Drone கமரா பயன்பாடு தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிமுகம்
விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் (UAVs) பொதுவாக ஆங்கிலத்தில் Drone என்று அழைக்கப்படுவதுண்டு. சமீப காலமாக இந்த பறக்கும் இயந்திரங்கள் வர்த்தக மற்றும் தனியார் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆகாயத்தில் பறப்பதற்கு அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து இத்தகைய விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் மூலம் நாட்டுப் பிரஜைகளும் உல்லாசப் பயணிகளும் இலங்கையில் முக்கியமான இடங்களை படம் எடுத்து வருவது எமது அமைச்சுக்கு நன்கு தெரியும். இந்த காட்சிகள் சமூக ஊடகத்தளங்கள் மூலமும் Online Video படங்கள் மூலமும் பொதுவாக வெளியிடப்படுகின்றன. இவ்விதம் பல நிகழ்வுகள் ஒரு நிறுவனத்தின் பிரச்சார செயற்பாடுகளுக்காக அல்லது ஒரு நிகழ்வை நேரடியாக ஒளி,ஒலிபரப்புவதற்கு பயன்படுத்தப்படுவது எமக்கு நன்கு தெரியும். இவை சுகாதார மேம்பாடுகளுக்காகவும் சரியான இடத்தை இலக்கு வைத்து விவசாயம் அதாவது சிறிய அடிப்படையிலான கமநல செய்கைகளில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் ஆபத்துக்கள் நெருங்கும் போது இவை ஆகாயத்தில் இருந்து படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்வுகள், கொண்டாட்ட ஒன்று கூடல்கள் போன்ற தனியார் நிகழ்வுகளையும் ஆகாயத்தில் இருந்து படம் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் இவ்விதம் விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் பாவனையாளர்களுக்கு கூடுதலாக
• 25 கிலோ கிராம் நிறையை விட கூடிய விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி பயன்படுத்தலாகாது.
• ஒரு கிலோ கிராமுக்கும் 25 கிலோ கிராமுக்கும் இடைப்பட்ட நிறையுடைய விமானி இல்லாத பறக்கும் இயந்திரம் ஒன்றை சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரத்துடன் பயன்படுத்தலாம்.
• ஒரு கிலோ கிராமுக்கும் குறைந்த நிறையுடைய விமானி இல்லாத பறக்கும் இயந்திரம் ஒன்றை சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி பயன்படுத்தலாம். இவை ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஒரு பொது இடத்தில் அப்பகுதியிலுள்ளவர்களுக்கும், சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கும் கல்வி நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாம்.
• விமானியற்ற ஒரு பறக்கும் இயந்திரத்துக்கென கொடுக்கப்படும் அடையாள இலக்கம், அதன் உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை உள்ளடக்கும் அடையாள முத்திரையொன்று இந்த இயந்திரத்தில் பொறிக்கப்படும்.
• எத்தகைய நிறையையும் உடைய விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்தின் விசேட அங்கீகாரத்துடன் மாத்திரமே வாடகைக்கு அல்லது ஒருவருக்கு சன்மானமாக உதவுவதற்கு பயன்படுத்த முடியும். இத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான வாடகைக்கான கட்டணத்தை குறிப்பிட்டு தனித்தனியாக விண்ணப்பங்களை செய்து அங்கீகாரத்தை பெற வேண்டும்.
• தறையிலுள்ளவர்களுக்கு எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் எந்த நிறையையும் உடைய விமானியற்ற பறக்கும் இயந்திரமொன்றின் செயற்பாட்டு வலு, அதற்கு எங்கிருந்து சக்தி வழங்கப்படுகின்றது, அதனை எவ்விதம் கட்டுப்படுத்த முடியும் போன்ற சகல விபரங்களையும் எடுத்துரைத்து அதற்கு பின்னரே அவற்றை சாதாரண பயன்பாட்டுக்கு சேர்த்துக் கொள்ள முடியும்.
• பின்வருவோர் விமானியற்ற பறக்கும் இயந்திரம் ஒன்றை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
1. இந்த பறக்கும் இயந்திரத்தை பயன்படுத்த தெரியாதவர்கள் அல்லது அதனை பாதுகாப்பாக பயன்படுத்த முடியாதவர்கள்.
2. நல்ல உடல் ஆரோக்கியமும் மனோநிலையும் இல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது.
3. மதுபோதையில் உள்ளவர்கள் அல்லது உளநல ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்களை பயன்படுத்துபவர்கள் மற்றும்
4. சமூக பொறுப்புணர்வு இல்லாதவர்கள்.
• விமானியற்ற ஒரு பறக்கும் இயந்திரம் ஒரு விமான நிலையத்தின் எல்லையிலிருந்து 05 மைல் தொலைவிற்கு உட்பட்ட பகுதியில் 400 அடிக்கு கூடுதலான உயரத்தில் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த உயரத்தில் பறப்பதற்கும் சிவில் விமான போக்குவரத்து சபை பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினை பெற வேண்டும்.
• சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூல அங்கீகாரம் இன்றி விமானியற்ற விமானமொன்றை இலங்கையில் எந்த பகுதியிலும் பயன்படுத்த முடியாது.
a. எந்தவொரு விமான நிலையத்துக்கும் அருகிலோ விமான இறங்கு தறைக்கு அருகிலோ இதனை பயன்படுத்த முடியாது.
b. பொது கூட்டமொன்று நடைபெறும் இடங்களிலும் பயன்படுத்த முடியாது.
c. சன நெருக்கம் கூடுதலான இடத்திலும் பயன்படுத்த முடியாது.
d. ஒரு நெடுஞ்சாலையின் மீதோ அல்லது ரயில் பாதையின் மீதோ பயன்படுத்த முடியாது.
e. அதி சக்திவாய்ந்த மின்சார இணைப்பு வயர்களுக்கு மேலாகவும் அவற்றுக்கு கீழாகவும் இவற்றினை பறக்க விட முடியாது.
f. தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அருகிலும் பயன்படுத்த முடியாது
g. தேசிய பூங்காக்கள் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் அல்லது பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ள பகுதியில் இவற்றை பயன்படுத்த முடியாது.
• விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை இவ்விடங்களில் பயன்படுத்தலாகாது.
a. எந்தவொரு காணிக்கு மேலாகவும் அக்காணியில் குடியிருப்பவர்கள் அல்லது அக்காணியின் உரிமையாளரின் அனுமதியின்றி இவற்றை பறக்க விட முடியாது.
b. மூன்றாவது நபருக்கு அல்லது கட்டிடங்களுக்கு அல்லது பொருட்களுக்கு ஆபத்து அல்லது சேதம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பயன்படுத்த கூடாது.
• சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் அங்கீகாரமின்றி இந்த பறக்கும் இயந்திரங்களில் இருந்து எந்தவொரு பொருளையும் தறையில் வீசக் கூடாது. அத்துடன், அதில் ஏதாவதொரு சுலோகங்கள் எழுதப்பட்ட கொடிகளையும் பறக்க விடக்கூடாது.
• விமானியற்ற பறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவோர் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும்.
a. இந்த பறக்கும் இயந்திரம் ஆகாயத்தில் செல்வதை தறையில் இருந்து அவதானிக்க கூடியதாக இருக்க வேண்டும்.
b. அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானமொன்று பறப்பதை இதன் மூலம் அவதானிக்க கூடாது.
c. இந்த பறக்கும் இயந்திரத்தை மேகங்களை விட தாழ்வாக பறக்க விட வேண்டும்.
• விமானியற்ற பறக்கும் இயந்திரம் ஒன்று சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தின் விசேட அனுமதியின்றி எந்த வகையான பறக்கும் போட்டிகளிலும் கலந்து கொள்ளலாகாது.
• விமானியற்ற பறக்கும் இயந்திரம் மாலைப்பொழுதில் இருந்து காலை வரை (இரவில்) பயன்படுத்தலாகாது. -(3)




