தலைப்பு செய்திகள்

வடக்கில் ஒரு கிராமத்தையே வாட்டியெடுக்கும் சிறுநீரக நோய்! கண்டு கொள்ள யாருமில்லை

வடக்கில் ஒரு கிராமத்தையே வாட்டியெடுக்கும் சிறுநீரக நோய்! கண்டு கொள்ள யாருமில்லை

-கே.வாசு-

காலங்கள் உருண்டோடுகின்றன. அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. கிராமங்கள் நகரமயமாகி வருகின்றன. இப்படி என்ன தான் நாம் பேசிக் கொண்டாலும் ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு பிரச்சனையை எதிர்நோக்கியவனாகவே வாழ்கின்றான். அதில் சில பிரச்சனைகள் தீர்க்கக் கூடியதாக இருந்தும் அல்லது கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தும் அது தொடர்பில் யாரும் கண்டு கொள்ளாத தன்மைகளும் இருக்கவே செய்கின்றது. அப்படியான ஒரு பிரச்சனையே வவுனியா தட்டான்குளம் கிராமத்திலும் ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரக நோய்.

வவுனியா, வெண்கல செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒரு கிராமமே தட்டான்குளம். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். அம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக தட்டான்குளம் பகுதி தெரிவு செய்யப்பட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு அம் மக்கள் குடியேற்றப்பட்டனர். 135 குடும்பங்கள் அங்கு குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் அந்த மக்களுக்கு எமனாக மாறி வருகிறது சிறுநீரக நோய்.

IMG_0980Aஇன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உலகமே மிக வேகமாக இயங்கி கொண்டிருக்கிறது. அதனுடன் சேர்ந்து நாமும் வேகமாக பயணித்து கொண்டிருக்கிறோம். அதனால் உடலை சரிவர நாம் பராமரிப்பதில்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை. இதன் விளைவாக நோய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி வளர்ந்து வரும் நோய்களில் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக விளங்குகிறது சிறுநீரக நோய்கள். ஆனால் இம் மக்களுக்கு இந்த நோய் அப்படி ஏற்பட்டதொன்றல்ல. இவர்கள் அவ்வாறு வாழக்கூடிய வசதி படைத்த மக்கள் அல்ல. நாளாந்தம் தோட்டம் செய்தும், கூலி வேலைக்கு சென்றும் தமது அன்றாட சீவியத்தை போக்கும் மக்கள். அவர்களுக்கு அவர்களது கிராமத்தில் கிடைக்கும் குடிநீரினாலேயே இந்த நோய் ஏற்படுகின்றது என்ற அதிர்ச்சியில் அந்த மக்கள் உறைந்து போயுள்ளார்கள்.

சிறுநீரக நோய்கள் என்பது சத்தமில்லாமல் கொல்லும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. நீண்ட நாட்களுக்கு அவை எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. மாறாக நிலைமை மோசமடைந்தவுடன் தான் அதன் அறிகுறிகள் தெரிய வரும். இந்த நிலையில் இந்தக் கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை 100 பேருக்கு மேல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் கூட இருவர் அந்த நோயின் தாக்கத்தால் இறந்து போயுள்ளார்கள்.

IMG_0954Aநோய் தாக்கத்தின் அச்சத்தால் தாமும் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்பதற்காக தமக்கு கிடைக்கும் கொஞ்சப் பணத்தில் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் நாளாந்தம் மருத்துவ பரிசோதனைக்காகவும், மருந்துகளைப் பெறுவதற்காகவும் அடிக்கடி வவுனியா வைத்தியசாலைக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் இம் மக்கள் இருக்கின்றார்கள்.

இந்தக் கிராமத்தில் வாழும் பலருடைய வீடுகளில் கிணறுகளும், குடிமனைக்குள் குழாய் கிணறுகளும் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்…? அந்த நீரை வாயில் வைத்து பார்க்க முடியாத நிலையே அங்கு உள்ளது. அந்த நீரில் கல்சியம் உள்ளிட்டவற்றின் செறிவு அதிகமாக உள்ளது. இதனால் அந்த நீரின் மூலம் சிறு நீரக நோய் பலரையும் வாட்டி எடுத்துள்ளது. குழந்தைகள், பாடசாலை செல்லும் சிறுவர்கள் எனப்பலர் இருந்தும் அவர்கள் கூட அந்த நீரையே குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட நீர் அருகில் இல்லை. அதனை காசு கொடுத்து பெறுவதற்கும் அந்த மக்களிடம் பணம் இல்லை. இதனால் தமது கிராமத்து நீரால் நோய் வரும் எனத் தெரிந்தும் அந்த மக்கள் அதனையே பருக வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

IMG_0978Aஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீரைக் கூட பெற முடியாத நிலையில் இந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் அபிவிருத்திக்கு என பல மில்லியன் ரூபாய் பணம் கொட்டப்படுகிறது. பல மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத அபிவிருத்தியால் வவுனியா புதிய பேரூந்து நிலையம் போன்று பல கட்டடங்கள் மக்களுக்கு பயனின்றி விலங்குகளினதும், பறவைகளினதும் வாழிடங்களாக மாறியுள்ளது. ஆனால் இந்த மக்களின் நீர்த்தாகத்தை தீர்த்து அந்த மக்களை வாழ வைக்க யாருமில்லை.

மக்கள் பிரதிநிதிகள், வடமாகாணசபை, செட்டிகுளம் பிரதேச சபை மற்றும் அரச அதிகாரிகள் இது தொடர்பில் ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே அந்த மக்களின் ஆதங்கமாகவுள்ளது. இந்த நிலையில் அந்த மக்களுக்கான தீர்வு தான் என்ன…?

IMG_0959A

IMG_0941A

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *