Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

பெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி II

பெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி II

பிறேமலதா பஞ்சாட்சரம் 

இக்கட்டுரையின் முதல் பகுதிக்கான இணைப்பை கட்டுரை முடிவில் காணலாம். 

நட்பின் ஆழத்தை கூறுகின்ற இன்னுமொரு பாடல்

எந்தன் தோழி உன்னைத் தேடிக் கண்கள் போகுது..

.எங்கே! எங்கே! என்னைப்பாரு இதயம் நோகுது..

இப்பாடலானது தமிழீழ விடுதலைப் புலிகளின்  மகளீரணி அரசியல் துறை பொறுப்பாளரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமாகிய  தமிழினி அவர்கள் தனது போர்க்கள அனுபவத்தினையும் உண்மைச்சம்பவங்களையும் மையமாக வைத்து எழுதிய” மழைக்கால இரவு” என்ற சிறுகதையில் வருகின்ற இரு பெண்போராளிகளின் நட்பின் ஆழத்தையும் ஒரே போர்க்களத்திக்கு சென்ற இருவரில்  ஒருவர்  வீரமரணம் அடைகின்ற பொழுது அதனது தாக்கம் மற்றய தோழியின் மனதில் எத்தகைய பதிவுகளை விட்டுச்செல்கின்றன என்பதையும் நினைவுபடுத்துகின்றது.

இப்பாடலில் வருகின்ற பின்வரும் வரிகள்

சற்றுமுன்னர் தானே களத்தில் பாய்ந்து பகையைக் கொன்றவள்!

வெற்றி எங்கள் கையில் வந்துசேர… வீழ்ந்து போனவள்!

போரில் உந்தன் வீரம் பார்த்தேன் போற்ற வழியில்லை

வென்ற பின்னோ ஓடிவந்தேன் உயிராய் நீயில்லை !

தமிழினி அவர்களின் மழைக்கால இரவில் வருகிற சங்கவி என்ற கதாபாத்திரத்தின் வீரமரணம் அவளது தோழியின் மனதில் விட்டுச்செல்கின்ற நினைவுகளை மீள்நினைவூட்டுகின்றது. அச் சிறுகதையில் சங்கவியின் மரணத்தை தமிழினி கீழ்வருமாறு பதிவு செய்கின்றார்.

“சங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபடவென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம்.”

இச்சிறுகதையை வாசிப்பவர்களின் மனதில் போர்க்கள அனுபவங்கள் பெண் போராளிகளின் மனதில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை பல்வேறு பரிமாணங்களில் பார்க்க கூடியதாக உள்ளது.

பன்னெடுங்கால தமிழர் பண்பாட்டு  வரலாற்றை பார்க்கின்ற பொழுது ஒரு பெண்ணின் வாழ்வில் அவளது உற்ற தோழியின் வகிபாகமும் முக்கியத்துவம்  பெறுகின்றது என்பது  தமிழ் இலக்கியங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கிய அகத்திணை நூல்களிலும் சங்க மருவியகால  இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும் மற்றும் மணிமேகலையிலும்  தோழி என்ற பாத்திரத்திற்கு முக்கிய பங்குண்டு .

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தோழியான தேவந்தி கண்ணகி கோவலனோடு சேரவேண்டும் என்பதற்காக வழிபாடு இயற்றியதை

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டென்று

எண்ணிய நெஞ்சத்து இனையளாய், – நண்ணி  

அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச், சென்று

பெறுக கணவனோடு என்றாள்.  (சிலம்பு : 9: 41)

என்று  பாடல் கூறுகின்றது. மணிமேகலையில் மணிமேகலை நந்தவனத்தில் உள்ள பளிங்கு மண்டபத்தில் இருக்கின்ற போது அவள் மேல் காதல் கொண்ட சோழ இளவரசனான உதயகுமாரன்  அவளை அடைய முயல்கிறான்; முடியவில்லை, மணிமேகலையின் தோழியான  சுதமதியிடம் மணிமேகலையை அடைய முடியவில்லையே என வருந்திக் கூறுகின்ற சுதமதியோ அவனிடம், மணிமேகலை

ஊழ் தரு தவத்தள், சாப சரத்தி

காமன் கடந்த வாய்மையள்  ( மணி 05-016)

தனது தோழி தவவழிப்பட்டவள் ஆதலால் காமன் செயல்களான காதலையும்காமத்தையும்  கடந்த தூயவள் என   உரைத்து அவனது மனதை மாற்றி தனது தோழியை பாதுகாக்கின்றாள்.

ஓர் சிறந்த தோழியின் மரணம்  என்பது ஒப்பில்லா  வீரமும் ஆளுமையையம் கொண்ட  விடுதலைப் புலிகளின் மகளிரணி தளபதி  பிரிகேடியர் துர்க்கா அவர்களின்  மனதில்  மாறாத வடுவினைப் ஏற்படுத்தியிருந்ததை   கலை என்ற போராளி எழுதிய  அவரது வீரவரலாறில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

thurka

“2006 சமரில் கம்பனியை (Company / படையணியை ) வழிநடத்திச்  சென்ற லெப். கேணல் ஆர்த்தி  வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்”

இத்தகைய ஆழமான வடுக்களை வெளிப்படுத்துகின்ற இன்னுமொரு பாடல்

உயிரழும் போது ஓசைகள் ஏது

ஆயுத ராகங்கள் ஆழுவதில்லை

ஆயினும் சோகம் மறைவதில்லை  

அதில் வரும் பின்வரும் வரிகள்

கூந்தல்பின்னி   மடிக்கையிலே உங்கள்  ஞாபக முடிச்சுகளே

காவல் கடமை இருட்டினிலே உங்கள் நினைவு வெளிச்சங்களே

 எங்களில் திரிந்த தோழியரே என்றினி காண்போம் தோழியரே

உங்களின் கனவை தோழியரே கண்களில் சுமப்போம் தோழியரே

பெண் போராளிகளின் வீரமரணங்கள் அவர்களின் தோழிகளை எவ்வாறு பாதித்தன என்பதை கண்முன் நிறுத்துகின்றது.

மேலும்   தமிழினி  அவர்கள் எழுதிய “அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்” என்ற கவிதையில்

மீளாப் பயணம் சென்ற தோழி

விடைபெறக் கை பற்றி

திணித்துச் சென்ற கடதாசி

செய்தி சொன்னது..

காலமாவதற்காக காத்திருக்கும்

அம்மாவின் ஆத்மா

கடைக் குட்டியவளின்

கையாலே ஒரு துளி

உயிர்த் தண்ணிக்காகத்

துடிக்கிறதாம்.

எவருக்கும் தெரியாமல்

என்னிடத்தில் குமுறியவள்

விட்டுச் சென்ற

கண்ணீர்க் கடலின்

நெருப்பலைகளில்

நித்தமும்

கருகிக் கரைகிறது

நெஞ்சம்!

31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரில் கடற்கரும்புலியாகச்சென்ற மேஜர் ஆந்திரா அவர்களின் வரலாற்றுப் பதிவில்   தந்தையை இழந்த குடும்பமொன்றில் தாயின் ஆதரவில் மட்டுமே வளர்ந்த செல்வி விநாயகமூர்த்தி சுதர்சினி என்ற இயர்பெயருடைய  மேஜர் ஆந்திரா  இதயத்தில் ஓட்டையினால் தனது தாயார் அவதிப்பட்ட நிலையிலும் நாட்டைக் காக்க புறப்பட்டதை

“அம்மா இன்னும் சிறிதுகாலமே உயிர்வாழ்வாள் என்று தெரிந்த பின்பும் வீட்டுக்கு அழைத்துவந்து எல்லோராலும் அழத்தான் முடிந்தது. வீட்டில் இவ்வளவு ஒரு சோகம் இருந்தாலும் நாட்டு நிலைமை பற்றியே சிந்திக்கும் அவளது எண்ணம் உயர்வானது” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கின்ற பொழுது  இவ்வாறான கவிதைகள் மற்றும்  போர் இலக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அகவுணர்வுகள்   உண்மைச் சம்பவங்களின் பின்னணியிலேயே எழுந்தன என்பதை புலப்படுத்துகின்றன .

ஒருபுறம் வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டமானது மறுபுறம் தனிமனித மனங்களின் ஆழமான காயங்களை இனவிடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக தாங்கி நின்றவாறே  பயணித்திருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே

மூதில் மகளிராதல் தகுமே

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை

யானை எறிந்து களத்து ஒழிந்தனனே

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்

பெருநிரை விலக்கி ஆண்டு பட்டனனே

இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி

வேல் கைக்கொடுத்து வெளிது விரித்து உடீஇ

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒரு மகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!” (புறம்: 279)

என்ற புறநாநூறு பாடலில்  மறக்குடியில் பிறந்த ஒரு பெண்  முதல் நாள் நடந்த போரில் தனது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்து போக  நேற்று நடந்த போரில் அவளது  கணவன் இறந்திருந்தும் இன்று போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு விருப்பம் கொண்டு இருநாளிலும் போர்புரிந்து இறந்துப்பட்ட தந்தையையும் தலைவனையும் நினைத்து வருந்தாது அவள் தயங்காமல் வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போக வேண்டும் என்பதால் எஞ்சி நின்ற தன் சிறிய மகனை அன்போடு அழைத்து வெண்மையான ஆடையை உடுத்தித் தலையைச் சீவிமுடித்து வேலை எடுத்துக் கையிலே கொடுத்து போர்க்களத்தை நோக்கி அனுப்பி வைத்தாள் என்ற செய்திக் குறிப்புள்ளது.

அன்று பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னர் நடந்த  நிகழ்வுகளைப் போன்ற நிகழ்வுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்துள்ளதற்கு சான்றுகள் உள்ளன.

06.02. 2006ல்  கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த திருமதி தியாகராசா என்ற தாய் தனது தனது மகளான ஜெனிதாவை போராட்டத்தில் இணைத்துவைத்து “தமிழீழ விடுதலைப் போராட்டம் நீடித்துச் செல்லக்கூடாது. விரைவில் தமிழீழ தனியரசை நாங்கள் அடையவேண்டும். அதற்காக எங்கள் தலைவரின் கையை நாம் பலப்படுத்த வேண்டும். அனைத்து தாய்மாரும் தமது பிள்ளைகளைப் போராட்டத்தில் முன்வந்து இணைந்து தலைவரின் கையை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே நான் எனது மகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்வந்து இணைக்கின்றேன்” என வலயப் பொறுப்பாளர்   குட்டிமணியிடம்  தெரிவித்திருந்தமை அக்காலத்தில் பத்திரிகைகளிலும் இணைய செய்திகளிலும் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது

இதேபோல் மன்னார் மாவட்டத்தின் பலாப்பொருமாள் கட்டு வட்டக்கண்டல் எனும் பகுதியில் வசித்து வரும் சண்முகம் காளியம்மா எனும் இத்தாயார் தனது ஆறு பிள்ளைகளில் ஒருவரை தாயக விடுதலைப் போருக்காக தானாகவே முன்வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைத்து வைத்தபோது  கூறியதாவது:

“எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது கணவர் மன்னார்ப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி சுகவீனமுற்றிருந்து 1997 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் போது இரண்டு பிள்ளைகளை தேச விடுதலைப் போருக்கு அனுப்பவேண்டும் என்று கூறிவருவார். அவர் இறந்ததன் பின்புதான் எனது பிள்ளைகளுக்கு போராடும் வயது நிரம்பியதால் இப்போது நான் எனது மகனை இயக்கத்தில் இணைக்கிறேன். விடுதலைப் போருக்காக ஒரு பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளை இணைத்துள்ளார்கள். எனவே ஆறு பிள்ளைகளைப் பெற்ற நான் ஒரு பிள்ளையையேனும் போராட்டத்திற்கு அனுப்பாவிட்டால் தேசம் என்னை மதிக்காது. எனது மகனும் என்னுடைய இலட்சியத்தையும் எனது கணவரின் இலட்சியத்தையும் நிறைவேற்றுவான் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு”  என  அத் தாயார் தெரிவித்தமையை ஆகஸ்ட்  2006ல் புதினம் பத்திரிகை  வெளியிட்டிருந்தது .

இந் நிகழ்வானது சங்ககால தாயொருத்தி தனது மகனை பெற்று பாதுகாத்தல் தன் கடமைதான் ஆயினும் மகனின் கடமையானது  போர்க்களத்திலே  யானையை எதிர்க்கும் ஆற்றலுடன் போரிடுவது என்பதை உணர்ந்து போருக்கு அனுப்புகின்றாள். இப் பாடலை பொன்முடியார் எனும் சங்ககாலப் பெண் புலவர் பாடியமை ஓர் தாயின்  போர்க்கால கடமை  என்ன என்பதை உணர்த்தி நிற்கின்றது.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம் 312)

இந் நிகழ்வுகளை எடுத்துக்கூறும்  தமிழீழ எழுச்சிப்பாடல்

மகனே மகனே போய்வாடா மண்ணை மீட்கப் போய்வாடா

 அன்னைதேசம் அயலார் கையில் இருப்பது சரியல்ல 

 புயலென போரிட போய் வாடா பூமி அதிரட்டும்  போய்வாடா

 என்பதாகும்.

இவ்வாறு தனது கடமையை உணர்ந்து மகனை போருக்கு அனுப்பிவைத்த தாய்மானம் பின்னர் பிள்ளையை நினைத்து நினைத்து எப்படி தவிக்கின்றது என்பதை பெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் கோடிட்டுக் காட்டத்  தவறவில்லை என்பதற்கு ஆதாரமாக இப்பாடலில் வருகின்ற பின்வரும் வரிகளை எடுத்துக் காட்டலாம்.

அன்னையிடத்தில் பால் குடித்த ஈரம் உதட்டில் காயவில்லை

உன்னை போருக்கு அனுப்பிவிட்டு உள்ளம் ஏனோ தாங்கவில்லை

இங்கு நாம் சங்க கால இலக்கியமோ,  தமிழீழ  போர்க்கால இலக்கியமும் காட்டாத ஒரு மேன்மையான தியாகச் செயலின் உச்சத்தை இறுதிபோரின் சமர்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தில் காணலாம். தமிழீழ விடுதலைப் போராட்ட வலராற்றில் விடுதலைப் புலிகளின் ஓர்மத்துக்கும், விடாமுயற்சியையும் காட்டிநின்ற  ஆனந்தபுர பெரும் சமருக்கு மகளிர்படையணிகள்  சார்பாக தலைமை தாங்கிய மாலதி  படையணியின் சிறப்புத் தளபதி  பிரிகேடியர் விதுசா , சோதியா படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்க்கா அவர்களுடன் போர்க்களத்திற்கு சென்ற மாலதி படையணித் தளபதி கேணல் தமிழ்ச்செல்வி அவர்கள் தனது  சிறு குழந்தையை போராளியான தனது  கணவர் பூவண்ணனிடம் விட்டுவிடு போர்க்களத்துக்குச் சென்றார். அவரது வீர வலராறு பற்றி ஆனந்தபுர சமர் வரலாற்றுப்பதிவுகள் பின்வருமாறு பதிவிடுகின்றன:

Thamizhselvi

“04.04.2009ல் அதிகாலையில் இடம்பெற்ற பெரும் உடைப்புச் சமரில் பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்கா உள்ளிட்ட பெரும் தளபதிகள் வீரமரணமடைய அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச் சமரை மேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர். அந்த உடைப்புச் சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம் இறங்கினாள். எப்படியாவது பெட்டி முற்றுகைக்குள்  இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது. இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித் தொடர்பாடலாக இருந்தது.

அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்தி போராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்வி என்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக்கொண்டாள்.”

இவ்வாறாக வீரம்நிறைந்த பெண்கள் தமிழீழத்தில் வாழ்ந்தார்கள் என்பது உலகே  கண்டு வியந்த உண்மை என்பதுடன் அவர்கள் தமது அக உணர்வுகளை போர்க்கால இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் காரணம் அப்பெண்களுக்கான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வழங்கிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆழ்ந்த  சிந்தனையே ஆகும்  .

பெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி 1


One thought on “பெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்களில் வெளிப்படும் அக உணர்வுகளின் சிறப்பு- பகுதி II

  1. Yogarajah Jayakanth

    Documentation is important for the next generation. Great reach article on Tamil Eelam war literacy with the comparison of Tamil literacy. Keep writing. Pen is the only weapon we have now and can make changes in our society.

    Reply

Leave a Reply to Yogarajah Jayakanth Cancel reply

Your email address will not be published. Required fields are marked *