சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 06
எனது கடந்த பதிவின் இறுதியில் அல்பிரட் துரையப்பா பற்றிக் குறிப்பிட்டு ஏன் அவரை கொலை செய்வதற்கு நானும் சிவகுமாரனும் முடிவு செய்தோம் என்று விளக்கியிருந்தேன். இந்தப் பதிவிலே, அல்பிரட் துரையப்பாவை கொலை செய்வதற்கு (1971 ஆம் ஆண்டு மார்ச்) எவ்வாறு டைனமைட் மூலம் குண்டொன்றை தயாரித்தோம், எவ்வாறு இந்த குண்டுத் தாக்குதலை நடத்தினோம், ஏன் இந்த தாக்குதல் வெற்றியளிக்கவில்லை, எவ்வாறு சிவகுமாரன் கைது செய்யப்பட்டான் என்பன போன்ற விடயங்களை பதிவிடுகிறேன்.
துரையப்பாவை கொலை செய்வதற்கு டைனமைட்டை பயன்படுத்தி செய்த குண்டையே பயன்படுத்த வேண்டும் என்றும் அப்போதுதான் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அதனை எறிந்தும் கூட தாக்குதலை நடத்தலாம் என்றும் சிவகுமார் ஆலோசனை கூறினார். திடீரென்று ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு யாழ். பொது நூலகத்தில் ஒரு புத்தகத்தை களவெடுக்க வேண்டும் என்றும் அந்த புத்தகத்தில் கைக்குண்டை செய்வதற்கு எப்படி டைனமட் திரவத்தை பயன்படுத்தலாம் என்று அறிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார். அதன்படி, ஒருவாறு அந்த புத்தகத்தை நூலகத்தில் இருந்து களவெடுத்து படித்துப் பார்த்தோம். அந்த புத்தகத்தில் படித்தவை எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.
அது ஒரு அமெரிக்கப் புத்தகம். அமெரிக்காவிலே மலைகளை உடைத்து ரயில் தண்டவாளங்கள் போடுவதற்கு வலிமை மிக்க இரசாயனம் தேவைப்பட்டது. அதற்காக எப்படி டைனமட்டை பயன்படுத்தினார்கள் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஆபிரிக்கர்களே அங்கு டைனமட்டை கையாண்டதாகவும், உரிய பாதுகாப்பு முறை இன்றி அதனை கையாண்டதால் பல ஆபிரிக்கர்கள் கை , கால்கள் அழுகி இறந்ததாதவும் அந்த புத்தகத்தில் படித்த ஞாபகம் இருக்கிறது.
புத்தகத்தை படித்த நாங்கள், ஒரு கைக்குண்டை செய்து பார்த்து பரீட்சிக்க முடிவு செய்தோம். எனக்கு அவ்வளவு தொழில்நுட்ப அறிவு இல்லாததால் சிவகுமார் தான் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார் . தனக்குத் தெரிந்த கிணறு வெட்டும் சிலரிடம் சிறிதளவு டைனமட்டை வாங்கி ஒரு தகரப் பேணியை பயன்படுத்தி கைக்குண்டு ஒன்றை செய்தோம். இதனை வேலணை சாட்டிக் கடற்கரைக்கு அருகில் இருந்த பாழுங் கிணறு ஒன்றுக்குள் எறிந்து பரீட்சித்துப் பார்த்தோம். புகை வெளிவந்ததே தவிர, குண்டு வெடிக்கவில்லை.
சிறிதளவு டைனமற்றை மட்டுமே எமது பரீட்சார்த்த முயற்சிக்கு பயன்படுத்தி இருந்ததால், கூடுதலான டைனமட்டை வாங்கி தனியே டைனமட்டில் குண்டு செய்ய தீர்மானித்தோம். ஆனால், டைனமைட் வாங்குவதற்கு எம்மிடம் பணம் இல்லை. இதனால், நான் வல்வெட்டித்துறை சென்று சோதி அண்ணை , கணபதி மற்றும் குலநாயகம் ஆகியோருடன் ஒரு முதலாளியை சந்தித்து பண உதவி கேட்டோம். அவர் 150 ரூபா கொடுத்தார். இதனை நான் சிவகுமாரனிடம் கொடுத்தேன். அதனைக் கொண்டு, சிவகுமாரன் புன்னாலைக் கட்டுவனில் உள்ள கடை ஒன்றில் இருந்து ஒரு டசின் டைனமைட் வாங்கி வந்தார்.
1971 மார்ச்சில் யாழ்ப்பாணம் கண்டி வீதியில் இருந்த பிரீமியர் கபேயில் ஒரு களியாட்ட கழகத்தை திறந்து வைப்பதற்கு துரையப்பா வருவதாக எமக்கு தகவல் கிடைத்தது. யாழ் நகரத்தின் ஒரு இளைஞர் குழுவைச் சேர்ந்த சசி என்பவரே எமக்கு துரையப்பா பற்றிய தகவல்களை வழங்கி வந்தார்.
அன்றைய தினம் நிகழ்வுக்கு வந்திருந்த துரையப்பா தனது காரை வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்பாக நிறுத்தி இருந்தார். நிகழ்வு முடிந்து அங்கிருந்து அவர் தனது காருக்கு நடந்து வருவதற்கு 5 நிமிடங்கள் எடுக்கும் என்று கணித்து அதற்கேற்ப குண்டு வெடிப்பதற்கான திரியை தயார் செய்திருந்தோம். திரியை பற்ற வைக்கும் பணி சிவகுமாரனுக்கு உரியது. எனது பணி துரையப்பா நடந்து வரும் சமிக்ஞையை சசியிடம் இருந்து பெற்று சிவகுமாரனுக்கு தெரிவிப்பது.
துரையப்பா நடந்து வருவதாக சசி எனக்கு சமிக்ஞை காட்டினார். நான், அதனை சிவகுமாரனுக்கு தெரிவித்தேன். ஆனால், துரையப்பாவின் அதிஷ்டம், வரும் வழியில் ஒருவருடன் நின்று கதைத்தார். அதற்குள் குண்டு வெடித்து விட்டது. இந்தக் குண்டினால், அவரது கார் பயன்படுத்த முடியாத அளவுக்கு தூக்கி வீசப்பட்டது.
திரியை சிவகுமாரன் கொழுத்தியதுடன், நாம் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று முன்னரேயே திட்டமிட்டிருந்ததால் சிவகுமார் திரியை கொளுத்தியவுடன் அங்கிருந்து அகன்று விட்டோம். அதனால், துரையப்பா தாக்குதலில் சிக்கவில்லை என்பது எமக்குத் தெரியாது.
எமது சைக்கிள்களை ஆரிய குளம் சந்தியில் நிறுத்தி வைத்திருந்தோம். அங்கு சென்று சைக்கிள்களை எடுத்த நாம், இரு வேறு வழிகளில் உரும்பிராயில் உள்ள எனது வீட்டுக்கு செல்வது என்று முடிவு செய்தோம். நான், தொழில்நுட்ப கல்லூரி வழியாக கொக்குவில் சென்று அங்கிருந்து கோண்டாவில் வழியாக உரும்பிராய் சென்றேன். சிவகுமாரன் கோப்பாய் இராச வீதி வழியாக வீடு வந்து சேர்ந்தார். இருவரும் ஒன்றாக இருந்து கோழிக்கறியுடன் சோறு சாப்பிட்டு விட்டு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நான் சுன்னாகத்தில் இருந்த மாணவர் பேரவை அலுவலகத்திலும், சிவகுமாரன் தனது வீட்டிலும் அன்றிரவு படுப்பதற்காக சென்றுவிட்டோம்.
இது எனக்குத் தெரியாது, மறுநாள் காலை எனது வீட்டுக்கு வரும்போது, சிவகுமார் வீட்டுக்கு அருகே பொலிசாரின் நடமாட்டத்தை தூரத்தில் கண்டு என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டு, வல்வெட்டித்துறைக்கு தப்பிச் சென்று விட்டேன். அங்கு குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோர் வீட்டில் மூன்று நாட்கள் தங்கினேன்.