Search
Saturday 30 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வட-கிழக்கிற்கான ஒரு மக்கள் இயக்கத்தின் தேவைப்பாடு

வட-கிழக்கிற்கான ஒரு மக்கள் இயக்கத்தின் தேவைப்பாடு

யதீந்திரா
சில தினங்களுக்கு முன்னர் தெற்கின் சிங்கள கருத்தியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கொழும்புடெலிகிராப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் – இலங்கையின் சமகால அரசியல் கலந்துரையாடல்கள் பிரதானமாக, இரண்டு கேள்விகளின் அடிப்படையில் இடம்பெற்றுவருகின்றன. ஒன்று அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறப் போகும் அந்த நபர் யார்? இரண்டு, அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறப் போகும் அரசியல் அந்த கட்சி எது? இவ்வாறு கூறி செல்லும் உயன்கொட, ஆனால் வரும் ஆண்டுகளில் இலங்கையின் ஜனநாயக நிகழ்நிரலுக்கு என்ன நடக்கும் என்பதுதான் எல்லாவற்றையும்விட முக்கியமான கேள்வி என்கிறார். இதனை எதிர்கொள்வதற்கு ஒரு வலுவான மக்கள் இயக்கத்தின் தேவைப்பாடு தொடர்பில் வாதிடும் அவர், அவ்வாறானதொரு இயக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்றும் கூறுகிறார். அது ஒரு மைய அதிகார அமைப்பாகவோ (no center) கருத்தியல் கவசத்தைக் கொண்டதாகவோ (no ideological straitjacket) ஒரு அமைப்பிற்கான படிமுறைசார் கட்டமைப்பை கொண்டதாகவோ (no organizational hierarchy) அவ்வமைப்பு இருக்க வேண்டியதில்லை. சமசரம் செய்துகொள்ளாத பிரதான அரசியல் கட்சிகளுடன் தந்திரோபாய ரீதியில் இணைந்து செயற்படக்கூடிய ஒரு அமைப்பாகவே அந்த மக்கள் இயக்கம் அமைந்திருக்க வேண்டும்.

இதன் மூலம், உயன்கொடவின் அரசியல் நிகழ்சிநிரல் தெளிவானது. அதாவது 2015இல் எவ்வாறு கொழும்புமைய அரசுசாரா நிறுவன சிவில் சமூக அமைப்புக்கள (NGO –Civil society) மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒன்றிணைந்து செயற்பட்டனவோ, அதே போன்று மீண்டும் இணைந்து செயற்படுவதற்கான அவசரத் தேவை எழுந்திருக்கிறது. ஏனெனில் 2020இல் இடம்பெறப் போகும் தேர்தல்கள் மிகவும் சிக்கலானதாக இருக்கப் போகின்றன. அது 2015 ஜவிடவும் சிக்கலானது.

உயன்கொடவின் வாதத்தை இங்கு எடுத்தாள்வதற்கு ஒரு காரணம் உண்டு. உயன்கொட போன்றவர்கள் தமிழர் தரப்பையும் உள்ளடக்கித்தான் இவ்வாறான வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால் கேள்வி தமிழர் தரப்பு இவ்வாறான தந்திரோபாய சிவில் சமூக நிகழ்சிநிரலுக்குள் அகப்படலாமா? இல்லாவிட்டால் இந்த விடயத்தை எவ்வாறு கையாள வேண்டும்? ஏனெனில் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரான அனுபவம் தமிழர்களுக்கு ஒரு தெளிவான உண்மையைச் சொல்லியிருந்தது.

அதாவது ஆட்சி மாற்றம் தொடர்பில் அதிகம் அலட்டிக்கொண்ட கொழும்புமைய சிவில் சமூகக் கூட்டத்தினர் எவருமே, ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வாய்திறக்கவில்லை. இவர்கள் தொடர்பில் ஒரு புலம்பெயர் நன்பர் கூறும் போது, இவ்வாறானவர்கள் ஜெனிவாவிற்கு வரும்போதெல்லாம் தங்களை தேடிவந்து, தங்களின் கருத்துக்களுக்கு ஆதரவாகப் பேசிச் சென்றனர். ஆனால் ஆட்சிமாறிய பின்னர் தங்களை கண்டும் காணாதவர்கள் போல் செல்கின்றனர் என்றார். இவ்வாறானதொரு அனுபவத்தின் பின்புலத்தில்தான் மீண்டும் ஒரு சிவில் சமூகங்களின் கூட்டு தொடர்பில் பேசப்படுகிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், கொழும்புமைய சிவில் சமூகத்தினரின் நிகழ்சிநிரலுக்கு பின்னால் வடக்கு கிழக்கு இழுபட்டுச் செல்லலாமா என்னும் கேள்வியும் எழுகிறது.

இன்றைய நிலையில் வடக்கு கிழக்கில் ஒரு வலுவான சிவில் சமூக கட்டமைப்பு இருக்கிறதா என்றால், அதற்கு பதில் இல்லை என்பதுதான். அவ்வப்போது சிவில் சமூகமாக தங்களை சிலர் அல்லது சில குழுக்கள் நிரூபிக்க முற்பட்டபோதும் அவர்கள் எவருமே ஒரு வினைத்திறனுள்ள சிவில் சமூக கட்டமைப்பாக பரிணமிக்கவில்லை. யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி இயங்கிய ‘தமிழ் சிவில் சமூகம்’ ஒரு அறிக்கை சமூகமாகவே சுருங்கிப்போனது. அறிக்கைகளுக்கு அப்பால் அவர்களால் நகர முடியவில்லை. வடக்கு கிழக்கில் இயங்கிவரும் சில தமிழ் அரசுசாரா நிறுவனங்களும் தங்களை அவ்வப்போது சிவில் சமூகத்தினராக காண்பித்துக் கொள்வதுண்டு. ஆனாலும் அவர்களது ஆற்றல் அவர்களுக்கு கிடைக்கும் நிதியின் அளவுவரைக்கும்தான். எப்போது கொடை வழங்குவோர் நிதியை நிறுத்துகின்றனரோ அத்துடன் இவ்வாறானவர்களது சிவில் சமூக செயற்பாடுகளும் காணாமல் போய்விடும். அந்த வகையில் இவர்களை சிவில் சமூகத்தினர் என்று கூறுவது கூட பொருத்தமாக இருக்காது. இவர்களில் சிலர் கொழும்புமைய அரசுசாரா நிறுவன சிவில் சமூகக் குழுக்களுடனும் நெருங்கிச் செயற்படுவர்கள்.

எனவே இவ்வாறான குழுக்களை தவிர்த்து ஒரு புதிய அணி வடக்கு கிழக்கில் உருவாக வேண்டும். அது தந்திரோபாய ரீதியான ஒன்றாகக் கூட இருக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுடன்  உடன்படக் கூடிய அனைத்து குழுக்களையும் இணைத்துச் செல்லக் கூடிய ஒரு மக்கள் அமைப்பாக அது இருக்கலாம். தமிழ் மக்கள் பேரவை அவ்வாறானதொரு மக்கள் இயக்கமாக பரிணமித்திருக்க முடியும். ஆனால் அப்படி நிகழவில்லை. அதுவும் தமிழ் சிவில் சமூகம் போன்று ஒரு பெயர்பலகை அமைப்பாகவே முடங்கிப் போனது. அது முற்றிலும் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனில் தங்கியிருக்கிறது. அவர் அசைந்தால்தான் பேரவை அசையும் என்பதே தற்போதைய நிலைமை. அந்த வகையில் நோக்கினால் பேரவையும் வடக்கு கிழக்கு தழுவிய ஒரு மக்கள் இயக்கம் என்னும் தகுதிநிலையை பெறவில்லை. அதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும்கூட, பேரவை அந்த வாய்ப்பை கெட்டியாக பற்றிக்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு வெற்றிடத்தின் மத்தியில்தான் 2020 தேர்தல் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன. 2015 ஆட்சி மாற்றத்தின் போதும் தமிழ் மக்களின் பிரதான தலைமை என்னும் இடத்தை வைத்திருக்கும் சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பினர் மக்களுடன் எவ்வித உரையாடலும் இன்றியே தன்னிச்சையாக முடிவுகளை எடுத்திருந்தனர். ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களாக அறியப்படுபவர்களுக்கு கூட எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைத்துமே மூடு மந்திரமாகவே இருந்தது. ஆனால் இதன் மூலம் தமிழர்களுக்கு கிடைத்த அனுபவம், பின்கதவு ஒப்பந்தங்கள் (Backroom horse deals) அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பைகளை நிரப்புமே அன்றி மக்களின் பிரச்சினைகளை ஒரு போதுமே தீர்க்காது.

அவ்வாறானதொரு நிலைமை 2020 தேர்தலின் போதும் இடம்பெறமால் இருக்க வேண்டுமென்றால், ஒற்றுமை என்னும் பெயரில் சொந்த மக்களையே ஏமாற்றிவரும் அரசியல்வாதிகளை கேள்விக்குள்ளாக்கக் கூடிய ஒரு மக்கள் இயக்கம் தமிழ் மக்களுக்குத் கட்டாயம் தேவை. அதன் மூலமாகத்தான் அரசியல் வாதிகளை கட்டுப்படுத்த முடியும். தமிழ் அரசியல் சூழலில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை அரசியல் வாதிகளை கேள்விக்குள்ளாக்கக் கூடிய மக்கள் இயக்கமொன்று இல்லை. இதன் காரணமாக தமிழ் சமூகம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பலவீனமான சமூகமொன்றை எவர் வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஒற்றுமை, ஜக்கியம் என்றெல்லாம் சில சொற்களை தூக்கி வீசினால் அதனைக் கவ்விக்கொண்டு மக்கள் அமைதியடைந்துவிடுவார்கள் என்பதில் அரசியல் வாதிகள் உறுதியாக இருக்கின்றனர்.

தமிழ் சமூகம் பலவீனமான சமூகமென்பதால்தான், 2016இற்குள் அரசியல் தீர்வு, அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்றெல்லாம் கூறிய சம்பந்தன் இப்போதும் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடிகின்றது. ஒரு பலமான சமூகத்தில் சம்பந்தன் போன்றவர்கள் அரசியலில் இருக்க முடியாது. இருப்பதற்கு அந்தச் சமூகம் அனுமதிக்காது. விக்கினேஸ்வரன் வெளியில் சென்றால் தமிழ் மக்களுக்கு ஆபத்து என்று செல்வம் அடைக்கலநாதன் அறிக்கைவிடுகின்றார். அப்படியாயின், விக்கினேஸ்வரனை இரவோடு இரவாக வீட்டுக்கு அனுப்ப முற்பட்ட தமிழரசு கட்சியோடு அடைக்கலம் எவ்வாறு அரசியல் பங்காளியாக இருக்க முடியும்? தமிழ் சமூகம் பலமாக இருந்திருந்தால் இவ்வாறான அறிக்கைகளை விடும் துனிவு அரசியல் வாதிகளுக்கு வந்திருக்காது. இப்போது வாயில் வரும் எதையும் சொல்லலாம் ஏனெனில் தமிழ் சமூகமோ செக்குலக்கையாக கிடக்கிறது.

அரசியல் வாதிகள் தூக்கிப் போடும் ஒவ்வொரு சுலோகங்களையும் கேள்விக்குள்ளாக்கக் கூடிய, அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடியதான ஒரு மக்கள் இயக்கமே இன்றைய தேவை. மக்களுக்கு பிரயோசனமற்ற அரசியல் அனுகுமுறைகளை, அரசியல் முடிவுகளை ஈவிரக்கமற்று விமர்சிக்கும் ஒரு அமைப்பாக அது இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் அரசியல் வாதிகள் சிலர் சொந்த மக்களையே, ஆகக் குறைந்த மனச்சாட்சியின்றி ஏமாற்றிவருகின்றனர். மக்களின் அறியாமையை தங்களின் சுகபோகங்களுக்காக பயன்படுத்திவருகின்றனர். தங்களின் சுகபோக இருப்பிற்கு ஆபத்துவருகின்ற போதெல்லாம், ஒற்றுமை, கொள்கை, ஜக்கியம், தேசியம் (அத்தோடு இப்போது புதிதாக) சர்வதேசம் என்னும் சொற்களை தூக்கிவீசுகின்றனர். இந்த நிலைமையில் ஒரு முன்னேற்றகரமான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். மக்கள் அப்படி இலகுவாக கேள்வி கேட்பதில்லை. மக்கள் மத்தியில் பலமான சமூக இயங்கங்கள் தோன்றும் போதுதான் மக்கள் விழிப்படைவார்கள். தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் சிந்தனையாளர்கள் இது தொடர்பில் ஓர் உரையாடலுக்கு தயாராக வேண்டியதே இன்றைய காலத்தின் தேவை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *