செய்திகள்

கொஸ்கம இராணுவ முகாம் வெடிப்பும் எழுந்துள்ள அதிர்வலைகளும்….

-நரேன்-

30 வருடமாக வடக்கு, கிழக்கில் ஓயாது ஒலித்த குண்டுச் சத்தங்களும் பீரங்கி ஓசைகளும் மௌமனமாகி 7 வருடங்கள் கடந்து விட்டது. இந்த நிலையில் முள்ளியவாய்க்கால் யுத்த வலயத்தை மீண்டும் நினைவுபடுத்திச் சென்றுள்ளது கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்புப் சம்பவம். கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியலில் இவ்விடயம் சூடு பிடித்துள்ளதுடன் தென்னிலங்கை மக்களிடையேயும் இது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சாதாரண குண்டுகளில் இருந்து இரசாயன குண்டு வரை அதன் பாதிப்புக்களையும் தாக்கங்ளையும் நேரடியாக சுமந்த தமிழ் மக்கள் கூட அந்த குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அவலநிலையை உணர முடியாதவர்கள் அல்ல. ஆனாலும், இக் குண்டு வெடிப்பு தமிழ் மக்கள் மத்தியிலும் இராணுவ முகாம்கள் தொடர்பான அச்சத்தை அதிகரிக்கவே செய்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் பிரதான ஆயுத களஞ்சியசாலைகளில் ஒன்றே கொஸ்கம, சாலாவ ஆயுத களஞ்சியசாலை. கொழும்பில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் அவிசாவளை – கொஸ்கம வீதியில் இது அமைந்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவத்திற்கான பிரதான ஆயுத விநியோக மையமாக இது செயற்பட்டிருந்தது. இங்கு பீரங்கிகள், ஆர்பிஜிகள் என வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் பெருந்தொகை ஆயுதங்கள் காணப்பட்டும் இருந்தன.

குண்டு வெடிப்புக்கான காரணம்…? ஏற்பட்ட அழிவு விபரம் என்பன தொடர்பாக அரசாங்கம் இராணுவ நீதிமன்றம், விசேட குற்றபுலனாய்வுப் பிரிவு மற்றும் நீதிமன்றம் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ பரம்பலை அடுத்து இரு ஆயுத களஞ்சியசாலைகளும் அடுத்து அடுத்து வெடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவிசாவளை – கொஸ்கம வீதி சில நாட்களாக மூடப்பட்டதுடன், சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்திற்குட்பட்ட 1600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆயுத களஞ்சியசாலையின் இருந்த ஆயுதங்கள் மக்கள் குடியிருப்புக்களில் கூட விழுந்து வெடித்து அப்பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியும் சென்றுள்ளது. சுமார் ஒன்பதாயிரம் தொன் வெடி பொருட்கள் வெடித்துச் சிதறியதால் அப்பகுதி இன்று மயான பூமி போல் உள்ளது. இவற்றின் மதிப்பு கூட ஆயிரம் கோடியைத் தாண்டும் என கூறப்படுகின்றது. அருகில் இருந்த இராணுவ குடியிருப்பான ரணவிருகம குடியேற்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், வைத்தியசாலைகள், வாகனங்கள் என பெருமளவு அழிவுகள் ஏற்பட்டு யுத்த பாதிப்பை மீண்டும் நினைவு படுத்திச் சென்றுள்ளது. தென்னிலங்கை மக்களுக்கு இதன் அழிவு, தாக்கம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்களுக்கு அது ஒரு சாதாரண வெடிப்பே. காரணம் இதைவிட கொரூரமான அழிவுகளை அவர்கள் சந்தித்தவர்கள். ஆனால் தற்போதாவது, பெரும்பான்மை சிங்கள மக்கள் தமிழ் மக்கள் சந்தித்த அந்த அவலங்களை புரிந்து கொள்ள வேண்டும். தமது மனநிலைகளில் உள்ள இனவாத சிந்தனையை அவர்கள் மாற்ற வேண்டிய சந்தர்ப்பமும் கூட.

cPQPi9tஇவ்வாறான ஒரு சூழலில் தென்னிலங்கை அரசியல் வரிதிகள் ஆயுதகளஞ்சியசாலைகள், இராணுவ முகாம்கள் தொடர்பாக பல கதைகளை கூற ஆரம்பித்து விட்டார்கள். குடியிருப்புக்கள் அற்ற பகுதிகளிலேயே ஆயுத களஞ்சியசாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது தற்போது தென்னிலங்கையில் வலுக்கத் தொடங்கியுள்ள வாதமாகவுள்ளது. இக் களஞ்சியசாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என முன்னரே கூட்டு எதிரணியைச் சேர்ந்த தினேஸ் குணவர்த்தன தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கடும் போக்கு ஜனாதிபதி கூட இதனை வேறு இடத்திற்கு நகர்த்த வேண்டும் என கூறுமளவுக்கு தென்னிலங்கையில் அதிக தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. தற்போது இந்த பாதிப்புக்களை அடுத்து இவ் ஆயுத களஞ்சியசாலையை மக்கள் குடியிருப்புக்கள் அற்ற பகுதிக்கு மாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமாசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். காலம் கடந்த ஞானமாக இருந்தாலும் அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஏனெனில் யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு செம்ரெம்பர் 17 கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இருந்த ஆயுத களஞ்சியசாலை மற்றும் 2011 ஆம் ஆண்டு செம்ரெம்பர் 26 ஆம் திகதி வீரவில ஆயுத களஞ்சியசாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தையடுத்து கூட இந்த தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால் இன்று ஏற்பட்ட அழிவு கூட தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நடக்கவில்லை.

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை. யுத்தம் முடிவடைந்து விட்டது என கூறப்பட்டு 7 வருடம் கடந்த நிலையில் பெருளவு ஆயுதங்களை மக்கள் பகுதிகளில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை. இதனால் மக்கள் செறிவற்ற பகுதிகளுக்கு நகர்துவது பொருத்தமானதும் கூட. ஆனால் தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது. மக்கள் குடியிருப்புக்களில் இருந்து இராணுவ ஆயுத களஞ்சியசாலைகளை அகற்றல் தென்னிலங்கைக்யில் மட்டும் தானா…? அல்லது வடக்கு, கிழக்கிலும் அது நடைமுறைக்கு வருமா என்பதுவே அது. யுத்த பாதிக்களை தென்னிலங்கையை விட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அதிகமாக உணர்ந்தவர்கள். அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் மக்கள் தமது அரசியல் தலைமைகள் மூலம் வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவ முகாம்களையும், இராணுவத்தையும் அகற்ற வேண்டும் என கோரி வந்தனர். இன்று தென்னிலங்கையில் ஜேவிபி, கூட்டு எதிரணி, அரசாங்கம் என அனைவரும் ஒருமித்து அந்த இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வருகிறார்கள். ஆனால் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரியதை தென்னிலங்கை ஏற்கவில்லை. அதனை இனவாதமாக பார்த்தது.

தற்போது கூட மயிலிட்டி துறைமுகத்தை கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மீன்வளத்தில் மூன்றில் ஒரு பகுதியை பூர்த்தி செய்யும் மயிலிட்டிதுறைமுகத்தைக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு அப்பகுதியில் இராணுவ ஆயுதகளஞ்சியசாலை இருப்பதாகவும், அதனை அகற்றினால் தான் அதரனை பயன்படுத்த முடியும் எனவும் வடமாகாண முதலமைச்சர் இராணுவத் தரப்பிடம் தெரிவித்திருக்கிறார். இதுபோல் தான் வடக்கில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உள்ள இராணுவ முகாம்களையும் அகற்றுமாறு அவர் கோரிவருகிறார். ஆனால் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் என அரசாங்கத்தால் கூறப்படுகிறது. சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீட்டை நிறுத்தக் கோருவதும், மக்கள் குடியிருப்புக்களில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றி வேறு இடங்களில் அமைக்க கோருவதும் எவ்வாறு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும் என்பது புரியவில்லை. தற்போதும் தமிழ் மக்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் தரப்பாக தான் இராணுவம் எண்ணுகின்றதா என்ற சந்தேகம் கூட இதனால் எழுகின்றது. இவ்வாறான ஒரு மனநிலையில் தென்னிலங்கை இருக்கும் போது நல்லாட்சி, நல்லிணக்கம் என்பது எவ்வாறு சாத்தியமாகும்? இந்த விடயத்தில் அரசாங்கம் தமிழ், சிங்களம் என்ற இனவாதம் பார்க்காது நாடு பூராகவும் ஒரு மித்த ஒரு கொள்கையை வகுத்து செயற்பட வேண்டும்.

F1yfxIIRkosgama-01பொதுவாகவே இராணுவ முகாம் என்கின்ற போது அங்கு இராணுவத்தினரும், அவர்களுக்குரிய ஆயுதங்களும் இருப்பது இயல்பே. இது மக்கள் குடியிருப்புக்களில் இருக்கின்ற போது அனர்த்தங்களின் போது ஏற்படும் பாதிப்புக்களும் தவிர்க்க முடியாததே. ஆகவே, இதனை மக்கள் குடியிருப்பு அற்ற பகுதிகளில் அமைக்கின்ற போது ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் மக்களுக்கும், அவர்களது சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த முடியும். ஆகவே இந்த நிலையில் சி.வி.விக்கினேஸ்வரன் போன்றோர் தமிழ் மக்கள் சார்பாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் இராணுவ முகாம்களை மக்கள் குடியிருப்புக்பகளில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்துக்களை இனியாவது இனவாதமாக பார்க்காது இன்று தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள காலம் கடந்த தரிசன நிலையை புரிந்து இராணுவ முகாம்களை உடனடியாக மக்கள் குடியிருப்புக்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபாடுளையும், இனவாத சிந்தனைகளையும் விடுத்து, இராணுவ முகாம்கள் தொடர்பில் ஒரு மித்த நாட்டுக்கான கொள்கைகளை வகுத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் ஆதங்கம். அதனையே கொஸ்கம, சாலாவ இராணுவ ஆயுதக்களஞ்சியசாலை உணர்த்திச் சென்றுள்ளது என்பதே உண்மை.

N5