தலைப்பு செய்திகள்

யாழ் வன்முறைகளின் பின்னணியில் எழும் அரசியல் கேள்விகள் ?

யாழ் வன்முறைகளின் பின்னணியில் எழும் அரசியல் கேள்விகள் ?

யதீந்திரா

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் வடக்கின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து வவுணியா, மன்னார் ஆகிய மாட்டங்களிலிருந்து மேலதிகமாக பொலிசார் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இதுதான் முதல் தடவையல்ல. அண்மைக்காலமாகவே யாழ்ப்பாணத்தில் அவ்வப்போது வாள் வெட்டு சம்பவங்களும் திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றவாறுதான் இருக்கின்றன. இதற்கு பின்னால் ஆவா என்னும் ஒரு குழு இயங்கிவருவதாகச் சொல்லப்படுகிறது. இதனை பொலிசாரால் கட்டுப்படுத்த முடியவில்லையா அல்லது அவர்கள் பாராமுகமாக இருக்கின்றனரா என்னும் கேள்வி இன்று பல தரப்பினர் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

இலங்கையில் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது ஆனால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்களை நோக்கினால், சாதாரணமான ஒன்றாகத் தெரியவில்லை. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் சுமந்திரன், இளைஞர்கள் நினைத்தால் இதனை தடுக்கலாம். இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டுமென்று தெரிவித்திருக்கின்றார். உயிர் கொல்லும் நோக்கில் ஆயுதங்களை வைத்திருப்பவர்களை எவ்வாறு இளைஞர்களால் தடுத்து நிறுத்த முடியும்? அவ்வாறாயின் இளைஞர்களும் ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டுமா? உண்மையில் சுமந்திரன் என்ன சொல்ல வருகின்றார்.

456

இது அடிப்படையில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதுடன் தொடர்பான பிரச்சினை. ஆனால் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாகாண சபையிடம் இல்லை. வடக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த மட்டுமே முடியும். அதனைத் தாண்டி அவரால் எதனையும் செய்ய முடியாது. ஆனால் ஏனைய மாகாண சபைகளின் நிலைமை வேறு. அங்கு முதலமைச்சர் சிங்களவராக இருப்பதால் அவர் மத்தியின் உத்தரவுக்கு காத்திராமல் பொலிசாருக்கு உத்தரவிடக் கூடிய நிலைமை இருக்கிறது. உண்மையில் இந்த விடயத்தை கூட்டமைப்பின் தலைமை வேறு விதமாக அனுகியிருக்க வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு உள்ள பொலிஸ் அதிகாரத்துடன் இந்தப் பிரச்சினைகள் தொடர்புபடுகின்றன. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் இந்த விடயங்களை மிகவும் விரைவாக கையாண்டிருக்க முடியும். ஆனால் இங்கு நிலைமை வேறு. ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு, பதிலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த விடயங்களை கூட்டமைப்பின் தலைமை ஒரு அரசியல் பிரச்சினையாக முன்கொண்டு செல்லவில்லை மாறாக, இருக்கும் அதிகாரத்தையும் மத்தியிடம் ஒப்படைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருதாகவே தெரிகிறது.

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டென்னீஸ்வரன் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது கூட்டமைப்பின் தலைமைதான். உண்மையில் அதிகாரப் பகிர்விற்காக போராடுவதாகச் சொல்லிவரும் கூட்டமைப்பே, அந்த அதிகாரத்திற்காக குரல் கொடுத்துவரும் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதை எந்த வகையில் நியாயப்படுத்தலாம்? இந்த வழக்கின் போது டென்னீஸ்வரனுக்கு ஆதரவாக சமுகமளித்தவர் நிரான் அங்கிற்ரல் என்னும் சட்டத்தரணி. இந்த அங்கிற்ரல், கூட்டமைப்பின் பேச்சாளராக அறியப்படும் எம்.ஏ.சுமந்திரனின் உதவியாளர் என்பது அனைவரும் அறிந்த சங்கதி. அவ்வாறாயின் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கிற்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமப்பட வேண்டியதில்லை.

sampanthan and wigneswaran

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக, வடக்கு மாகாண பிரதம செயலாளர் விஜலக்சுமி 2014 இல் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார். இலங்கையில் அரசியல் வரலாற்றில் ஒரு மாகாண செயலாளர், அந்த மாகாண முதலமைச்சருக்கு எதிராக வழக்குத் தொடுத்தது அதுதான் முதல் சந்தர்ப்பம். ஆனால் விஜயலக்சுமிக்கு அப்படியொரு துனிவு எப்படி வந்தது என்பது அப்போது பலரதும் கேள்வியாக இருந்தது. அது ராஜபக்சவின் காலம்.

ஆனால் இங்கு கூர்ந்து நோக்க வேண்டிய விடயம் வேறு. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், தன்னுடன் முரண்படும் ஒரு பிரதம செயலாளரை தனது விருப்பின் பேரில் அகற்ற முடியாமல் இருக்கிறது. தனது சபை நடவடிக்கைகளுடன் முரண்படும் ஒரு அமைச்சரை அப்பொறுப்பிலிருந்து நீக்க முடியவில்லை. தனது அதிகாரத்திற்குட்பட்ட மாகாணத்தில் எழும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பில் அப்பகுதியிலிருக்கும் பொலிசாருக்கு உத்திரவிட முடியவில்லை. இப்படியான நிலைமைகள் இருக்கின்ற போது, விக்கினேஸ்வரன் ஒன்றும் செய்யாமல் இருக்கின்றாரே என்று கேள்வி எழுப்புவதில் என்ன பொருள் இருக்க முடியும்.

ஆனால் இதிலுள்ள வேடிக்கையான விடயம், அதிகார பகிர்விற்காக முதலமைச்சர் விக்கினேஸ்வரனோடு நின்று போராட வேண்டிய, கூட்டமைப்பின் தலைமையோ, மத்திய அரசாங்கத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. மாகாணத்திலுள்ள தங்களின் முதலமைச்சரை பலிகொடுத்து, மத்தியிலுள்ள அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கின்றது. சிங்கள தலைமைகள் எங்களைப் பார்த்து சிரிக்குமளவிற்கு உள் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, விக்கினேஸ்வரனை அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றது. உண்மையில் கூட்டமைப்பின் தலைமையால் அசிங்கப்படுவது விக்கினேஸ்வரன் அல்ல மாறாக, கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள்தான். கூட்டமைப்பின் தலைமை நேர்த்தி செய்யப்படும் வரையில், இந்த நிலைமை தொடரவே செய்யும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *