செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு “மலையாள மாந்திரீகம்’ தெரியும் ;சபையில் பிரதமர் பரிகாசம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு “மலையாள மாந்திரீகம்’ தெரியும் என்பது தமக்கு தெரியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.யான உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பிரதமர் விக்கிரமசிங்க தமது இந்திய விஜயத்தின்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இந்திய பிரதமருடன் பேசியதாக அந்நாட்டு அமைச்சர் நிதின் கட்காரி இந்திய பாராளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில் அவ்வாறான பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பதாக உதய கம்மன்பில தமது கேள்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் இந்திய அமைச்சர் கட்காரியின் பாராளுமன்ற உரை இந்தி மொழியிலேயே ஹன்சார்ட்டில் இருப்பதாகவும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை என்றும் கேள்விக்கு பதிலளிக்கும்போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எனினும் நிதின் கட்காரியின் மேற்படி உரை இந்திய ஆங்கில ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருந்ததாகவும் அவர் வெளியிட்ட கருத்து தவறு என்றால் அது தொடர்பில் எடுக்கப்பட்ட இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை என்னவென்றும் இந்தி மொழி அறிவுள்ள அதிகாரி ஒருவர்கூட இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கிடையாதா என்றும் உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

இருப்பினும் இதில் இனவாதத்தை கிளப்பவேண்டாம் என்று தெரிவித்த பிரதமர் விக்கிரமசிங்க, அனைத்து ஊடகங்களிலும் வரும் செய்திகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் அப்படி செய்வதென்றால் புதுடில்லியிலும் சென்னையிலும் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயங்களில் இந்தி, தமிழ், மலையாளம் என ஒவ்வொரு மொழிகளுக்கும் பெருந்தொகை அதிகாரிகளை வேலைக்கு அமர்த்த வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு என்றால் மலையாளம் தெரியுமோ அல்லது இல்லையோ ,மலையாள  மாந்திரிகம் அவர்களுக்கு தெரியும் என்பது தனக்கு தெரியும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார்.

n10