Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விக்கினேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடு

விக்கினேஸ்வரனின் அரசியல் நிலைப்பாடு

யதீந்திரா
அரசியல் முரண்பாடுகளை வெறுமனே அதன் வெளித்தோற்றத்தில் காணும் போது அதன் உண்மையான முகத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும். அரசியல் என்பது எப்போதும் அதன் வெளித்தோற்றத்தில் சம்பவங்களின் தொகுப்பாகவே தெரியும். அரசியல்வாதிகள் சம்பவங்கள் ஒவ்வான்றிலும் வந்து போவர்கள் மட்டுமே. இவ்வாறு வந்துபோகும் அரசியல் வாhதிகள் சிலர் தலைவர்களாகின்றனர் சிலரோ வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் காலத்தை கழித்துச் செல்கின்றனர். அவ்வாறானவர்கள் வெறுமனே பதவிகளை அனுபவித்துச் செல்பவர்களாக மட்டுமே இருக்கின்றனர். இவ்வாறு பதவிகளை அனுபவித்துச் செல்பவர்கள் காலத்திற்கு காலம் சில நிலைப்பாடுகளை எடுப்பதும் பின்னர் தாங்கள் எடுத்த நிலைப்பாடுகளை தாங்களாகவே மாற்றிக் கொள்வதுமுண்டு. சில சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு முடிவுகளை எடுப்பது வேறு தங்களின் சுயநலன்களுக்காக அரசியல் முடிவுகளை மாற்றிக்கொள்வது வேறு. உதாரணமாக இன்றைய சூழலில் தமிழீழ அரசை முன்னிறுத்துவது முடியாத காரியம் ஏனெனில் அதற்கான அக மற்றும் புறச் சூழல் தற்போது இல்லை ஆனால் சமஸ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் நிலைப்பாட்டை முன்வைக்கும் அனைத்து தார்மீக உரிமைகளும் எமது மக்களுக்குண்டு. அந்த வகையில் நோக்கினால் தமிழீழ அரசை கைவிடுவது சூழ்நிலை கருதிய முடிவு எனலாம் அவ்வாறாயின் சமஸ்டியை கைவிடுவது? அது முற்றிலும் அரசியல் வாதிகளின் சுயநலம் சார்ந்த ஒரு முடிவு மடடுமே. தமிழ் மக்கள் ஒரு நெடிய போராட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர். கடந்த எழுபது வருட கால அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் எப்போதும் அரசியல் நிலைப்பாடொன்று சார்ந்தே வாக்களித்து வந்திருக்கின்றனர்.

இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் சம்பந்தன் தரப்பு ஈடுபட்டிருக்கிறது. இந்த பின்புலத்தில்தான் அண்மையில் வடக்கு மாகாண சபையில் குழப்பங்கள் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்டன. நான் மேலே குறிப்பிட்டது போன்று அரசியலை அதன் வெளித்தோற்றத்தில் நோக்கினால் வடக்கு மாகாண சபை பிரச்சினையின் உண்மையான அரசியல் பின்னணியை அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும். வெளித்தோற்றத்தில் நோக்கினால் அது விக்கினேஸ்வரன் என்னும் ஒரு தனிநபர் சார்ந்த பிரச்சினையாகவே விளங்கிக்கொள்ளப்படும் ஆனால் அது சரியான பார்வைதானா?

wigneswaran

உண்மையில் விக்கினேஸ்வரனை அகற்ற வேண்டுமென்பதில் ஏன் சிலர் இந்தளவு வெறியுடன் செயற்படுகின்றனர்? இந்தளவிற்கு அவர் ஏன் சிலரால் வெறுக்கப்படுகின்றார்? சில தினங்களுக்கு முன்னர் அவரை சந்தித்து பல்வேறு விடயங்களையும் விரிவாகப் பேச முடிந்தது. மிகவும் தெளிவாகப் பேசினார். அவரது பேச்சில் ஒரு வெளிப்படைத் தன்மை தெரிந்தது. விக்கினேஸ்வரன் அரசியலுக்கு வருவதற்கு யார் காரணமாக இருந்தார்களோ தற்போது அவர்கள்தான் அவரை எப்படியாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்பதிலும் குறியாக இருக்கின்றனர். ஆனால் அவர் வீட்டுக் மட்டுமே செல்ல வே;ணடுமென்பதிலும் அவர்கள் மிகவும் அக்கறையாக இருக்கின்றனர். ஏன்?

2013இல் இடம்பெற்ற வடக்கு மாகாண சபை தேர்தலில் விக்கினேஸ்வரனை நிறுத்துவதாக முடிவெடுத்த போது, இன்று விக்கினேஸ்வரனை அகற்றியே தீருவேன் என்று சபதமெடுத்திருக்கும் சுமந்திரன்தான் தேர்தல் விஞ்ஞாபனத்தை வரைந்திருந்தார். ஒரு தனித்துவமான இனமான தமிழ் மக்கள் நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து சிங்கள மக்களுடன் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு கிழக்கு என்பது, தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். தமிழ் மக்கள் சுயநிர்யண உரிமைக்கு உரித்துடைவர்களாவர். ஆதிகாரப்பகிர்வானது இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படைக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். அந்த அதிகாரப்பகிர்வானது பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும், அதாவது காணி, சட்டம் மற்றும் ஒழுங்கு, கல்வி மற்றும் சுகாதாரம், வளங்கள் மற்றும் நிதிக் கையாளுகை தொடர்பான அதிகாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையவேண்டும்.

இந்த வரிகள் அனைத்தையும் சம்பந்தனின் மேற்பார்வையில் சுமந்திரனே எழுதினார் ஆனால் தற்போது எழுதியவர்களே அதனை கைவிட முயல்கின்றனர். அதற்கு விக்கினேஸ்வரனை ஒத்துழைக்குமாறு கோருகின்றனர். அதாவது தங்களது அரசியல் நேர்மையீனத்துடன் விக்கினேஸ்வரனையும் ஒத்தோடுமாறு கோருகின்றனர் ஆனால் அவரோ தான் எந்த தேர்தல் விஞ்ஞாபானத்தின் அடிப்படையில் வடக்கு மக்கள் முன்னால் நிறுத்தப்பட்டாரோ, எதனை நம்பி அந்த மக்கள் தனக்கு வாக்களித்தனரோ அதற்கு மாறாக தன்னால் ஒரு போதும் செயற்பட முடியாது என்கிறார். விக்கினேஸ்வரனை பொறுத்தவரையில் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே எல்லாவற்றையும் விடவும் முக்கியமானது என்று கருதுகிறார். விக்கினேஸ்வரனின் வாதத்தில் எந்தவொரு தவறையும் காண முடியவில்லை. தனது நிலைப்பாட்டுக்காக தான் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயங்கப் போவதில்லை என்பதிலும் அவர் உறுதியாக இருக்கிறார். ஆக மிஞ்சினால் என்ன செய்வார்கள் என்னை வெளியில் போடுவார்கள். அதுதான் அவர்களது தெரிவென்றால் அதனைச் செய்துவிட்டுப் போகட்டும் என்கிறார்.

wigneswaran

எங்கள் பேச்சு வடக்கு மாகாண அபிவிருத்தி பற்றி திரும்பிய போது – அது தொடர்பிலும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அபிவிருத்தியில் நான் கூடுதல் கவனம் எடுத்து வருகின்றேன். ஒவ்வொரு திட்டங்களையும் நன்கு ஆராய்ந்தே அவற்றை அனுமதிக்கின்றேன். உதாரணமாக மன்னாரில் ஒரு தோல் தொழிற்சாலைக்காக அனுமதி கேட்டனர். அதனை ஆராய்ந்த போது அது ஏற்கனவே ஹம்பாந்தோட்டை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதை அறிய முடிந்தது. ஏனெனில் அதிலிருந்து வெளிவரும் ஒரு வகை நச்சு பதார்த்தம் எங்கள் மக்களை பாதிக்கும். அதனால்தான் நான் அதனை நிராகரித்தேன். இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ந்தே முடிவெடுக்கின்றேன். நீண்டகால நோக்கில் எங்களது மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய திட்டங்களை நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அவர் இவ்வாறு கூறிய போது அவர் இந்த விடயங்களை போதியளவு மக்களிடம் கொண்டுசெல்லவில்லை என்று என்று தெரிந்தது. ஏனெனில் விக்கினேஸ்வரன் தொடர்பில் ஒரு கருத்து நிலவுகிறது – அது திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அதாவது, விக்கினேஸ்வரன் எதைக் கொண்டு போனாலும் எதிர்ப்பார். அவருக்கு எதிர்பதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. ஆனால் அவருடன் பேசிய போதுதான் அது உண்மையல்ல என்று தெரிந்தது.

இந்த இடத்தில் மீண்டும் 2013இன் தேர்தல் விஞ்ஞாபனத்தை திரும்பி பார்ப்போம். தேர்தல் விஞ்ஞாபனம் தெளிவாக கூறுகிறது – இறைமை மக்களுக்குரியதே அன்றி அரசுக்குரியதல்ல என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக நம்புகிறது. தமிழ் மக்களது உரிமை அவர்களுக்குரியதேயன்றி கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்குரியதல்ல. இந்த அடிப்படையில் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டமானது அதிகாரத்தை மத்திக்குரியதாகவும் அதன் முகவராக ஆளுனரையும் கொள்கிறது. இது தவறானது. எங்களுடைய அரசியல் தத்துவமானது ஜனநாயகத்தின் மீதான சவால்களில் வேர்கொண்டிருக்கிறது.

மேற்படி வாசகங்களை எழுதியவர்கள் மறந்து விட்டனர் ஆனால் விக்கினேஸ்வரனோ அவற்றை முடிந்தவரையில் பிரயோகிக்க முற்படுகின்றார். அது முடியாமல் போகும் போது கொழும்மை எதிர்க்கிறார். சம்பந்தன் இதனைத்தானே விக்கினேஸ்வரனிடமிருந்து எதிர்பார்த்தார். இப்படியொரு முதலமைச்சர்தானே தமிழ் மக்களுக்கு தேவை என்று சம்பந்தன் கருதினார். மாவை சேனாதி இவற்றுக்கு தகுதியானவர் அல்ல என்பதால்தானே அவரை சம்பந்தனும் சுமந்திரனும் நிராகரித்தனர். ஆனால் இன்று விஞ்ஞாபனத்தை எழுதியவர்களும், அதனடிப்படையில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளை பெற்ற வடக்கு மாகாண தமிழரசு கட்சியின் உறுப்பினர்களும் அந்த விஞ்ஞாபனத்தை மறந்துவிட்டனர். தங்களைப் போல் விக்கினேஸ்வரனையும் மக்களை ஏமாற்றுமாறு சொhல்லுகின்றனர். ஆனால் விக்கினேஸ்வரன் அதற்குரிய ஒருவரல்ல என்பதை தெளிவாக உணர்ந்துகொண்ட போது அவரை எவ்வாறு அகற்றலாம் என்று யோசிக்கின்றர். அதற்கு திட்டம் தீட்டுகின்றனர். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் அந்த தேர்தல் விஞ்ஞாபனம் இப்போது எவருக்குமே நினைவிலில்லை. ஒரு வேளை அது நினைவிலிருந்திருந்தால் அவைத் தலைவர் சிவஞானம் தலைமையில் இரவோடு இரவாக ஆளுனரிடம் சென்றிருக்க மாட்டார்கள். தமிழ் மக்களின் உரிமை கொழும்புக்குரியதல்ல என்று தொடர்ந்தும் கூற முற்படும், அதில் உறுதியாக நிற்கும் முதலமைச்சர் ஒருவரை பதவிலிருந்து அகற்றுவதற்கு அந்த கொழும்பின் முகவரான ஆளுனரிடமே சென்றிருக்கின்றனர். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்றொரு பழமொழியுண்டு. ஆனால் பதவி ஆசை வந்தால் எல்லாமும் போய்விடும். சிவஞானம் தான் ஒரு அவைத் தலைவர் என்பதையும் மறந்து முதலமைச்சருக்கு எதிராக ஆளுனரிடம் சென்ற கதையின் பின்னணி இதுதான். இன்று சம்பந்தனது கைக்குள் சிங்கக் கொடியை திணித்தது போன்று தன்னுடைய கைக்குள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திணித்துவிட்டனர் என்கிறார். தன்னுடைய கைக்குள் எவர் எதைத் திணிக்கிறார் என்பதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு தலைவர்களாக இருக்க முடியும்?

cvk

திரும்பிப் பார்த்தால் விக்கினேஸ்வரன் எந்த விஞ்ஞாபனத்தை முன்வைத்து வடக்கு மக்களிடம் ஆணையை பெற்றாரோ அதில் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார். அந்த நேர்மையே அவரை தலைமை தாங்க வருமாறு சிலர் கூறுவதற்கு காரணம். தலைமையை நோக்கி சிலர் வருகின்றனர் ஆனால் குறிப்பிட்ட சூழலில் ஒருவர் நடந்து கொள்ளும் முறையால் அவ்வாறானவர்களை நோக்கி தலைமை வருகிறது. இதில் விக்கினேஸ்வரன் இரண்டாவது வகை. அதை அவர் ஏற்பாரா இல்லையா என்பதற்கு காலமே பதில் சொல்லும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *