செய்திகள்

தீமீநுண்மித் தாக்கமும் தமிழரும்

சிவா செல்லையா
ஈழத்தமிழரைக் காவுகொண்ட சிங்கள இனவெறி அரசிற்கு தீமீநுண்மித் தாக்கம் பாரிய பொருளாதாரப் பின்னடைவைக் கொடுத்துள்ளது. இனவாத இராணுவம் தமிழர் மீது ஆக்கிரமிப்பை அதிகரிப்பதற்காக கோத்தபாயா அதிகாரத்தை இராணுவத்திடம் கையளித்து உள்ளார்.

உலகமே அஞ்சிக் நடுங்கிக் கொண்டுள்ளபோது ஈழத்தமிழரை இராணுவக் கெடுபிடிக்குள் வைத்திருப்பதே இலங்கை அரசின் நோக்கம். வெறுமனே நோய்க் கட்டுப்பாடு என்றில்லாது இனவழிப்பு முயற்சியாகத் தமிழர் தாயகத்திற்கு தென்பகுதியில் இருந்து நோய்காவிகளை அனுப்பி, அவர்களைக் கண்காணிப்பது என்ற போர்வையில் தமிழர் மீது மேலும் அடக்கு முறையையும், உயிரியல் யுத்தத்தினையும் இலங்கை இராணுவம் புரிகின்றது. இதனையே இலங்கையின் பாதுகாப்புச் செயலரின் வடபகுதி விஜயம் எடுத்துக் காட்டுகின்றது.

இத்தருணத்தில் தமிழர் போராட்டத்தின் வடிவத்தினை மறுசீரமைக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கை அரசிடம் தமிழர் தாயகத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துக் கொள்ளக்கூடிய பொருளாதார பலம் இல்லை. அடுத்து தீமீநுண்மித் தாக்கத்தின் பரவல் இலங்கையின் கடற்படை, இராணுவக் கட்டமைப்பைச் சிதைக்கக்கூடிய நிலையில் உள்ளது. உலகப் பொருளாதாரமும் உறைநிலைக்குக் கீழ் சென்றுவிட்டது. இவை போராடுவதற்கான அனுகூலமான சூழல் ஆகும்.

po

தீமீநுண்மித் தாக்கத்தின் சமூகப்பரவல் மாவட்டங்களுக்கு இடையிலான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றது. இத்தகைய சூழல் ஈழத்தினை போர்த்துக்கேயர் ஆக்கிரமித்த காலத்துக்கு அப்பால் இட்டுச்சென்று உள்ளது. பிரதேச சுயபொருளாதாரத்துடனான சுயாட்சியினை உருவாக்கக் கூடிய சமூக பொருளாதார இராணுவ சூழலை தீமீநுண்மி சமூகக்காவுகை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையிலும், இந்தியாவிலும் தமிழினம் பாரிய அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளது. இது 1818இல் ஏற்பட்ட வாந்திபேதி சமூகக்காவுகைக்கு ஒப்பான நிலையாகும். அன்று இலட்சக்கணக்கான தமிழர்கள் தோட்ட அடிமைகளாக வாந்திபேதிக்கு பலியாகினர். இதற்கு முக்கிய காரணம் அடிமைத்துவப் பொருளாதாரமும் அடக்குமுறையரசுமாகும். இதேநிலை 1919ஆம் ஆண்டில் சளிச்சுர அழிவிலும் ஏற்பட்டது.

அவ்வாறே இன்று இலங்கையின் இராணுவ ஆட்சியாளர்கள் வடக்கில் பாரிய இராணுவ முகாம்களைத் தக்கவைத்து, அங்கே தென்பகுதியில் இருந்து ஆபத்தான நோய்த்தொற்றுக்காவிகளை தனிமைப்படுத்தவென பேரூந்துகளில் ஊரடங்கு வேளையில் இறக்கி உள்ளனர். இது ஓர் சிறுபான்மைச் சமூகத்தின் மீதான ஒடுக்குமுறையாகவே உற்றுநோக்கப்படல் வேண்டும். மேலும் நோய்க்காவிகளாக இலங்கை இராணுவ கடற்படை தமிழ் பிரதேசங்களில் நடமாடுவதைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.

இன்று தமிழர்கள் எதிர்கொள்ளும் தீமீநுண்மி சமூகக் காவுகைகள் :

1. பொருளாதாரத் தளம்பல்.
2. உளவியல் தாக்கம்.
3. சிங்கள அரசியல் அடக்குமுறை மேலெழல்.
4. சிங்கள இராணுவ அடக்குமுறை மேலெழல்.
5. புலம்பெயர் தமிழர்களின் சமூக வாழ்வு தளம்புதல்.

இலங்கை அரசு நடாத்த முனையும் பாராளுமன்றத் தேர்தலும் தமிழரை அடக்குவதற்கான அறுதிப் பெரும்பான்மையினைப் பெறுவதற்கான ஆணையைப் பெறுவதற்காகவே. இன்று உலகநாடுகள் தத்தமது பொருளாதார, மருத்துவ நெருக்கடியில் மூழ்கியுள்ள வேளையில் சிங்களம் தமிழினத்தைக் கபளீகரம் செய்வதற்கு இடமளித்தல் கூடாது. தீமீநுண்மி வெறும் சமூகக்காவுகை அல்ல அது மானிடத்தின் இருப்பிற்கான நெருக்கடி. அந்நிலையில் தமிழினம் இதனை வெறும் மருத்துவநெருக்கடியாக கருதாது தன்னினத்தின் இருப்பிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகவே கருத வேண்டும்.