செய்திகள்

முதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை

-அ.நிக்ஸன்-
1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது அன்றை தமிழ் தலைவர்களான தந்தை சொல்வா, அமிர்தலிங்கம் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். யாப்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போது அன்றை நாட்களை கரிநாட்களாகவும் பிரகடனப்படுத்தி மக்களின் எதிர்ப்பையும் வெளிக்காட்டினர்.

ஓற்றையாட்சியும் மக்களும்
ஆனால் இன்றை தமிழ் தலைமைகள், மூன்றாம் குடியரசு யாப்பு என எதிர்ப்பார்க்கப்படும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்குவகிக்கின்றனர். அத்துடன் வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை போன்ற அடிப்படை விடயங்களைக் கூட விட்டுக் கொடுத்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு மக்களையும் வற்புறுத்துவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழரசுக் கட்சியை தூக்கி எறிந்துவிட்டு தந்தை செல்வா தமிழர் விடுதலைக் கூட்டணியை 19977இல் உருவாக்கினார். ஆனால் அன்று தூக்கி எறியப்பட்ட தமிழரசுக் கட்சியை இன்று தாங்கிக் கொண்டு சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கின்றனர்.

ITAK

அமர்தலிங்கம் விலகிய பதவி
அமிர்தலிங்கம் நிராகரித்து இராஜினாமா செய்த எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் தற்போது சம்பந்தன் தலையில் தூக்கிக் கொண்டு இதுதான் தமிழர்களின் இராஜதந்திரம் என கதைவிடுவதும் கவலைக்கிடமான செயல் என்று சுட்டிக்காட்டியுள்ள விமர்சகர்கள், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசிய உணர்வை தமிழரசுக் கட்சி மழுங்கடித்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் தீவிரமடைந்து கிழக்கில் தமிழர்களின் எண்ணிக்கையும் சிதைவடைந்து, யுத்தத்தினால் பிறப்பு வீதங்களும் குறைவடைந்து மக்கள் வாழ்க்கையும் நலிவடைந்துள்ள நிலையில் எதுவும் இல்லாத புதிய யாப்புப்பை மக்கள் ஏற்க வேண்டும் என வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம் எனவும் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிங்கள அரசியல் கட்சிகள்
அதேவேளை பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே ஏற்படுகின்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிகளினால் புதிய யாப்பு கைவிடப்பட்டாலே தவிர நிச்சயமாக அந்த யாப்பு நிறைவேறக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகவுள்ளன.

ஐக்கியநாடுகள் சபைக்கும் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் புதிய யாப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைவுள்ளன. அதுவும் பிரதான தமிழ்க் கட்சி ஒன்றின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுமுள்ளது என்று காண்பித்தால போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றில் இருந்து இலங்கை அரசு தப்பித்துவிடும் நிலை உண்டு.

குறிப்பாக இன அழிப்பு என்று உறுதிப்படுத்த முற்படும் சில தமிழ்த்தரப்புகள் மற்றும் சில சர்வதேச சக்திகளின் வாயையும் மூடிவிடலாம் என்பதுதான் சிங்கள அரசியல் கட்சிகளின் நோக்கம். ஆகவே இவ்வாறான பின்னணியுடன் உருவாக்கப்பட்டு வரும் புதிய யாப்பு என்பது தனியே ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்துக்கு மாத்திரம் உரியதல்ல. முழு சிங்கள சமூகத்திற்கும் குறிப்பாக மீண்டுமொரு முறை சிங்கள இறைமையை உறுதிப்படுத்தும் ஒட்டுமொத்த ஏற்பாடாகவே பார்க்க வேண்டும்.

sampanthan

முள்ளிவாய்க்காலின் பின்னரான நிலை
அதுவும் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின்னரான சூழலில் இலங்கை தன்னை நியாயப்படுத்தி இன அழிப்பு அரசு அல்ல என்பதை இந்த புதிய யாப்பு நிறுவியுள்ளது. அதுவும் பிரதான தமிழ் கட்சி ஒன்றின் ஆதரவுடன் என்பதுதான் சோகமானது. இத்தனை இழப்புக்கு பின்னரும் புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக உள்ளடக்கம் செய்யபட்டிருந்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் பிரிவினைக்கு எதிரான வாசகங்கள் பரிந்துரையின் முக்கியமான பகுதிகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒற்றையாட்சித் தன்மை மாறுபடதா நிலையில் அதிகாரங்களை நிர்வாக மட்டத்தில் பரவலாக்கம் செய்வது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் காணி அதிகாரங்கள் மத்திய அரசிடமும் மாகாணங்களில் உள்ள அரச காணிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் நாடாளுமன்றத்தின் ஊடான சபை ஒன்றிடம் இருத்தல் அவசியம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களின் ஒற்றுமை?
மாகாணங்களின் ஒற்றுமை அல்லது இணைந்து பணியாற்றுதல் போன்ற விடயங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் மாகாணங்களுக்கான நிதி விடயங்கள் மற்றும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய தெளிவான விதப்புரைகள் எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அதேவேளை 13 ஆவது 16 ஆவது திருத்தச்சட்டம் அப்படியே புதிய யாப்பிலும் விதந்துரைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் பரிந்துரையின் முக்கிய வாசகங்களில் காணி, பொலிஸ், மற்றும் நிதியை தீர்மானித்தல் போன்ற விடங்கள் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளை நாடாளுமன்றத்தின் முதல் சபைக்கு 245 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் பற்றிய மீள் பார்வைக்க இரண்டாம் சபை நியமிக்கப்படும். அதில் 18 சிங்களவர்கள், ஆறு இலங்கைத் தமிழர் மேலும் 6 மலையகத் தமிழர் ஆறு முஸ்லிம்கள் பதவி வகிப்பர் என கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டாம் சபையில் மொத்தம் 36 உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

உப ஜனாதிபதி பதவி யாருக்கு?
உப ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் இரண்டாம் சபையின் தலைவராக இருப்பார். ஆனால் அந்த உப ஜனாதிபதி தமிழரா முஸ்லிமா என்று கூறப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு யாப்பில் கூறப்பட்டுள்ள முன்றில் இரண்டு பகுதி புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழர்களின் சுயமரியாதையை இந்த இந்த யாப்பு காப்பாற்றுமா என்பதை சம்பந்தன் மக்கள் முன்னிலையில் எந்த அடிப்படையில் கூறப்போகின்றார்?