முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் மாகாணசபை ஒத்துழைப்பு வழங்குகின்றது! கே.கே.மஸ்தான் எம்.பி

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் மாகாணசபை ஒத்துழைப்பு வழங்குகின்றது! கே.கே.மஸ்தான் எம்.பி

நேர்காணல்

-கே.வாசு-

மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பல பிரச்சனைகள் இன்றும் தீர்க்கப்படாத நிலை தொடர்கின்றது. மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு அப்பால் தமது உரிமைக்காகவும், தமது வாழ்வாதாரத்திற்காகவும், நீதிக்காகவும் தாமாகவே வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் எம்.பி அவர்கள் இவை தொடர்பில் தெரிவித்த கருத்துக்களே இவை..

கேள்வி: நல்லாட்சி எனக் கூறப்படும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு இரண்டு வருடம் முடிவடைந்த நிலையில் வன்னிப்பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் எப்படி அமைந்துள்ளது?

பதில்: இது தொடர்பில் நாம் பிரதேச மற்றும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தி வருகின்றோம். அதில் பாரிய சில வேலைத் திட்டங்களுக்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மக்களை அழைக்க முடியவில்லை. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை வேலைப்பளு காரணமாக நடத்த முடியாத நிலை உள்ளது. மக்களினுடைய சுகாதாரம், கல்வி, விவசாயம், வாழ்வாதரம் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வையும் முன்வைத்து மக்களது தேவைகளை கருத்தில் கொண்டு அபிவிருத்தியை ஓரளவு செய்யக் கூடியதாக இருக்கின்றது.

கேள்வி: குறித்த பகுதிகளில் மாகாண மற்றும் மத்திய அரசுகள் இணைந்து அபிவிருத்திக் திட்டங்களை கொண்டு செல்லக் கூடிய நிலமை காணப்படுகின்றதா?

பதில்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியில் மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிக்கின்றோம். தற்போதைய அபிவிருத்திகளில் மாகாண சபை தனக்குரிய வேலைத்திட்டங்களையும், அபிவிருத்திகளையும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து நல்ல முறையில் செய்து வருகின்றது. இது தவிர, முன்னைய அரசாங்கத்தை விட தற்போது மகாணசபை சுயாதீனமாக இயங்கக்கூடியதாகவே இருக்கின்றது.

கேள்வி: வன்னியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மாகாண சபை மத்திய அரசின் வேலைத் திட்டங்களை கொண்டு செல்லவதற்கு இடையூறாக இருப்பதாக குற்றம் சுமந்தியிருக்கிறார். இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில்: அது சம்மந்தமான சில கருத்துக்களும் இருக்கின்றது. முன்னர் மகாணசபை முஸ்லிம் மக்களின் பிரச்சனைகள், சிங்கள மக்களின் பிரச்சனைகளில் இணைந்து செயற்படவில்லை என்ற கருத்துக்களை சிலர் சொன்னார்கள். ஆனால் நான் பார்க்கின்ற போது எனக்கு அப்படி தெரியவில்லை. முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் முதல் ஒரு முரண்பாடான நிலமை இருந்தது. அந்த பகுதியில் 1200 முஸ்லிம் மக்கள் இருந்தார்கள். அந்த இடத்திற்கு அவர்கள் வரும் போது சில முரண்பாடான பிரச்சனைகள் ஏற்பட்டது. இது சம்மந்தமாக மாகாணசபை உறுப்பினர்கனையும் அழைத்து பேசிய போது அது பிரச்சனையாக இருக்கவில்லை. சுமுகமாக தீர்க்கர்பட்டது. அவர்களது கருத்து முஸ்லிம் மக்கள் தமது காணிகளில் வந்து இருப்பதற்கு எதிர்ப்பு இல்லை. அவர்கள் வரமுடியும். வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் காடுகளை வெட்டி இருப்பதைத் தான் எதிர்ப்பதாக கூறினார்கள். நான் அரசியலுக்கு வரும் போது இது பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால் நான் அங்கு சென்று பார்த்த போது இது சுமுகமாகவுள்ளது. முதல் எப்படி இருந்தது என எனக்கு தெரியாது.

கேள்வி: வடக்கு பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு மாகாண சபை ஒத்துழைப்பை வழங்குவதாக நீங்கள் கருதுகின்றீர்களா..?

பதில்: அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் எமக்கு உதவி வழங்கும் நாடுகள் சில நிபந்தனைகள் விதிக்கிறார்கள். அந்த நிபந்தனைகளுக்கு அமைவாக மத்திய மீள்குடியேற்ற அமைச்சு ஒரு தெரிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த தெரிவுகளில் முஸ்லிம் மக்களுக்கும் வீடுகள் கிடைத்திருக்கின்றது. அந்த புள்ளியிடும் முறையில் சில குறைபாடுகள் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். அந்த தெரிவுகளில் அவர்கள் புள்ளியிடுகின்ற முறைமையில் தவறு இருப்பதாக மக்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் அதற்கும் மாகாண சபைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மத்திய அரசாங்கம். அதனால் மாகாண சபை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

கேள்வி: மூன்று ஆண்டுகள் கடந்து வடமாகாண சபை பயணிக்கிறது. அதன் செயற்பாடுகளை அரச கட்சி என்ற வகையில் நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்: மாகாணசபை முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியை விட தற்போது சிறப்பாக செயற்படுவதாகவே கருதுகின்றேன். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் பல கிடைத்திருக்கின்றது. ஆட்சி மாற்றம் வரும் வரை அவர்கள் எந்தப் பணியும் செய்ய முடியாத நிலை இருந்தது. பல இனவாதிகள் பலவிதமான கருத்துக்களை கூறுகின்ற போதும் வடமாகாண முதலமைச்சர் அவர்கள் இன, மத பேதங்களைக் கடந்து சிங்கள, முஸ்லிம், தமிழ் பகுதிகளில் பாரபட்சம் இன்றி வேலைகளைச் செய்கின்றார். அண்மையில் கூட வவுனியாவில் சிங்கள மக்களின் பகுதியில் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை முதலமைச்சர் செய்திருக்கின்றார். அந்த மக்களுக்கு தெளிவாகவும் தனது கருத்தையும் பதிவு செய்திருக்கின்றார்.

கேள்வி: கோப்பாபுலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். நீங்கள் அப்பகுதியின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக உள்ளீர்கள். இந்த மக்களின் போராட்டத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்..?

பதில்: போராட்டங்களை மக்கள் செய்கிறார்கள். அது அவர்களது உரிமை. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதி அவர்கள் சில விடயங்களில் மிகவும் தெளிவாக இருக்கின்றார். நாட்டின் பாதுகாப்பு எனக் கூறி எல்லாக் காணிகளையும் வைத்திருக்காமல் மிகவும் அவசியமான காணிகளை வைத்துக் கொண்டு மிகுதிக் காணிகளை மக்களிடம் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். அந்தவகையில் வவுனியா ஓமந்தை, யாழ்ப்பாணம் வலிவடக்கு, திருகோணமலை சம்பூர் பகுதிகளில் பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆகவே, காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகிறது. வடக்கில் ஏதாவது செய்கின்ற போது நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனை என தென்பகுதியில் கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் கடந்து தான் காணிவிடுவிப்புக்கள் நடைபெறுகின்றது. கேப்பாபுலவைப் பொறுத்தவரை இந்தப் போராட்டம் நடைபெற முதலே நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடனும், ஜனாதிபதியுடனும் பேசியிருக்கின்றேன். தற்போதும் பேசியிருக்கின்றேன். தேர்தலுக்கு பின் மூன்று தடவை அந்த மக்களை சந்தித்து அவர்களது பிரச்சனைகளை கேட்டு உரிய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசியிருக்கின்றேன். நிச்சயமாக இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் அவர்களது பிரச்சனை தீர்க்கப்படும். அவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்களது காணி கிடைக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

கேள்வி: தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாசிறி அவர்கள் வடக்கு மக்களால் அதிக வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சரை வெளியேற்ற வேண்டும் என பேசியுள்ளார். இதனை நீங்கள் இரு பகுதிகளுடனும் இணைந்து பணியாற்றுகின்றவர் என்ற வகையில் எப்படி பார்க்கின்றீர்கள்..?

பதில்: ஏன் அந்த அமைச்சர் அப்படி கூறினார் என எனக்கு தெரியவில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. இரண்டு பெரிய கட்சிகள் இணைந்து இந்த தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் பேச்சுச் சுதந்திரம் இல்லை. அதனால் தான் இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட கருத்துக்களையும் பேசுகிறார்கள். எமது கட்சியைப் பொறுத்தவரை இது எமது நிலைப்பாடு இல்லை. நான் இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை அறிந்து மத்திய அரசுடன் பேசி அதை செய்கின்றேன். அதேபோன்று மாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண அமைச்சர்களுடன் பேசியும் பல விடயங்களை செய்கின்றேன். அதேபோன்று முதலமைச்சர் அவர்களும் தமது மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப மக்களுக்காக அவர்கள் சார்ந்த கருத்துக்களையே கூறுவதாக நான் கருதுகின்றேன். ஏன் இப்படி அந்த அமைச்சர் கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை- எனத் தெரிவித்தார்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *