Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மஹிந்தவுக்காக பேசும் மகாசங்கம்

மஹிந்தவுக்காக பேசும் மகாசங்கம்

வீரகத்தி தனபாலசிங்கம் 

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு மாத்திரமல்ல, தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் தேவையில்லை.வேண்டுமானால், தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு திருத்தத்தைக் கொண்டு வரலாம்.

அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் நாட்டின் மூன்று பிரதான பௌத்த மதபீடங்களின் மகாநாயக்க தேரர்களும் தற்போது கொண்டிருக்கும் நிலைப்பாடு இதுதான்.மல்வத்தை, அஸ்கிரிய மற்றும் ராமண்ய நிக்காயாக்களின் மகாநாயக்கர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை கண்டியில் கூடி இது தொடர்பில் ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார்கள். அவர்களின் இந்தத் தீர்மானம் குறித்து அரசாங்கம் எத்தகைய பிரதிபலிப்பை வெளிக்காட்டப் போகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது இரண்டாவது நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு வந்தது.அரசியலமைப்பு வரைவு தயாரானதும் மகாநாயக்க தேரர்களுடன் அது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் அவர்களைச் சந்தித்து அவர் உறுதியளித்திருக்கிறார்.

அதற்கு முதல்  புதன்கிழமை அமைச்சரவையின் பேச்சாளரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மகாநாட்டில் மகாசங்கத்தினர் கேட்கிறார்களே என்பதற்காக கடந்த வருடம் ஏப்ரலில் ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை அரசாங்கம் நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்ததைக் காணக்ககூடியதாக இருந்தது.பௌத்த மதகுருமார்கள் தங்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருக்கக் கூடும். ஆனால், அரசியலமைப்பை மாற்றவேண்டுமென்று நாட்டு மக்கள் 2015ஆம் ஆண்டு இரு தேசியத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு ஆணையைத் தந்திருக்கிறார்கள்.அந்த ஆணைக்கு எதிராக நாம் செயற்படப்போவதில்லை.அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை பாராளுமன்றம் நிறுத்தப் போவதில்லை.புதிய அரசியலமைப்பு வரைவு மக்களின் அங்கீகாரத்துக்காக சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Constitution. Illustration: Ratna Sagar Shrestha.THT

அரசாங்கத் தலைவர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்ற போதிலும், அரசாங்கத்தின் இரு பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக மந்தகதியில் நகர்ந்துகொண்டிருந்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் மகாநாயக்க தேரர்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு காரணமாக மேலும் சிக்கலை எதிர்நோக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் அரசியலமைப்புச் சபையின் செயலகம் முதன்முறையாக தேசிய மகாநாடொன்றை கடந்த மாத இறுதியில் கொழும்பில் நடத்தி ஒரு வாரம் கடந்துவிடுவதற்கு முன்னதாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மகாசங்கத்திடமிருந்து புதிய அரசியலமைப்போ அல்லது திருத்தங்களோ தேவையில்லை என்ற தீர்மானம் வந்திருப்பது கவனிக்கத்தக்கது. ஜூன் 28இல் நடைபெற்ற அந்த மகாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சபையின் வழிநடத்தல் குழு அடுத்த சில தினங்களில் கூடி புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து தீர்மானிக்கும் என்று அறிவித்தார்.வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் அரசியலமைப்பின் சகல ஏற்பாடுகளையும் உள்ளடக்குவதா அல்லது மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக  சர்வஜனவாக்கெடுப்புக்கு விடப்படவேண்டிய தேவையில்லாத ஏற்பாடுகளை மாத்திரம் உள்ளடக்குவதா என்பது அந்தக் குழுவில் ஆராயப்படவிருக்கும் முக்கியமான கேள்விகளில் ஒன்று என்று குறிப்பிட்ட பிரதமர், அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளில் எதிர்நோக்கப்படுகின்ற தற்போதைய சவால்களைப்பற்றியும் விளக்கினார்.அரசின் தன்மை, தேர்தல் முறை, அதிகாரப் பரவலாக்கல்  முறைமை மற்றும் அரச மதம் ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து தீர்மானத்துக்கு வருவதே அந்தச் சவால்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவேண்டிய தேவை பற்றி இன்று நேற்றல்ல, நீண்டகாலமாகவே பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்காக அரசியலமைப்பை மாற்றவேண்டியதேவை குறித்து கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுவந்திருக்கிறது.ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய அரசியலமைப்பைக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவையும் அவருக்குப் பிறகு ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த ரணசிங்க பிரேமதாசவையும் தவிர தேர்தலின் மூலம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மற்றைய இருவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்துக் கொண்டே பதவிக்கு வந்தார்கள்.அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதையடுத்து தற்போதைய ஜனாதிபதி சிறிசேனவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதே தனது பிரதான குறிக்கோள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்குவந்தார். 2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று மறுநாள் மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணம்செய்த பிறகு அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் இனிமேல் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பிரகடனஞ் செய்தார்.சிறிசேனவின் கடந்த இரண்டரை வருட ஆட்சிக்காலத்திலும் அரசியலில் பிரதான பேசுபொருளாக புதிய அரசியலமைப்பு விளங்கிவருகிறது. பதவிக்கு வந்து 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகக் கூறிய ஜனாதிபதி சிறிசேனவினால் பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தற்போதைய அரசியலமைப்புக்கு 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர மாத்திரமே முடிந்தது. 2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் சேர்ந்து அமைத்த தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்தில் புதிய அரசியலமைப்பு வரைவு முக்கியமானதாகும். கடந்த வருட ஆரம்பத்தில் அரசியலமைப்புப் பேரவை அமைக்கப்பட்டு அரசியலமைப்பு வரைவுக்கான செயன் முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை காலமும் அந்தச் செயன்முறைகள் குறித்துக் கேள்வி கேட்காமல் இருந்த மகாசங்கத்தினர் இப்போது திடுதிப்பென்று நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியதன் பின்னணி என்ன?

முதலில் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்ற கருத்து அஸ்கிரிய பீடத்திடமிருந்தே வந்தது. கடந்த திங்கட்கிழமை கண்டியில் அந்தப் பீடத்தின் மகாநாயக்கர் அதி வண.வரகாகொட  ஸ்ரீஞானரத்ன தேரர் தலைமையில் கூடிய சங்க சபா இது தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றியது. தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மை அந்தஸ்தும் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையும் எந்தவிதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொடர்ந்து பேணப்படவேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படக்கூடாது என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றங்களை அரசியலமைப்புக்கான திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டுவரலாம் என்று தெரிவித்த அஸ்கிரிய பீடம் அரசியலமைப்பு மாற்றத்துக்கான வரைவு யோசனைகள் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஆராயப்பட்டிருக்கின்றன.ஆனால், அந்த கூட்டத்திற்கு மகா சங்கம் அழைக்கப்படவில்லை என்ற கண்டனத்தையும் வெளியிட்டது. இதே அஸ்கிரிய பீட மகாநாயக்கர் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கிளப்புகின்ற பிரச்சினைகளில் நியாயம் இருக்கிறதென்று கூறியவர் என்பது கவனிக்கத்தக்கது.

The Mahanayake Theras

அஸ்கிரிய பீடத்தின்  தீர்மானம் வெளியாகியதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் மூத்த மகாசங்க உறுப்பினர்களும் கண்டியில் கூடி அதே தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினார்கள். புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்படுவதை மகாசங்கம் விரும்பவில்லை என்ற செய்தி இந்தத் தீர்மானத்தின் மூலமாக அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. மேலும் பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தின் (International convention for the protection of all persons from enforced disappearances) ஏற்பாடுகளை உள்நாட்டுச் சட்டத்திற்குள் கூட்டிணைப்பதற்காக கொண்டுவரப்படவிருக்கும் சட்டமூலத்தை தாமதிக்குமாறும் மூன்று மகாநாயக்கர்களும் அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருந்தார்கள்.

இது விடயத்தில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய அம்சம் ஒன்று இருக்கிறது. அதாவது , மேற்படி சர்வதேச சாசனத்தின் ஏற்பாடுகளைக் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்ததற்கு சில தினங்கள் முன்னதாக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டு போர்க்குற்றங்கள் என்று கூறப்படுகின்றவற்றுக்காக மேற்கு நாடுகளின் நீதிமன்றங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு நிறுத்தப்படும் நிலை ஏற்படும் என்று கூறியிருந்தார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் மேற்படி சட்ட மூலம் தொடர்பிலும் மகாநாயக்கர்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் நிலைப்பாடுகளுக்கு இசைவானவையாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. கடந்த புதன்கிழமை அந்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது. சட்டமூலத்தை விரிவாக ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய கால அவகாசம் தேவையென்பதால் அதை விவாதிப்பதைத் தாமதப்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் தங்களது தீர்மானத்தில் கேட்டிருந்தனர். விவாதத்துக்கு அதை எடுக்காமல் விட்டதற்கு அரசாங்கத் தரப்பினால் சபையில் தெரிவிக்கப்பட்ட காரணமும் அதுவாகவே இருந்தது. மகாநாயக்க தேரர்கள் கேட்காமல் இருந்திருந்தால் சட்டமூலத்தை அரசாங்கம் சபையில் விவாதத்துக்கு எடுக்காமல் விட்டிருக்குமா? உறுப்பினர்கள் சட்டமூலத்தை விரிவாகப் படித்து விளங்கிக்கொள்வதற்காகத்தான் அவ்வாறு செய்வதாகக் கூறியிருக்குமா? என்ற கேள்விகள்  இயல்பாகவே எழுகின்றன. எனினும் அண்மையில் எதிர்காலத்தில் அச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சபை முதல்வரான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்திருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் நோக்குகையில் அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை எதிர்க்கின்ற சக்திகளின் நெருக்குதல்களின் விளைவாகவே மகாநாயக்க தேரர்கள் இவ்வாறு செயற்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் பலவீனப்பட்டு விடுமென்றும், ஆளுநர்களின் ஊடாக மாகாணங்களைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் அதிகாரம் இல்லாமல் போய்விடுமென்றும் கூட்டு எதிரணியும், சிங்கள தேசியவாத அமைப்புக்களும் பிரசாரங்களை முன்னெடுத்துவந்திருக்கின்றன.அரசின் ஒற்றையாட்சித்தன்மையை இல்லாமல் செய்து சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கும் பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் முதன்மை அந்தஸ்தை இல்லாமல் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இந்த தேசியவாத சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் பீதிகிளப்பிக்கொண்டிருக்கின்றன.மூன்று பௌத்த பீடங்கள் தங்களது தீர்மானத்துக்கு அடிப்படைகளாகக் கூறியிருக்கின்ற காரணங்களில் மேற்கூறப்பட்ட தேசியவாத சக்திகளின் பிரசாரங்களின் தாக்கத்தை தெளிவாக உணரக்கூடியதாக இருக்கிறது.

ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் தீவிர சிங்களத் தேசியவாதியாக தன்னைக்காட்டிக் கொள்பவர்களில் ஒருவர் விமல் வீரவன்ச. ஆகும் ஒற்றையாட்சியை இல்லாமல் செய்யப்போகிறார்கள். சமஷ்டி அரசியலமைப்பைக் கொண்டுவந்து நாட்டைத்துண்டாடப் போகிறார்கள். பௌத்த மதத்துக்குரிய முதன்மை அந்தஸ்தை இல்லாமல் செய்யப்போகிறார்கள் என்று ஓயாது குரலெழுப்பிக் கொண்டிருப்பவர் அவர். புதிய அரசியலமைப்பினால் ஏற்படப்போகின்றதாக தான் நினைக்கின்ற ஆபத்துக்கள் குறித்து முறையிடுவதற்காக கடந்த வருட பிற்பகுதியில் ஒரு தடவை வீரவன்ச கண்டிக்குச் சென்று மல்வத்தை மகாநாயக்கர் அதிவண.திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரைச் சந்தித்தார். வீரவன்ச கூறியவற்றைக்கேட்ட பிறகு மகாநாயக்கர் வீணாகப் பீதியைக் கிளப்பத் தேவையில்லை என்று ஆலோசனை கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. நாட்டுப் பிரிவினையைத் தூண்டிவிடக்கூடிய எந்தவொரு ஏற்பாடும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் புதிய அரசியலமைப்பு மக்களின் அங்கீகாரத்துக்காக சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படுமென்பதால் அநாவசியமாகப் பயப்படத்தேவையில்லையென்றும் வீரவன்சவுக்கும் அவருடன் கூடவந்தவர்களுக்கும் மல்வத்தை மகாநாயக்கர் கூறியனுப்பினாராம். அவ்வாறு கூறிய அவரும் கூட புதிய அரசியலமைப்புக்கு எதிராக ஏனைய இரு மகாநாயக்கர்களுடன் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். இடைப்பட்டகாலத்தில் அவரது சிந்தனையில் ஏன்தான் மாற்றம் ஏற்பட்டதோ? மகாநாயக்க தேரர்களின் அணுகுமுறைகளையும் நிலைப்பாடுகளையும் நோக்கும்போது அவர்கள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிரணியும் அதன் சிங்களத் தேசியவாத நேச சக்திகளும் கிளப்புகின்ற ஆதாரமற்ற பீதிகளுக்கு ஒரு ‘நியாயப்பாட்டைத்’ தேடிக் கொடுக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றுதான் கூறவேண்டியிருக்கிறது. இன்றைய அரசாங்கம் ஏற்கனவே அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்ற முதன்மை அந்தஸ்தையும் ஒற்றையாட்சியையும் இல்லாமல் செய்யும் என்று இலங்கை அரசியலை சரியாகப் புரிந்துக்கொள்ளக்கூடிய -–சுய நினைவுடன் இருக்கக்கூடிய எவருமே நம்பமாட்டார்கள். அத்துடன் தற்போது மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களுக்கும் அப்பால் சென்று சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக வழங்கக்கூடிய அரசியல் துணிவாற்றல் ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ  இருக்கிறதென்று எவரும் கற்பனைகூட செய்துபார்க்க மாட்டார்கள். ஆனால்,  தென்னிலங்கையில் கூட்டு எதிரணியும்  தேசியவாத சக்திகளும்  கிளப்புகின்ற ஆதாரமற்ற பீதிகள் சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, படித்தவர்கள் மட்டத்திலும் கணிசமான பிரிவினர் மத்தியில் எடுபடக்கூடிய அளவுக்கு அரசியல் கலாசாரத்தில் இனவாதம் குறிப்பாக, சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல் உரிமைகள் மற்றும் அபிலாசைகளுக்கு எதிரான உணர்வு ஊறிப்போயிருக்கிறது. புதியதொரு அரசியலமைப்பு தேவையில்லை என்று கருதுகின்ற அரசியல் சக்திகளின் நிலைப்பாடுகளுக்காக குரல்கொடுக்க கிளம்பியிருக்கும் மகாநாயக்கர்கள், , அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற விருப்பத்தில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்த அரசியல் சக்திகளினதும், வாக்காளர்களினதும் அபிலாசைகளை கிஞ்சித்தேனும் மதிப்பதற்கு ஏன் முன்வரவில்லை? இலங்கையில் மகாசங்கம் தாராள சிந்தனை கொண்ட அரசியல் போக்குகளுக்கு எதிரானதாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது, என்பதை இது நிரூபிக்கிறதல்லவா? சில கால கட்டங்களில் புறநடைகள் இருந்தபோதிலும், இலங்கை அரசியலில் மகாசங்கத்தின் பாத்திரம் பெரும்பாலும் எதிர்மறையானதாகவும் பிற்போக்கானதாகவும் இருந்து வருகின்றது என்ற உண்மை மேலும் பிரகாசமானதாகியிருக்கிறது.

மகாநாயக்கர்களின் கடந்த வாரத்தின் தீர்மானத்தையடுத்து தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மத்தியில் மூண்டிருக்கக்கூடிய வாதப் பிரதிவாதங்களிடையே  எதிர் பாராத ஒரு தரப்பிலிருந்து மிகவும் அறிவுபூர்வமானதும் நிதானமானதுமான கருத்தொன்று வெளிவந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

‘அரசியலமைப்புச் சீர்திருத்தங்களின் உள்ளடக்கம் தொடர்பில் எதுவுமே தெரியாத நிலையிலேயே மூன்று நிக்காயாக்களினதும் மகாநாயக்கர்கள் புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களோ வேண்டாம் என்று ஏகமனதாக தீர்மானித்திருக்கிறார்கள். இந்த விடயம் குறித்து மகாநாயக்கர்களுக்கு ஜனாதிபதி சிறிசேனவும் பிரதமர் விக்கிரமசிங்கவும் விளக்கமளித்து போதனை செய்ய வேண்டும். நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்பொன்றை அரசாங்கம் கொண்டு வந்து விடுமென்று கருதுகின்ற இனவாதக் குழுக்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களினதும், புள்ளிவிபரங்களினதும் செல்வாக்கிற்கு மகாநாயக்கர்கள் ஆளாகியிருக்கிறார்கள். தற்போதைய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற அந்தஸ்தை சிறுமைப்படுத்துவதற்கு எந்த யோசனையும் முன்வைக்கப்பட்டதற்கான சான்று கிடையாது. நாட்டின் ஜனநாயகச் செயன்முறைகள் எந்தவொரு மதத்தினாலும் பாதிக்கப்படக்கூடாது. நாட்டின் ஆட்சி முறை ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக இருக்கவும் கூடாது.” என்று இதைச் சொன்னவர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)யின் பாராளுமன்ற  உறுப்பினர் பிமால் இரத்நாயக்க.


One thought on “மஹிந்தவுக்காக பேசும் மகாசங்கம்

  1. N.T.Skantharasa

    Each and every citizen of Srilanka, irrespective of the religions or races they belong to, should realize the need of the day for all srilankans to live in harmony and allow the people concerned to do their duty and be fair by all citizens and to create a conducive environment for the prosperity of our motherland, based on the mandate received in the last general elections being mindful that Sri Lanka is a democratic country.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *