Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வளி மாசடைதலால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பாதிப்பு வழியில் வளியால் இழிவழி விழிமீர் !

வளி மாசடைதலால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பாதிப்பு வழியில் வளியால் இழிவழி விழிமீர் !

மருத்துவர். சி. யமுனாநந்தா ( MBBS, DTCD)

நாம் சுவாசிக்கும் காற்று, குறிப்பாக நகரப் பிரதேசங்களிலும், வீதியோரங்களிலும் அதிக அளவு மாசடைந்து காணப்படுகின்றது. இவற்றினால் எமது உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகின்றது என்பதனை மருத்துவ ஆய்வுகள் வெளிக்காட்டி உள்ளன. அவற்றினை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானிய மருத்துவ நிபுணர்கள் பல முற்காப்பு நடவடிக்கைகளைச் சிபார்சு செய்து உள்ளனர். இவற்றுள் முக்கியமானது நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருத்தல் வேண்டும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அருந்தும் நீரினால் நோய்கள் பரவி பாதிப்பினை ஏற்படுத்தின. 20ம் நூற்றாண்டின் இறுதியில் உண்ணும் உணவினால் நோய்கள் ஏற்பட்டு பாதிப்பினை அதிக அளவில் ஏற்படுத்தின. 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுவாசிக்கும் காற்றினால் அதிக நோய்கள் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. காலத்துடன் தொழில்நுட்ப மாற்றம், வாழ்வு மாற்றம் நோயினை நிர்ணயம் செய்கின்றது.

சுவாச மாசுக்களால் சுவாச நோய்கள் அஸ்மா, சுவாசப்புற்றுநோய், இதய நோய்கள், பாரிசவாதம் என்பன ஏற்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே எமது சூழலின் வளியின் தரத்தை மேன்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். இது ஒரு கூட்டு சமூக முயற்சி ஆக அமைய வேண்டும்.

வளி மாசடைதலும் அதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கும் போக்குவரத்து ஒரு முக்கிய ஏதுவாகும். வாகனப் புகையினால் பல தீங்கு விளைவிக்கக்கூடிய பதார்த்தங்கள் காணப்படுகின்றன. நெரிசலான நகரங்களில் தொடர்ச்சியாக வாகனப் புகையினை சுவாசிப்பதனால் மாரடைப்பு நிகழ்வுகள் ஏற்பட்டமை அவதானிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனநெரிசல் உள்ள பாதைகளை பயன்படுத்தாது மாற்று வழிகளை பயன்படுத்தல் நல்லது.

அதிக புகை வெளிவிடும் வாகனங்களை கட்டுப்படுத்தல், மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தல், தேவையற்ற வாகனப் பாவனையை குறைத்தல் என்பனவும் வளி மாசடைவதால் வீதியில் பயணிப்போர் பாதிக்கப்படுவதைக் குறைக்கும்.

china-pollution

அடுத்து பிரதான வீதிகளுக்கு அருகாமையில் வசிப்போர், வேலை செய்வோர் அதிக அளவில் வளி மாசடைதலினால் பாதிக்கப்படுகின்றனர். வளி மாசடைதல் ஓர் பாரிய சமூக நலப் பிரச்சனை ஆகும். எனவே இது பற்றிய விழிப்பபுணர்வு மக்களுக்கு தேவை. அதனை தனிப்பட்ட ரீதியிலும், சமூக ரீதியிலும் எதிர்கொள்ள ஒவ்வொருவரும் முனைதல் வேண்டும்.

வளி மாசடைதல் பற்றிய சமூக ரீதியில் விழிப்புணர்வு கல்வி புகட்டப்படல் வேண்டும். வளி மாசடையாது இருப்பதற்கான மாற்றுவழிகளை கருதல் வேண்டும். தீங்கு விளைவிக்கும் வாகனங்களைத் தடை செய்தல் வேண்டும். சூழலில் வளி மாசடையும் அளவினை கண்காணித்தல் வேண்டும். அதிக அளவு மாசடையும் நேரங்களில் விசேட பாதுகாப்பு முறைகளைப் பிரயோகிக்க வேண்டும். வளி மாசடைவதனால் அதிகம் பாதிக்கப்படுவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

air-pollution-control-l-3-26-638வளி மாசடைதலை ஏற்படுத்தும் காரணிகளை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் 1940-1950 ஆண்டளவில் கந்தவீர் ஒட்சைட் (SO2) மற்றும் நிலக்கரி மீதிகள் வளியில் காணப்பட்டன. 1960-1980 காலப்பகுதிகளில் காபனோர்ஒட்சைட் (CO), ஈயம், ஓசோன் என்பன பாதிப்பினை ஏற்படுத்தின. 1980 தொடக்கம் 2000 வரையிலான காலப்பகுதியில் நைதரசனீரொட்சைட் (NO2) நுண்துகள்கள் (Particulate Matter) PM அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தின.

மாற்றமடைந்து வரும் எமது உலகில் வளி மாசடைதல் ஓர் அச்சுறுத்தலாகவே உள்ளது. ஆனால் சிறந்த எரிபொருட்களைப் பயன்படுத்துவனால் பாரதூரமான மாசடைதலைத் தடுக்கலாம்.

வாகன நெரிசல் புகையினால், காபன் துகள்கள், CO, பென்சீன், போமல்டிகைட், அறோமற்றிக் ஐதரோகாபன், ஈயம், NO2 என்பன வெளிவிடப்படும். வீடுகளின் உள்ளே பாவிக்கப்படும் சுத்திகரிப்பு இரசாயனப் பதார்த்தங்கள், அழகுத் திரவியங்கள் மற்றும் பகுதியான எரிதல் என்பனவும் வளி மாசடைய காரணமாக அமையும்.

ஒருவர் நாளாந்தம் மாசடைந்த காற்றினால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார் என அவதானிக்கும்போது காலைகளில் பாடசாலைக்கு செல்லும்போது போக்குவரத்து புகைகளினால் NO2, O3, PM (அதாவது 2.5 மைக்கிறோன், 10மைக்கிறோன் அளவு துகள்கள்) என்பனவற்றை உள்ளெடுப்பர். பாடசாலைச்சூழலைப் பொறுத்து அங்கு மாசுக்களை உள்ளெடுக்கும் தன்மை காணப்படும். எனவே நகரப்பாடசாலைகளை சூழ வாகன நெரிசல்களை கட்டுப்படுத்தல் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

வீட்டுச்சூழலினைத் தெரிவு செய்யும் போது வாகன நெரிசல் அதிகமான நகரங்களில், அல்லது பெரும் தெருக்களிற்கு அருகில் குடியமைதல் நல்லதல்ல. வீட்டில் போதிய காற்றோட்டம் அமைதலும் அவசியம்.

வளி மாசடைதலின் பாதிப்பு ஒருவரில் அவர் எவ்வளவு காலம் மாசடைந்த சூழலில் வாழுகின்றார் என்பதிலும் வளி மாசடைந்த அளவிலும் தங்கி உள்ளது. மேலும் ஒவ்வொரு மனிதனினதும் பரம்பரைக் காரணிகளான நிறமூர்த்தத்தில் மாற்றங்கள் ஏற்படும் தன்மையிலும் பாதிப்பின் தாக்கம் தங்கி உள்ளது. அடுத்து ஒரு நபரில் காணப்படும் ஏனைய உடற்றொழியில் காரணிகளான உடற்பருமன், ஏனைய உடல்நோய் நிலைகளிலும் தங்கி இருக்கும்.

வளியில் காணப்படும் மாசுக்களால் ஒருவரின் சுவாச ஆரோக்கியம் முதலில் பாதிக்கப்படும். தொய்வுநோய் ஏற்படலாம். சுவாசப்பைப் புற்றுநோய் ஏற்படலாம். வகை இரண்டு நீரிழிவுநோய் ஏற்படும் தன்மை அதிகரிக்கும். மாரடைப்பு, உயர் குருதி அழுத்தம், பாரிசவாதம் என்பன ஏற்படும். கருவில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். அங்கவீனங்கள் ஏற்படலாம். மூளையின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டு உள்ளது.

பாடசாலை மாணவர்களிற்கு PM10, PM2.5, காபன் துகள், NO2 என்பனவற்றினால் பாதிப்பு அதிகம். மாசடைந்த சூழலில் வாழும் குழந்தைகள் வளர்ந்தபின் அவர்களின் சுவாசப்பைகளின் செயற்றிறன் ஆரோக்கிய- மானவர்களை விட நான்கு மடங்கு குறையும். இவர்கள் பருமனாக இருப்பின் NO2, PM10 என்பவற்றின் மேலதிக பாதிப்புக்களால் நீரிழிவு நோய் ஏற்படும் தன்மையும் அதிகம்.

வாகனப்புகையின் தாக்கத்தினால் குறிப்பாக PM2.5 இனால் மூளையின் கனவளவு குறைவடைவது அவதானிக்கப்பட்டு உள்ளது. யுரவளைஅ நோய்நிலை ஏற்படுவதும் அவதானிக்கப்பட்டு உள்ளது. குருதிச்சுற்றோட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். PM2.5 சிறுவர்களில் சுவாசநாடியின் குருதி அமுக்கம் Pulmonary Arterial Pressure அதிகரிக்கக் காரணமாக அமைகின்றது. NO2, PM10 களினால் குருதி அமுக்கம் Diastolic blood Pressure அதிகரிக்கக் காரணமாக அமைகின்றது.

நீண்டகால PM2.5, PM10 உள்ளெடுத்தல் Artheroselerosis ஏற்பட காரணமாக அமைகின்றது. இது இளவயதில் குறிப்பாக 30-40 வயதில் மாரடைப்பு, பாரிசவாதம், இதயச் செயலிழப்பிற்கு காரணமாக அமைகின்றது.

PM2.5

கர்ப்பிணிப் பெண்கள் வாகனப்புகையினை சுவாசிப்பதனால் அவர்களின் குழந்தைகளுக்கு Lymphocytic Leukemia, Retinoblastoma போன்ற புற்றுநோய்கள் ஏற்பட்டு உள்ளது.

வளி மாசடைதல் அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. ஆனால் ஒருவர் வாழும் சூழலின் மாசடையும் தன்மை, பாதிப்பின் தாக்கத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்துகின்றது. எமது உடலின் பாரம்பரிய அலகுகள், வளி மாசடைவதனால் எமது உடலில் ஏற்படும் பாதிப்புக்களின் அளவுகளை சிறிதளவு கட்டுப்படுத்துகின்றது. இதனாலேயே மாசடைவதால் ஒரு குறித்த வீதத்தினருக்கு பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. வளிமாசின் பாதிப்பு, ஒருவருக்கு தாயின் கருவில் இருக்கும்போதே ஏற்பட்டு விடுகின்றது.

வளி மாசடைதல் பற்றிய விழிப்பு சமூக மட்டத்தில் ஏற்படுத்தப்படல் வேண்டும். வளியினை மாசடைய செய்யாத தொழில்நுட்பங்கள் எரிபொருட்கள் பயன்படுத்தப்படல் வேண்டும். போக்குவரத்து வாகன நெரிசல் கட்டுப்பாடுகள் அவசியம், வளி மாசடைதலினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளிற்கு விசேடசூழல் பாதுகாப்பு அமைக்கப்படல் வேண்டும். வளி மாசடைதல் பாதிப்புக்களை அறிந்து கொள்ளக்கூடிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும். பாதிப்புக்களிற்கான மருத்துவவசதிகள் வழங்கப்படல் வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *