செய்திகள்

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 08

துரையப்பா கொலை முயற்சியில் பொலிசாரினால் தேடப்பட்டமையால் கண்டி சென்று, அங்கிருந்து கொழும்பு  சென்று சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தது பற்றியும் யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் என்னை சந்தித்தமை பற்றியும் 1971 மே மாதம்  கல்வியங்காட்டில் சிவராஜா என்பவர் வீட்டில் அடுத்து என்ன செய்யலாம் என்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாக கடந்த எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சிவராஜா வீட்டில் அவரது அண்ணன்  அக்காலத்தில் வெளியான Reader’s Digest புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். அவற்றுள் 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு பதிப்பின் ஒரு கட்டுரையில் பெட்ரோல் குண்டு என்று அழைக்கப்படும் ‘ Molotov cocktail’  தயாரிப்பதற்கான  மூலப்பொருட்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

Molotov cocktailMolotov cocktail ஒரு ரஷ்ய கண்டுபிடிப்பு. வெடிக்கக்கூடிய ஒரு போத்தலுக்குள் பெட்ரோலுடன் எரியக்கூடிய திரவமான  மோட்டார் எண்ணெய் (motor oil ) கலக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சற்று தாக்கம் கூடிய பெட்ரோல் குண்டுகளை தயாரிப்பதற்கு பெட்ரோலுக்கு பதில் காபன் ஒரு சல்பைற்றுடன்  வெள்ளை பொஸ்பரசு மற்றும் கந்தகம் ஆகியவையும் பயன்படுத்தப்படலாம்.  1936 ஆம் ஆண்டு ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் இது பயன்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பல நாடுகளும் இதை பயன்படுத்தின.

சிவராஜா வீட்டில் எவ்வாறு இந்த பெட்ரோல் குண்டை தயாரித்து பரீட்சிப்பது என்பது பற்றியும் சில அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தோம். மூலப்பொருட்கள் என்னவென்று எமக்கு அப்போது தெரிந்ததே தவிர எவ்வாறு தயாரிப்பது என்று தெரியவில்லை. எம்முடன் விஞ்ஞானம் படித்த பல பாடசாலை இளைஞர்கள் இருந்தனர். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் படித்த சந்திரசேகரம் தான் இந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு இதனை செய்யலாம் என்று கண்டுபிடித்தார். எவ்வாறு இந்த குண்டு தயாரிப்பது என்பதை இங்கு நான்  தவிர்த்து விடுகிறேன்.

தேவையான மூலப்பொருட்களை சில நாட்களுக்குள் வாங்கி குண்டு ஒன்றை செய்த நாம் அதனை பண்ணைப்பாலம் கடந்து மண்டைதீவுக்கு கொண்டுசென்று பரீட்சித்து பார்த்தோம். எமது பரீட்சிப்பு வெற்றியளித்திருந்தது. இதனையடுத்து பல குண்டுகளை நாம் தயாரிக்க ஆரம்பித்தோம்.

இதற்கிடையில் எம்முடன் இணைந்திருந்த இளைஞர்களுக்கு சில கட்டுப்பாட்டு  முறைகள் மற்றும் சில பயிற்சிகளை வழங்கினோம். இவை ஆயுதப்பயிற்சிகள் அல்ல.

1972 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை குடியரசாக்கப்பட்டபோது  தமிழ் மாணவர் பேரவை வடக்கு மற்றும் கிழக்கின் பல இடங்களிலும் பெற்றோல் குண்டுகளை பயன்படுத்தி பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

திருகோணமலையில்  டாக்டர் எஸ். மூர்த்தி (வெண்புறா அமைப்பாளர்), ஸ்ரீஸ்கந்தராஜா (மெம்பெர் சிறி), தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியை சேர்ந்த ஈழத்து நாதன், வீரா சுப்பிரமணியம் ,கோபாலகிருஷ்ணன் ஆகியோரும்,  மட்டக்களப்பில் வசந்தகுமார், தியாகராஜா, இராசரத்தினம், ஜெயம் (காசி ஆனந்தனின் தம்பி), வேணு கோபால் (லெப் கேணல் ), சிவராஜா அண்ணன், சேயோன், மேரி மாஸ்ரர் , அறப்போர் வீர அரியநாயகம் ( சந்திரநேருவின் தகப்பனார்) ஆகியோர் தாக்குதல்களில் ஈடுபட்டனர். வடக்கில் நான் உட்பட பலர் தாக்குதல்களில் ஈடுபட்டோம்.

இந்த தாக்குதல்களின் பின்னணியில் எனது தலைமையில் தமிழ் மாணவர் பேரவை இருப்பதை அறிந்துகொண்ட பொலிசாரும் இராணுவத்தினரும் எமக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். என்னை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. இதற்காக பல பொலிசார் மாறுவேடங்களில் நிறுத்தப்பட்டனர். குறிப்பாக வீடா விற்பவர் போல ஒரு முஸ்லிம் போலிஸ் அதிகாரி யாழ் பஸ் நிலையத்தில் வேடம் போட்டிருந்தார். இந்த தகவல்களை அப்போது யாழ்ப்பான  பொலிஸ் அத்தியத்தராக இருந்த சுந்தரலிங்கத்துடன் கூட இருந்து பணியாற்றிய முத்திரை சந்தியை சேர்ந்த சார்ஜன் மார்க்கண்டு என்பவரே எனக்கு வழங்கி வந்தார்.

நான் கோட், சூட் போட்டுக்கொண்டு இளைஞர்களுடன் நடமாடுவேன் என்று பொலிசார் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நான் சில சமயங்களில் சாரத்துடனும், சில சமயங்களில் வேட்டி, சால்வையுடனும் நடமாடி வந்தேன். இதனால் என்னை அவர்களால் பிடிக்க முடியவில்லை. ஆனால், பொலிசார் என்னை தொடர்ந்து தேடினார்கள். பல நாட்களுக்கு என்னால் யாழ்ப்பாணத்துக்குள் ஒளிந்து இருக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டேன். இதனால், தற்காலிகமாக தமிழ் நாடு சென்று மறைந்து இருப்பதே சிறந்தது என்று கருதி 1972 ஜூலை மாதம் வல்வெட்டித்துறையில் இருந்து சோதி அண்ணாவுடன்  தோணி மூலம் தமிழ்நாடு செல்கிறேன். பின்னர் நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் இருந்து தோணி மூலம் வல்வெட்டித்துறை  வருகிறேன்.

periyar_ramaswamy

ஈ.வே. ரா. பெரியார்

நான் இந்தியாவில் தங்கி இருந்த இந்த சில மாதங்களில் பல அற்புதமான மனிதர்களை  சந்தித்தேன். அவர்களுள் ஈ.வே. ரா. பெரியார், ஜி. டி. நாயுடு (தமிழ் நாட்டின் அதிசய மனிதர் என்று அழைக்கப்படுபவர்), மா. பொ . சிவஞானம் ( தமிழ் நாடு சட்ட சபையின் முதலாவது சபாநாயகர்), முரசொலி பத்திரிக்கை ஆசிரியர் அடியார் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். அங்கு அவர்களுடனான எனது சந்திப்புக்கள், ஏனைய செயற்பாடுகள் மற்றும் மட்டக்களப்பில் வைத்து 1973 ஆம் ஆண்டு கைது செய்யப்படும்வரை என்ன செய்தேன் என்பவற்றை எனது அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

பதிவு 7…..

பதிவு 6…..