேண்டும் என்பதாக அனைத்தையும் தட்டி கழிக்கும் மனோபாவத்திலேயே தமிழ் தலைமை இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளிநாடுகளில் வருகின்ற இராஜதந்திரிகளும், மனிவுரிமைச் செயற்பாட்டளர்களும் மக்களினுடைய போராட்டங்கள் தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துகள் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கேபராட்டம் காரணமாகவும், சர்வதேச அழுத்தம் காரணமாகவும் ஒரு கட்டத்தில் அரசாங்கம் தமிழ் தலைமைகளுடன் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அத்தகைய ஒரு சூழலில் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்டாதாக கூறுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் இந்த பேச்சுவர்த்தைகளில் கலந்து கொள்ளப் போகிறது.

சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியிலும் தன்னை சந்திக்கின்ற அரசாங்க தரப்பினரிடமும் மேலும் வாய்ப்பு கிடைக்கின்ற இடங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை ஒரு முதலமைச்சர் என்ற வகையிலும், முன்னாள் நீதியரசர் என்ற வகையிலும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெளிப்படுத்தி வருகின்றார். அனைத்து தமிழ் தலைமைகளும் குறைந்த பட்சம் அவருடன் இணங்கி நடப்பது தமிழ் சமூகத்திற்கு ஒரளுவக்கேனும் விடிவைக் கொடுக்கும். இந்த விடயத்தை முதலமைச்சரும் கவனத்தில் எடுப்பது சிறப்பானதாக இருக்கும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *