செய்திகள்

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கின்றது: மூவருக்கு கட்டாய மருத்துவ சிகிச்சை

தம்மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உண்ணாவிரத்ததில் ஈடுபட்டிருந்த கைதிகளில் மூவர் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த கைதிகளின் நிலைமை குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.என்.சீ. தனசிங்கவிடம் வினவியபோது, சிகிச்சையின் பின்னர் அவர்களை இன்று மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்தார்.

இருந்தபோதிலும், இந்த மூவருமே மருத்துவ சிகிச்சையை ஏற்க மறுத்துவிட்டதாகவும், அதனால் நிர்ப்பந்தமாக அவர்களுக்கு ஊசிகள் ஏற்றப்பட்டதுடன், சேலைனும் வழங்கப்பட்டதாக கைதிகளின் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை குறித்து தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியர்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

தம்மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

கைதியொருவர் நீதிமன்றத்தினால் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டதுடன், ஏனைய 13 பேரும் தொடர்ந்தும் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

R-06