Search
Thursday 4 June 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் ‘வீடு’!

விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் ‘வீடு’!

யதீந்திரா
தமிழரசு கட்சி பெருமெடுப்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. ஒரு வகையான அமைதியாக காண்பித்துவருகிறது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையில் இதுவரை பெரியளவில் எந்தவொரு பிரச்சாரங்களும் இடம்பெறவில்லை. அன்மையில் திருகோணமலையிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு சம்பந்தன் சென்றிருந்தார் எனினும் அங்கு சம்பந்தனுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் கேள்விகளுடன் வருகின்றனர். இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. தமிழரசு கட்சியின் அமைதி தொடர்பில் இரண்டு வகையான பார்வைகள் உண்டு. மக்கள் என்னதான் பேசினாலும் இறுதியில் பழக்கப்பட்டுப்போன வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிப்பர். எனவே எதிர்ப் பிரச்சாரங்கள் தொடர்பில் அதிகம் அக்கறைப்பட வேண்டியதில்லை என்பது ஒரு பார்வை. இரண்டாவது பார்வை, மக்களிடம் சொல்வதற்கேற்ப கவர்ச்சிகரமான விடயங்கள் எதுவும் தமிழரசு கட்சியிடம் இல்லை. சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது, அரசியல் யாப்பு முயற்சிகள் தோல்விடைந்துவிடும் போன்ற சுலோகங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் எடுபடவில்லை. இதன் காரணமாகவே தமிழரசு கட்சி கூட்டங்களை அதிகம் தவிர்க்கிறது. அதே வேளை தங்களை மாற்று தரப்பாக முன்னிறுத்தியிருக்கும் அணியினரது பிரச்சாரங்களும் மக்கள் மத்தியில் பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாக கருதமுடியாது. மாற்று அணியினர் தங்களின் பிரச்சாரங்களை கவர்ச்சிகரமான முறையில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழரசு கட்சி பிரச்சாரங்களை பெருமெடுப்பில் முன்னெடுக்காவிட்டாலும் கூட, தேர்தலில் தங்களுக்கு சவாலாக இருக்கக் கூடும் என்று கருதப்படுபவர்களை இலக்கு வைத்து செயற்படுவதை நிறுத்தவில்லை. அதனை பல்வேறு வழிகளிலும் தொடர்கிறது. அதில் முக்கியமானவர் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆவார். விக்கினேஸ்வரன் அவர்கள் தனது நிலைப்பாடுகள் எதனையும் வெளிப்படையாக அறிவிக்காது விட்டாலும் கூட, அவர் நிச்சயமாக தமிழரசு கட்சியை ஆதரிக்கப் போவதில்லை என்பது உறுதி. இதன் காரணமாகவே அவ்வப்போது விக்கினேஸ்வரனை சீண்டும் வகையில், தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் கருத்துக்களை வெளியிடுவதுண்டு. இதன் நீட்சியாகவே விக்கினேஸ்வரன் அவர்களை கண்டிக்கும் வகையில் துரை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதில் விக்கினேஸ்வரன் தானும் குழம்பாமல் மக்களையும் குழப்பாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அரசியல் தீர்வு தொடர்பில் விக்கினேஸ்வரன் அவர்களது இறுக்கமான நிலைப்பாடே தமிழரசு கட்சியினரின் சீற்றத்திற்கு காரணம். துரைராஜசிங்கத்தின் அறிக்கையை பார்த்தால் அதனை அவர் தனித்து எழுதியிருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக சுமந்தரனின் ஆலோசனை இருந்திருக்க வேண்டும். துரைராஜசிங்கத்தின் வரலாறு தனியானது. துரைராஜசிங்கம் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்த ஒருவர். இதனை மட்டக்களப்பிலுள்ள பலரும் அறிவர். விடுதலைப் புலிகளுக்கு பயந்து இவர் ஒழிந்திருந்த காலமும் உண்டு. இந்தக் காலத்தில் நீலன் திருச்செல்வம் இவருக்கு உதவியதாகவும் ஒரு தகவலுண்டு. 2009இற்கு பின்னர்தான் இவர் அரசியலில் உயிர்பெற்றார். சம்பந்தனின் தீவிர விசுவாசி என்பதே இவரது ஒரேயொரு அரசியல் தகுதி. இவரது விசுவாசம் எப்படிப்பட்டது என்றால், இவர் அருகில் இருக்கின்ற போது, ஒரு நுளம்பு கூட ஜயா சம்பந்தனை தீண்டிவிட இவர் அனுமதிக்க மாட்டார். இதனை காணும் பாக்கியம் சமீபத்தில் இந்தப் பத்தியாளருக்கு வாய்த்தது.

ITAK

சில மாதங்களுக்கு முன்னர் இது நடந்தது. ஒரு நிகழ்விற்காக அழைக்கும் நோக்கில் ஜயாவின் திருகோணமலை வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது பேச்சுவாக்கில் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கேட்டுவிட்டேன். உடனே ஜயாவும் தமிழரசு கட்சியிலுள்ள சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்லுவது போன்று எனக்கும் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ஜயா பேசிக் கொண்டிருக்கும் போது, துரைராஜசிங்கம் வந்துவிட்டார். ஜயா கண்களை மூடிக் கொண்டு அரசியல் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் துரைராஜசிங்கமோ ஜயாவின் பேச்சை விட்டுவிட்டு ஜயாவின் கையை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நானும் ஜயாவின் கையை பார்த்தேன். ஜயாவின் கையில் ஒரு நுளம்பு வந்து அமர்வதும் பறப்பதுமாக இருந்தது. அப்போதுதான் எனக்கு விடயம் விளங்கியது. நுளம்படிப்பதற்காகத்தான் துரை, ஜயாவின் கையை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இப்படியொரு விசுவாசத்தை நீங்கள் திரைப்படங்களில் கூட காண முடியாது. எனவே துரையில் ஒருவர் எவ்வாறு பிழை காண முடியும்.

இப்படிப்பட்ட துரைராஜசிங்கம் தன்னைப் போன்று நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களும் ஜயாவிற்கு நுளம்படித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார் போலும். ஆனால் விக்கினேஸ்வரன் அவர்களோ தனது விசுவாசத்தை தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மட்டுமே காண்பிப்பேன் என்கிறார். விக்கினேஸ்வரனின் இந்த உறுதியை தளர்த்த வேண்டும் என்பதற்காகவே அவரை இரவோடு இரவாக முதலமைச்சர் கதிரையிலிருந்து அகற்ர முற்பட்டனர். அது முடியவில்லை. அதற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவர் மாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட். அவரையே தற்போது யாழ்ப்பாண மேஜயர் வேட்பாளராக நிறுத்தியிருக்கின்றனர். என்ன செய்தும் விக்கினேஸ்வரனை தங்களின் வழிக்கு கொண்டு வர முடியவில்லையே என்னும் கோபம் தமிழரசு கட்சியின் தலைவர்கள் மத்தியில் தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்தப் பணியை வேறு ஒரு கோணத்தில் செய்ய முயற்சிக்கின்றார் உதயன் பத்திரிகையின் அதிபர் சரவணபவன். உள்ளுராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு வீடு என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை வெளியிட்டிருக்கின்றார். அன்மையில் விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்த ஒரு கருத்திற்கு புதிய அரசியல் விளக்கம் சொல்ல முற்பட்டிருக்கின்றது ‘வீடு’. விக்கினேஸ்வரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளை புறக்கணித்திருக்கலாம் சாவையும் தழுவியிருக்கலாம் ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் என்றுமே அவருக்கு இருந்ததில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ‘வீடு’ இதற்கு புதிய விளக்கமளித்திருக்கிறது அதாவது, விக்கினேஸ்வரன் அவர்கள் குறிப்பிடும் அந்த முதிர்ந்தவர் ஆனந்த சங்கரி அவர்களாம். இதன் மூலம் விக்கினேஸ்வரன் அவர்களும் ஆனந்த சங்கரி அவர்களும் கொள்கை அடிப்படையில் ஒரு அணியில் நிற்கின்றனர் என்னும் கருத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார் சரவணபவன், அதாவது தமிழரசு கட்சி.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், தேர்தலுக்காக உன்னதமான தலைவர் பிரபாகரனை பயன்படுத்த வேண்டாமென்று ஆலோசனை வேறு கூறப்பட்டிருக்கிறது. அன்மைக்காலங்களில் வீட்டுக்குள் உள்ளவர்களால் விடுதலைப் புலிகள் அமைப்பு மிக மோசமாக கொச்சைப்படுத்தப்பட்டது. சம்பந்தன் ஜயா விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு கொடூரமான அமைப்பு என்று வர்ணித்தார். அவர் அப்படிக் கூறியதாக சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அடித்துக் கூறுகின்றார். இலங்கைக்கு விஜயம் செய்த ஜ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு கொலைகார அமைப்பு என்றார். இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஜோன்ஹெரியோ இன்னும் ஒரு படி மேல் சென்று, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு கொலைகார பயங்கரவாத அமைப்பு என்றார். சுமந்திரன் போராடி என்னத்தை கண்டீர்கள் என்றார். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இதன் போதெல்லாம் வாய்திறக்கவில்லை.

TNA-CVW-NPC

உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது சரவணபவனுக்கு பற்றிருந்திருந்தால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டுமல்லவா! ஏன் பதிவு செய்யவில்லை. தேர்தலில் எங்கு ஆதிக்கம் பறிபோய்விடுமோ, எங்கு மற்றைய கட்சியினர் வென்றுவிடுவார்களோ என்னும் பயம் வருகின்றபோது மட்டும் பரபாகரன் மீது திடீர் பற்று வந்துவிடுகிறது.

விக்கினேஸ்வரன் அவர்களின் செல்வாக்கு தொடர்பில் தமிழரசு கட்சி இப்போதும் அச்சம் கொண்டிருக்கிறது – எங்கு அவர் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் எல்லாமே தலைகீழாகி விடுமே என்னும் அச்சம் இப்போதும் தமிழரசு கட்சியினர் மத்தியில் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே தொடர்ந்தும் விக்கினேஸ்வரன் அவர்களை தவறான ஒருவராக காண்பிக்க வேண்டுமென்பதில் தமிழரசு கட்சி தீவிரமாக செயற்பட்டுவருகிறது. ஆனால் தமிழரசு கட்சியினர் விக்கினேஸ்வரன் அவர்களை தவறாக காண்பிக்க முற்படும் போதெல்லாம் அவரது நன்மதிப்பு மேலும் உயர்கிறது என்பதே உண்மை. ஆனால் வீட்டுக்குள் விக்கினேஸ்வரனை வைத்திருக்கக் கூடாது என்பதில், வீட்டில் இருப்பவர்கள் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றனர் என்பதும் உண்மை.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *