Search
Saturday 23 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாருக்கு முதுகெலும்பு உள்ளது…?

யாருக்கு முதுகெலும்பு உள்ளது…?

நரேன்

பரபரப்பாக பேசப்பட்ட ஜெனீவா திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்று ஒரு புறமாகவும், ஏனைய இரண்டு கட்சிகள் என்ன செய்வதென்று தெரியாமலும், மற்றொரு கட்சி தனது வர்க்க நலன்சார்ந்து அரசுடனும் இணைந்து செயற்படுகிறது. சொல்லாடல்களைக் கொண்டு கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் அனைவரையும் தனது கருத்திற்கு ஆதரவாக செயற்படச் செய்திருந்தார். ஒரு கட்சி அங்கத்தவர்களைத் தவிர ஏனைய அனைவரும் அவரது சொல்மயக்கத்தில் ஆழ்ந்து போயினர். வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் உடனான சந்திப்பிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். வடமாகாண முதலமைச்சர் தன்னுடைய அமைச்சர்களுக்கு தகவலுக்காக தெரிவித்திருந்த ஒரு விடயத்தை அந்தக் கூட்டத்தில் வாசித்த வடமாகாண விவசாய அமைச்சரும் கூட இறுதியில் சுமந்திரன் உடன் ஒத்துப்போயிருந்தார். புதிதாக அரசியலுக்குள் பிரவேசித்த மற்றும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சுமந்திரனுக்கு ஆதரவு வழங்கியதில் வியப்பேதுமில்லை. ஆனால், கால நீடிப்பு என்பது மக்களை ஏமாற்றுகின்ற செயல் என்று தெரிந்து கொண்டு அதற்கு எதிராக குரல் கொடுத்து கையெழுத்திட்டு ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பி, தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியவர்களும் கூட சுமந்திரனின் மகுடிக்கு தலையாட்டியுள்ளனர். இதன்மூலம் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைமை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை கூட்டமைப்பின் பெயரால் நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது.

தனித்தமிழீழம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடி, அன்று சர்வதேச இராஜதந்திரிகளுடன் உறவுகளை மேற்கொண்டிருந்தவர்கள் இன்றைய முக்கியமான ஒரு விடயத்தில் தான் சார்ந்திருந்திருக்கும் மக்கள் நலன்சார்ந்து ஒரு கொள்கை முடிவெடுப்பதற்கு திராணியற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். சர்வதேச சமூகம் கால அவகாசம் வழங்கப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்த விடயம். இது ஒன்றும் புதிதுமல்ல. ஆனால் ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக தங்களிடம் இருக்கக் கூடிய மக்கள் பலத்தையும், அவர்கள் கொடுத்த ஆணையையும் பயன்படுத்தி சர்வதேச சமூகத்துடனும், இலங்கை அரசுடனும் ஒரு வலிமையான இடத்தில் இருந்து கொண்டு அரசியல் பேரம் பேசுவதற்கு பதிலாக இடைத்தரகர்களாக செயற்பட்டமை என்பது தான் வேதனையான விடயம். இந்த அணுகுமுறை தான் ஒரு தேசிய இனத்தை அனுதாப கண்ணோடு பார்பதற்கும், கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டிய யைறுந்த நிலையில் இருப்பதற்கும் வழிவகுத்திருக்கின்றது.

உலகில் தமது மக்களின் நலனுக்காக போராடிய மக்கள் தலைவர்கள் அனைவரும் தமக்கு பின்னால் அணிதிரண்டிருந்த மக்களின் சக்தியை வலுவான பேரம் பேசும் சக்தியாக வைத்துக் கொண்டே உள்நாட்டு ஆளும் வர்க்கத்துடனும், சர்வதேச சமூகத்துடனும் பேரம் பேசி தங்களது போராட்டங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று மக்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். காந்தி, நெல்சன் மண்டேலா, லெனின், பிடல் கஸ்ரோ, கொசுமின் இப்படி பல தலைவர்கள் இவ்வாறு வெற்றியீட்டியவர்கள். இவர்கள் அனைவரும் அந்தந்த நாட்டு மக்களால் மக்கள் தலைவர்களாகவும், தேசப்பிதாக்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். துரதிஸ்ட வசமாக 2009 இற்கு பின் அதனை முன்னகர்த்த இலங்கை தமிழ் சமூகத்திற்கு அப்படி ஒரு தலைவர் இன்றைய நெருக்கடியான சூழலில் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மக்களிடம் அவ்வாறானதொரு அபிமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கவும் இல்லை. அத்துடன் அவரது அணுகுமுறை கூட அவரை மக்களிடம் இருந்து வெகுதூரத்திற்கு அன்னியப்படுத்தியும் இருக்கிறது.

ஒரு கட்சியின் பேச்சாளர் என்பவர் அந்தக் கட்சி எடுக்கின்ற முடிவுகளை மட்டுமே பேசுபவராக இருக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பைப் பொறுத்தவரை பேச்சாளர் மட்டுமே கொள்கை வகுப்பாளராக இருப்பதாக தெரிகிறது. கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் எதனுடனும் கலந்துரையாடாமல் தன்னிச்சையாக நகர்வுகளை மேற்கொள்கின்றார் என்று அங்கத்துவ கட்சிகள் சொல்வதில் இருந்து நாம் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் அங்கத்துவ கட்சிகள் அவருடைய தன்னிச்சையான இந்த அதிகாரத்தை இன்று வரை கேள்வி கேட்கவில்லை. பங்காளிக்கட்சிகள் இரண்டும் மக்கள் மத்தியில் விமர்சனம் ஏற்பட்டு விடும் என்ற நிலைவரும் போது மட்டும் பட்டும்படாமல் கருத்து சொல்வதும் முடிவுகள் எடுக்கின்ற போது தமிழரசுக் கட்சியுடன் ஒட்டிக் கொள்வதும் இவர்களது மனக்குழப்பத்தையும், முடிவெடுக்கும் ஆற்றல் இன்மையையும் தெளிவாக காட்டுகிறது என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் சில கட்சிகளுக்கு இத்தகைய முதுகெலும்பு இல்லாத நிலை காணப்படுகின்ற நிலையில் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் ‘ முதுகெலும்பு இருந்தால் விசாரணையைக் கண்டு ஓட வேண்டாம்’ என்று ஒரு பகிரங்க மேடையில் வைத்து ஜனாதிபதிக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். ஜனாதிபதிக்கு கேட்டிருக்கின்ற இந்தக் கேள்வியானது அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பிரதமருக்கும் பொருந்தும் என்பதை எம்மால் ஊகிக்க முடிகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டுமானால் நடைபெற்ற விடயங்கள் குறித்து விரிவானதும், பக்கசார்பற்றதுமான ஒரு விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையின் அவசியத்தையும், அவசரத்தையும் கூட்டமைப்பின் பேச்சாளர் உணர்ந்து கொண்டாதாகவே தெரிகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அவர்களை விசாரணைக்கான ஒரு தரப்பினராக அழைத்து வருவதற்கு கூட்டமைப்பின் தலைவருக்கு முதுகெலும்பு இருந்ததா என்ற கேள்வியும் இங்கே இயல்பாகவே எழுகிறது.

ஒட்டுமொத்தத்தில் பார்கின்ற போது ஆளும் வர்க்கத்தை பிரதிநித்துவப்படுத்துபவர்களும், அவர்களுக்கு முண்டு கொடுத்திருப்பவர்களும் தங்களுக்கு முன்னும், பின்னும் கண்ணாடிகளை வைத்துக் கொண்டு தங்களது முதுகெலும்பை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ் மக்களின் நலன்சார்ந்து, தான் மட்டுமே கடுமையாக உழைத்ததாகவும், அதன் பலாபலனாகவே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறும் கூட்டமைப்பின் பேச்சாளர் தன்னுடைய கடின உழைப்பின் பயனாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த 18 மாதங்களாக எத்தகைய பங்களிப்பை காத்திரமாக வழங்கியிருந்தார் என்ற கேள்வி பலதரப்பில் இருந்தும் இன்று எழுந்திருக்கிறது. இதனால்இ மக்கள் அனைவரும் சேர்ந்து அவரது முதுகெலும்பையும் பரிசோதிக்க தொடங்கியுள்ளார்கள்.

இதேவேளை, நீதியரசராக இருந்த வடமாகாண முதலமைச்சர் தன்னுடைய நிலைப்பாட்டையும், தனது தலைமையிலான மாகாண சபையின் நிலைப்பாட்டையும் ஒருமித்த குரலில் பதிவு செய்யத் தவறியிருந்தார். ஆனால் அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக மக்கள் நலன்சார்ந்து கூறியிருக்கின்றார். ஒட்டுமொத்தத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானமே ஒரு அரைகுறைத் தீர்மானம் என்று ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் நலன்சார்ந்து சிந்திக்கின்ற அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும், பெரும்பாலான மனிதவுரிமை அமைப்புக்களும், ஆர்வலர்களும், சுட்டிக்காட்டியிருந்தனர். அதனை நீர்த்துப் போகச் செய்வதில் கூட்டமைப்பின் பங்களிப்பு இருந்தது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அரசாங்கத்தை இணை அனுசரணை வழங்குவதற்கு இணக்கம் காண வைத்தவர்களுக்கு அதனை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்பதற்கு இயலாமல் போனது வேடிக்கையான விடயமாகவே பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பின் தலைவர் இந்த ஆட்சி மாற்றத்திற்கு முன்னர் மேடைகளில் பேசும் போதெல்லாம் ‘நாம் யாரிடமும் யாசகம் கேட்கவில்லை. எமக்கு உரித்துடையவற்றையே கேட்கிறோம். அதை யாரும் மறுக்க முடியாது’ என்று வீரவசனம் பேசியிருந்தார். அப்பொழுது மக்களுக்கு ஒரு நம்பிக்கையும் இருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவரிடத்தில் இருந்து இத்தகைய வசனங்கள் எதையும் கேட்க முடியவில்லை. நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் செய்வார்கள். என்று முண்டு கொடுக்கும் வேலையைத்தான் ஒரு எதிர்கட்சி தலைவராக இருந்தும் செய்து கொண்டு இருக்கின்றார்.

கூட்டமைப்பின் தலைவர் நினைத்திருந்தால், அவர் மக்களின் ஆணை திடமானது என்றும் வலுவானது என்றும் நம்பியிருந்தால் ஒரு பக்கம் அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிக் கொண்டு, மறுபுறத்தில் மக்களை அணிதிரட்டி உரிய அழுத்தம் கொடுத்து சாத்தியமாகக் கூடிய பலவிடயங்களை நிறைவேற்றியிருக்க முடியும். இன்னமும் கூட வீதிகளில் இறங்கிப் போராடுகின்ற, தங்களோடு இருக்கின்ற, தங்களுக்கு இத்தகைய பதவிகளை வழங்கிய மக்களை நேரில் சந்திக்க தயங்குவதும், அவர்களை சந்திக்க விரும்பாமல் இருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இன்றுவரை சந்திக்காதவர்கள் நாளை ஒரு தேர்தல் வருகின்ற போது இவரும், இவரது கட்சியினரும் எப்படி மக்களை முகங்கொடுத்து சந்திக்கப் போகிறார்கள் என்ற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.

மாற்றுத் தலைமையைப் பற்றி சிந்திக்கின்ற வேளையில் தமிழீழம் கேட்டு ஆயுதம் தூக்கிப் போராடிய இரண்டு கட்சிகளின் தலைமையும் முடிவு எடுக்கும் தன்மையற்ற நிலையைப் பார்க்கின்ற போதும், கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு எதிரான முடிவை எடுத்திருந்த ஒரு கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை தொடர்ந்தும் வலியுறுத்த தவறியிருக்கின்றதை பார்க்கின்ற போதும், மக்களை வழிநடத்துவதற்கும், தாங்கள் சார்ந்திருக்கின்ற ஒரு தேசிய இனத்தின் உரிமையை வென்றெடுப்பதற்கும் இவர்கள் பொருத்தமானவர்கள் தானா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. தேர்தல் அரசியலில் இருந்து விடுபட்டு அதனை தந்திரோபாயமாக மட்டுமே பயன்படுத்தும் நோக்கில் இதய சுத்தியுடன் இலங்கை தீவின் மீது பற்றுக் கொண்டு, அதேநேரத்தில் அனைவரும் சமமாகவும், சமத்துவத்துடனும் கைகோர்த்து நடப்பதற்கான சூழலை ஏற்படுத்துவற்கு ஒரு தற்காலிக ஏற்பாடகவேனும் இவர்கள் மனம்மாறி ஒன்றுபடுவார்களா…?

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *