தலைப்பு செய்திகள்

விழிப்படையுமா பேரவை…?

விழிப்படையுமா பேரவை…?

-நரேன்-

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமானது தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஆயுத ரீதியாக அடக்குவதையும், தமிழ் மக்களின் உரிமைக்காக தற்காப்பு ரீதியில் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பேரிலும் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற பேரிலும் அடக்குமுறையானது மூர்க்கத்தனமாக கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டு அத்தகைய ஆயுத ரீதியான ஒடுக்குமுறை முடிவுக்கு வந்த போதிலும் படைத்தரப்பினரது அச்சுறுத்தலில் இருந்தும், அரசாங்கத்தின் அரசியல் ரீதியான அச்சுறுத்தலில் இருந்தும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் விடுபடமுடியாத சூழலே நிலவியது. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே எண்ணை ஊற்றி வள்ர்க்கப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகளின் விளைவாகவும், அந்த பேரினவாதிகளின் தமிழர் விரோத செயற்பாடுகள் காரணமாகவும் தமிழ் மக்கள் என்றுமே சிங்கள மேலாதிக்க ஆளும் வர்க்கத்தினரை ஏற்றுக் கொண்டதில்லை. இதனை இந்த நாடு சுதந்திரம் அடைந்தத பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களையும் தமிழ் மக்கள் தமது இறைமையை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய கட்சிகளுக்கே வழங்கியிருந்ததில் இருந்து அவதானிக்க முடிகிறது. ஆகவே, தமிழ் மக்கள் அன்றில் இருந்து இன்றுவரை பகிரப்பட்ட இறைமையின் அடிப்படையில் நாட்டின் ஐக்கியம் கட்டியெழுப்ப படவேண்டும் என்றே தேர்தல்களின் மூலம் தெளிவாக கூறி வந்துள்ளனர்.

சர்வதேச அரசியல் சூழலுக்கு அமைவாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை பங்கு போட்டுக் கொள்வதற்கான சர்வதேசத்தின் விருப்பதற்கு அமைய அதற்கு இடைஞ்சலாகவும், தமிழ் மக்கள் மீது மிகக் கொடுமையான அடக்குமுறையையும் மேற்கொண்டிருந்த அரசாங்கம் தமிழ் தரப்பின் உறுதுணையுடன் அகற்றப்பட்டது. இதற்கு இந்த நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் இணையவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. ஆட்சி மாற்றத்தினுடைய பலாபலபலன்களின் ஒரு பகுதியாக ஒடுக்கப்பட்ட இனம் தனது அபிலாசைகளையும், தேவைகளையும் எடுத்துச் செல்வதற்கு ஒரு சிறிய ஜனநாயகவெளி ஏற்பட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு தமிழ் தரப்பு வழங்கிய ஆதரவுக்கான வெற்றி இது ஒன்றுமட்டுமே.

இரண்டு பிரதான கட்சிகள் ஆட்சியில் இணைந்துள்ள போதும் ஒரு கட்சியின் சில பகுதியினர் பொது எதிரணி என்ற பெயரில் இனவாதத்தை கொண்டிருப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமது கட்சியை சேர்ந்தவர்களா, இல்லையா என்பதை கூறுவதற்கு கூட சிறிலங்கா சுதந்திரக் கட்சி திணறுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவுடன் உருவாகிய பொதுபலசேனா, போன்ற இனவாத அமைப்புக்கள் இன்னமும் தாம் எந்த கட்சி என்பதைக் கூட வெளிப்படுத்த முடியாத முன்னைநாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருடன் இருக்கின்றனர். இந்தவிடத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுபலசேனாவுக்கும் இடையிலான தொடர்பு எத்தகையது என்ற சந்தேகமும் எழுகிறது.

தமிழ் மக்களின் அபிலாசைகளையும், தேவைகளையும் உடனடிப் பிரச்சனைகளையும் சர்வதேச சமூகத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துவதுடன் தமிழ் தலைமைகளும் அவர்களுக்கு உரிய அழுத்தம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் எழுக தமிழ் என்னும் தொனிப்பொருளில் ஒரு பேரணி நடாத்தப்பட்டது. இதற்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவை புதிய அரசியல் யாப்பு தொடர்பாக தனது முன்மொழிவுகளை வெளியிட்டு அது தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. ஆக, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் ஒரு சிவில் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை திகழ்கிறது என்பது அதன் அரசியல் பங்களிப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த முன்மொழிவை வெளியிட்டு அதற்கான மக்கள் கருத்துக்களையம் கேட்டறிந்த பின்னரே தமிழ் மக்கள் பேரவை பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி ஒரு பேரணியை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இணைந்த வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்க வேண்டும் என்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை அடியொற்றி நடத்தப்பட்ட பேரணியை அந்தக் கூற்றுக்கு அமைய கிழக்கு மாகாணத்திலும் நடாத்துவதற்கு பேரவை முடிவு செய்துள்ளது.

இந்த நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கும், அனைத்து இனங்களும் தத்தமது உரிமைகளுடன் ஜனநாயகமாக வாழ்வதற்கும் வினைத்திறன் மிக்க பங்களிப்பை செய்ய வேண்டிய ஒரு மத அமைப்பு மதம் கொண்ட யானைப் போல் மற்றொரு தேசிய இனத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிடுவதும் தான் சார்ந்திருக்கும் மதத்தையும் மொழியையும் சேர்ந்தவர்களை மற்றொரு மொழி பேசும் மக்களுக்கு எதிராக திருப்புவதும் மிகவும் வருத்தமளிக்க கூடியதும், அதேநேரம் கண்டனத்திற்குரியதுமாகும். துரதிஸ்டவசமாக இத்தகையவர்களின் செயற்பாடுகள் குறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் எடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரிய விடயமே.

வடக்கில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரணியை எதிர்த்து வவுனியாவிலும், கொழும்பிலும் பொதுபலசேனா உள்ளிட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகள் ஆர்ப்பாட்டத்தையும் செய்திருந்தனர். இதில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராகவும் தமிழ் மக்கள் மத்தியில் தற்போது நம்பிக்கைக்குரிய ஒரு தலைவராகவும் வலம் வரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இலக்கு வைக்கப்பட்டார். முன்னாள் நீதியரசரான அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும்; கூட அந்த இனவாத சக்திகளினால் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ் மக்கள் பேரவை தங்களது அமைப்பு தொடர்பாகவும், அதன் நோக்கம் தொடர்பாகவும், தமது பேரணி தொடர்பாகவும் தெளிவுபடுத்துவதற்காக கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தியிருந்தனர். இதில் ஏராளமான சிங்கள மொழி மற்றும் ஆங்கில மொழி ஊடக நண்பர்களும் கலந்து கொண்டிருந்தனர். பேரணி குறித்து தவறான செய்திகளை பரப்பியவர்கள் இந்த ஊடக சந்திப்பின் பின்னர் தாம் பெற்றுக் கொண்ட தெளிவுகளையும் கருத்துக்களையும் முழுமையாக வெளியிட்டார்களாக என்பதும் சந்தேகமே.

தமிழ் மக்கள் பேரவையின் உடைய அடுத்த பேரணி கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி இடம்பெறப் போகிறது என்பதை அறிந்து கொண்ட பெரும்பான்மை மேலாதிக்க சக்திகள் அதனை எதிர்ப்பதற்கும், குழப்புவதற்கும் இப்பொழுதே தயாரகிவிட்டன. அதன் ஒரு வெளிப்பாடகவே மங்களராமய விகாராதிபதி தலைமையிலான குழுவினரின் அண்மைய செயற்பாடுகளும், அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பொதுபலசேனாவின் செயற்பாடுகுளும் அமைந்திருக்கின்றன. அவர்களின் அணுகுமுறையில் இருந்த ஐயம் காரணமாக பொலிசார் நீதிமன்றத்தை நாடி அவர்களது செயற்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் தடைஉத்தரவை பெற்றிருந்தனர். மறுபுறத்தில் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி மட்டக்களப்பு இந்து குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் ஒன்றினை ஒழுங்கு செய்திருப்பதாக அனுமானித்து பொலிசார் நீதிமன்றை நாடி அதற்கு தடைவிதிக்குமாறு கோரிய போது நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு காரணமாக நீதிபதி ‘பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படாமல் அமைதியான முறையில் ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடாத்தவும் அனைவருக்கும் உரிமையுள்ளது’ என்று கூறியிருக்கிறார்.

இந்த இரண்டு தீர்ப்புக்களையும் பேரவையினர் கணக்கில் எடுத்துக் கொண்டு தமது பேரணியை வெற்றிகரமாக நடத்த முன்வரவேண்டும். மதத்தை பிரதானப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அல்லது மேற்கொள்ளப்படவிருந்த பேரணிகளுக்கு நீதிமன்றம் தனது தீர்ப்பை உரிய முறையில் வழங்கியிருக்கிறது. ஒரு தேசிய இனத்தின் உரிமைக் குரலை வெளிப்படுத்துவதற்கான சிவில் அமைப்புக்களின் ஒன்றியமாக திகழும் தமிழ் மக்கள் பேரவையானது இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகவும், தனது நோக்கத்தில் தெளிவாகவும், செயல் திறனில் வேகமாகவும் நடந்து கொள்ள வேண்டிய தருமணமிது. பேரவையில் ஏராளமான சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். சட்டம் தெரிந்தவர்கள் அதற்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள். ஆகவே, உரிய காலத்தில் சட்ட ரீதியான அனுமதிகளைப் பெற்று தமிழ் மக்களின் உரிமைக்குரலாய் அந்தப் பேரணி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டும். அதுவே தமிழ் மக்கள் பெருந்தொகையாக அணிதிரண்டு தமது அபிலாசைகளை முன்வைக்க கூடிய சூழலை உருவாக்கும் என்பதே தற்போதைய களஜதார்த்தம்

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *