செய்திகள்

கூட்டமைப்பு இப்போது கிங்-மேக்கரா அல்லது கிங்-ஜோக்கரா?

யதீந்திரா

கடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை கூட்டமைப்பு எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் சில விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தற்போது கூட்டமைப்பினர் தங்களின் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை அறிவித்துவிட்டனர். அதாவது, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக புதிய பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதே கூட்டமைப்பின் நிலைப்படாகும். அதாவது, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிப்பது. மகிந்தவிற்கு எதிராக வாக்களிப்பது என்பது, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவானது என்பதை விளங்கிக் கொள்ள அரசியல் அறிவு எதுவும் தேவையில்லை.

கடந்த பத்தியில் இவ்வாறானதொரு முடிவுக்குத்தான், சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு வந்து சேரும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதுவே தற்போது நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக அரசியலில் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கள் மேலோங்கிக் காணப்படும் போது, இறுதியில் அந்த தனிமனிதர்களின் ஆசைகளே, மக்களின் விருப்பங்களாக காண்பிக்கப்படுவதுண்டு. இன்றைய நிலையில் கூட்டமைப்பின் தீர்மானங்கள் என்பவை, சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இரு தனி மனிதர்களின் விருப்பங்களாவே இருக்கிறது. மற்றவர்கள் அந்த விருப்பங்களின் பின்னால், விரும்பமில்லாமல் ஆனால் விரும்புவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி (புளொட்) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கும் நிலைமை நன்கு தெரியும். ஆனால் தாம் தனித்து சில முவுகளை எடுத்தால், தங்களை விலைபோனவர்கள் என்று சொல்லிவிடுவார்களே, என்பதற்கு அஞ்சி, சம்பந்தனின் சொற்களை தங்களின் சொற்களாக உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிறிது காலம் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் நீடித்தாலும் கூட, அதனால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பது சித்தார்த்தனுக்கும் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தெரியாத ஒன்றல்ல. ஆனாலும் வேறு வழியின்றி சம்பந்தனை பின் தொடர்கின்றனர்.

அண்மையில் சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்திருந்த சித்தார்த்தன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள் பிசாசுக்கும் ஆழமான நீலக்கடலுக்கும் இடையில் ஒன்றை தெரிவுசெய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வாறு கூறியிருக்கும் அவரே இப்படியும் கூறியிருக்கிறார். இந்த அதிகாரப் போட்டியில், நாங்கள் தோல்வியடையப் போகும் தரப்பை தெரிவு செய்வோமாக இருந்தால் எங்கள் நிலைமை நெருக்கடிக்குள்ளாகலாம். நாங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போது ஒரு வேளை மற்றவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது அவர்கள் எங்களை இலக்கு வைக்கலாம். அந்த வகையில் பார்த்தால், எங்களை பொறுத்தவரையில் கிங்மேக்கர் என்னும் வகையில் இது சந்தோசப்படக்கூடிய சூழல் இல்லை.

tna and jvp

கூட்டமைப்பில் சித்தார்த்தன் ஒருவர்தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் விடயங்களை அதிகார மோதல் என்று குறிப்பிட்டிருக்கிறார். சித்தார்த்தன் ஒருவருக்காவது விடயம் விளங்கியிருக்கிறதே என்று மகிழ்சியடையலாம். இரண்டு சிங்கள தரப்புக்கள் அதிகாரத்திற்காக மோதுகின்ற போது, சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து, அதிகாரங்களை கோருகின்ற கூட்டமைப்பு இதில் எவ்வாறு ஒரு தரப்பின் பக்கமாக சாயலாம்? இந்தக் கேள்விக்கு ஜனநாயகத்தின் பக்கமாக நிற்கிறோம் என்றவாறான உழுத்துப் போன வாதங்கள் பொருளற்றவை. உண்மையில் இந்த இடத்தில்தான், நான் மேலே குறிப்பிட்ட தனிநபர் விருப்பங்கள் எவ்வாறு அரசியலில், ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். அண்மையில் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ‘நீ’ என்று ஒருமையில் பேசியிருந்தார். சுமந்திரன் துனிவாக பேசுகின்றாரே – என்று அவரது தொண்டர்கள் சிலர் விசிலடித்து ரசிக்கலாம். ஆனால் இவ்வாறானதொரு ஆவேசப் பேச்சை எப்போதாவது தமிழ் மக்களின் விடயத்தில் சுமந்திரன் காண்பித்ததுண்டா? நீங்கள் எவராவது அதனை பார்த்திருக்கின்றீர்களா? வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் பிரச்சினை தொடர்பில், அரசியல் கைதிகளின் பிரச்சினையில் சுமந்திரன் இவ்வாறு எப்போதாவது ஆவேசப்பட்டதுண்டா? தைப்பொங்கல் தினத்தன்று ரணில் விக்கிரமசிங்க காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ‘நீ’ எப்படி இப்படிச் சொல்லாம் என்று ஏன், சுமந்திரனால் ஆவேசப்பட முடியவில்லை? நல்லிணக்க முயற்சிகளில் வெளிநாடுகளின் தலையீடுகள் தேவையற்றது என்று ரணில் பேசிய போது –’நீ’ எப்படி இப்படிப் பேசலாம் என்று சுமந்திரன் ஏன் ஆவேசப்படவில்லை. ஆனால் என்றுமே வராத ஆவேசம் இன்று சுமந்திரனிடமிருந்து எட்டிப்பார்க்கிறது – ஏன்? ஏனென்றால் ரணிலுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ரணிலை சற்றும் எதிர்பாராத வகையில் சிறிசேன பதவி நீக்கிவிட்டார். அதனைத்தான் சுமந்திரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் பேசுகின்ற போது, பதவி நீக்கப்பட்ட ரணில் சிரித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் சுமந்திரன் பதறித் திரிகிறார் என்றார். தனக்கு தெரியாமல் ஒன்றும் அரசாங்கத்தில் நகராது என்று எண்ணிக் கொண்டிருந்த சுமந்திரனுக்கோ, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டது. அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் சுமந்திரன் தடுமாறிப் போயிருக்கிறார். ஜக்கிய தேசியக் கட்சியின் உயர் குழாமுடன் நெருக்கமாக இருப்பதன் மூலம், அரசியல் தீர்வை எட்டிவிட முடியுமென்னும் அவரது அரசியல் கணக்கு முற்றிலும் பிழைத்துப் போய்விட்டது. வெறும் சட்டக் கண்கொண்டு மட்டும் அரசியலை பார்த்தவர்கள் இறுதியாக எந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்களோ, அந்த இடத்திற்குத்தான் தற்போது சுமந்திரனும் வந்து சேர்ந்திருக்கிறார். சட்டம் வேறு அரசியல் வேறு என்பதை இப்போதாவது சிலர் விளங்கிக் கொள்ள முயற்சித்தால் அது தமிழ் மக்களுக்கு பயனளிக்கும். அரசியலும் சட்டமும் சில இடங்களில் இணைந்து பயணிக்க வேண்டியிருக்கும் ஆனால் எப்போதுமே அரசியலே மேலாதிக்கம் பெறும். அரசியல் நகர்வுகளுக்கு முண்டுகொடுக்கும் ஒன்றாகவே, சட்டம் இருக்க முடியும். இதனை இப்போதாவது சுமந்திரன் விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம்.

கூட்டமைப்பு தங்களது முடிவை வெளிப்படுத்தும் அறிக்கையில் ஒரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘இந்த சந்தர்ப்பத்தில் நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக் கூடிய ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.’ இங்கு கேள்வி – யார் கூட்டமைப்பை நடுநிலை வகிக்குமாறு கூறியது? தமிழ் மக்களின் நலனுக்கும் சிங்கள ஆளும் வர்க்க அதிகார நலனுக்கும் இடையில் எவ்வாறு கூட்டமைப்பு நடுநிலை வகிக்க முடியும்? சிங்கள அதிகார மோதலில் இருந்து விலகிநிற்பது என்பதும், நடுநிலை வகிப்பது என்பதும் ஒன்றல்ல. ஆனால் இப்போது கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு சிங்கள அதிகார மோதலில் நேரடியாக பங்குகொள்ளும் முடிவாகும். இந்த முடிவு நிச்சயமாக தமிழ் மக்களின் நலன்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனெனில், தற்போது தங்களுக்குள் மோதிக்கொள்ளும் இரண்டு அதிகார தரப்புக்களும் கடந்த காலத்தில் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகள் எதனையும் ஏற்றுக்கொண்டதில்லை. பின்னர் எதற்காக கூட்டமைப்பு ஒரு தரப்பை பாதுகாக்க முயற்சிக்கிறது? இந்த அதிகார மோதலில் பங்குகொள்ளும் போது, சிங்கள தரப்பில் எவர் வெற்றிபெற்றாலும் கூட்டமைப்பிற்கான அரசியல் இடைவெளி இல்லாமல் போய்விடும். ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றாலும் கூட, அதன் பின்னர் மகிந்த தரப்பின் குறுக்கீடுகளை காரணம் காட்டியே அனைத்து விடயங்களையும் ரணிலால் பிற்போடலாம். அதுதான் நடக்கவும் செய்யும். பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை இருந்த போதிலும் கூட, மைத்திரி, ரணிலுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்த போதிலும் கூட, மகிந்தவை காரணம் காட்டியே அனைத்து விடயங்களையும் பிற்போட்டு வந்தனர். சந்தர்ப்பங்கள் இருந்த போதே, கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத ரணில், இனியா கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு தலைசாய்ப்பார்?

இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டுதான், கடந்த பத்தியில், சம்பந்தன் இந்த சிங்கள அதிகார மோதலிலிருந்து விலிகி நிற்க வேண்டுமென்று இந்த பத்தியாளர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சம்பந்தன் மீண்டும் தனது தவறான முடிவுகளின் வழியாகவே பயணிக்க விரும்பியிருக்கிறார். கூட்டமைப்பின் தீர்மானம் அதனையே காண்பிக்கிறது. அண்மையில் கலாநிதி.சந்திரசேகரன், தெற்காசிய ஆய்வாளர்கள் குழாம் இணையத்ததளத்தில், இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கள் தொடர்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் ஒரு இடத்தில், சம்பந்தன் தனது பழுத்த வயதில் ஒரு தரப்பிற்கு எதிராக இன்னொரு தரப்பிற்கு ஆதரவாக செயற்படும் தவறை செய்யமாட்டார் என்று நம்புகிறேன் என்று எழுதியிருக்கிறார். சந்திரசேகரன், இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில், றோவின் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர். ஆனால் சந்திரசேகரன் ஒரு வேளை சம்பந்தன் தொடர்பில் சரியான தகவல்களை பெறாமல் இருந்திருக்கலாம் ஏனெனில் சம்பந்தன் கடந்த சில வருடங்களாக தவறுகளை மட்டுமே செய்துவருகிறார். தவறு செய்வதிலும் பின்னர் அதற்கு காரணம் சொல்வதிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே! ஆனால் சம்பந்தன் தனது சொந்த நலன்களுக்காக செய்துவரும் ஒவ்வொரு தவறுகளும் தமிழர்களின் அரசியல் இருப்பை மேலும் பலவீனப்படுத்திவருகிறது என்பதுதான் உண்மை. அந்த வகையில் பார்த்தால், சம்பந்தனின் முடிவானது, சித்தார்த்தன் எண்ணுவது போன்று, கூட்டமைப்பை ஒரு கிங்-மேக்கராக முன்னிறுத்தவில்லை மாறாக கிங்-ஜோக்கராகவே முன்னிறுதிருக்கிறது.