செய்திகள்

பிரதமரின் தலை தப்புமா? பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா  பிரேரணையில் ஜெயிக்கப்போவது யாரு?

பா. கிருபாகரன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மகிந்த ஆதரவு பொது எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதற்காக பாராளுமன்றம் அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடி அன்று இரவு 9.30 வரையான 12 மணிநேர விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெறவைக்க வேண்டுமென்பதற்காக ஒருபுறமும், தோல்வியடையச் செய்யவேண்டுமென்பதற்காக மறுபுறமும் நடக்கும் பேரப்பேச்சுக்கள் , காய்நகர்த்தல்கள், ஆள்திரட்டல்கள் , சமரசப் பேச்சுக்கள் என அரசியல் களமே அரண்டு போயுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவி தப்புமா, தட்டிப் பறிக்கப்படுமா என்ற விவாதங்கள் , எதிர்வு கூறல்கள் என அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு தினமும் ஒரு பரபரப்பை கிளப்பி விடுவதனால், ஆட்சியாளர்கள் , அரசியல்வாதிகள் மட்டுமன்றி முழு நாட்டு மக்களுமே குழம்பிப் போயுள்ளனர்.

இனி விடயத்திற்கு வருவோம், தற்போதைய ஆட்சியில் , பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, மகிந்த ஆதரவு பொது எதிரணியினர் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணயை கொண்டுவந்துள்ளனர். இப் பிரேரணை கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில், சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது. இப்பிரேரணையில் மகிந்த ஆதரவு பொது எதிரணியைச்சேர்ந்த 51 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களுமாக 55 பேர் கையெழுத்திட்டுள்ளனர். எனினும் இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையெழுத்திடவில்லை.

சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டதையடுத்து மறுநாள் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இப்பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலுக்கு அமைய எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டி, இரவு 9.30 மணிவரையான 12 மணிநேரம் விவாதத்தை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலேயே எதிர்வரும் 4 ஆம் திகதி விவாதத்திற்கு வரவுள்ள்ள இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலை தப்புமா? என்பதே இன்றுள்ள பிரதான கேள்வி.

அரசதரப்பின் எண்ணிக்கை

தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர் நிலைவரத்தை முதலில் பார்ப்போம், ஐக்கிய தேசியக் கட்சி தனது பங்காளிக் கட்சிகளுடன் 106 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில், 32 பேர் அமைச்சர்களாகவும், 13 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் , 11பேர் பிரதியமைச்சர்களாகவும் , 51 பேர் எம்.பி.க்களாகவும் உள்ளனர். ஐ.தே.க.வுடன் தேசிய அரசு அமைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில், 14 பேர் அமைச்சர்களாகவும், 10 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், ஒருவர் பிரதி சபாநாயகராகவும், 11 பேர் பிரதியமைச்சர்களாகவும், 3 பேர் எம்.பி.க்களாகவும் உள்ளனர். இதற்கமைய அரசாங்கத் தரப்பில் தற்போது, 145 உறுப்பினர்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தளவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 உறுப்பினர்களும், ஜே.வி.பி.யில் 6 உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் 1 உறுப்பினரும் , ஈ.பி.டி.பி.யில் ஒரு உறுப்பினரும், மகிந்த ஆதரவு பொது எதிரணியில் 54 உறுப்பினர்களுமாக 79 உறுப்பினர்கள் உள்ளனர்.

Ranil1

கட்சிகளில் குழப்ப நிலை

பாராளுமன்றத்தில் அரச மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலைவரம் இவ்வாறிருக்கையிலேயே, இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா எதிர்த்து வாக்களிப்பதா என்பது தொடர்பில் கட்சிகளிடையே குழப்பநிலையுள்ளதுடன், எந்த நேரத்தில் எந்த உறுப்பினர் எப்படி வாக்களிப்பார் என்பது தொடர்பில் சந்தேகமே நிலவுகின்றது. இதில் மகிந்த ஆதரவு பொது எதிரணியைச் சேர்ந்த 51 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் , ஜே.வி.பி.யைச் சேர்ந்த 6 உறுப்பினர்களுமாக மொத்தம் 61 உறுப்பினர்கள் மட்டுமே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இதில், அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள 39 பேரில் அரைவாசிப்பேர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனநிலையில் இருக்கின்றனர், ஏனையவர்கள் மதில் மேல் பூனைகளாகவே உள்ளனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான மனோ கணேசன் , ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் பங்காளிக் கட்சிகள்  ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்பர். அதுமட்டுமன்றி பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் தாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்தே வாக்களிப்போம் என பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் சிலர் தமது கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த போதும், அவர்களுடன் நடத்தப்பட்ட பல சுற்று சமாதானப் பேச்சுக்கள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டால் அதனால் எழுச்சிபெறப் போகும் மகிந்த அணியால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டதையடுத்து அவர்களில் பலரும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

எந்த முறையில் வாக்களிப்பு?

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எந்தமுறையில் வாக்களிப்பது என்ற குழப்பநிலையொன்று ஏற்பட்டிருந்தது. பாராளுமன்ற நடைமுறைகளைப் பொறுத்தவரையில், ஒரு வாக்கெடுப்பு நடைபெறும் போது உறுப்பினர்கள் ஒவ்வொரு வரிசையாக எழுந்து நின்று வாக்களிப்பது முதலாவது முறையாகவும், பெயர் சொல்லி வாக்களிப்பது இரண்டாவது முறையாகவும், இரகசிய வாக்கெடுப்பு 3 ஆவது முறையாகவும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதில், இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது அரிதிலும் அரிதானதாகவே உள்ளது. அவ்வாறு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுமேயானால் அதற்கு அனுமதி கோரும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும். அதேவேளை, அண்மையில் பாராளுமன்றம் நவீன மயப்படுத்தப்பட்டதனால், பெயர் சொல்லி நடத்தப்படும் வாக்களிப்புக்கு பதிலாக, இலத்திரனியல் முறையிலான வாக்குப் பதிவே அண்மைக் காலமாக இடம்பெற்று வந்தது. இந்நிலையில், கடந்த கடைசி வார பாராளுமன்ற அமர்வின் போது, இடம்பெற்ற தொழில்நுட்பக் கோளாறினால், வாக்களித்தவர்களில் ஒருவரான அமைச்சர் மங்கள சமரவீரவின் பெயர் விடுபட்டு வாக்களிப்புக்கே வராத எஸ்.பி. திசாநாயக்கவின் பெயர் வாக்களித்ததாக பதிவு செய்யப்பட்டதனால் பெரும் குழப்பநிலையொன்று ஏற்பட்டது. இந்த விடயங்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டு கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பின்போது பெயர் கூறி வாக்குப்பதியும் நடைமுறையைப் பின்பற்றுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டா அல்லது பெரும்பான்மையா?

இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற 2/3 பெரும்பான்மை வாக்குகள் அவசியமா? அல்லது சாதாரண பெரும்பான்மையே போதுமா? என்பது தொடர்பில் தற்போதும் சர்ச்சை நீடித்து வருகிறது. அரசியலமைப்பின்படி, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற சாதாரண பெரும்பான்மையே போதுமென தெரிவிக்கப்படுகின்றது. அதாவது பாராளுமன்றத்தில் 100 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டால் 51 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தால் பிரேரணை வெற்றிபெற்றதாக கருதப்படும். சிலவேளைகளில் இருதரப்பும் 50 க்கு 50 எடுத்து விட்டால், சபாநாயகர் தான் விரும்பிய நிலைப்பாட்டை எடுத்து தனது வாக்கை அளிக்க முடியும். எனினும், சிலர் 2/3 பெரும்பான்மை வேண்டுமென சட்ட நுணுக்கங்களுடன், வாதிடுவதனாலேயே இது தொடர்பில் சர்ச்சை நீடித்து வருகின்றது.

கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?

இந்த வாக்கெடுப்பின் போது, கட்சிகள் என்ன நிலைப்பாடுகளை எடுக்கப்போகின்றன என்பதே பெரும் மர்மமாகவும் குழப்பமாகவும் உள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளவர்களில் கூட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 4 பேர் உள்ள நிலையில், அவர்களில் எத்தனைபேர் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்த சந்தேகத்தை தவிர்த்துப் பார்த்தாலும், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள 55 உறுப்பினர்களுடன், ஜே.வி.பி.யைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் இணைந்து, 61 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பேரப்பேச்சுக்கள் ஆள்திரட்டல்கள் மூலம் ஒரு சிலரை கூடுதலாக இணைத்துக் கொள்வதன் மூலமும் அரசில் அங்கம் வகிக்கும் பிரதமர் மீது அதிருப்தி கொண்டோரின் ஆதரவைப் பெற்றுக் கொண்டாலோ, 100 க்கும் உட்பட்ட ஆதரவு வாக்குகளை பெறக்கூடிய நிலையிலேயே, நம்பிக்கையில்லாப் பிரேரணையுள்ளது.

ranil-and-maithri

ஜனாதிபதி என்ன செய்வார்?

ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் உறுதியான நிலைப்பாடுகள் எதனையும் இன்றுவரை எடுக்கவில்லை. எனினும், அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தமது இஷ்டத்திற்கு அறிக்கைகளை விடுத்தும், ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தியும் பிரதமரை தோற்கடிக்க வேண்டுமென கூறிவருகின்றனர். ஆனாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் இதுவரை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் வாய்திறக்கவில்லை. ஆகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமருக்கு எதிராக வாக்களியுங்கள் என ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவேயுள்ளது. சில வேளைகளில் இறுதி நேரத்தில் அவர் மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் எனக் கூறலாம்.  அவ்வாறு கூறினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரண்டாக பிளவுபட்டு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிக்கும் நிலையே உள்ளது.

அரசின் பங்காளிக் கட்சிகளாகவுள்ள மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி, அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டன. அவர்களைப் பொறுத்தவரை ரணிலை விட்டால் வேறுவழியில்லை என்ற நிலைமையே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாக கூறியுள்ளது. எனவே இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் சாத்தியமே  அதிகமாகவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றால்?

சிலவேளைகளில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றால் அமைச்சரவை உடனடியாக கலைக்கப்பட வேண்டும். புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும். புதிய ஆட்சியில் ஐ.தே.க.வுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சியமைப்பதா , ஐ.தே.க.விலுள்ள ஒருவரையே மீண்டும் பிரதமராக்குவதா அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மகிந்த ஆதரவு பொது எதிரணியின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதா? என்பது தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.

இதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்பட முன்னர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தியுள்ள. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் ஒரு வேளை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்று விட்டால் அன்றைய தினமே தேசிய அரசாங்கம் கலைக்கப்படுமெனவும், தாம் அதிலிருந்து விலகிவிடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர். அப்படியானால் கூட இது ஐ.தே.க.வுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையமாட்டாது. ஏனெனில் பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது ஐக்கிய தேசியக் கட்சி தனது பங்காளிக் கட்சிகளுடன் சேர்த்து 106 உறுப்பினர்களை வைத்துள்ளது. இன்னும் 7 உறுப்பினர்களே ஆட்சியமைக்க அவர்களுக்கு தேவை. அந்த 7 உறுப்பினர்களையும் ஏனைய கட்சிகளிடமிருந்து பேரப்பேச்சுக்கள் மூலம் எடுப்பது ஐ.தே.க.வுக்கு ஒன்றும் பெரியவிடயமல்ல. சிலவேளைகளில் அது முடியாவிட்டால் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் ஐ.தே.க.வுக்கு ஆதரவளித்தால் ஐ.தே.க. வசம் 122 உறுப்பினர்களின் பலம் இருக்கும். ஆகவே, தற்போதைய நிலையில் ஐ.தே.க.வுக்குள்ள ஒரே சவால் தனது 106 உறுப்பினர்களையும் தக்கவைக்க வேண்டும் என்பதே தவிர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகுவதல்ல. ஐ.தே.க. தனியாக அரசமைத்தால், தங்களுக்கே அமைச்சு, பிரதியமைச்சு பதவிகள் கிடைக்குமென்பதால் ஐ.தே.க.வின் குழப்பவாதி எம்.பி.க்களும் பிரதமருக்கு எதிராக வாக்களிப்பதற்கு விரும்ப மாட்டார்கள். எனவே, ஏதாவது, அரசியல் அதிசயங்கள் நிகழ்ந்தால் தவிர இந்த பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவே.

பிரதமருக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள்

 01. திறைசேரி பிணை முறியில் மோசடி செய்யவேண்டுமென்ற தீய நோக்கத்துடன் நிதி அமைச்சிலிருந்து  மத்திய வங்கியினை நீக்கி எந்த விதமான ஒழுங்கு முறையான செயற்பாடுகளுமின்றி பிரதமரின்கீழ் கொண்டுவந்தமை.

02. கேள்விக்குரிய பதிவினை கொண்டிருக்கும் இலங்கையரல்லாத அர்ஜுன மகேந்திரனை மிகவும் சிக்கலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் செய்தமை.

03. அண்மைய கால வரலாற்றில் உலகளவில் மிகவும் மோசமான நிதியியல் குற்றமாக கருதக்கூடிய பிணைமுறி மோசடியில் ஈடுபட்டமை.

04.மோசடியில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் நோக்குடன் பிடிபான ஆணைக்குழு தனது நெருங்கிய அரசியல்வாதிகளை நியமித்தமை.

05.உண்மையை மறைத்து ஊழல் பேர்வழிகளை பாதுகாக்கும் நோக்குடன் 2015 மார்ச் 17 ஆம் திகதி விசேட உரை ஒன்றினை வழங்கி பாராளுமன்றத்தை தவறாக வழி நடத்தியமை.

06. செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் கோப் குழுவினரின் உறுப்பினரை மாற்றம் செய்து  மோசடியில் ஈடுபட்டவர்களை பாதுகாக்க முயற்சித்தமை.

07.கோப்  குழு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் அக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகித்தமை.

08.பிணை முறி மோசடியில் தொடர்புடையவரென ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட மத்தியவங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறியை நிதி அமைச்சில் பதவி ஒன்றுக்கு நியமிக்குமாறு அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தமை

09. மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி விரும்பியபோதும் அவரது பதவிக்காலத்தை மேலும் நீடிக்க முயற்சித்தமை

10. ஆளுநர் பதவியில் இருந்து அர்ஜுன மகேந்திரன் நீக்கப்பட்ட பின்னரும் அவரை ஆலோசகராக நியமித்தமை.

11. நீதிமன்றத்தை ஏய்ப்பு செய்து அர்ஜுன மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தமை.

12. நிதி அமைச்சரால் மாத்திரம் அமுல்படுத்தக்கூடிய 9 வெவ்வேறு விதிகளை மீறிச்செயற்பட்டமை.

13. பொருளாதார அமைச்சு மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான உப குழு  ஆகியவற்றின் கீழ் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகளை தனது கண்காணிப்பின் கீழ் உள்வாங்கி அதன் பின்னர் மக்கள் மீது மேலதிக சுமைகளை சுமத்தி மிக மோசமான பொருளாதார நெருக்கடி நாட்டில் ஏற்படுவதற்கு வழிசமைத்தமை

14. சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சினை தன் வசம் வைத்திருந்த நிலையிலும் கண்டி சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தவறியமை.