Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வன்னிச் சிறுவர்கள் வாழ்வியல்

வன்னிச் சிறுவர்கள் வாழ்வியல்

என் பள்ளிப் பருவங்களை – கிட்டத் தட்ட 10, 12 வருடங்களை வன்னிக் கிராமமொன்றில் களி(ழி)த்திருக்கிறேன்.

இப்போது கிட்டத் தட்ட 15 வருடங்களின் பின் நினைத்துப் பார்க்கும் போது வன்னிப் பகுதி சிறுவர்கள் கூடுதலாக இயற்கையோடு அன்னியோன்யமாய் வாழ்ந்திருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.குடிசை வீடுகளும் லாந்தர் விளக்குகளும் ரொட்டி சுடும் வாசமும் பறவைகளின் பலவிதமான ஒலிகளும் நிறைந்தது அவர்களின் மாலை நேரம்.

சிறுமிகள் குண்டுமணி மரத்தைச் சுற்றிக் குண்டுமணி பொறுக்குவார்கள்.மருதோன்றி இலைகள் பறித்து அம்மியில் அரைத்து தேசிச் சாறு விட்டு நகம் சிவக்கும் அழகைக் காட்டி அதே மாதிரி வெகு சிரத்தையாகத் தம் தோழி மாருக்கும் போட்டு விடுவார்கள். சிறுவர்கள் காடுகளில் தன்னிச்சையாக வளர்ந்திருக்கும் பாலை மரம், வீர மரம், விளா மரங்களைச் சூழ்ந்திருப்பார்கள்.அது தான் அவர்களின் உச்ச பட்ச இயற்கையுடனான நட்பு.பள்ளிக்குப் போகாத மழை நாட்களில் குளத்தோர மரங்களில் ஏறி குளத்துக்குள் குதிப்பதும் அவிழ்ந்து விழும் அரைக் கால் சட்டைகளை ஒரு கையால் பிடித்தபடி ஒற்றைத் தடியில் ரின் மூடியைப் பொருத்தி அதைத் தள்ளிய படி வீதியால் ஓடுவதும் தான் அவர்களின் பெரும்பாலான பொழுது போக்கு.

kundumani
ஒவ்வொரு பறவைகளின் குரல் ஒலிக்கும் போதும் அதற்குத் தமிழில் அர்த்தம் கற்பித்துக் கொள்வதில் இரு பாலாரும் வல்லவர்கள்.இரவு ஆளரவம் எல்லாம் அடங்கிய பிற்பாடு துல்லியமாய் கேட்கும் ஒரு பறவையின் தனித்துவமான குரல்.’வாடா பாப்பம்; கொட்டப் பாக்கு’என்பதாக இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.அது என்ன பறவை என்று இது வரை தெரியவில்லை.குயிலோடு தாமும் சேர்ந்து கூவுவார்கள். அது திருப்பிக் கூவினால் அது தான் அன்றய நாளுக்குரிய சிறுவர்களின் மகிழ்ச்சி.கரிக்குருவிகள்,புலுணிகள்,கிளிகள் போல வேறு பல பறவைகளும் அங்கிருந்தன.ஆனால் சிறுவர்கள் யாருமே அவற்றைப் பிடித்துக் கூட்டிலடைத்து வைத்ததில்லை. காணிகள் உழுகின்ற போது எங்கிருந்தோ வந்து சேரும் பலவகையான பெயர் தெரியாத பறவைகள்.

மயில்கள் வந்து வீட்டில் வளர்க்கும் கோழிகளோடு வந்து தானியம் கொறிக்கும்.காலை நேரம் அவைகளின் பெரிய ‘மாயோ மாயோ’ என்ற குரல் பல வீடுகளுக்குத் துல்லியமாகக் கேட்கும். மிகவும் செழித்து வளர்ந்த ஆண்மயில்கள் பட்ட மரக் கிளைகளில் தம் தோகையைக் கீழே தொங்கப் போட்ட வாறு தன் நீலப் பட்டுக் கழுத்தைக் கம்பீரமாக நிமிர்த்தி தன் மஞ்சள் நிற அலகால் மாயோ என்று கத்துவதைப் பார்ப்பது கண்கொளாக் காட்சி. அதிலும் காலை நேரச் சூரியன் அதன் கழுத்தில் பட்டுத் தெறிக்கும் போது கிடைக்கும் வண்ண ஜாலங்கள் இன்னும் அழகு.

chicken-and-her-babies

வன்னிப் பகுதியில் செம்பகம் என்று ஒரு பறவை அடிக்கடி வரும்.மண்ணிறமும் கறுப்பும் கலந்த நிறம் அதற்கு.அவை எங்கு வசிப்பன என்று தெரிவதில்லை.ஆனால் வீதியோர வேலிகள் மற்றும் அடர்ந்த சிறு மரக்கிளைகளில் வந்து அமர்ந்திருக்கும்.கூச்ச சுபாவம் கொண்டவை.சிறு பிள்ளைகள் அதனை எங்கேனும் கண்டால் உடனே “செம்பகமே செம்பகமே மாமி வாறா ஒழிச்சிரு” என்று பாட ஆரம்பித்து விடுவார்கள்.(நானும் இப்படி சிறுவயதில் இப்படிப் பாடி இருக்கிறேன்.) அவை கால்களை மெல்ல மெல்ல அரக்கி மர இலைகளுக்குள் ஒழிந்து கொள்ளும்.ஆனால் பறந்து போய் விடாது.அது ஒழிவதைப் பார்ப்பதில் சிறுவர்களுக்கு பெரும் குதூகலம்.இது வன்னிச் சிறுவர்களிடம் காணப்பட்ட ஒரு தனித்துவ வழக்கென்றே நம்புகிறேன்.

காணிகள் எல்லாம் பெரிய பெரிய வளவுகளாக இருப்பதாலும் எல்லைகள் காட்டுப் புறங்களாக இருப்பதாலும் மான்களும் ஒன்றிரண்டு வந்து போகும்.யானைகள் வந்து தென்னைகளை முறித்துக் குருத்துக்களைச் சாப்பிட்டுப் போகும்.அதனால் தோட்டக் காரர்கள் மரங்களில் பரண் அமைத்துக் காவலிருப்பார்கள்.சில சிறுவர்களும் அடம் பிடித்து அவர்களோடு சேர்ந்து கொள்வார்கள்.பன்றி, மான் என்று வேட்டைகளுக்கும் செல்வார்கள்.

ஒரு முறை எங்கள் வீட்டு வளவுக்குள் – அது – வவுனியாவில் இருந்து 10 மைல் யாழ்ப்பாணம் நோக்கிய பாதையில் இருந்தது. தென்னம் பிள்ளைகள் பல நட்டிருந்தோம்.அவற்றை யானைகள் வந்து சாப்பிட்டுச் சென்று விடுவது வழக்கு.அந்த நேரம் வவுனியா நகர் புறத்தில் பிரச்சினை காரணமாக என் சித்தி குடும்பத்தினர் நம்மோடு வந்து தங்கியிருந்தார்கள்.அவர்கள் நகர் புறத்தவர்கள்.இரவு எல்லோரும் படுத்து விட்டோம். நேரம் பருமட்டாக ஒரு 1 மணி 2மணியாக இருக்கலாம்.வீட்டின் பின் புறம் யானைகள் வந்து தென்னைகளை முறிக்கும் சத்தம் கேட்டது.அவற்றை விரட்டுவதற்கு கிராமத்தவர்கள் ஒரு உத்தி வைத்திருந்தார்கள். அது தென்னோலையில் செய்யப்பட்ட பந்தத்தால் தீப்பந்தத்தைக் காட்டியபடி கூ… என்று கூவிக்கொண்டு ஓடினால் அவை ஓடி விடும் என்பது தான் அது.

காட்டு-யானைகள்

எனவே நாமும் எல்லோரும் எழும்பி (வவுனியாவில் இருந்து வந்த தம்பி, தங்கை உட்பட.எல்லோருக்கும் அப்போது பதின்ம வயது)தயாராகக் கட்டி வைத்திருந்த தீப்பந்தத்தை எரித்த படி நாம் எல்லோரும் கூ… என்ற படி ஓடி அவற்றை விரட்டி விட்டோம். பிறகு படுக்கைக்குப் போகும் போது என் தங்கை முறையான வவுனியாப் பட்டணக்காறி மகிழ்ச்சியும் சிரிப்பும் உற்சாகமுமாகச் சொன்னாள்.

“அக்கா, இது நல்ல முசுப்பாத்தியான உலகமா இருக்கு.”:)

அப்படி இருந்தது வன்னிக் கிராமம் ஒன்றின் அன்றய சிறுவர்களின் வாழ்வியல்.

ஈழத்து முற்றம் இணையத்துக்காக மணிமேகலா எழுதியது . 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *