தலைப்பு செய்திகள்

யார் யாருடன் கூட்டுச் சேர்வது?

யார் யாருடன் கூட்டுச் சேர்வது?

மு.திருநாவுக்கரசு

அரசியலில் கூட்டு முன்னணி அமைப்பது என்பது ஒரு தந்திரோபாய நகர்வு. இதனை கோட்டுபாட்டு ரீதியில் “கூட்டு முன்னணி தந்திரோபாயம்” என அழைப்பர்.

இது அறிவியல் ரீதியான ஒரு விஞ்ஞானபூர்வ அமைப்பு. இதனை முற்கப்பிதங்களுக்கு ஊடாகவோ, மனவேகத்திற்கு ஊடாகவோ அணுக முடியாது. அறிவார்ந்த விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்படும் எந்த கூட்டு முன்னணியும் அதற்குரிய இலக்கை அடையமுடியாது போவதாக மட்டுமன்றி அது தோல்வியிலும் துயரகரமான அழிவிலும் முடியக்கூடிய ஏதுக்களை கொண்டுள்ளது.

ஆயிரக்கரணக்கான ஆண்டுகால நீண்ட வரலாறு முழுவதிலும் இத்தகைய கூட்டு முன்னணிகள் அமைக்கப்படும் வரலாற்றுப் போக்கைக் காணலாம்.

ஆனால் கடந்து ஒரு நூற்றாண்டுகால வரலாற்று உதாரணங்கள் மட்டும் இதனை விளக்கப் போதுமானதாகும்.

தேசிய விடுதலைப் போராட்டங்களோ அல்லது புரட்சிகளோ வெற்றிகரமான கூட்டு முன்னணிகளை அமைத்ததன் மூலம் அவை வெற்றிபெற்றதை வரலாறு எங்கும் காணலாம்.

ஆதலால் கூட்டு முன்னணி அமைத்தல் என்பது விடுதலைக்கோ அல்லது புரட்சிக்கோ அல்லது பன்னாட்டு யுத்தங்களை எதிர்கொள்ளவோ அவசியமான ஒன்றாய் அரசியல் வரலாற்றில் காணப்படுகிறது.

கூட்டு முன்னணி (United Front) அல்லது கூட்டணி (Alliance) என இதில் தரவேறுபாடுகள் உண்டு. இதில் கூட்டு முன்னணி என்பது பலமான கட்டமைப்புடன் கூடிய ஒன்றாகும். ஆயினும் இதனை ஒரு பொதுவான அர்த்தத்தில் மட்டும் இங்கு நோக்குதல் பொருந்தும்.

ஈழத் தமிழர்களின் அரசியலில் கூட்டு முன்னணியை அமைத்தல் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக நடைமுறையில் உண்டு.

தற்போது இதுபற்றிய சர்ச்சைகள் எதிர்வரும் மாகாணசபை தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒட்டி இடம்பெற்றுவருவதை காணலாம்.

இந்நிலையில் நடைமுறை சார்ந்து உலகளாவிய வரலாற்று அனுபவத்தில் இருந்தும், சொந்த நடைமுறை சார்ந்த வரலாற்று அனுபவத்திலிருந்தும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு.

கோட்பாட்டு ரீதியாகவும், உலகளாவிய வரலாற்று ரீதியாகவும் மற்றும் சொந்த அனுபவத்திற்கு ஊடாகவும் இங்கு இப்பிரச்சினையை நோக்குதல் அவசியம்.

“முரண்பாடுகள் ஆயிரம் இருப்பினும் அவை ஒரு செயற்படு புள்ளியில் இரு அணிகளாகவே பிளவுண்ணுகின்றன. இதில் நடுநிலையென்பது வெல்பவன் பக்கத்திற்குரியதாகும்.” என்று முரண்பாடு பற்றிய கோட்பாடு கூறுகிறது.

இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் கம்யூனிஸ்ட்டுக்களும், ஏகாதிபத்திய நாடுகளும், காலனிய விடுதலை அமைப்புக்களும் நாசிச வாத ஹிட்லரின் இனப்படுகொலை, மனிதப்படுகொலைக்கு எதிராக ஓர் அணியில் கூட்டுச் சேர்ந்தன.

இங்கு சோவியத் ரஷ்யாவின் கொள்கை கம்யூனிசமாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையும் கம்யூனிசமாக இருந்தது. அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும். பிரான்சினதும் கொள்கை முதலாளித்து ஏகாதிபத்தியமாய் இருந்தது.

இந்திய தேசிய காங்கிரஸின் கொள்கையும் வேறு ஆசிய நாடுகளின் தேசிய இயக்கங்களின் கொள்கையும் தேசிய விடுதலையாக இருந்தது.

ஆனால் இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட அல்லது வேறுபட்ட கொள்கையைக் கொண்டிருந்த போதிலும் இவை அனைத்தும் பிரதான எதிரியான ஜெர்மனியின் நாசிச ஹிட்லருக்கும், இத்தாலியின் பாசிச முசோலிக்கும், ஜப்பானின் இராணுவ ஆதிக்கத்திற்கும் எதிராக ஓர் அணியில் கூட்டுச் சேர்ந்தன.

இதில் இவை அனைத்துமே தமது இலக்குக்குரிய வெற்றியை அடைந்தன. பிரதான எதிரிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிராக அணி அமைத்தல் என்பதே இங்கு கூட்டணி அமைத்தலின் பிரதான இலக்காக இருந்துள்ளது.

1

பிரதான எதிரிக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் எதிராக தனது இரண்டாம், மூன்றாம் எதிரிகளுடன் கூட்டுச் சேர்தல் என்பதே இங்கு கூட்டுச் சேர்தல் தத்துவத்தின் அடிப்படையாக அமைந்தது.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்ததும் அதாவது தமது பிரதான எதிரியான ஹிட்லருடனான கணக்கை தீர்த்துக் கொண்டதும் அமெரிக்காவும் – சோவியத் ரஷ்யாவும் இருதுருவங்களாக மாறின. இது ஓர் இரத்தமும், தசையுமான நடைமுறை.

இங்கு அவர்களுக்கிடையில் பரஸ்பரம், சோசலிசம் என்றோ அன்றி ஜனநாயகம் என்றோ ஒரு கொள்கை உடன்பாடு இருக்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது. ஆயினும் அவர்களது கூட்டணி (Alliance) வெற்றிகரமாக அமைந்தது.

1911ஆம் ஆண்டு சீனாவில் மன்னர் ஆதிக்கத்திற்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும் தருணத்தில் டொக்டர் சுன்-யாட்-சென் தலைமையிலான கொமிங்தாங் எனப்படும் தேசியவாத கட்சியினர் சர்வாதிகாரியான யுவான்-ஷி-கையுடன் கூட்டுச் சேர்ந்தனர்.

யுவான்-ஷி-கை சர்க்கரவர்த்தி ஆதிக்கத்தின் முதல் மந்திரியாக இருந்தவர். அவர் இராணுவ சிந்தனையுள்ள, இராணுவ பலம் கொண்ட ஒரு சர்வாதிகாரி.

ஆனால் வம்ச ஆட்சிமுறையைக் கொண்ட மன்னர் பரம்பரையை வரலாற்றில் முடிவிற்கு கொண்டுவருதற்கு சர்வாதிகாரியான யுவான்-ஷி-கையுடன் கூட்டுச் சேர்வது அவசியம் என்ற நிலையில் சுன்-யாட்-சென் தலைமையிலான கொமிங்தாங் கட்சியினர் கூட்டுச் சேர்ந்து மன்னராட்சிக்கு முடிவு கட்டினர்.

ஆனால் பதவிக்கு வந்த யுவான்-ஷி-கை கொமிங்தாங் கட்சியினருக்கு எதிராக செயற்படத் தொடங்கிய போது சுன்-யாட்-சென் தலைமையிலான கொமிங்தாங் கட்சியினர் யுவான்-ஷி-கைக்கு எதிரான ஜீவமரண போராட்டத்தில் ஈடுபட்டு தேசிய வெற்றியை ஈட்டினர்.

இக்கால கட்டத்தில் யுவான்-ஷி-கைக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சியும், கொமிங்தாங்குடன் கூட்டணி அமைத்து போராடியது. ஆனால் ஷியாங்-காய்-செக் தலைமையில் கொமிங்தாங் கட்சியினர் பதவியில் இருந்த நிலையில் கம்யூனிஸ்ட்டுக்களும் – கொமிங்தாங் கட்சியினரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஜீவமரண போராட்டத்தில் ஈடுபட்டு இறுதியில் கம்யூனிஸ்ட்டுக்கள் வெற்றி பெற்றனர்.

இங்கு பிரதான எதிரிக்கு எதிராக தமது இரண்டாவது அல்லது மூன்றாவது நிலை எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து தமக்குரிய இலக்கை அடைந்ததும் அந்த கூட்டணி இரண்டாம் கட்டத்தை அடைவதையோ அல்லது உடைந்து போவதையோ வரலாற்றில் பரவலாக காணலாம்.

1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெடித்த போது லெனின் தலைமையிலான பொல்ஷிவிக் கட்சியினர் டசின் கணக்கான அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து புரட்சியை முன்னெடுத்து அதில் வெற்றி பெற்றன. ஆனால் புரட்சி வெற்றி பெற்றதும் அந்த டசின் கணக்கான அமைப்புக்களில் சுமாராக அரைவாசி அமைப்புக்களுடன் லெனின் உறவை முறித்துக் கொண்டு அரசாங்கம் அமைத்தார்.

பின்பு 1920ஆம் ஆண்டு அந்த அரைவாசி அமைப்புக்களில் ஒரு பகுதி அமைப்புக்களை வெளிவிட்டு ஒரு சில அமைப்புக்களுடன் மட்டும் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தார். இறுதியில் அவர் 1924ஆம் ஆண்டு காலமான போது ஒரு பொல்ஷிவிக் கட்சி மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.

இங்கு கூட்டு முன்னணி அமைத்தல் என்பது ஓர் அரசியல் தந்திரோபாயம் என்று லெனின் அதனை வர்ணித்தார். தனது முதலாவது எதிரிக்கு எதிராக இரண்டாவது மூன்றாவது எதிரிகளுடன் கூட்டுச் சேர்வதும், பின்பு பாம்பு செட்டையைக் கழற்றுவது அந்த கூட்டுக்களை ஒவ்வொன்றாக கழற்றி விடுவதும் வரலாற்றில் ஒரு பொது இயல்பாக இருப்பதைக் காணலாம்.

அதாவது கூட்டுச் சேர்தல் அவசியம் என்பதையும் முதலாவது எதிரிக்கு எதிராக இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை எதிரிகளுடன் கூட்டுச் சேர்தல் என்பதை இக்கூட்டணி அமைக்கும் தத்துவமும், நடைமுறையையும் விளக்கி நிற்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் கூட்டணி அமைத்தல் என்பது பலமுறை நிகழ்ந்துள்ளது. தமிழர் கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்து ENLF எனப்படும் ஈழ தேசிய விடுதலை முன்னணி உட்பட TNA எனப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரை இதனைக் காணலாம்.

1985ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்;த்தை நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) , தமிழீழ விடுதலை இயக்கம் (TELO). ஈழ புரட்சிகர விடுதலை அமைப்பு (EROS). ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இந்த கூட்டமைப்பு திம்பு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக எதிர்கொண்டது.

பின்னாட்களில் இந்த அமைப்பு உடைந்து மோதல்கள் ஏற்பட்டன. அதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கின் அடிப்படையில் நண்பனாக கூட்டுச் சேர்வதும் பின்பு தமது இலக்கு முடிந்ததும் அவை மோதுண்ணுவதும் வரலாறு எங்கும் பரவலாக இருப்பதைக் காணலாம்.

இறுதியாக விடுதலைப் புலிகள் அமைப்பும், டெலோவும், ஈபிஆர்எல்எப்வும், தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலை எதிர்கொண்டு பெறுவெற்றியீட்டின. இத் தேர்தல் வெற்றியின் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் மக்கள் ஆதரவைக் கொண்ட அமைப்பு என்பது நிரூபணமானது.

இங்கு விடுதலைப் புலிகள் தலைமையில் கூட்டமைப்பை அமைத்துக் கொண்ட இவை அனைத்தும் முன்பு ஆயுத மோதல்களில் ஈடுபட்ட பகைமையான அனுபவத்தைக் கொண்டவையாயினும் பின்னாளில் இவை தமக்கிடையே கூட்டுச் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதைக் காணலாம்.

பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ்க் காங்கிரசும் அடுத்து ஈபிஆர்எல்எப்வும் வெளியேறியதையும் அவை பின்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமக்கிடையே உருவாக்கியதையும் காணலாம்.

எப்படியோ மாறுபட்ட சக்திகள் ஒரு தருணத்தில் தமக்கிடையே பொது எதிரிக்கு எதிராக கூட்டுச் சேர்தல் என்ற தத்துவத்தினதும், நடைமுறையினதும் ஆத்மாவாகும். எதிரியையும், எதிரியின் கூட்டாளிகளையும் எதிர்கொள்ள இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை எதிரிகளுடன் கூட்டுச் சேர் என்பதுதான் வரலாறு போதிக்கும் பாடமாகும்.

இங்கு தூய்மைவாதத்திற்கு இடமில்லை. வரலாற்று நடைமுறையானது தூய்மைவாதத்தை நிராகரித்திருப்பதைக் காணலாம்.

தற்போது தமிழ் மக்கள் தமது பிரதான எதிரியையும், பிரதான எதிரியின் கூட்டாளிகளையும் அடையாங்கண்டு இரண்டாம், மூன்றாம்நிலை எதிரிகளுடன் கூடவே கூட்டுச் சேர்ந்து தமது முதல்நிலை எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் போதனையாகும்.

அரசியல் என்பது சாத்தியக்கூறுகளை கையாள்வது பற்றிய ஒரு வித்தையாகும் (Art of Possibilities).


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *