செய்திகள்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 50 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 50 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாதமொன்றிற்கு சுமார் 20 பேர் வரை தொற்றுக்குள்ளனானமை தெரியவந்துள்ளதாக பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் வரை 1,309 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில், தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதாகவும் டொக்டர் சிசிர லியனகே கூறியுள்ளார்.

கடந்த வருடத்தில் 15 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டதாகவும், அதில் 8 பேர் குழந்தை பிரசவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆரம்ப கட்டத்திலேயே உரிய முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டதால் சிசுக்கள் எச்.ஐ.வி தொற்றுடன் பிறக்கவில்லை எனவும் பாலியல் நோய்கள் மற்றும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

n10