செய்திகள்

இலங்கையிடம் லாபம் பெறும் மற்றுமொரு பூகோள அரசியல் உத்தி- மாறாக தமிழர்களுக்கான பரிகாரமல்ல

-அ.நிக்ஸன்-

தடை நீடிக்கப்படுவதற்கான காரணங்கள் என்பது ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான கொதி நிலையைத் தணியவிடாமல், மீண்டுமொரு பூகோள அரசியல் நலனைச் சம்பாதிக்கும் நோக்கமேயன்றி வேறெதுவுமிருக்க வாய்ப்பில்லை.  

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கத்தைச் செலுத்த இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தும் உத்திகளை நுட்பமாகக் கையாண்டு வருகின்றதென அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது.

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடும் விசேட ஆணையமே இந்தத் தீர்ப்பை இன்று புதன்கிழமை வழங்கியுள்ளது. இந்த விசாரணை நீண்டகாலமாக இடம்பெற்று வந்தாலும், இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பூகோள அரசியல் நுட்பம் இருப்பதாகவே நோக்க முடிகின்றது.

அமெரிக்காவில் 1997ஆம் ஆண்டும், பிரித்தானியாவில் 2001ஆம் ஆண்டும் புலிகள் மீது தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியமும் அதே ஆண்டில்தான் புலிகள் மீது தடை விதித்திருந்தது. நோர்வேயின் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்திலேதான் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனாலும் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அநீதியானதென அந்த நாடுகளின் உயர்மட்ட இராஜதந்தரிகள் அவ்வப்போது கவலை வெளியிட்டிருந்தனர். இந்திய இலங்கை அரசுகளின் அழுத்தங்கள் காரணமாகவும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலும் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விதிக்கப்பட வேறெந்தவொரு காரணமும் இருந்திருக்கவில்லை என்பது இந்த நாடுகளினது தலைவர்களின் மனட்சாட்சிக்கும் நன்கு தெரியும்.

புலிகளின் போராட்டம் இன விடுதலைப் போராட்டமே தவிர சர்வதேசப் பயங்கரவாதமல்ல என்பதும் சர்வதேச இராஜதந்திரிகளின் மனட்சாட்சிக்குத் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் அந்தநேரச் சூழல் அதாவது பூகோள அரசியல் தாக்கம் விரும்பியோ விரும்பாமாலோ புலிகள் மீது தடை விதிக்க வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்ததெனலாம். சரி இவ்வாறானதொரு நிலையில் அதுவும் 2009ஆம் ஆண்டு மே மாதம் ஈழ ஆயுதப் போராட்டம் இல்லாதொழிக்கச் செய்யப்பட்டவொரு சூழலில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா ஏன் நீக்கியது என்ற கேள்விகள் எழாமலில்லை.

LTTE UK

ஐக்கிய நாடுகள் சபையையும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தையும் கிளநொச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு 2009ஆம் ஆண்டு ஈழப் போரின் இறுதிக் கட்டத்தைச் சாட்சியங்கள் இன்றி நடத்த இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு அனுமதியளித்த இந்த சர்வதேச நாடுகள், திடீரென இல்லாமல் போன புலிகள் மீது பாசம் பொழிவதன் சூட்சுமம் என்ன? விதிக்கப்பட்ட தடை தவறு என்று கண்டுபிடிக்க 19ஆண்டுகள் தேவைப்பட்டதோ? புலிகள் மீது தடை விதிக்க வேண்டாமென புலம்பெயர் தமிழர்களாலும் பொது அமைப்புகளினாலும் அப்போது அனுப்பிவைக்கப்பட்டிருந்த மனுக்களில் ஒன்றையேனும் இந்த நாடுகள் பரிசீலித்ததா? இல்லை.

இந்தவொரு நிலையில் தேசிய விடுதலை வேண்டி நின்ற சமூகம் ஒன்றின் ஆயுதப் போராட்டத்தை, இந்திய- இலங்கை அரசுகளின் கதைகளைக் கேட்டுத் தடைவித்து, அழித்துவிட்டுத் தற்போது அந்தத் தடை நியாயமற்றது, தவறானது என்று கூறித் தீர்ப்பு வழங்கினால், ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு என்ன பரிகாரம்? நிரந்தர அரசியல் தீர்வை இவர்கள் பெற்றுத் தருவார்களா? அல்லது இழப்பீடுகள் கிடைக்குமா? இல்லை.

மாறாக இந்தத் தடை நீக்கம் என்பது ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான கொதி நிலையைத் தணியவிடாமல், மீண்டுமொரு பூகோள அரசியல் நலனைச் சம்பாதிக்கும் நோக்கமேயன்றி வேறெதுவுமிருக்க வாய்ப்பில்லை.

புலிகள் மீதான தடை நீக்கத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகளும் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இரண்டு வகையான நலன்களைச் சம்பாதிக்கப் போகின்றன.

ஓன்று- இந்திய, சீன முறுகல் நிலையினால், இரு நாடுகளுக்கிடை போர் மூண்டாலும், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கையின் ஒத்துழைப்பு அவசியம். அத்துடன் அமெரிக்கா, தாய்வான் ஆகிய நாடுகளிடையே தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைச் சீனா தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடிய ஆபத்தும் இருப்பதால், இந்தோ- பசுப்பிராந்திய பாதுகாப்புத் தொடர்பாக இலங்கையைத் தம் பக்கம் ஈர்க்க வேண்டியதொரு கட்டாயச் சூழல்.

இரண்டாவது- அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) நூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட இலங்கை அரசாங்கம் தயங்குகின்றது. ஆகவே இந்த ஒப்பந்தத்தில் இலங்கையைக் கைச்சாத்திட வைப்பது மற்றுமொரு நோக்கம்.

sri-lanka-china-india-flags

ஆகவே இந்த இரண்டு வகையான உள்நோக்கின் அடிப்படையிலேயே பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டிருப்பதை அவதானிக்க வேண்டும். இது ஒன்றும் ஈழத் தமிழர் மீதான அனுதாபத்திலோ அல்லது இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரமாகவோ இந்தத் தடை நீக்கத்தைக் கருத முடியாது.

குறிப்பிட்டுச் சொல்வதானால், 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமது பூகோள அரசியல், பொருளாதார நலன்களுக்காகப் புலிகளைத் தடை செய்து இலங்கையிடம் இருந்து தமது தேவைகளை நிறைவேற்றியது போன்றதொரு மனட்சாட்சிக்குப் புறம்பானதொரு செயற்பாடுதான் இந்தத் தடை நீக்கம். மாறாக ஈழத் தமிழர்கள் நம்புவதற்கு ஒன்றுமேயில்லை.

ஈழத் தமிழ் மக்கள் கட்சி அரசியல் செயற்பாடுகளைக் கைவிட்டுத் தேசமாக ஒன்று சேரும்வரை எதுவும் நடக்காது. ஆக, மிக நுட்பமாகக் காய் நகர்த்தப்பட்டு ஈழப் பிரச்சினையைப் பயன்படுத்தித் தமக்குரியவாறு லாபம்பெறும் பொருளாதார, அரசியல் போக்குகளையே மேற்குலக நாடுகளிடம் இருந்து நாம் காணமுடியும். இதனைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் மாத்திமல்ல தமிழ் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதுவரை இந்தத் தடை நீக்கம் தொடர்பாக மகிழ்ச்சி கொள்ள எதுவுமேயில்லை.