தலைப்பு செய்திகள்

வனஇலாகாவால் அபகரிக்கப்பட்ட 200 ஏக்கர் விவசாய நிலம்: பரிதாப நிலையில் குஞ்சுக்குளம் மக்கள்

வனஇலாகாவால் அபகரிக்கப்பட்ட 200 ஏக்கர் விவசாய நிலம்: பரிதாப நிலையில் குஞ்சுக்குளம் மக்கள்

நேரடி ரிப்போட்

-கே.வாசு-

யுத்தம் காரணமாக அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரதேசம் வன்னிப்பிரதேசம். இவற்றில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் நீண்டகாலம் இருந்த பிரதேசங்கள். இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்கள் என இருவகை பகுதிகள் இருந்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளிலும் மக்கள் குடியிருந்தார்கள். ஆனால் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த எல்லாப் பகுதிகளில் மக்கள் முழுமையாக குடியிருக்கவில்லை. சில பகுதிகள் சூனியப் பிரதேசமாகவும், சில பகுதிகள் இராணுவ நடமாட்டம் மிக்க பகுதிகளாகவும் இருந்தன. அவ்வாறான பகுதிகளில் மக்கள் அச்சநிலை காரணமாக குடியேறாது தவிர்த்து வந்திருந்தனர். அவ்வாறானதொரு பகுதியோ மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பகுதி.

02குஞ்சுக்குளம் பகுதியில் 1965, 1967, 1970 மற்றும் 1975 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் உணவு உற்பத்தி திட்டத்தின் கீழ் இப்பகுதியில் குடியேறிய மக்களுக்கு அரசாங்கத்தால் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. சிறிய பற்றைக்காடுகளாக இருந்த அக் காணிகளை துப்பரவு செய்த இம் மக்கள் அக்காணிகளில் தமது பிரதான தொழிலாகிய விவசாயத்தை செய்து வந்தனர். 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கடும் யுத்த நிலை காரணமாக இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியிருந்தனர். 1995 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மீண்டும் தமது நிலங்களில் குடியேறிய இம் மக்களை தொடர்ந்தும் குடியிருக்க விதி விட்டுவைக்கவில்லை. இதனால் மீண்டும் அதே ஆண்டு இடம்பெயர்ந்து மடு மற்றும் பூமலர்ந்தான் கிராமம் என்பவற்றில் வாழ்ந்த இம் மக்கள் 1997 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மீள்குடியேறியிருந்தனர்.

03மீள்குடியேறிய போது தற்காலிக வீடுகள் அமைத்து வாழ்ந்த இம் மக்கள் தமது விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலையே காணப்பட்டது. 2009 இற்கு பின்னர் இம் மக்கள் சிறிய பற்றைக்காடுகளாக மாறியுள்ள தமது விவசாய காணிகளை துப்பரவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இம் மக்களின் விவசாய காணிகளுக்கு முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலப்பகுதியில் 1996 ஆம் ஆண்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், சிலருக்கு அதற்கு முன்னரும், மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இக் காணிகள் அனைத்தும் மன்னார் மாவட்ட செயலக காணிக் கிளையிலும் தனியார் விவசாய காணிகளாக பதியப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இம் மக்கள் தமது காணிகளை துப்பரவு செய்கின்ற போதும், துப்பரவு செய்து விவசாயம் செய்கின்ற போதும் அக்காணிகளுக்குள் நுழையும் வனஇலாகாவினர் அவை தமது காணிகள் என எல்லைக் கற்களை புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

04இதனால் 187 குடும்பங்களுக்கு சொந்தமான புதுக்குளம், தம்பனைக்குளம், சின்னக்குஞ்சுக்குளம், மங்கலம்பிட்டி, பாலமோட்டைத் தோட்டம் ஆகிய குளங்களுக்கு கீழ் உள்ள காணிகளும், மானாவாரி காணிகளுமாக 200 ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் வனஇலாகாவால் அபகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மீள்குடியேறிய போதும் தமது சொந்த நிலங்களை பறிகொடுத்தவர்களாகவும், தமது நாளாந்த வாழ்வோட்டத்தை கொண்டு நடத்த முடியாதவர்களாகவும் இம் மக்கள் உள்ளனர். இடம்பெயர்ந்து இருந்த போது நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அதனை வைத்து நாளாந்த வயிற்றுப் பசியை மட்டுமே போக்க முடிந்துள்ளது. ஆனால் தற்போது மீள்குடியேறிய காரணத்தினால் நிவாரணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் நாளாந்த சீவியத்திற்கு உழைக்க வேண்டியவர்களாக இம் மக்கள் உள்ளனர். ஆனால் அவர்களது விவசாய நிலங்கள் வனஇலாகாவால் அபகரிக்கப்பட்டிருக்கிறது.

05சிலரது வீட்டு வளவுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் வனஇலாகாவினர் தமது எல்லைக் கற்கனை புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் கூட இம் மக்கள் நிம்மதியாக குடியிருக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. இது தொடர்பில் இம்மக்கள் அரச அதிகாரிகளினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் வாசல் படிகளை பலமுறை கடந்த போதும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என அங்கலாய்க்கின்றனர் இம் மக்கள்.

07திட்டமிட்ட குடியேற்றங்களாலும், இராணுவ சுவீகரிப்பாலும் தமிழர் நிலங்கள் பல பகுதிகளிலும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இங்கு வனஇலாகாவினர் மக்கள் நிலங்களை அபகரித்து அவற்றை வனங்களாக பிரகடனப்படுத்தி வருகின்றனர். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரங்களைக் கூட அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அப்படியாயின் இந்த வனஇலாகாவினர் அரசின் கீழ் இல்லையா என்கின்றனர் குஞ்சுக்குளம் மக்கள். இம் மக்களின் நியாயமன ஆதங்கத்திற்கான பதில் தான் என்ன…?

01

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *