செய்திகள்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துமா…?

-கே.வாசு-

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கடந்த இரு வாரங்களாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் சில இழுபறிகளுக்கு மத்தியில் நடந்து வருகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதலாவது பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களே தற்போது நடைபெற்றுள்ளதுடன், நடைபெற்றும் வருகிறது. இணைத் தலைவர்களாக யாரை நியமிப்பது?, கூட்டமைப்புக்கும் இணைத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, முதலமைச்சர் இணைத் தலைமையை நிராகரித்தமை, மீண்டும் முதலமைச்சர் அதில் பங்கு கொண்டமை என பல இழுபறிகளுக்கு மத்தியில் வடபகுதியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தபடுமா…?, ஆரோக்கியமான முறையில் இந்தக் கூட்டங்கள் இடம்பெறுமா என்றெல்லாம் தற்போது அரச அதிகாரிகள், மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதனை நாம் பிழை எனக் கருதிவிடமுடியாது. ஏனெனில் கடந்த காலத்தில் அவ்வாறான ஒரு நிலமையையே இருந்தது. ஆனால் தற்போதும் அதே நிலை தொடரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்றும் கூற முடியாது. ஏனெனில் கடந்த அரசின் காலத்தில் வடக்கு பகுதியைப் பொறுத்த வரை மாவட்டத்தில் இருவர் இணைத் தலைவர்களாக செயற்பட்டிருந்தனர். வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன், அவர்களுடன் யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வன்னியில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களும் இணைத் தலைவர்களாக செயற்பட்டனர். அவர்களின் இணைத் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பல இன்றும் நிறைவேற்றப்படாத ஒன்றாக தற்போதைய அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அப்படியான நிலையில் மக்கள் மத்தியில் இது தொடர்பில் சந்தேகம் ஏற்படுவது ஜதார்த்தமே.

cc19070e-05c9-4af6-a670-ee58703796b3 (2)இந்நிலையிலேயே புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மாவட்டங்களுக்குரிய இணைத்தலைவர் நியமனங்கள் இழுபறிகளுக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் இணைத் தலைவர்களாக வடக்கு முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் இதே அணியில் இருந்து மாவை சேனாதிராஜா நீக்கப்பட்டு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இணைக்கப்பட்டுள்ளார். வன்னியில் வடக்கு முதல்வர், அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோருடன் முல்லைத்தீவிற்கு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களும், வவுனியாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், மன்னாருக்கு சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சிகளை பிரதிநிதுவப்படுத்தி இருவர் இணைத் தலைவராக இருந்த போது இழுபறியில் இருந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், மூன்று கட்சிகளை அடையாளப்படுத்தும் நால்வர் இணைத் தலைவராக உள்ள போது எவ்வாறு ஆரோக்கியமாக இயங்கும் என்பது கேள்விக்குறியே.

இணைத் தலைவர்களாக இருப்போர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி ஆகிய வேறு வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இவர்கள் இப் பதவியை வைத்துக் கொண்டு தமது கட்சியை பலப்படுத்தவும், தமது வாக்கு வங்கியை பாதுக்காக்கும் முயற்சியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. தமது இனம், மதம், கட்சி என சிந்தித்து செயற்படும் சூழலில் ஒரு நிலையில் தீர்மானம் எடுப்பதில் இழுபறி அல்லது குழப்ப நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

முல்லைத்தீவில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடக்கு முதல்வர் கருத்துத் தெரிவித்த போது, ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் HA/DG/D/DP என்ற 1996ம் ஆண்டின் ஒக்ரோபர் மாதம் 24ந் திகதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மத்தியையும் மாகாணத்தையும் ஒருங்கிணைத்து நிர்வாகத்தை முன் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உண்மையில் திரும்பப்பெற்ற உரித்தை மாகாணங்களுக்கே திருப்பி அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை. ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு மாகாணம் சார்பில் முதலமைச்சரும் மத்தி சார்பில் அமைச்சர் அல்லது சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இணைத்தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அமைச்சருக்குப் பதிலாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்று அதில் குறிப்பிடும் போது அது ஒரு குறைபாடாகவே சட்டப்படி தெரிந்தது.

DSC06293 (1)மாகாண முதலமைச்சர் ஒருவர் அமைச்சர் என்ற ரீதியில் சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் ஒருவராவார். மத்திய அமைச்சர் என்பவரும் அவ்வாறே. அவர்களுக்கு நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உண்டு. (They have executive powers). ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டவாக்கத் தகைமையையே கொண்டவர்கள். (They are legislators) அவர்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கு பற்றி மக்கள் குறைகளைத் தெரியப்படுத்த வேண்டுமே ஒளிய நடைமுறைப்படுத்தும் பணியினை ஏற்றிருக்கும் முதலமைச்சர், அமைச்சர் என்பவர்களுடன் இணைத்தலைவர்களாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவார்களா என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இணைத் தலைவர்களுக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட வாய்புள்ளதை அங்கு நடைபெற்ற சம்பவங்கள் கோடிட்டு காட்டியுள்ளது. முல்லைத்தீவில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சரின் கூற்றுக்கு பதிலளித்த இணைத் தலைவரான சிவமோகன் எம்.பி, இங்கு தீர்ப்புக்கள், கட்டளைகள் வழங்குவதற்கு இது நீதிமன்றம் இல்லை. மக்கள் பிரச்சனைகளை அறிந்து திணைக்களம் ஊடாக தீர்த்து வைக்கும் அபிவிருத்திக் கூட்டம் என கூறியுள்ளார்.

இது ஒரு புறமிருக்க, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அபிவிருத்திக் குழுக்களினால் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன்னும் சில தீர்மானங்கள் முடிவுகள் எட்டப்படாத நிலையில் இழுபறியில் காணப்பட்டன. குறிப்பாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நகரசபை பொது பூங்கா கட்டுமானத்திற்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பில் முன்னைய அரசின் காலத்தில் அமைச்சர் றிசாட் அவர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டன. இறுதியில் முதலமைச்சர் தற்போதைய நகரசபை பொது பூங்காவை அந்த நிதியில் புனரமைப்பது என எடுத்த தீர்மானம் கூட நிறைவேற்ற அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் நான்கு தலைவர்கள் இருக்கும் போது குழப்பம் தவிர்க்க முடியாதது தான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் முல்லைத்தீவில் முஸ்லிம்களின் குடியேற்றம் தொடர்பில் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களும், கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகளும் முரண்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

இது ஒரு புறமிருக்க, ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தீர்மானம் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் கூட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறாயிரத்து 348 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அது முன்னைய அரசின் காலத்தில் நடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான நிலையில் அவை இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சு எடுக்கும் தீர்மானத்தை அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றுவது பொருத்தமானதா? அல்லது எடுக்கப்பட்ட தீர்மானம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறதா என்ற ஐயம் எழுகின்றது.

DSC06276அரச திணைக்கள தலைவர்களுக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் சில கட்டளைகளும் வழங்கப்படுவதுடன் அவர்களது அமைச்சின் செயற்பாடுகளுக்கு மாறாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் உள்ளன. சில அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்ளாதும் விடுகின்றனர். குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்னிணைப்பு நிறுத்தப்பட்டு, தற்போது கடன் அடிப்படையில் அவை வழங்கப்படுகின்றன. ஆனால் தற்போது வவுனியா மாவட்ட ஒருகிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேறிய அனைவருக்கும் இலவச மின்னிணைப்பு வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை இலங்கை மின்சார சபை ஏற்குமா…? அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அந்த அமைச்சினால் வழங்கப்படுமா..? அதை பெற்றுக் கொடுக்க இணைத் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆக மொத்தில், மாவட்ட அபிவிருத்திக்காகவும், பிரச்சனைகளை தீர்க்கவும் கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இருந்ததைப் போன்று இல்லாமல் ஒரு ஆக்கபூர்வமான, அபிவிருத்தி நோக்காக கொண்ட அமைப்பாக செயற்பட வேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பு.

N5