செய்திகள்

நீரேரியினுள் நீர்த்தேக்கத்தினை அமைத்தல்

மருத்துவர். சி. யமுனாநந்தா

நீர்த்தேக்கம் உருவாக்குவதற்குரிய புதிய சூழல் சாகியம்

யாழ் குடாநாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு சிறந்த நீர்வளம் இன்றியமையாததாகும். இதற்கு எமது இளைய சந்ததியினருக்கு நம்பிக்கையினைத் தரக்கூடிய செயற்றிட்டங்கள் அவசியமானதாகும். தற்போது யாழ் குடாநாட்டின் ஏரிகளை நன்னீராக்கும் திட்டங்கள் நீர்ப்பாசனப் பொறியியலாளர்களின் உதவியுடன் செவ்வனே நடைபெறுகின்றது.

யாழ் குடாநாட்டிற்கு வடகீழ்பருவப்பெயர்ச்சிக் காற்றுக்காலப் பருவ மழையுடன் கூடிய தாழமுக்க மழைவீழ்ச்சியே அதிகம். அண்மைய மழைநீர் சேமிப்புத்திட்டங்களையும் மழை வெள்ளத்தையும் பிரதேச ரீதியாக ஆராயும்போது மேலதிக நீரினை, குடியிருப்புக்கள், வயல்கள் என்பனவற்றில் அழிவுகளை ஏற்படுத்தாது கடலிற்குள் வீணே பாயவிடும் சூழலே உள்ளது.

இத்தகைய சூழலில் எமது பொறியியலாளர்களின் துணையுடன் யாழ் குடாக்கடனீரேரியில் பல நீர்த்தேக்கங்களைச் செயற்கையாக உருவாக்க வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. யாழ் மாநகரசபைக்குத் தேவையான நீரினை செம்மணிப் பகுதியிலும் நல்லூர் பிரதேச சபைக்குத் தேவையான நீரினை நாயன்மார்க்கட்டுப் பகுதியிலும், கோப்பாய் பிரதேசத்திற்கு கோப்பாய் மற்றும் புத்தூர், வாதரவத்தை, கைதடி, மட்டுவில், மாண்டான் வெளி, கல்லூண்;டாய்வெளி, ஆனையிறவு, ஆழியவளை போன்ற இடங்களில் இவ்வாறு நீரேரியினுள்ளேயே நீர்த் தேக்கங்களை உருவாக்கலாம்.

இதற்கான நிலத்தினை சுமார் 2m ஆழத்திற்கு ஆழப்படுத்தவும் நீரின் கொள்ளளவை அதிகரிக்க 3m உயரத்திறகு அணையினையும் அமைத்து சுமார் 1000 ஹெக்டெயர் பரப்பளவு நீர்த்தேக்கங்களை அமைக்கலாம். இவற்றிற்கான நீரினை மழை வெள்ளம் பாயும்போது மோட்டார் பம்புகள் மூலம் சேமிக்கலாம்.

இதற்கு நடைமுறைச் சாத்தியமான ஆய்வுகளையும் செயற்றிட்டங்களையும் நாம் ஒவ்வொரு பிரதேச சபைகள் அல்லது உள்ளுராட்சி நிறுவனங்கள் ஊடாக ஏற்படுத்தலாம். இவ்வாறு அமைக்கப்படும் நீர்த்தேக்கங்கள் புதிய சூழலியல் பரிமாணத்தை எமக்குத் தரும். யாழ்ப்பாணம் பாலைவனமாகும் என்ற பயத்தை உருவாக்குவோர் யாழ்ப்பாணம் சோலைவனமாகும் என்ற உண்மையை உணரக்கூடிய சூழலியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்கு எமக்கு பொறியியலாளர்களினதும் விவசாய விஞ்ஞானிகளினதும் பங்களிப்பு இன்றியமையாததாகின்றது.

1

யாழ் குடாநாட்டு நீரேரியில் நீர்த்தேக்கங்களை அமைத்தலில் திட்டமிடல் மிகவும் இன்றியமையாததாகின்றது. இதில் பின்வருவன கவனத்தில் கொள்ளப்படும்.
1. நீரின் தேவை
2. நீரினை பெற்றுக் கொள்ளும் தன்மை.
இது வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையின்போதும் தாழமுக்கத்தின் போதும் ஏற்படும் வெள்ள நீரைச் சேமிக்கும் தன்மையாக அமையும்.
3. நீர்த்தேக்கத்தின் பருமன்
இதனை யாழ்க்குடாநாட்டின் நீரேரிகளை அண்டிய உள்ளுராட்சி சபைகள் தீர்மானிக்கலாம். சுமார் 1000 ஹெக்டெயர் நிலப்பரப்பை உடையதாக நீர்த்தேக்கங்களை அமைக்கலாம்.
4. நீர்த்தேக்கத்திற்கான இடம் தெரிவு
வெள்ளம் பாயும் இடங்களாகவும் மற்றும் விவசாய நில மேம்படுத்தலுக்காகவும் இடங்கள் அமையும். களிமண் தரைகள் சாலச்சிறந்தவை.

இந் நீர்த்தேக்கங்களை அமைத்து, வடமாகாணசபை தனக்குரிய அதிகாரங்கள் மூலம் திட்டமிடலாம். இதற்குரிய சூழலியல் சான்றுகள், சட்டவரன்கள், பொதுமக்களுக்கான பிரயோகம் என்பன மூலம் இதனை நடைமுறைப்படுத்தலாம். இதற்குரிய பொறியியல் நிபுணத்துவத்தினை பல தமிழர்கள் பொறியியலாளர்களின் ஒத்துழைப்பினால் பெற்றுக் கொள்ளலாம். மேலும் புலம்பெயர்ந்து வாழும் பொறியியல் நிபுணர்களும் உதவலாம்.

நீர்த்தேக்கத்தினை நீரேரியின் குறித்த பகுதிகளை ஆழப்படுத்தி அணைகள் அமைப்பினால் உருவாக்கலாம். மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஆழத்தினையும் அணையின் உயரத்தினையும் தீர்மானிக்கலாம். இது பொதுவான 2 மீற்றர் ஆழமாகவும் 3 மீற்றர் உயரமாகவும் அமையலாம்.

2

நீர்த்தேக்கம் உருவாக்கும் இயந்திரங்கள்

நீர் அணைக்கு வெளியே ஏரியின் ஆழம் 1-2 மீற்றர் வரை இருக்கும். மழைவெள்ளம் அதிகரிக்கும்போது மேலதிக நீரினை கடலுக்குள் செலுத்துவதற்கு பதிலாக்க நீர்த்தேக்கங்களுக்கு மின்மோட்டர் நீர்ப்பம்பிகளினால் செலுத்தலாம். நீர்த்தேக்கத்தின் அணையின் பாதுகாப்பு நீரேரியைச் சூழ்ந்து அமைந்து இருப்பதால் உத்தரவாதமுள்ளதாக அமையும்.

இவ்வாறு யாழ்குடா நீரேரிக்குள் பல நீர்த்தேக்கங்களை உருவாக்கும் பொறிமுறையானது ஓர் சமூகக் காப்புறுதியாகும். இதன் மூலம் சமூக, பொருளாதார சூழலியல் மாற்றங்கள் ஏற்படும். இதில் வர்த்தக முதலீடுகள் இடப்படலாம். இதனால் இப்பிரதேசத்தில் உள்ள குடியிருப்புக்களின் பெறுமதி அதிகரிக்கும். நீர்ப்பங்கீடு தொடர்பான சமூகப் பிணக்குகள் இல்லாது போகும். எனவே யாழ் குடாநாட்டின் நீரேரிகளை நன்னீராக்கி அவற்றின் கண்ணே பல நன்னீர்த்தேக்கங்களை உருவாக்குவதற்கான செப்பமான செயற்றிட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.