Search
Monday 30 November 2020
 • :
 • :
தலைப்பு செய்திகள்

யாழ் குடாநாட்டின் நன்னீர் நிலையினை மேம்படுத்தல்

யாழ் குடாநாட்டின் நன்னீர் நிலையினை மேம்படுத்தல்

மருத்துவர் சி. யமுனாநந்தா

யாழ்ப்பாணக் குடாநாடு 1000சதுர கிலோமீற்றர் பரப்பளவை உடையது. இங்கு சராசரி வருடாந்த மழைவீழ்ச்சி 1200 mm ஆகும். இதில் 90% வடகிழக்கு பருவமழையின்போது கிடைக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கற்பாறைகளில் தேங்கி உள்ள நீரையே கிணறுகள் மூலம் மக்கள் பயன்படுத்துகின்றனர். யாழ் குடாநாட்டில் சுமார் 1 இலட்சம் கிணறுகள் உள்ளன. யாழ் குடாநாட்டின் எந்தவொரு பகுதியும் கடலில் இருந்து 15km குறைவான தூரத்தினைக் கொண்டு உள்ளன. சுமார் 35% மான கிணறுகள் உவர்த்தன்மையைக் கொண்டுள்ளன. கிணறுகளின் உவர்த்தன்மை கடந்த காலங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றது. அண்மையில் 4500 ஹெக்டேயர் விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கை பண்ணமுடியாது உவர் நிலங்களாக மாறியுள்ளது.

சிறந்த புவியியல் சூழலியல் முகாமைத்துவம் மூலம் யாழ் குடாநாட்டின் நன்னீர் நிலையினை மேம்படுத்த முடியும். இதற்குரிய முக்கிய செயற்றிட்டங்கள் ஐந்து நிலைகளாக அமையும்.

நன்னீரை வளம்படுத்தும் ஐந்து செயற்திட்டங்கள்:

(1) யாழ் குடாவின் நீரேரிகளின் (வல்லை – நாவற்குழி பகுதியில் சுண்டிக்குளம் பகுதியில்) கடல் நீர் உட்புகுதலைத் தடுத்தல்.
(2) குடாநாட்டின் நீரேரியை ஆழப்படுத்தலும், மழைநீரினைத் தேங்கக்கூடிய தரைத்தன்மையினை ஏற்படுத்தலும்.
(3) குடாநாட்டின் நீரேரியிலும், தரையிலும் மழைநீரைத் தேக்கி வைத்தல்.
(4) மக்களுக்குத் தேவையான நீரை விநியோகிக்க பொதுவான நீர் விநியோகம் மேற்கொள்ளல்.
(5) நிலக்கீழ் நீர் மாசடைதலைத் தடுத்தலும், பொதுவான கழிவகற்றல் பொறிமுறைகளை மேற்கொள்ளலும்.

யாழ் குடாநாட்டின் நீரேரிகளை நன்னீராக்கல்

1) தொண்டமானாறு

ஆழியவளைப் பிரதேசத்தில் மாரிகாலத்தில் பொழியும் மழைநீர் மருதங்கேணி, செம்பியன்பற்று, நாகர் கோவில், அம்பன், குடத்தனை வழியாகப் பாய்ந்தோடி பருத்தித்துறை, கொடிகாமம் வீதியை இடைமறித்த பாலம் வழியாக ஓடி மான்டான் வல்லை ஊடாகக் கடலில் கலக்கின்றது. இதில் கடலில் கலக்கும் ஓடையானது தொண்டைமான் என்னும் தமிழ் மன்னனால் வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் மீன்பிடி வள்ளங்கள் பெரும் கடற்காற்றுக்கு அடிபட்டுச் செல்லாது இருப்பதற்காக வெட்டப்பட்ட நீரோடையாகும். இதனையே தொண்டைமானாறு என்றனர். தற்போதைய பௌதீக முன்னேற்றத்தில் இக்கடல் வழிப்பாதையை மூடுவதனாலேயே மழைநீரைப் பேண முடியும்.

Thondaimanaru

2) உப்பாறு

கப்புது மேட்டுப் பிரதேசத்தில் ஏற்படும் மழைவெள்ளம் மட்டுவில் புத்தூர் வெளியினூடாக வண்ணாத்திப்பாலம் ஊடாகப் பாய்ந்து புத்தூர், நீர்வேலி, கோப்பாய் வழியாக ஓடி கைதடி கோப்பாய் பாலத்தின் ஊடாக சென்று கைதடி, நாவற்குழிப் பகுதியில் கடலுடன் கலக்கின்றது. செம்மணிக்கூடாகச் செல்லும் இதனை உப்பாறு என அழைப்பர்.

Uppaaru

3) ஆனையிறவு உப்பேரி

ஆனையிறவில் கண்டிவீதிக்கு கிழக்கே உள்ள ஏரிக்குள் தென்மேற்கு பருவமழையின்போது மேற்குப் புறமாக கடல்நீர் உட்புகுகின்றது. கிழக்குப்புறமாக சுண்டிக்குளம் பகுதியில் கடல்நீர் உட்புகும் தன்மை உடையது. இவை தடுக்கப்பட்டால், மழைகாலத்தில் பெருமளவு நன்னீரை, குறிப்பாக வன்னியில் இரணைமடுக்குளம் கலிங்கு திறக்கப்படும்போது சேகரிக்கலாம் இந்நன்னீரினை முள்ளியான் கால்வாய்மூலம் ஆழியவளைக்கு இணைப்பதால் பாரிய நன்னீர் நிலையினை உருவாக்கிவிடலாம்.

தொண்டைமானாறுத் தடுப்பணை, அரியாலைத் தடுப்பணை, முள்ளியான் இணைப்பு, சுண்டிக்குளம் தடுப்பணை மூலம் பாரிய மழைநீர் சேமிப்பை மேற்கொள்ளலாம். இதன்போது நீரேரியினைப் பல படிகளில் ஆழப்படுத்தி, அகழிகள் அமைத்து நீரைத் தேக்கி வைக்கக்கூடிய மண்ணமைப்பை ஏற்படுத்தல் வேண்டும். இதனை அரியாலை, செம்மணி, கோப்பாய், அச்சுவேலி, கைதடி, மண்டான், மட்டுவில் பகுதிகளில் மேற்கொள்ளலாம்.

Elephantpass

யாழ் குடாநாட்டில் உள்ள வடமராட்சி நீரேரி 77 km2 பரப்பளவையும், உப்பாறு நீரேரி 26 km2  பரப்பளவையும் உடையது. அதாவது யாழ் குடாநாட்டின் 10% நிலப்பரப்பை இந் நீரேரிகள் அடங்குகின்றன. யாழ் குடாநாட்டின் மழை நீரில் 50% பகுதி இந்நீரோரிகளூடாக கடலுடன் சேர்கின்றது. எனவே இவ்வேரிகளை முற்றாக நன்னீராக மாற்றல் மிகவும் அவசியமான செயல்திட்டமாக அமையும். இதற்குரிய முதற் கருதுகோளை இற்றைக்கு 350 வருடங்களுக்கு முன் இலங்கையின் ஆளுனருக்கு 01.12.1665 இல் முன்வைத்தவர் Captain Hendrile Van Reede ஆவர். இவர் தொண்டமானாறிலும் நாவற்குழியிலும் கடலைத் தடுத்து அணை அமைப்பதனால் பெருமளவு நிலம் நன்னீராகும் என்று தெரிவித்தார்.

1879இல் வடமாகாண அரச அதிபர் Twyneham அணைகட்டுவதற்கு முயற்சித்தபோது 1883இல் இந்தோனேசியாவில் Karakato எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட கடல்கோளினால் யாழ் குடாநாட்டில் கடல் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அரச அதிபர் கடலை அணையிடும் திட்டத்தைக் கைவிட்டார்.

1916இல் வடமாகாண அரச அதிபர் Horsberg அவர்களால் பருத்தித்துறை சாவகச்சேரி வீதிக்கு குறுக்காக வடமராட்சிக்கு அணையினை அமைத்து வடமராட்சியின் நன்னீரைக் காக்க முடிந்தது. ஆனால் நிதி போதாமையினால் இத்திட்டம் 4 ஆண்டுகளில் செயலற்றுப் போனது.

1930–40ம் ஆண்டுகளில் வடமாகாணப் பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் Webb அவர்களினால் தொண்டமானாற்றிலும் அரியாலையிலும் தடுப்பு அணைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2ம் உலக யுத்த சூழ்நிலையினால் இது பிற்போடப்பட்டு 1947இல் தொடங்கப்பட்டு 1953இல் நிறைவு பெற்றது. இவை மரத்தினால் செய்யப்பட்ட அணைத்தடுப்பு என்பதனால் சேதமடைந்து கடல்நீர் உட்புகுந்து செயலிழந்தது.

ஆனையிறவு நீரேரியின் பரப்பளவு 77 சதுர கிலோமீற்றர்கள். இதற்கு வன்னிப் பெருநிலத்தில் இருந்து 940 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் வடக்கு கிழக்குப் பருவகாலத்தில் பொழியும் மழைநீர் கனகராயன் ஊடாகவும், ஏனைய சிறு நீரோடைகள் மூலமும் பாய்ந்து ஆனையிறவு ஏரியினுள் சேர்ந்து கிழக்குப் பக்கமாக சுண்டிக்குளம் ஊடாகவும், மேற்குப் பக்கமாக ஆனையிறவு ஊடாகவும் கடலினுள் சென்றது. இவற்றைத் தடுப்பணை மூலம் தடுப்பதால் பெருமளவு நன்னீரை ஆனையிறவு ஏரியில் தேக்கலாம்.

ஆனையிறவு வீதி அமைப்புப் பாதை மேற்குக் கரையில் கடல்நீர் ஆனையிறவு ஏரியினுள் செல்வதனைத் தடுக்கின்றது. சுண்டிக்குளத்தில் கட்டப்பட்ட தடுப்பணையும், மேலதிக நீர் வெளியேற்றும் பொறிமுறையும், பாதிக்கப்பட்டமையால் தற்போது கடல்நீர் உட்புகுகின்றது. இது மீளக் கட்டியமைக்கப்படல் வேண்டும். கடல்நீர் தடுப்பு அணைகள் இரண்டு அடுக்குகளாக அமைக்கப்படுவதனால் கடல்நீர் வரட்சிக்காலத்தில் தரையினுள் செல்வதைத் தடுக்கலாம். இதனால் ஆனையிறவு ஏரியில் நன்னீரைப் பேண முடியும்.

ஆனையிறவு நன்னீர் ஏரியை முள்ளியான் கால்வாய் மூலம் வடமராட்சியின் தென்பகுதியுடன் இணைக்கும் செயற்றிட்டமும் முற்றாகாது உள்ளது. இதனை முழுமைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அடுத்து தொண்டமானாறு தடுப்பணையையும் நாவற்குழி தடுப்பணையையும் சீர்படுத்த வேண்டி உள்ளது. இவற்றிற்கும் இரட்டை அடுக்கு தடுப்பணைகள் அவசியம். உப்பாற்று நீரேரியையும், வடமராட்சி நீர் ஏரியையும் இணைப்பதன் மூலம் ஆனையிறவு முதல் அரியாலை வரை பாரிய நன்னீர் 170 சதுர கிலோமீற்றர் பரப்பளவு உள்ள நன்னீர் ஏரியினை உருவாக்க முடியும்.

இதன்மூலம் யாழ் குடாநாட்டின் நிலக்கீழ் நீரைப் பேணுவதுடன் நீர்த்தேவையினையும் பூரணமாகப் பூர்த்தி செய்யக்கூடிய சூழல் ஏற்படும். இதேபோன்று நீர்சேமிப்பை வழுக்கியாறு வடிநிலத்திலும், கல்லுண்டாய் வெளிப்பகுதியிலும் மேற்கொள்ளலாம். நன்னீரை வளம்படுத்தும் ஐந்து செயற் திட்டங்களை தீவுப்பகுதிகளிலும் சிறப்பாக மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மழைநீரை யாழ் குடாநாட்டு ஏரியில் சேமிப்பதன் ஊடாக யாழ்ப்பாண தரைக்கீழ் நீரின் உவர்த்தன்மையாதல் தடுக்கப்படும். அடுத்து தரையின்கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகளுக்கு இடையிலான நீர் வில்லைகளின் அளவும் அதிகரிக்கும்.

Vazhukkai aaaaru

வெள்ளப் பெருக்குகளுக்கு கட்டுப்பாடும், மழைநீரைச் சேமித்தலும்

தற்போது தரையில் கட்டம், வீதி அமைத்தல் செயற்பாடுகளால் சாதாரணமாக நிலத்தினுள் சேகரிக்கப்படும் நீர் வடிந்தோடி வெள்ள நிலையையும், கடலுடன் சேரும் தன்மையையும் காணக்கூடியதாக உள்ளது. நவீன இயந்திரங்களின் உதவியுடன் பாரிய வடிகால்கள் அமைக்கப்பட்டு தாழ்நிலங்களில் வெள்ளம் சேரல் தடுக்கப்படுகின்றது. பல வயல் நிலங்கள் நிரப்பப்பட்டு கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் மழைநீரைச் சேகரிக்கும் தன்மை குறைவடைகின்றது. தாழ்வான பிரதேசங்களில் வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளிலேயே நல்ல நீர் கிடைக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக கொக்குவில், நந்தாவில் பகுதியில் உள்ள வெள்ளம், அயல் கிராமங்களுக்கான நிலநீராக உதவுகின்றது. எனவே தரையில் வெள்ள நீர் விரைவாக வடிந்தோடி கடலை அடைதலைத் தடுத்தல் வேண்டும்.

வலிகாமத்தின் பெரும்பாலான நிலக்கீழ்நீர் தின்னவேலி, சங்குவேலி, நீர்வேலி ஆகிய மூன்று இடங்களையும் இணைக்கும் முக்கோணப்பகுதியில் சுண்ணாம்புப் பாறைகளுக்கு இடையே வில்லை வடிவில் காணப்படுகின்றது. அதாவது மழைநீரானது இப்பிரதேசங்களில் மண்ணுக்குள் நன்னீர்ப்படையை உருவாக்குகின்றது. இது சுண்ணாம்புக் கற்பாறைகளின் மேல் அடர்த்தியான கடல்நீருக்கு மேலாக வெளிப்புறம் குவிந்த வில்லைகளின் வடிவத்தில் நன்னீர் படலமாகக் காணப்படுகின்றது. நடுப்பகுதியில் இவ்வில்லைகள் அடர்த்தியாக இருக்கும். கரைப்பகுதிகளில் மெல்லியதாகக் காணப்படும்.

Flood in jaffna

வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப்பகுதிகளின் வெவ்வேறான வில்லைகள் காணப்படுகின்றன. இவ்வில்லைகள் நன்னீரை மட்டுமே குறிப்பிட்ட ஆழத்திற்கு கொண்டு உள்ளன. இவ்வில்லைகளின் தாழ்ந்த பகுதிகளில் நன்னீர் உவர்நீராக மாறும் மாற்றத்திற்கான பகுதிகளாக உள்ளது.

எனவே யாழ் குடாநாட்டின் நன்னீர் வளத்தை அதிகரிக்க வில்லைகளில் சேரும் நன்னீர் அளவை அதிகரிக்க வேண்டும். வில்லைகளின் தாழ்ந்த பகுதிகள் உவர்நீராதலைக் குறைக்க வேண்டும். ஆழ்துளையிடல் அதாவது குழாய்க்கிணறு அமைப்பதனையும் குழாய்க் கிணறுகளையும் தடை செய்தல் வேண்டும்.

யாழ் குடாநாட்டின் தரைக்கீழ் நீர் உவராக மாறும் தன்மையும் உவர்த்தன்மையின் அதிகரிப்பும் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்ட ஆழத்தில் அமைந்து உள்ளது. கட்டுப்பாடின்றிய குழாய்க்கிணறுகளின் உருவாக்கமும் உவர்த்தன்மை பரவுவதற்கு ஒரு காரணமாக அமைந்து உள்ளது.

வரட்சியான காலத்திலும் அதிகரித்த மனிதப் பாவனையாலும் நன்னீர் வில்லையின் அடர்த்தி குறைவடையும்போது கடல்நீர் வில்லைகளில் இடையீடு செய்து மேலெழும் சாத்தியம் அதிகமாகும்.


2 thoughts on “யாழ் குடாநாட்டின் நன்னீர் நிலையினை மேம்படுத்தல்

 1. R. Patkunan

  Good approach to recharge the ground water system
  Our ground water system is a concave fresh water lens floating on sea water according to reports done in 1960s
  Recharging by collection of stormwater will thicken the lens j
  Converting all the lagoons as fresh water dams will improve the system
  If was proposed in 1960s
  But nothing done
  Contamination of ground water system by septic tanks needs to regulated
  Septic tanks near wells or tube wells need to be removed
  Pumping from tube wells needs to be controlled
  Bringing water from iranimudu will not solve our water problems until mahavali is linked to it
  Iranimadu is collection of stormwater
  It does not have any link to permanent water sources
  Desalination is another solution but expensive
  Rainwater tanks & recyling waste water are also helpful
  Proper drainage, sewer system, detention basins/ dams will also to be tried
  Education, regulations for water usage may also be good

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *