தலைப்பு செய்திகள்

மனித அவலத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால்…

மனித அவலத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால்…

-கே.வாசு-

முள்ளியவாய்கால் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல மனிநநேயத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு பெயர் தான். 21 ஆம் நூற்றாண்டில் மனித குலமே வெட்கி தலைகுனியும் அளவுக்கு மோசமான படுகொலை நடந்த மண். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளியவாய்கால் படுகொலை நிகழ்ந்தது. உரிமைக்காக போராடிய தமிழினத்திற்கு எதிராக பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறி சர்வதேச நாடுகள் பலவற்றின் ஆதரவுடன் முனனெடுக்கப்பட்ட போர் முள்ளியவாய்கால் மண்ணில் இடம்பெற்ற மனிதபேரவலத்துடன் முடிவுக்கு வந்தது.

IMG_0482Aவன்னியின் பல பகுதிகளிலும் இருந்த மக்கள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து இறுதியாக பதுங்கு குழிகளும், தற்காலிக தரப்பால் கூடாரங்களும் அமைத்து பாதுகாப்புக்காக தஞ்சம் கோரிய இடமே முள்ளியவாய்கால். இராணுவத்தின் நவீன படைகலங்களினதும், எறிகணைகளினதும், விமானப்படையினதும் தாக்குதலுக்கு இலக்காகி குருந்தியால் அந்த மண் தோய்ந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் அந்த இடத்தில் கொல்லப்பட்டனர். பலர் தமது அபயங்களை இழந்து இன்றும் போரின் அடையாளங்களாக எம் கண்முன்னே வந்து செல்கின்றனர். இன்னும் சிலர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டும், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போயினர். அவர்களைத் தேடி அவர்களது தாய்மாரும், மனைவிமாரும், உறவுகளும் இன்றும் வீதிகளில் மாதக்காணக்கான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

IMG_0571Aநந்திக்கடல் ஓரமாக முள்ளியவாய்காலில் இருந்து மக்களை வெளியேற்றிய வட்டுவாகல் பாலமும் அதனை அண்டி அமைந்துள்ள நந்திக்கடலும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றது. முள்ளியவாய்காலில் மீள்குடியேறி வாழும் மக்களின் மனங்களில் ஏதோவொரு சோகத்தையும், துயரத்தையும் அவதானிக்கவே முடிகிறது. போரின் கொடூரத்தின் சாட்சியாக முள்ளியவாய்கால் எங்கும் 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த மக்களின் ஆடைகளும், குழந்ததைகள் விளையாடிய பாவைகளும், காயப்பட்ட மக்களுக்கு மருந்து ஏற்ப்பட்ட மருந்து குவளைகளும், காலவோட்ட படங்களை பதிவு செய்திருந்த அல்பங்களும் பரவலாக காணப்படுகின்றன. சாப்பிட உணவு இல்லாத நிலையிலும் அந்த மக்கள் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்திருந்த சாப்பாட்டுப் பாத்திரங்கள், குவளைகள் என்பனவும் அந்த மக்களின் அவலங்களையும் போரின் தாக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இன்றும் காணப்படுகின்றது. சாப்பாட்டுப் பாத்திரங்கள் உணவுக்கு பதிலாக வெடிகுண்டுகளையே மக்களுக்கு வழங்கியிருக்கின்றது என்ற கதையினை அந்த பாத்திரங்களில் இருக்கும் ஒவ்வொரு துவாரங்களும் வெளிப்படுத்துகின்றன.

IMG_0532விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கி ரவைகள் வெடித்த நிலையிலும், வெடிக்காத நிலையிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. பாதுகாப்பாக மக்கள் அமைத்துக் கொண்ட பதுங்கு குழிகள் போரின் சாட்சியமாக இன்றும் அந்த மண்ணின் அடையாளமாகவே உள்ளது. இத்தகைய போரின் சாட்சியங்களோடு முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் 464 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குடியிருக்கின்றனர். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இம் மக்கள் 2005 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் கிழக்கு பகுதியில் மீள்குடியேறி வாழ்வைக் கட்டியெழுப்பிய போது நான்கு வருடங்களுக்குள் மீண்டும் அவர்களது வாழ்வை சின்னாபின்னமாக்கியது போர். இன்று எழுந்திருக்க முடியாத நடைபிணங்களாக அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

IMG_0505Aபோரின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரவைகளினதும், செல் தாக்குதலின் துகள்களாலும் துளைக்கப்பட்ட வீடுகள், கட்டடங்கள் என்பன அந்த மண்ணில் இன்றும் காணப்படுகின்றது. சில பதுங்கு குழிகளை தோண்டும் போது மரணித்த மக்களின் எலும்புக் கூடுகளும் காணப்படுகின்றன. செப்பனிப்படாத வீதிகள், குடிநீர்ப்பிரச்சனை, வாழ்வாதராத்திற்கான கடல் வளத்தை தென்னிலங்கை மீனவர்கள் சுரண்டல், அந்த மக்கள் குடியிருக்கும் தாழ் நிலப்பகுதியில் அடிக்கடி வெள்ளம் என அந்த மக்கள் போர் முடிந்து 8 வருடங்களின் பின்னும் நிம்மதியாக வாழ முடியாத நிலையே உள்ளது. மனங்காயங்களுடன் வாழும் இந்த மக்களை ஆற்றுப்படுத்தக் கூடிய வகையில் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே வேதனையான விடயம்.

IMG_0478இந்த நிலையிலேயே முள்ளியவாய்கால் நினைவேந்தலின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் இந்த மண்ணில் நடைபெறுகிறது. இப்பகுதியில் இறந்த மக்களின் நினைவாக கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் 500 நினைவுக்கல் படிமங்கள் நாட்டப்படுகின்றது. மக்கள் தமது மனக்காயங்களை ஆற்ற அழுது புலம்பி அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். கட்சி, அரசியல் என்பன கடந்து குருதியால் தோய்ந்த அந்த மண் இன்று ஒட்டுமொத்த மக்களின் கண்ணீரால் கழுவப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கான நீதி தான் இன்றுவரை எட்டாக்கனியாகவே இருக்கிறது. மக்கள் நம்பியவர்களும் ஏமாற்ற கடவுளும் கைவிட்ட நிலையில் நீதிக்கான ஏக்கம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.

IMG_0640A

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *