Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மாவீரர் தினமும் அதன் பின்னாலுள்ள அரசியலும்

மாவீரர் தினமும் அதன் பின்னாலுள்ள அரசியலும்

-நரேன்-

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகளால் பெரிதும் கௌரவப்படுத்தி கட்டியெழுப்பப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டிருந்ததுடன், பெரும்பாலான துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டும் இருந்தனர். கடந்த அரசாங்கத்திடமும், தற்போதைய அரசாங்கத்திடமும் தமிழ் தலைமைகள் மாவீரர்கள் உட்பட இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்து வந்திருந்தன. ஆனால் இரண்டு அரசாங்காங்களுமே அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால், அந்த நிபந்தனைகளை மீறி தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்டு மரணித்தவர்களின் கல்லறைகளுக்கு முன்னால் நின்று பெற்றோர்களும், உறவினர்களும் நீண்ட காலத்திற்கு பின்னர் தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். இது உணர்வு பூர்வமாகவும் அமைந்திருந்தது. தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி மரணித்தவர்களை நினைவுகூருவது என்பது அந்த இனத்தின் உரிமையும் கூட. தமிழ் அரசியல் தலைமைகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் தம்மை கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் என்றும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைப்பினரை தீண்ட தகாதவர்கள் என்றும் கூறிவந்தனர். இதன் வெளிப்பாடகவே முன்னாள் போராளிகளை உதாசீனமும் செய்திருந்தனர். இந்த வருட மாவீரர் தின நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பிரதான சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியிருப்பது சிலரை ஆச்சரியப்படுத்தியுள்ளதுடன் பலரையும் முகம் சுழிக்கவும் செய்துள்ளது. அவசர அவசரமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கும் தமிழரசுக் கட்சியினர் அஞ்சலி செலுத்தியிருந்தமை இங்கு கவனிக்கத்தக்கது. இவற்றின் குறித்து ஆராய வேண்டியது அவசியமானது. அதன் அடிப்படையிலேயே இப்பத்தியும் அமைகிறது.

2015 ஆம் ஆண்டு ஜெனீவா மனிதவுரிமைகள் பேரவைக் கூட்டத்தில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் தீர்மானம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அன்றில் இருந்தே மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கவும் தொடங்கியிருந்தது. விசாரணைப் பொறிமுறை தொடர்பில் உள்ளக விசாரணையா, சர்வதேச பொறிமுறையா அல்லது கலப்பு பொறிமுறையா என்ற சொற்பதங்களில் தங்கியிராமல் அதன் உள்ளடக்கத்தை அவதானிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைமை கோரியது. அதேபோன்று அரசியல் தீர்வு விடயத்திலும் ஒற்றையாட்சியா அல்லது சமஸ்டியா என்ற சொற்பதங்களில் தங்கியிருக்காமல் அதில் அடங்கியுள்ள விடயங்களை நோக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

தமிழ் மக்களின் உடைய தியாகங்களும் நீண்டபோராட்ட வராலாறும் வீணாகி விடக் கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும், தமிழ் தலைமைகளுக்கும் மீண்டும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்று அரசியல் யாப்பிற்கான வரைபையும் முன்வைத்து மக்களை அணிதிரட்டி எழுக தமிழ் பேரணியையும் நடத்தி காட்டியது. தாம் நம்பியிருக்கும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க கூடாது என்பதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமை இந்த பேரணிக்கு எதிர்நிலைப்பாட்டையும் கொண்டிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைமை முன்பு கூறிய விடயங்கள் காலப்போக்கில் அவர்கள் எதிர்பார்ததைப் போன்று நடைபெறவில்லை என்பது இப்பொழுது அவர்களின் கருத்துக்களில் இருந்து வெளிப்படுத்துகிறது. திருகோணமலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து இன்னமும் பேசப்படவில்லை என்றும் பல்வேறு விடயங்கள் குறித்து இன்னும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் தமிழரசுக் கட்சியின் வெளிவிவகார செயலாளரும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவின் அங்கத்துவருமான எம்.ஏ.சுமந்திரன் எம்மை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். ஆக தவறாக வழிநடத்தப்படுவோம் என்ற சந்தேகம் அவர் மனதிலும் எழுந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளை புறந்தள்ளி தமிழரசுக் கட்சி அதிலும் குறிப்பாக ஒருசில நபர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேககங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருந்ததுடன் அவர்களை எரிச்சலடையவும் செய்திருந்தது. இதன்காரணமாக ஒட்டுமொத்த கூட்டமைப்பின் மீதும் மக்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். வரப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூட தகவல்கள் கசிந்துள்ளது. ஒரு புறத்தில் கட்சியின் செல்வாக்கில் ஏற்பட்டுள்ள சரிவு, மறுபுறத்தில் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சி ஆகிய இரண்டுக்கும் இடையில் தமிழரசுக் கட்சி தத்தளித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதனால் எழுந்து போன செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கான ஒரு முயற்சியாக மாவீரர் தினத்தை தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் சுடரேற்றி அனுஸ்டித்ததாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். தென்னிலங்கையில் ஊடகவியலாளர்கள் மாவீரர் தினம் தொடர்பில் வடக்கு மதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களிடம் கேட்ட போது, அதில் என்ன தவறு இருக்கிறது. மாவீரர் அனுஸ்டிக்கப்படவேண்டும். அதில் பிரச்சனைகள் எதுமில்லை என தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இறந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த நிலையில் அரசாங்கம் மாவீரர் நினைவு நாள் அனுஸ்டித்த போது மௌனமாகவே இருந்துள்ளது. தமிழ் தலைமைகளுக்கு இந்த மாவீரர் தினமானது குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு எழுத்து போன செல்வாக்கை தூக்கி நிறுத்தப் பயன்பட்டுள்ளது.

மறுபுறம், மௌனமாக இருந்த அரசாங்கத்திற்கும் இது சர்வதேச அழுத்தத்தில் இருந்து விடுபட உதவியிருக்கின்றது. நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றாத தன்மை காணப்படுகின்றது. உண்மையை கண்டறிதல் செயற்முறைக்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் அமைத்தல், நிவாரணம் வழங்கல் தொடர்பாக நஸ்டஈடுகளை வழங்குதல் என்பவற்றுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது. தற்போது இறந்தவர்களை நினைவு கூரவும் அனுமதியளித்துள்ளது. புதிய அரசியலமைப்பில் இவை மீண்டும் நிகழா வண்ணம் யோசனைகள் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்து வரும் அரசாங்கம் பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிக்க முயல்கிறது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமை கூட்டத் தொடரில் இந்த விடயங்களைக் காட்டி அரசாங்கம் காலஅவகாசம் கோரமுற்படுகிறது. இலங்கை ஜனாதிபதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம் மற்றும் ஐ.நா செயலாளர் ஆகியோருக்கு பொறுப்புக் கூறலில் தம்மை விடுவிக்குமாறு கோரியுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்தவகையில் ஐ.நா மற்றும் சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் வகையில் இந்த முறை மாவீரர் நினைவு நாளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கின்றது. அத்துடன், புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்ட பின்னர் அது சர்வசன வாக்கெடுப்புக்கு செல்லும் போது சர்வதேச ஆதரவுடன் ஒட்டுமொத்த மக்களையும் திசைதிருப்பி புதிய அரசியலமைப்பு சார்பாக அணிதிரட்ட செய்யும் ஒரு முயற்சியிலும் இந்த அரசாங்கம் இறங்கியுள்ளது. இதன்மூலமும் பொறுப்புக் கூறலில் இருந்தும் தம்மை விடுவிக்க முனைந்திருக்கின்றது. ஆக இங்கு மாவீரர் நானை இரண்டு தரப்புக்களும் தமது அரசியல் காய்நகர்தலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த நாட்டில் இடம்பெற்ற போரின் போது மரணித்த மாவீரர்கள், பொதுமக்கள் என்போர் ஒரு இலட்சியப் பயணத்தில் தம்மை ஆகுதியாக்கியவர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி தமிழ் மக்களுக்கான ஒரு நியாயபூர்வமான தீர்வு வழங்கப்பட வேண்டும். அது வடக்கு, கிழக்கு இணைப்புடன் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை விடுத்து தருவதைப் பெறுவோம் என்ற நிலையில் செயற்படுபவர்கள் அவர்களது கனவினை மறந்து அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றுவது என்பது மாவீரர்களினதும், இறந்த மக்களினதும் தியாகங்களை நலினப்படுத்துவதாகவே அமையும். மறுபுறம் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க அரசாங்கம் மௌனியாக இருந்தது என்பது உண்மையான நல்லிணக்கத்திற்கான வழி அல்ல. எனவே, இந்த நாட்டில் உரிமைக்காக போராடி மடிந்த அந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக என்றாலும் தமிழ் தலைமைகள் தமது சுயநல அரசியலை விடுத்து உண்மையாகவும், இனத்தின் மேல் பற்றுதியுடனும் செயற்பட்டு ஒரு நியாயபூர்வமான தீர்வை பெறுவதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டியது அவர்களது கடமை. அதை புரிந்து கொண்டு இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாகிய தமிழ் மக்களுக்கும் சமவுரிமையுடன் ஐக்கியமாக வாழக் கூடிய சூழலை உருவாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையே.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *