Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மண்டேலா சர்வதேச தினச் சிந்தனை

மண்டேலா சர்வதேச தினச் சிந்தனை

வீரகத்தி தனபாலசிங்கம் 

கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்று ‘இலங்கைக்கு தன்னலமற்ற ஒரு மண்டேலா தேவை’ (Sri Lanka Needs a Selfless Mandela) என்ற தலைப்பில் தீட்டியிருந்த ஆசிரிய தலையங்கத்தை வாசிக்க நேர்ந்தது. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படவிருக்கும் நெல்சன் மண்டேலா சர்வதேச தினத்தை முன்னிட்டு 6 நாட்களுக்கு முன்கூட்டியே முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் அருமை பெருமைகள் அதில்  நினைவு கூரப்பட்டிருந்தன . .

தென்னாபிரிக்காவில் வெள்ளைச் சிறுபான்மையினத்தவர்களின் மேலாதிக்கத்திற்கு எதிரான பெரும்பான்மைக் கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு பல தசாப்தங்களாக தலைமைதாங்கி வழிநடத்திய மண்டேலா விரும்பியிருந்தால் நீண்டகாலத்துக்கு அந்நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்திருக்க முடியும். ஆனால், 1994 ஆம் ஆண்டு மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அவர் ஒரு ஐந்து வருட பதவிக் காலத்துக்கு மாத்திரமே ஆட்சியதிகாரத்தில் இருந்துவிட்டு ஓய்வுப் பெற்றுக்கொண்டார். அவ்வாறு செய்ததன் மூலமாக உலகத்தலைவர்களுக்கு படிப்பினையை இவர் வழங்கியதாக சுட்டிக் காட்டிய ஆசிரிய தலையங்கம் இலங்கையில் 2005 நவம்பரில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்த மகிந்த ராஜபக் ஷ அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரமான இரு பதவிக் காலங்களுக்கும் கூடுதலாக அல்லது வாழ்நாள் பூராகவும் பதவியில் இருக்கும் நோக்குடன் அரசியலமைப்புக்குத் திருத்தத்தைக் கொண்டு வந்ததையும் பிறகு இரண்டாவது பதவிக் காலத்தில் இரு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில் முன்கூட்டியே 2015 ஜனவரியில் தேர்தலை நடத்தி தோல்வி கண்டதையும் குறிப்பிட்டிருந்தது. ராஜபக் ஷவைத் தோற்கடித்து ஜனாதிபதியாக பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன கண்டி தலதா மாளிகையில் ஒரு தடவை நிகழ்த்திய உரையில் தானும் அரசாங்கத் தலைவர்களும் சகல சமூகத்தவரையும் அரவணைக்கின்ற, நீதியான, சமாதானமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு தங்களை அர்ப்பணித்திருப்பதாக கூறியதாகவும் சுட்டிக்காட்டிய ஆசிரிய தலையங்கம் தனிப்பட்ட நலன்களுக்கும் புகழுக்கும் அப்பால் சிந்தித்து விடுதலைக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் பாடுபட்டுழைக்கின்ற ஒரு மண்டேலாவை இலங்கையும் ஒரு நாள் காணும் என்று எதிர்பார்ப்பை வெளியிட்டிருந்தது.

Mandela is sworn into office as president by South African Chief Justice Michael Corbett in Pretoria.

இலங்கையில் ஒரு மண்டேலா தோன்றுகின்ற அதிசயம் நிகழ முடியுமோ இல்லையோ அது வேறு விடயம். ஆனால், பல தசாப்தங்களாக முரண் நிலைக்கும் மோதலுக்கும் உள்ளாகியிருந்த சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உலகிற்கு முன்னுதாரணமாக நாம் வாழும் காலத்தில் செயற்பட்ட அரசியல் -ஞானி மண்டேலாவின் சிந்தனைகளை(உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலகட்டத்தில்) சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயன்முறைகளை பயனுறுதியுடைய முறையில் முன்னெடுக்க முடியாமல் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் தடுமாறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் நினைவு மீட்டிப்பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

உண்மையான நல்லிணக்கம் என்பது வெறுமனே கடந்த காலத்தை மறப்பதில் மாத்திரம் உள்ளடக்கியிருக்கவில்லை. நல்லிணக்கம் என்பது சட்டரீதியான கட்டமைப்புகளுக்கு அப்பால் பல காரியங்களை வேண்டிநிற்கின்ற ஒரு ஆன்மீகச் செயன்முறையாகும். அது மக்களின் மனங்களில் இடம்பெறவேண்டியதாகும் என்று கூறியவர் மண்டேலா.

தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியான மண்டேலாவைக் கௌரவிக்கும் முகமாக அவர் உயிருடன் இருந்த காலக்கட்டத்திலேயே அவரது பிறந்த தினமான ஜூலை 18 நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 2009 நவம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்ட இச் சர்வதேச தினம் முதன்முதலாக 2010 ஜூலை 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. ஜோஹன்னர்ஸ் பேர்க் நகரில் அமைந்திருக்கும் நெல்சன் மண்டேலா மன்றம் (Nelson Mandela Foundation) ஒவ்வொரு வருடமும் இத் தினத்துக்கென்று ஒரு தொனிப்பொருளைப் பிரகடனம் செய்யும். இவ் வருடம்  வறுமைக்கு எதிரான போராட்டத்துக்கு அது அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வறுமைக்கெதிரான போராட்டத்துக்கும் சகலருக்குமான சமூக நீதியை மேம்படுத்துவதற்கும் மண்டேலா வழங்கிய தலைமைத்துவத்தைக் கௌரவித்து அவரின் மரபைப் போற்றுகின்ற இத் தினம் உலகை மாற்றியமைப்பதற்கான சக்தி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கிறது என்கின்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதாகும். ‘மண்டேலா 67 வருடங்கள் சமூக நீதிக்காக போராடினார். மண்டேலா தினத்தில் 67 நிமிடங்களை மற்றவர்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு அர்ப்பணிப்பதன் மூலமாக அவரின் மரபின் பேரில் உலகம் பூராகவுமுள்ள மக்களை ஒரு உயர்ந்த சிந்தனையின் கீழ் ஐக்கியப்படுத்துவோம். வறுமைக்கு எதிரான போராட்டத்தில் உலக மக்களை ஒன்றிணைப்பதன் மூலமாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கலாசாரப் பல்வகைமையையும் மேம்படுத்துவோம்’ என்று நெல்சன் மண்டேலா மன்றம் அறைகூவல் விடுத்திருக்கிறது. நாம் வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம். மற்றவர்களின் வாழ்வில் எம்மால் செய்யப்பட்டிருக்கக்கூடிய மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே எமது வாழ்க்கையின் முக்கியத்துவம் தீர்மானிக்கப்படுகின்றது என்ற மண்டேலாவின் சிந்தனையின் அடிப்படையிலானதாக இந்த அறைகூவல் அமைந்திருக்கிறது. வறுமையை  வெற்றி கொள்வதென்பது ஒரு பெருந்தன்மையின் வெளிப்பாடு அல்ல,  அது நீதியை வழங்குகின்ற ஒரு செயற்பாடு. அடிப்படை மனித உரிமையை,  கண்ணியமான  வாழ்க்கையைக்  கொண்டிருப்பதற்கான  உரிமையைப் பாதுகாக்கின்ற செயற்பாடாகும்.  வறுமை தொடருமானால்  உண்மையான சுதந்திரம் இருக்காது என்று மண்டடேலா கூறியிருக்கின்றார்.

விடுதலைக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் தியாகம் நிறைந்த போராட்டத்தை நடத்திய ஒரு உலகத் தலைவரின் பிறந்த தினத்தை சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடுவது அவரின் வாழ்க்கையில் இருந்து போதனைகளைப் பெற்று உலகிற்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கேயாகும்.

முதன்முதலாக நெல்சன் மண்டலோ சர்வதேச தினம் 2010 ஜூலை 18 அனுஷ்டிக்கப்பட்டபோது அன்றைய ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பகுதியை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது காலப் பொருத்தமானதாகும். ‘எளிமையையும் தன்னடக்கத்தையும் உருவகப்படுத்தி நிற்கும் மேன்மையான ஒரு மனிதர் மண்டேலா. அவரது வாழ்வு, அவரது பலம், அவரது கண்ணியம் எம்மெல்லோருக்கும் ஓர் உதாரணமாகும். ஒடுக்கு முறையாளர்களை எதிர்த்துப் பல வருடங்களாகப் போராடிய மண்டேலா பின்னர் அவர்களை மன்னித்தார். அவரைச் சந்தித்தபோது அவர் தன் வாழ்நாளில் செய்த மகத்தான பணிகளுக்காக நான் நன்றி கூறினேன். அதற்குப் பதிலளித்த மண்டேலா அவ்வளவு பணிகளையும் செய்தது தானல்ல என்று மிகுந்த அடக்கத்துடன் கூறியதைக் கண்டு நான் பிரமித்துப் போனேன். மனித உரிமைகளுக்காகவும் மனித கௌரவத்துக்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்தில் மற்றையவர்கள் செய்த பங்களிப்பைப் பற்றிப் பேசுவதையே மண்டேலா விரும்பியதை எனது நேரடி அனுபவம் மூலமாகத் தெளிவாகத் தெரிந்து கொண்டேன். கோடிக்கணக்கான மக்களுக்கு மண்டேலா ஒரு உந்து சக்தியாக விளங்குவதற்கான காரணங்களில் இது ஒன்று மாத்திரமே. அவர் பண பலத்தின் ஆதரவையோ அல்லது அதிகார பலத்தின் ஆதரவையோ கொண்டவரல்ல. தான் ஒரு சாதாரண மனிதன் என்பதை எப்போதுமே எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார். சாதாரண மனிதனாகத் தன்னைக் கூறிக் கொள்ளும் அவர் அசாதாரணமான,  அதி விசேடமான விடயங்களைச் சாதித்திருக்கிறார். அவர் எமக்குப் பாதையைக் காட்டினார். உலகத்தை மாற்றினார். அதற்காக அவருக்கு எமது ஆழமான நன்றியறிதல்கள்’.

nelson-mandela-poverty-quote-bohomothcom

சமூக சமத்துவம், சமூக நீதி மற்றும் பேச்சு வார்த்தைகளின் மூலமாக சமாதானத்தை நாடுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சர்வதேச சமூகத்துக்கு உணர்த்துவதற்கு பயன்படக்கூடிய வகையில் நெல்சன் மண்டேலா தினத்தை அனுஷ்டிப்பதே முக்கியமானதாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை வென்றெடுப்பது எவ்வாறு என்பதையும் மனத்திலிருந்து வெறுப்புணர்வை வெளியேற்றி விட்டால் அமைதியையும் நல்லிணக்கத்தையும் காண முடியுமென்பதையும் உலகிற்கு நிரூபித்துக்காட்டிய மண்டேலாவுக்கு மனித குலத்தின் நல்வாழ்வின் மீதிருந்த ஆழமான பற்றுதலே அவரின் நீடித்த புகழுக்கும் செல்வாக்கிற்கும் காரணமாகும். உலகிற்கு ஒரு தார்மீக வழிகாட்டியாக வாழ்ந்த மண்டேலாவின் காலத்தில் வாழ்ந்தோம் என்பது எம்மெல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதமேயாகும்.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாவதற்கு முன்னர் மண்டேலா தடை செய்யப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக 27 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மண்டேலாவை விடுதலை செய்து இன ஒதுக்கலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்காக அவருடன் இணைந்து 1993 ஆம் ஆண்டு நோபல் சமாதானப் பரிசைப் பெற்ற தென்னாபிரிக்காவின் கடைசி வெள்ளையின ஜனாதிபதி எவ்.டபிள்யூ.டி.கிளார்க், மண்டேலாவை இருபதாம் நூற்றாண்டின் மகத்தான தலைவர்களில் ஒருவர் என்று வர்ணித்தார். 1990 பெப்ரவரி 11  மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கும் உத்தரவைப் பிறப்பித்த கிளார்க்  அந்தச் சந்தர்ப்பத்திலேயே தன்னையும் ஒரு சுதந்திர மனிதனாக  உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். உலகின் 50 முன்னணி பல்கலைக்கழகங்கள் மண்டேலாவுக்கு கௌரவப்பட்டங்களை வழங்கியிருந்தன.

1999 ஜூனில் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிய பின்னர் எயிட்ஸ் நோய்க்கு எதிரான பிரசார இயக்கங்களை உலகம் பூராகவும் முன்னெடுத்த மண்டேலா சர்வதேச அரங்கில் தென்னபிரிக்காவின் ஒரு நல்லெண்ணத் தூதுவராக வலம் வந்தார். நண்பர்களாலும் ஆதரவாளர்களாலும் ‘மடிபா’ என்று அழைக்கப்பட்ட மண்டேலா, 2004 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டாலும் அந்த மாமனிதரால் உலகில் இடம் பெற்ற அநீதிகளையும் கொடுமைகளையும் கை கட்டிப்பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. உலக விவகாரங்களில் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து கர்வத்தனமாக நடந்துகொண்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்த போது அவரைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக அந்தத் தருணத்தில் மண்டேலா சொந்த நாட்டில் இருக்காமல் அயல் நாடொன்றுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரவேசிக்கும் இடங்களையெல்லாம் பிரகாசிக்க வைக்கும் சிரிப்பும் அவரது நகைச்சுவையுணர்வும் மக்களை தன்பக்கம் வென்றெடுத்ததில் மண்டேலாவுக்கு இருந்த அதி விசேடமான ஆற்றல்களாகும்.

மண்டேலாவின் தலைமைத்துவப் பண்பின் உச்சமென்று சொல்லக்கூடியது முதல் 5 வருட பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக இருந்துவிட்டு மீண்டும் பதவியில் இருக்க வேண்டுமென்ற ஆசை கிஞ்சித்தும் இல்லாமல் அதிகாரத்திலிருந்து இறங்குவதற்கு அவர் எடுத்த முடிவேயாகும். அடுத்த மட்டத் தலைவர்களுக்கு  வழி விட்டு அதிகார அரசியலில் இருந்து அவர் ஒதுங்கிக் கொண்டார். அவ்வாறு செய்ததன் மூலமாக அவர் தென்னாபிரிக்காவின் ஜனநாயக மாற்றம் தனியொரு மனிதனின் ஆளுமையையோ புகழையோ மையமாகக் கொண்டதாக வளராமல் தடுத்து ஜனநாயகக் கட்டமைப்பை ஆரோக்கியமான வழியில் நிறுவமையப்படுத்தினார். அவரது நாட்டின் ஜனநாயக நிறுவனங்களுக்கு இருந்த உறுதிப்பாடு ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளில் காணப்பட முடியாததாகும்.

Nobel prize

மகாத்மா காந்தியை புனித போராளி என்று வர்ணித்தவர் மண்டேலா. 1962 ஆம் ஆண்டில் ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில், ‘காந்தியின் போராட்ட வழிமுறையை என்னால் எந்தளவுக்கு அதிகபட்சம் பயன்படுத்த முடியுமோ அந்தளவுக்கு முழுமையாகப் பயன்படுத்தினேன். ஆனாலும், எம்மை எதிர்த்துத் தாக்கியவர்களின் தாக்குதலை கொஞ்சமேனும் சமாளிக்க முடியாத ஒரு கட்டம் வந்த போது அகிம்சை வழியில் மாத்திரம் போராட முடியாத நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது. எந்த நாடுமே கொஞ்ச நஞ்ச தாக்குதல்கூட இல்லாமல் விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெறவில்லை’ என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அரசியல் சூழ்நிலைகள் வேண்டி நிற்பதன் பிரகாரம் தனது செயற்போக்கை மாற்றிக் கொள்வதில் மண்டேலாவுக்கு இருந்த ஆற்றல் தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணியாக அமைந்தது.

கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமேந்திய கட்டமொன்று இருந்த போதிலும், அந்தப் போராட்டத்தின் சகல அம்சங்களிலும் ஆயுதப் போராளிகள் செல்வாக்குச் செலுத்தாதிருப்பதை உறுதி செய்யக் கூடிய விவேகமான தலைவர்கள் இருந்தார்கள். அவர்களில் மண்டேலா முதன்மையானவர்.

மண்டேலாவின் அந்த அணுகுமுறையில் இருந்து போதனைகளைப் பெற்றுக்கொண்டு செயற்பட்டிருந்தால் இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் தோல்வியை சந்தித்திருக்காது என்பது நிச்சயம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *