செய்திகள்

சீனச் சர்வதேச வானொலி தமிழ் சேவையின் சிறப்புக்கள்

மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் முகநூல் பதிவில் இருந்து – 27.09.2017

தமிழ் ஊடகவியலாளர்கள் குழுவினரின் ஒரு வார கால சீனச் சுற்றுலாவின்போது தலைநகர் பெய்ஜிங்கில் முதன் முதலாக எம்மை சீனச் சர்வதேச வானொலி நிலையத் தலைமையகத்துக்கு (China Radio International) கூட்டிச் சென்றார்கள். தமிழ்ச் சேவையின் பணியாளர்கள் (சென்னையைச் சேர்ந்த பாலராமன் சக்திவேல் என்ற இளைஞனைத் தவிர அனைவரும் சீனர்கள்) எம்மை வரவேற்றார்கள். அந்தச் சேவையில் ஒலிபரப்பாளர்களாக இருக்கும் சீனர்களுக்கு ஒவ்வொரு தமிழ்ப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.கலைமகள், சரஸ்வதி, வாணி, நிலானி, கலைமணி, என்றெல்லாம் அவர்களுக்கு பெயர்கள். கலைமகள் என்பவர் சில தமிழ்ப் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். சீன – தமிழ் அகராதியும் அவற்றில் ஒன்று.

அவர்களின் வரவேற்புக்குப் பிறகு சீனச் சர்வதேச வானொலியின் பிரதி தலைவர் ஹு பாங்ஷெங்குடன் எமது குழுவினர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சீன மொழியில் அவர் பேசியதை மொழிபெயர்ப்பதற்கு கலைமணி என்ற பெயரைக் கொண்ட தமிழ்ச் சேவையின் ஒலிபரப்பாளரான சீனர் அமர்த்தப்பட்டார். (படத்தில் பிரதி தலைவருக்குப் பின்னால் அவர் காணப்படுகிறார்).

China 1

எமது குழுவின் சார்பில் நான் பேசியபோது எனது உறவுக்காரர் வீ.சின்னத்தம்பி(பாரதி நேசன்–அவரைப் பீக்கிங் சின்னத்தம்பி என்றும் அழைப்பதுண்டு) பீக்கிங் வானொலியின் தமிழ்ச் சேவையில் பணியாற்றியதை நினைவுபடுத்தினேன்.பிரதி தலைவருக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அங்குள்ள தமிழ்ச் சேவை பணியாளர்களுக்கு சின்னத்தம்பி என்ற ஒருவர் தமிழ்ச் சேவை ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கையில் இருந்து வந்து பணியாற்றினார் என்பது தெரிந்திருந்தது.இவர் ‘தம்பி’யின் உறவினராமே என்று தங்களுக்குள் அவர்கள் பேசிக்கொண்டு என்னுடன் நெருக்கமாகப் பழகினர்.சின்னத்தம்பி பெய்ஜிங்கில் இருந்த காலத்தில் வானொலியில் பணியாற்றிய சீனர்கள் பலருக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரின் மாணவர்களாக இருந்தவர்களிடம் தமிழைக் கற்றவர்களில் சிலர் இப்போது தமிழ்ச் சேவையில் பணிபுரிகிறார்கள்.

சின்னத்தம்பி சீன வானொலியின் தமிழ்ச் சேவையின் முதலாவது தலைமுறை பணியாளர்களில் ஒருவர் என்று அந்த இளம் சீன ஒலிபரப்பாளர்கள் என்னிடம் சுத்தத் தமிழில் சொன்னார்கள். தாங்கள் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி அவர்கள் மாஓ சேதுங்கை நிராகரிப்பதை உணர்ந்துகொண்டதும் சின்னத்தம்பி சீனாவில் இருக்கவிரும்பாமல் 1980 களின் ஆரம்பத்திலே நாடுதிரும்பினார்.2001 ஏப்ரிலில் 62 வயதில் அவர் காலமானதை பிரதி தலைவருக்குச் சொன்னேன்.அவர் அரசியல் கொள்கை பற்றி எதுவும் குறிப்பிடாமல் சின்னத்தம்பி உயிருடன் இருந்திருந்தால் மீண்டும் சீனா வந்து தங்களுடன் பணியாற்றியிருக்கமுடியும் என்று கூறினார். இலங்கைக்கு வருவதற்கு தனக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது சின்னத்தம்பியின் மனைவியையும் பிள்ளைகளையும் சந்திக்கத் தவறப்போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

China 2

எம்முடன் வந்திருந்த ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல இலங்கையில் உள்ள இளம் தமிழ் ஊடகவியலாளர்கள் சீன வானொலியின் தமிழ்ச் சேவையில் பணியாற்றவிரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பளிக்க தன்னால் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் பிரதி தலைவர் உறுதியளித்தார்.

இச் சந்திப்புக்குப் பிறகு தமிழ்ச் சேவைப் பணியாளர்கள் எமக்கு தேநீர் விருந்தளித்தனர்.நினைவுப் பரிசுகளும் வழங்கினர். சின்னத்தம்பியுடன் பணியாற்றிய சீனப் பெண்மணியொருவருடன் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி என்னை அவருடன் பேசவும் வைத்தனர்.அந்தப் பெண்மணி ஒரு வார்த்தை கூட என்னுடன் சீனமொழியிலோ ஆங்கிலத்திலோ பேசவில்லை. முற்றிலும் தமிழிலேயே பேசி சின்னத்தம்பி குடும்பத்துடனான பழைய அனுபவங்கள் சிலவற்றை நினைவுகூர்ந்தார். திருமதி ராணி சின்னத்தம்பி சில வருடங்களுக்கு முன்னர் பெய்ஜிங் வந்திருந்தபோது தன்னைச் சந்தித்தாகவும் அவர் சொன்னார்.

சீனப் புரட்சியைக் காப்பாற்ற மாஓ தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி காலாசாரப் புரட்சியை முன்னெடுத்த 1960 களின் நடுப்பகுதியில் வானொலியில் பணியாற்ற சீனா சென்றவர் சின்னத்தம்பி.அரை நூற்றாண்டுக்கு முன்னர் அங்கு பணியாற்றத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் இலங்கை திரும்பி பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எம்மைவிட்டுப் பிரிந்தும்விட்ட சின்னத்தம்பியைப் பற்றி நினைவுபடுத்தியபோது ‘தம்பி’ என்று விளிக்கின்ற ஒரு இளந் தலைமுறை சீனத்/தமிழ் ஒலிபரப்பாளர்களுடனான சந்திப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

chian 3

1949 ஆம் ஆண்டில் சீனப் புரட்சியின் வெற்றியையடுத்து மக்கள் சீனக் குடியரசு ஸ்தாபிக்கப்படுவதை பெய்ஜிங் தியனென்மென் சதுக்கத்தில் இருந்து நாட்டுமக்களுக்கு அறிவிக்க மாஓவும் தோழர்களும் பயன்படுத்திய ஒலிபெருக்கி சீன சர்வதேச வானொலி தலைமையக முன்னரங்க மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே நின்று ஒரு படத்தையும் எடுத்துக்கொண்டேன். வானொலி கலையகத்தில் என்னை நேர்காணல் செய்பவர் வாணி என்ற பெயர் கொண்ட கை யுன். எனக்கு நினைவுப் பரிசு தருபவர் கலைமகள் என்ற ஷாவோ ஜியாங். வாணி அருகே பாலராமன் சக்திவேல்.

chian 5 China 5