செய்திகள்

நெஞ்சே எழு 2 – தலைவர் எடுத்த முடிவுகள்

 க.ஜெனார்த்தனன் (பயிற்சியாளர், BBA, MPM, NDTHRD, IFMA )

‘ஒரு சின்னப்பூவை நீ அசைத்தால், பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு நட்சத்திரம் அழிந்து போகலாம்’ என்ற வரிகள் ஒவ்வொரு சிறு செயலுக்கும் பிற்பாடும் எட்டப்படும் விளைவுகளை குறிப்பதாக அமைந்துள்ளன.

ஓவ்வொரு செயலுக்குமான மறுவிளைவுகள் நிச்சயமாக உண்டு. எனவேதான் பெரியவர்கள் நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைப்பதுடன், அளந்தும் வைக்கவேண்டும் என்றனர்.

தையல்தொழில் செய்பவர்களுக்கு என சர்வதேச பொறிமுறை ஒன்று உண்டு! ‘ஓரு முறை வெட்டுவதற்கு முன் இரு முறை யோசி’ என்பதுவே அது.

தனி நபர்களுக்கே முடிவெடுத்தல் என்பது இத்தனை விடயங்களை கொண்டிருக்கின்றது என்றால்! ஓரு தலைவன் எடுக்கவேண்டிய முடிவுகள் தீர்மானங்கள் எத்தனை மடங்கு மேம்பட்டதாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. தீட்சண்யமான, தீர்க்க தரிசனம் கொண்ட தலைவர்களினாலேயே காலத்தை வெற்றிபெற்று நிரந்தரமான வெற்றியாக அதை மாற்றும் திறன் வாய்த்திருக்கும்.

mgrமருதூர் கோபாலன் ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) அவர்கள் தமிழ்த்திரையுலகத்தின் உச்சாணியில் இருந்து அரசியலுக்கு குதிக்கும்தறுவாயில் உருவகிக்கப்பட்ட பாடலே ‘நாளை நமதே’ என்ற பாடல், ஆனால் மறுபுறம் வெறுமனமே ஆளம் பார்க்காமலும், தீர்க்க தரிசனமான முடிவுகள் எடுக்காமலும் அவர் அரசியலில் குதிக்கவில்லை. நாளை நமதே என அவர் உறுதியாகச் சொன்னபோதே 99 வீதமான திட்டங்களையும், வேலைகளையும் அவர் செய்துமுடித்திருந்தார் என்பதே உண்மை.

இதுபோல பாகிஸ்தான் என்ற தேச உருவாக்கத்திற்காக ஜின்னாவின் தூரநோக்கம் அற்புதமானது என்பது மட்டுமன்றி மிகச் சிறந்த தீர்க்கதரிசனத்தைக்கொண்டு சமயோசிதமாக, ஏற்ற தருணத்தில் எடுக்கபடப்ட முடிவு எனக் கொள்ளலாம்.

சத்திரியமும் சாணக்கியமும் சம பலமாக கொண்ட தலைவர்களாலேயே, உலக ஓட்டச்சவால்களை தாம் வழி நடத்துபவர்களுக்கு சாதகமானதாக்க முடிந்தது.

ஸ்ரார்வோர்ஸ் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள், ஒவ்வொரு துறை சார்ந்தவர்களும் ஒருங்கே கூடி, அண்டவெளியில் பயணிக்கும் அண்டவெளி ஊர்த்தியில் பயணிப்பார்கள், அவர்களை உற்சாகப்படுத்துபவராக கப்டன் இருப்பார். நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும், ஊக்கப்படுத்துவராகவும் மட்டுமே அவர் காட்டப்பட்டுக்கொண்டிருப்பார், ஆனால் அந்த அண்டவெளி விமானம் ஒரு சிக்கலை எதிர்கொள்ளும் தருணத்தில், விஸ்வரூபம் எடுத்து அந்த பிரச்சினையில் இருந்து மிகப்பெரும் அதிரடியாகவும், சுறுசுறுப்பாகவும் செயற்பட்டு எந்த சிக்கல்களையும் வென்று ஊர்த்தியை மீண்டும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவார்.

தலைமை என்பது ஒரு கலை. முக்கியமாக ஒரு இக்கட்டான நிலையில் நிலைமையினை சவாலாக ஏற்று சாதுரியமாக செயற்பட்டு, மற்றவர்களை வழிநடத்தி இக்கட்டான நிலையை இயல்பான நிலைக்கு திருப்புவரே அனைவராலும் கவனிக்கப்படும் ஆற்றல் மிகு தலைவராகின்றார்.

creative_leadershipதலைவன் என்பவன் ஒரு செவிலிபோல தன்னை பின்தொடர்பவர்கள் என்ற கற்பிணிகள் தமது ஆளுமைகளை சிறந்த முறையில் பெற்றெடுக்க உதவுபவர்கள் என சீன மெய்யியலாளர் ஒருவர் கூறுகின்றார். ஆடுதலைமையிலான சிங்கங்கள் அணி ஒன்றை, சிங்கம் தலைமையிலான ஆடுகள் அணி மிக இலகுவாக வென்றுவிடும் என்கின்றது இன்னும் ஒரு தத்துவம்.

இவற்றில் இருந்து ஒரு தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் எத்தனை உயர்ந்ததும் பொறுப்பு வாய்ந்ததும் என்பது புரிகின்றதல்லவா!

தலைவன் என்பவன் மற்றும் பல தலைவர்களை உருவாக்குபவனாகவும், தியாக எண்ணம் கொண்டவனாகவும், வலுவூட்டியாகவும், நேர்மறைச் சிந்தனைகளின் குவியமாகவும், எப்போதும் தன்னை பின்தொடர்பவர்களின் முன்னே செல்பவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருப்பான் என தலைமைத்துவ பண்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

தனக்கு கிடைத்த தலைமைத்துவம் பற்றி பெருமதிப்புக்குரிய அப்துல் கலாம் அவர்கள் தெரிவித்திருந்த உண்மை இது…

ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் அப்துல் கலாம் பணிபுரிந்து கொண்டிருந்த நேரம். ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் அப்போதைய தலைவர் பேராசிரியர் சதீஷ் தவான், எஸ்.எல்.வி.3 எனும் செயற்கைக் கோளை உருவாக்கும் பொறுப்பை கலாமிடம் கொடுத்திருந்தார். ரோகிணி விண்கலத்திற்கு துணையாக விண் சுற்றில் இயங்க  வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள். ஆனால் 1979 ஆகஸ்ட் 10ம் நாள் செயற்கைக்கோள் ஏவப்பட்டு நன்கு செயல்பட்டாலும் ரோகிணி வங்கக் கடலில் விழுந்தது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. திட்ட இயக்குநர் என்ற முறையில் கலாமையும் அதற்கு அழைத்துச் சென்றார் சதீஷ் தவான். ஆனால் செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, இந்தத் தோல்விக்குத் தான் பொறுப் பேற்பதாக அறிவித்தார் சதீஷ் தவான்.

22sli1காலம் மாறியது. காட்சிகளும் மாறின. 1980ல் ஜுலை மாதம் எஸ்.எல்.வி. வெற்றிகரமாக ஏவப்பட்டது. அப்போது நடந்த செய்தியாளர் கூட்டத்தில் விண்ணில் ஏவிய வெற்றிக் கதையை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை, கலாமுக்கு வழங்கினார் சதீஷ் தவான். ஒரு செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதன் வெற்றிக்கான வெளிச்சத்தை வழங்குவதும், தவறுகள் ஏற்பட்டால் அவற்றுக்காகத் தானே பொறுப்பேற்பதும் தலைமைக்கு அழகு என்பதை சதீஷ் தவானின் செயல் மூலம் உணர்ந்தார் அப்துல் கலாம்.

சின்னம் சிறு நாடு ஒன்றை உலகமே திரும்பிப்பார்க்க வைத்த இன்னும் ஒரு தலைவனின் கதை இது…

1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் நாள், பாகிஷ்தான் லாகூர் விடுதியில், கட்டாய ஓய்வில் அமர்த்தப்பட்டிருந்த ஒரு மனத்தினால் ஓய்வை அனுபவிக்க முடியவில்லை. மனத்தினுள் பெரும் போராட்டங்களும், ஒத்திகைகளும் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தன.

உலக வரைபடத்தில் சிறியதாக தெரியும் என் தேசத்தை, நாளைய தினம் எப்படி மாபெரும் வெற்றியின் மூலம் பெரியதாக உலகமே பேச வைப்பது! என்பது மட்டுமே அந்த மனது முழுவதும் வியாபித்திருந்தது.

அர்ஜுனா  ரணதுங்க…

ஏற்கனவே தனக்கிருந்த மிகச் சிறந்த தலைமைத்துவத்தால், அசாத்தியங்களை சாத்தியம் என, நிருபித்துக்காட்டிய மிகச்சிறந்த ஆளமையான தலைமையாக இருந்தபோதிலும்

இன்றைய தினத்தில் மனது சொல்வதெதையும் கேட்காமல் அலை பாய்ந்துகொண்டே இருந்தது.

வெளியே சில தூரம் நடந்துவிட்டு வந்தால் கொஞ்சம் மனம் அமைதியாக இருக்கும் என நினைத்து, விடுதியில் இருந்து வெளிவந்து நாளை இறுதிப்போட்டி அவுஸ்ரேலிய அணியுடன் விளையாடும், லாகூர், கடாபி மைதானம் வரை நடப்பதாக எண்ணிக்கொண்டே நடக்கின்றார்.

இடையில் ஒரு சந்தைத்தொகுதியை கடக்கும்போது அங்கு கவனிக்கின்றார், தனது சக வீரர்கள், அதுவும் கனிஸ்ர வீரர்கள் சிலர், குதூகலத்துடன், சிரித்தவாறே தமக்கான, கம்பளங்கள் உட்பட சில பொருட்களை வாங்கி மகிழ்ந்தண்ணம் இருந்ததார்கள், தனது வருகை அவர்களின் மகிழ்ச்சியை கெடுத்துவிடும் என்று எண்ணியபடியே அவர்களின் கண்ணில் படாதவாறு அந்த சந்தை தொகுதியை கடந்து மைதானம் நோக்கி நடக்கின்றார்…

அவர்கள் நாளைய வாழ்வா சாவா போட்டி பற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாமல், எவ்வளவு இயல்பாக இருக்கின்றார்கள்! இந்த பக்குவம் எனக்கு ஏன் வரவில்லை. அவர்களுக்கு என்னில் எவ்வளவு நம்பிக்கை இருப்பதனால் இவ்வளவு நம்பிக்கையாக இருக்கின்றார்கள். எனக்கும் என் அணிமீது அசாத்தியமான நம்பிக்கை இருக்கின்றது… என எண்ணும்போது அவரது மனதில் அப்போது பெரும் நம்பிக்கை துளிர்விட்டது.

worldcupநாளை உலகக்கிண்ண இறுதிப்போட்டி நடக்கவிருக்கும் மைதானத்தை அடைகின்றார். போட்டிக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்து, இறுதி பிரீட்சார்த்த நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சுற்றிப்பார்த்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது, தனது அணியின் சிரேஷ்ட வீரர்களான அரவிந்த டி சில்வா, ஹசான் திலகரட்ன, ரொஷான் மகாநாம, அஷங்க குருசிங்க போன்ற வீரர்கள் அங்கு ஏற்கனவே அங்கிருந்து  மைதானத்தை பார்த்தவண்ணம் இருந்தனர்.

ஆர்ஜூனவை வரவேற்ற அப்போதைய முகாமையார் இம்ரான், முழு பாகிஸ்தான் தேசமே, ஸ்ரீ லங்காவுக்கே ஆதராவாக இருப்பதாகவும், இந்த மைதானம், தனது அனுபவம், மற்றும் ஸ்ரீ லங்காவின் யுத்திகள் என்பவற்றிற்கு நீங்கள் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்று கூறுகின்றார். அதற்கு மரியாதையுடன் நன்றி தெரிவித்த அர்ஜூன, ஏற்கனவே அங்கிருந்த தனது அணியின் சிரேஸ்ர வீர்களிடம் இம்ரானின் கருத்தை கூறுகின்றார்.

சிரேஸ்ர வீரர்களும் இம்ரானின் கருத்து மிகச்சரியானது என்பதுடன் மிக நுட்பமானது எமது கருத்தும், நாம் முதலில் துடுப்பெடுத்தாடி மிகப்பெரிய ஸ்கோரை தொட்டுவிட்டால் அவுஸ்ரேலியாவை இலகுவாக மிதவேக மற்றும், ஸ்பின் பந்துகளால் வீழ்த்தலாம் என்கிறார்கள்.

அவர்களிடமிருந்து விடைபெற்ற அர்ஜூன இம்ரானின் அனுமதியுடன், மைதானத்தில் இறங்கி நடக்கின்றார், மிக குளிரான காற்றையும், தனது காலணிகளில் படியும் ஈரலிப்பையும் கவனிக்கின்றார். அந்த நேரத்தை குறிப்பெடுக்கின்றார், ஆம்… அது கண்டிப்பாக ஒரு அணி துடுப்பெடுத்தாடி, மற்றய அணி துடுப்பெடுத்து ஆடத்தொடங்கும் நேரம், மைதாகத்தை சுற்றி வரும்போது ஈரலிப்பு இன்னும் அதிகரிப்தையும் தனது காலணியில் ஈரம் இன்னும் கூடுவதையும் அவதானிக்கினறார்.

மறுநாள் 17 மார்ச் 1996 இறுதிப்போட்டி ஆரம்பமாகின்றது, நாணைய சுழற்சியில் வெற்றிபெற்ற அர்ஜூன ரணதுங், முதலில் தாம் பந்துவீச்சை தீர்மானிக்கின்றார். 241 ஓட்டங்களுக்குள் அவுஸ்ரேலிய அணி சுருட்டப்படுகின்றது. அடுத்து ஸ்ரீலங்கா அணி ஆடிய ருத்திரதாண்டவம் அனைவரும் அறிந்த ஒன்றே….

இங்கே திரும் ஒரு விடயத்தை கவனியுங்கள்….

‘அர்ஜூன இம்ரானின் அனுமதியுடன், மைதானத்தில் இறங்கி நடக்கின்றார், மிக குளிரான காற்றையும், தனது காலணிகளில் படியும் ஈரலிப்பையும் கவனிக்கின்றார், அந்த நேரத்தை குறிப்பெடுக்கின்றார், ஆம்… அது கண்டிப்பாக ஒரு அணி துடுப்பெடுத்தாடி, மற்றய அணி துடுப்பெடுத்து ஆடத்தொடங்கும் நேரம், மைதாகத்தை சுற்றி வரும்போது ஈரலிப்பு இன்னும் அதிகரிப்தையும் தனது காலணியில் ஈரம் இன்னும் கூடுவதையும் அவதானிக்கினறார்’

இரண்டாவதாக அவுஸ்ரேலியா துடுப்பெடுத்து ஆடினால், ஸ்ரீ லங்கா நம்பியிருப்பது மிதவேக சுழற்சியுடைய பந்துவீச்சாளர்களையும், சுழல் பந்துவீச்சாளர்களையுமே… இதேபோல மென்பனி இதே நேரத்தில் விழ நாளையும் ஆரம்பிக்கும். அப்போது கண்டிப்பாக, எமது மிதவேக பந்து வீச்சும், சுழல் பந்துவீச்சும், செயலிழந்துபோய் மிக பலமான துடுப்பாட்ட முன்வரிசை கொண்ட அவுஸ்ரேலிய அணிக்கு அது சாதமாக மாறும்…   இதே அந்த தருணங்களில் அவர் சிந்தித்தவை.

மிக அனுபவம் வாய்ந்தவர்கள், மரியதைக்குரியவர்கள், ஆதரவானவர்கள் எதை சொன்னாலும், அதையும் ஆராய்ந்து தற்போதைய நிலைகளையும் ஆராட்சிக்குள்ளாக்கி பல அறிவுரைகளை பெற்றுக்கொண்டு, பல தெரிவுகளை ஏற்படுத்தி அதில் சிறந்த தெரிவினை தெரிவு செய்து சாதிப்பதே உண்மையான தலைவன் ஒருவனது சிறந்த முடிவெடுக்கும் ஆளுமை. இவ்வாறு அனைத்து சூழ்நிலைகளையும் ஆராய்ந்து கண முடிவு எடுக்கப்பட்டதாலேயே இந்த சின்னம் சிறு நாடு உலகத்தின் முதலாவதாக அன்றைய நாளில் பேசப்பட்டது.

http://www.samakalam.com/blog/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/