தலைப்பு செய்திகள்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

நீதி செத்துப் போய்விட்டது ஈழத்து இனப்படுகொலைகளில்….
நாதியற்றோர் துயர்களைய இப்பொழுது யாருமில்லை?-தாமிருப்பதாய்
வாதிடுவார் வழக்குரைப்போமென கதையளப்பார்!
போதும் நாம் பட்டதெல்லாம் போகட்டும் ஒரு கரையிலென
போதிப்பார்! போதிமரத்து புத்தனை ஏற்றுவோருடன் சேர்ந்து
சாதிப்போம் நாமெல்லாம் ஒரு தாயின் பிள்ளைகளாய் என்பார்!
ஏதுமற்ற ஏதிலிகள் யாம் என்ன செய்வோம் இக்கதைகள் கேட்டு ?!

ஏழு ஆண்டுகள் இப்படியே கடந்து போயின எதுவித தீர்வுமின்றி
வாழ்விழந்த விதவைகள், வாழ்வாதாரமில்லா முன்னாள் போராளிகள்
ஆதரவற்ற சிறுவர்கள், காணாமலாக்கப்பட்ட உறவுகளைத்தேடி காத்திருப்போர்
நாளும் நடைப்பிணமாய் வாழ்வோர், மீளமுடியா மனவழுத்தத்தில் தள்ளப்பட்டோர் என
நீளும் பட்டியலில் வடுசுமந்த மனிதங்கள் இன்னமும் முள்ளிவாய்க்கால் சாட்சிகளாய்

நல்லாட்சி என்ற சொல்லாட்சி மட்டும் நல்லாய் இனிக்கிறது எம் செவிகளில்
வல்லாதிக்க அரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் எல்லாமும் அடிபட்டுப் போகிறது
உள்ளக விசாரணை பொறிமுறை என்ன?! சுயாதீன விசாரணை பொறிமுறை என்ன?!
இல்லாதவனுக்கு இடும்பிச்சை சிறிதெனிலும் நல்லாய்த்தான் தெரியும் எனும் நிலையாச்சுது
பொல்லாங்கு பேசி பாசாங்கு செய்யும் போலித் தமிழ்த் தேசியம் அடிபட்டுப் போகட்டும்!
மல்லாக்காய் பறக்குது வெண்காகம் என்ற கண்கட்டு வித்தை உடைபட்டுப் போகட்டும்!

எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்து சலித்து ஒருநாள் எம் மக்கள் புரட்சி
எரிமலையாய் வெடிக்கும் பார்! எதிர்பென்னும் ஆயுதம் எம் கையில் எடுத்தபின்;
அதிகாரம் ஆட்டம் காணும் ! எம்மை அடைமானம் வைத்த கூட்டம் புறமுதுகிட்டோடும்!
அடுத்த தலைமுறையும் எம்மோடு உரிமைக்கு குரல் கொடுக்கும் அப்பொழுது
ஈழத்தமிழனின் சரித்திரம் திரும்பவும் திருத்தி எழுதப்பட முள்ளிவாக்கால் துயருக்கு விடிவுவரும்!

                                                                                                                                                       -பிறேமலதா பஞ்சாட்சரம்

 


One thought on “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

  1. kaneshanElankumaran

    கட்டாயம்நிறைவேற்றியேதீருவவோம்தமிழ்மக்களே!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *