Search
Monday 18 June 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விசேட பொருளாதார அபிவிருத்தி சட்ட மூல விவகாரம்: புதிய அரசியல் அமைப்பு மூலம் வழங்கும் மாகாண அதிகாரத்தை முடக்க முயற்சியா…?

விசேட பொருளாதார அபிவிருத்தி சட்ட மூல விவகாரம்: புதிய அரசியல் அமைப்பு மூலம் வழங்கும் மாகாண அதிகாரத்தை முடக்க முயற்சியா…?

-சிவ.கிருஸ்ணா..-

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் இடம்பெற்ற அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களில் பெரும்பான்மையினரும், பெரும்பான்மை சமூகத்தின் சிறுபான்மையினரும் இணைந்து இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர். மஹிந்தா சிந்தனை மறைந்து நல்லாட்சி என்னும் நாமத்தோடு ஏற்பட்ட இந்த ஆட்சி மாற்றம் ஜனவரி 8 ஆம் திகதியுடன் இரண்டாவது ஆண்டை பூர்த்தி செய்கிறது. இந்த நாட்டில் 65 வருடத்திற்கு மேலாக புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு என்ற கோசத்துடன் இந்த ஜனாதிபதி ஆட்சிப் பீடம் ஏறியிருந்ததுடன் அதன் பின் உருவாகிய தேசிய அரசாங்கமும் அதனை வலியுறுத்தியிருந்தது. ஐ.நா சபையில் இலங்கை நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கடும் பிரயத்தனங்களை செய்து வருகிறது. அதாவது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக காட்டி பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிக்க முயல்கிறது. தற்போதைய அரசியல் களநிலவரத்தின் படி ஐ.நாவில் இலங்கைக்கு இருந்த அழுத்தம் என்பது ஆட்சி மாற்றத்தின் பின் குறைவடைந்து அரசுக்கு சாதக நிலமையை கொடுத்துள்ளதாகவே உணரமுடிகிறது.

இலங்கைக்கு சர்வதேச ரீதியில் இருந்த நெருக்கடியை கட்டுப்படுத்திய இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக நிரந்தர தீர்வு ஒன்றினை வழங்கியுள்ளதாக காட்ட முயல்கிறது. தீர்வு என்பது 65 வருடத்திற்கு மேலாக சமநீதி, சமவுரிமை கேட்டு போராடி சொல்லொண்ணாத் துயரங்களையும், இழப்புக்களையும் தாங்கி நிற்கும் பாதிக்கப்பட்ட சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகம் இந்த நாட்டின் ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தைக் கொண்டது. சிங்கள மக்களுடன் சமத்துவமாக கைக்கோர்த்து வாழக் கூடிய ஒரு தீர்வையே அந்த சமூகம் வலியுறுத்துகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் தேசிய இனத்தின் மரபு வழித் தாயகம் என்ற அடிப்படையில் அவை இரண்டும் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டு கூடுதல் அதிகாரங்களையுடைய ஒரு சமஸ்டிக் கட்டமைப்பையே தமிழ் தேசிய இனம் கோருகிறது.

ஆனால் தென்னிலங்கை அரசாங்கமும் சரி, பௌத்த பேரினவாத கடும்போக்குவாதிகளும் சரி அதனைக் கொடுப்பதற்கு தயாராக இல்லை என்பதை நடந்து வரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. இனவாத பௌத்த மேலாதிக்க சிந்தனையுடன் செயற்பட்டு தமிழ் தேசிய இனத்ரைத அடக்கி ஆள முற்பட்டதன் விளைவு தான் இந்த நாட்டில் ஆயுத மோதல் எற்படுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அந்த ஆயுத மோதல் கலாசாரம் முடிவுக்கு வந்த நிலையில் நல்லிணக்கம் குறித்தும் பிரச்சனைகளுக்குரிய காரண காரியங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து அது மீள நிகழாவண்ணம் செயற்படுவது அரசாங்கத்தின் ஒரு கடமை. ஆனால் பௌத்த கடும்போக்கு கொள்கையுடன் செயற்படும் பௌத்த பிக்குகள் சிலர் பௌத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும், ஒற்றையாட்சி முறையின் கீழ் புதிய அரசியலமைப்பு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்த தொடங்கிவிட்டார்கள். பஞ்சீலக் கொள்கையுடன் இந்த நாட்டிற்கு வந்த மஹிந்த தேரர் பௌத்த சமயபோதனைகளை வழங்க அசோகனது செயற்பாடே காரணம்.

வடஇந்தியாவின் சக்கரவர்த்தியாக விளங்கிய அசோகனால் மேற்கொள்ளப்பட்ட கலிங்கப் போரில் ஏற்பட்ட அழிவுகள், இறந்த மக்களின் உடலங்கள், அவர்களது துயரங்கள் என்பவற்றில் வேதனையடைந்து அதற்கு பாவமன்னிப்பு தேடவே பௌத்த சமயத்தை தழுவினான். அத்தகைய சிந்தனைகளையும், கருத்துக்களையும் அகிம்சையையும் போதிக்கும் பௌத்த சமயத்தை பல நாடுகளுக்கும் பரப்ப நடவடிக்கை எடுத்ததன் விளைவே இந்த நாட்டிற்கு பௌத்த சமயம் வந்தமை. அவ்வாறான ஒரு வரலாற்றுப் பின்னனியையும் தர்மத்தையும் போதிக்கும் பௌத்த சமயத்தை பிரதிபலித்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாத நோக்கோடு, இன்னுமோர் இனத்தை அடக்கி வாழ வேண்டும் என கோருவது என்பது அந்த சமயம் கூறும் போதனையை அவமதிக்கும் செயல் என்ற கருதவேண்டியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் கூட அத்தகைய இனவாத நோக்கோடு செயற்படும் பௌத்த பிக்குளை பாதுகாத்து அவர்களது செயற்பாட்டிற்கு துணைபோவதாகவே தெரிகிறது. இலங்கையின் நீதித்துறை மற்றும் பௌத்த சாசன அமைச்சர் அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குகளை சந்தித்து மட்டக்களப்பில் கடியிருக்கும் சிங்கள மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு மக்கள் பிரதிநிகள் இல்லை. அதனாலேயே அம்பிட்டிய சுமணதேரர் அவர்களுக்காக குரல் எழுப்புகிறார் எனத் தெரிவித்துள்ளார். நீதித்துறையையும் பிரதிபலிக்கும் ஒரு கபினற் அமைச்சரின் இத்தகைய கருத்து என்பது தென்னிலங்கையின் மனநிலையில் நல்லெண்ண வெளிப்பாடுகள் ஏற்டபடவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இந்த நிலையில் இந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் தீர்வு குறித்து தமிழ் தேசிய இனம் நம்பிக்கை கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

மறுபுறம், புதிய அரசியலமைப்பின் மூலம் இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஊடாக கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைக்கு கொஞ்சம் அதிகாரங்களை வழங்கவுள்ளதாக அறிய முடிகிறது. முக்கியமாக மாகாண சபைகளுக்கு ஓரளவுக்கான பொலிஸ் அதிகாரம் கொடுப்பது பற்றி யோசிக்கிறார்கள். அதேபோல் அரைகுறையான காணி அதிகாரம், ஆளுனருக்கு இருக்கும் அதிகாரங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்வது என்பன தொடர்பாக யோசிக்கிறார்கள். இவ்வாறான விடயங்களை தான் ஐக்கிய தேசியக் கட்சியிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலும் இருக்கக் கூடிய அமைச்சர்கள் கூறுகிறார்கள். இவற்றுக்கு மேல் போகமுடியாது. இவற்றுக்குள் தமிழ் மக்கள் நின்று கொள்ள வேண்டும். சமஸ்டி என்று தேவையில்லாத பேச்சுக்களை பேசக் கூடாது என்ற தோரணையில் தான் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களின் கருத்துக்கள் இருக்கிறது. இதனை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களும் வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறு மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் சிலதை வழங்கிவிட்டு அதனை மறுகையால் பறிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவை ஆராய்ந்துகொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான சட்டமூலம் ஒன்றை அவசரமாக கொண்டுவரவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டிருக்கின்றது என்ற கேள்வியும் எழுகின்றது. மாகாண சபைகள் ஒவ்வொன்றாக இதனை நிராகரித்துவருவது அரசாங்கத்தின் இந்தத் திட்டத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறித்தெடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்தும் செயற்படுகின்றதா என்ற கேள்வியை இது எழுப்பியிருக்கின்றது.

இத்தகைய ஒரு அமைச்சை அவசர அவசரமாக கொண்டு வருவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிப்பது புதிய அரசியலமைப்பு மூலம் மாகாணங்களுக்கு வழங்கும் அதிகாரத்தை மீள பறிப்பதற்கான ஒரு செயற்பாடு என்றே சிந்திக்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் இந்த சட்ட மூலத்தை ஊவா மாகாண சபை, வடமத்திய மாகாண சபை, வடமாகாண சபை என்பன முதல் கட்டமாக நிராகரித்திருக்கின்றன. ஏனைய மாகாண சபைகளும் நிராக்கரிக்கப் கூடிய நிலமையே ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் உள்ள 9 மாகாண சபைகளிலும் வடக்கும், கிழக்கும் தான்அதிகம் பாதிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்காகவே இந்த மாகாண சபை முறைமையும் 1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டிருந்தது. இந்த இரண்டு மாகாண சபைகளுடன் ஒப்பிடுகின்ற போது ஏனைய மாகாண சபைகள் சுதந்திரமாகவே இயங்குகின்றன. ஆனால் அத்தகைய மாகாண சபைகளே அரசாங்கத்தின் இந்த புதிய அமைச்சு கொண்டு வருவதற்கான சட்டத்தை எதிர்க்க வேண்டியிருக்கின்றது என்றால் வடக்கு, கிழக்கு பற்றி சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

ஆக, இந்த அரசாங்கம் தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் புறந்தள்ளி ஒரு ஒற்றையாட்சி முறை தீர்வு திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தி தமிழ் மக்களிடம் திணிக்க முயல்கிறது. அத்தகைய தீர்வில் வழங்கப்படும் சிறிய சுதந்திரத்தை மீள பறிப்பது குறித்தும் சிந்திக்கின்றது. அதற்காகவே இந்த விசேட அமைச்சின் உருவாக்கம் பற்றிய சட்டமூலம். இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் வாழும் இனங்களுக்கு இடையில் நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்தி ஒரு ஐக்கியப்பட்ட நல்லாட்சியை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதுடன் இந்த நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள், வன்முறைகள் ஏற்படாது என்பதை எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *