செய்திகள்

மைத்திரி- ரணில் முரண்பாடும் பௌத்தகுருமாரும்

-அ.நிக்ஸன்-
நல்லாட்சி அரசாங்கத்தின் முரண்பாடுகளை தீர்ப்பதில் குறிப்பிட்ட சில பௌத்த குருமார் ஈடுபட்டுள்ளனர். ஐக்கியதேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக ஆட்சி செய்வதன் மூலம் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் சர்வதேச அழுத்தங்களை குறைக்கலாம் என்ற அடிப்படையில் இரு கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் பிரச்சினைகளை தீர்க்க பௌத்த குருமார் ஈடுபடுவதாக தகவல்.

குழப்பங்களை தவிர்ப்பது
ஆனால் பௌத்த குருமாரின் இந்த நடவடிக்கை தொடர்பாக ஏனைய சில பௌத்த குருமாருக்கு உடன்பாடு இல்லையென்றும் நல்லாட்சி அரசாங்கத்தை பதவி கவிழ்க்க வேண்டும் என்று கூறிவருவதாகவும் அறியமுடிகின்றது. எவ்வாறாயினும் மேற்படி இரு கட்சிகளுக்கும் நெருக்கமாகவுள்ள பௌத்த குருமார் சிலர் முரண்பாடுகளை தீர்த்து நல்லாட்சி அரசாங்கம் நீடித்துச் செல்ல வேண்டும் என்பதில் அக்றையுடன் செயற்பட்டு வருவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நெருக்கான செய்தியாளருக்கு கூறியுள்ளார்.

பௌத்தகுருமாரின் இந்த நடவடிக்கை தொடர்பாக அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை என்றும் முடிந்தவரை மைத்திரி ரணில் நல்லாட்சியில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்ப்பதே முக்கிய நோக்கம் என்றும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நல்லாட்சியில் ஏழுந்துள்ள முரண்பாடுகளுக்கு பல்வேறு அரசியல் காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனாலும் முக்கியமாக இரண்டு காரணங்களே இருப்பதாக ஐக்கியதேசிய கட்சியின் தகவல் மூலம் அறிய முடிகின்றது.

Ranil-maithri

ஐ.தே.கவின் நிலைப்பாடு
ஓன்று இனப்பிரச்சினை விவகாரத்தில் குறைந்த பட்ச அதிகாரப்பரவலாக்கத்தை புதிய அரசியல் யாப்பின் மூலமாக செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிப்பதாகவும் ஆனால் அதிகாரப்பரவலாக்கம் எதுவும் இன்றி வெறுமனே திருத்தங்களை மாத்திரம் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூறி வருகின்றன. இந்த விடயத்தில் இரு கட்சிகளும் உடன்படாத நிலை நீடிப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றிருப்பதாகவும் தகவல்.

இரண்டாவது மஹிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு ஆதரவான நடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான விசாரணைகளின் தீவிரத் தன்மையை குறைப்பது அல்லது விசாரணையை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பார்க்கின்றது. குறிப்பாக போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து விடயங்களில் விசாரணைக்கு யாரையும் உட்படுத்தக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தி வருகின்றது. இதனை ஐக்கியதேசிய கட்சி தேசிய பாதுகாப்புக் கருதி கொள்கையளவில் ஏற்றுள்ளது. ஆனாலும் ஊழல் விவகாரங்களில் விசாரணை தொடருமொன ஐக்கியதேசிய கட்சி கூறியுள்ளது.

ஊழல் விவகாரத்தில் விசாரணை
ஆனாலும் ஊழல் விவகாரங்களிலும் விசாரணைகள் நடத்தப்படக்கூடாது என்றும் அது அரசியல் ரீதியான பழிவாங்கல் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் ஊழல் விவகாரங்கள் அரசியல் பழிவாங்கல்கள் அல்ல என்றும் மக்களின் பொதுப் பணத்தை சூறையாடுவதை தடுப்பதன் மூலமாகவே இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பௌத்த குருமாரைப் பொறுத்தவரை இவ்வாறான ஏட்டிக் போட்டியான கருத்துக்களை தவிர்த்து இரு கட்சிகளும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக வடக்கு கிழக்கு குறித்த விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படாமல் கட்சிகளின் உள்ளக முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலத்தை கடத்தாமல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டும் என பௌத்த குருமார் இரு கட்சிகளுக்கும் ஆலோசணை கூறி வருகின்றனர். இங்கு பௌத்த குருமார் கூறுகின்ற தேசிய பாதுகாப்பு விடயம் என்பது யுத்தத்தின் பின்னரான சூழலில் மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாமல் தடுப்பது. புpரதானமாக தற்போது வடக்கு கிழக்கில் இடம்பெறும் மக்கள் போராட்டங்களை தடுப்பது பற்றியதாகும்.

இலங்கையின் அந்தஸ்த்து
கடந்த காலங்களில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி பதவி வகித்த மேற்படி இரு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் குறிப்பாக நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிபுரிவதன் மூலம் சிங்கள மக்களுக்கு வரக்கூடிய லாப நட்டங்களை தற்போது பௌத்த தேரர்கள் கணக்கு பார்க்கின்றனர். ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் கீழான மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக இலங்கை மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தி வருகின்றமை ஆபத்தானது என பௌத்த குருமார் உணருகின்றனர்.

இதன் விளைவாகவே மேற்படி இரு கட்சிகளும் ஒன்றித்து ஆட்சி நடத்த வேண்டும் என்ற யோசனை எழுந்துள்ளது. அதேவேளை பௌத்த குருமாரின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிடும் வேறு சில பௌத்த குருமார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தால் இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் நெகிழ்வுப் போக்கிற்கு இடமில்லை என கருதுகின்றனர். குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளை தூக்கி எறிந்து சீனா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகளுடன் நட்புறவை பேணி இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்தலாம் என்பது அவர்களின் கருத்து.

The Mahanayake Theras

மேற்குலகநாடுகளும் ஆதரவு
இந்தக் கருத்தில் மகாநாயக்க தேரர்களுக்கும் உட்பாடு உள்ளது என்றே பௌத்த பீட தகவல்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும் மேற்படி இரு கட்சிகளையும் இணைந்து ஆட்சி நடத்தும் ஏனைய பௌத்த குருமாரின் முயற்சிக்கு இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் இராஜதந்திர தகவல்கள் கூறுகின்றன. ஆகவே இரு கட்சிகளும் இணைந்து தொடர்ச்சியாக ஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்து தற்போது பலமாகவே காணப்படுவதால நல்லாட்சி அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் முரண்பாடுகளில் ஓர் உடன்பாடாக வருவதற்குரிய சாத்தியங்கள் தென்படுகின்றன.

அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து வரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையகக் கட்சிகளும் மேற்படி இரு கட்சிகளும் தொடர்ச்சியாக இணைந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. ஆகவே இந்த நல்லாட்சி முறையை ஆரோக்கியமானதாக பலர் கருதுகின்றனர். ஆனால் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்ற முயற்சியின் பின்னால் உள்ள பாதிப்பான இரண்டு விடயங்கள் குறித்து மேற்குலகநாடுகள் அக்கறைப்படுவதாக இல்லை.

நியாயப்படுத்தும் பிக்குமார்.
ஒன்று ஏனைய சமூகங்களின் அரசியல் உரிமைகளை ஒற்றையாட்சிக்குள் கொண்டு வருகின்ற மேற்படி இரு கட்சிகள் மற்றும் பௌத்த குருமாரின் சுயநல அரசியல் நியாயப்படுத்தப்படுகின்றது. இரண்டாவது ஒற்றுமை அல்லது நல்லாட்சி, நல்லிணக்கம் என்ற பெயரில் சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகள் அவர்களின் தாயகம், தேசியம் என்ற பேச்சுக்கள் அனைத்தையும் கைவிட்டு புதிய அரசியலமைப்பின் மூலம் ஒன்று சேர்ந்து வாழுங்கள் என்ற தவறான செய்தி நியாயமான உரிமையாக அர்த்தப்படுகின்றது. ஆகவே நல்லாட்சி, நல்லிணக்கம் என்ற பெயரிலான இந்த முயற்சியின் பின்னால் உள்ள ஆபத்துக்கள் பற்றி ஏனைய தேசிய இனங்களை விழிப்படையச் செய்வது யார்?