செய்திகள்

HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டில் HIV நோய்த் தொற்றுக்குள்ளானோரின் வீதத்தில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரை HIV வைரஸ் தொற்றுக்குள்ளான 259 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அந்த நோய் தாக்கம் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
HIV நோய்த் தொற்றுக்குள்ளானோரில் 189 ஆண்களும், 60 பெண்களும் அடங்கியுள்ளதுடன், 15 கர்ப்பிணித் தாய்மார்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 25 தொடக்கம் 45 வயதிற்கிடைப்பட்டவர்களே அதிகம் HIV நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். மேலும் கடந்த வருடத்தில் 15 தொடக்கம் 25 வயதிற்கிடைப்பட்டவர்களில் 28 பேர் HIV நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் பாலியல் நோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் கடந்த வருடம் 11 இலட்சம் பேரிடம் HIV சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே HIV நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். -(3)