செய்திகள்

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 09

யாழ்ப்பணத்தில் பொலிசார் என்னை வலைவீசி  தேடியமையினால் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக வல்வெட்டித்துறை சென்று அங்கிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழ் நாடு சென்றிருந்ததாக கடந்த வாரம் எழுதி இருந்தேன்.

உண்மையில் நான் தமிழகம் செல்வதற்கு வேறு இரண்டு முக்கியமான காரணங்களும் இருந்தன.

தமிழ் மாணவர் பேரவை  உருவாக்கப்பட்ட பின்னர் இளைஞர்களுடன் நான்  நெருங்கி பழகியதன் மூலம் ‘ ஆயுதப் போராட்டம் தான் ஒரே ஒரு வழி’ என்ற சிந்தனையில் இளைஞர்கள் இருந்ததை உணர்ந்தேன். அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த சாத்வீக  போராட்டங்களுக்கு தொடர்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வன்முறையையே கட்டவிழ்த்து வந்தமையும் அடக்குமுறைகளை மேலும் மேலும் கட்டவிழ்த்து வந்தமையும் இளைஞர்களின் இந்த சிந்தனைக்கு காரணமாக இருந்தது. வடக்கு கிழக்கின் எல்லா இடங்களிலும் இருந்த மாணவர்களினதும் சிந்தனை இதுவாகத்தான் இருந்தது.

அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் தமிழ் மக்களை  இலங்கையில் பாதுகாப்பதற்கு  அன்றைய சூழ்நிலைகளில் ஆயுத போராட்டம் காலத்தின் தேவையாக இருந்தமையை நானும் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆனால் எம்மிடம் ஆயுத போராட்டதை தொடங்குவதற்கு தேவையான எந்த  ஆயுதங்களும் இருக்கவில்லை.  சிறிய ஆயுதங்களை வைத்து போராட முடியாது. சேகுவாரா யுத்தம் தோல்வி அடைந்தமைக்கு போதிய ஆயுதங்கள் அவர்களிடம் இன்மையும் ஒரு முக்கிய காரணம் என்று அறிந்திருந்தோம்.    எப்படி ஆயுதங்களை பெற்றுக்கொள்வது என்றும் எமக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

இந்த காலப்பகுதியில்தான் பாகிஸ்தான் வங்காள தேசம் (பங்களாதேஷ்) இடையிலான யுத்தம் நடைபெற்று முடிவடையும் தறுவாயில்  இருந்தது. வங்காள தேசம் ஒரு சுதந்திர நாடாக உருவாகுவதற்கான யுத்தத்தில் வங்காளதேச ‘முக்தி வாகினி’ என்ற சுதந்திர போராட்ட குழுவுக்கு ஆதரவாக இந்தியா பெருமளவில் ஆயுத உதவிகளை அப்போது செய்துவந்தது.  அதனால் , இந்த சந்தர்ப்பத்தில்  இந்தியா செல்வது எமக்கும் ஏதேனும் வழியில் ஆயுதங்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அல்லது பயன்மிக்க தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு  உதவும் என்று கருதினோம். இதுவும் நான் இந்தியா செல்வதற்கு ஒரு காரணம்.  தமிழ் நாட்டில் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதும் அங்குள்ள முக்கியமான மக்கள் தலைவர்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் மற்றைய  காரணம்.

இந்தியா செல்வதற்கு முன்பாக  யாழ்ப்பாணம்  திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்துக்கு அருகில் இருந்த மாந்தோப்பில் ஒரு கூட்டத்தை கூட்டினேன். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களினதும்  மாணவர் பேரவையின்  பிரதிநிதிகள்  கலந்து கொண்டார்கள். மாணவர் பேரவை தோற்றுவிக்கப்பட்ட பின்னர் நாம் நடத்திய முதலாவது உள்ளக கூட்டம் இதுவே ஆகும்.  இந்த கூட்டத்தில் நான் மாணவர்  பேரவையின் கொள்கை விளக்கம் பற்றி குறிபிட்டேன் .  இந்த கூட்டத்திலேயே வெவ்வேறு இடங்களிலும் இருந்து அதுவரை செயற்பட்டுவந்த  பேரவையின் உறுப்பினர்கள் முதன் முதலாக சந்தித்து கொண்டதுடன் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.  நான் இந்தியா செல்ல வேண்டி இருப்பதையும் அதற்கான காரணங்களையும் உறுப்பினர்களுக்கு விளங்கப்படுத்தியதுடன், பேரவையின்  பொறுப்புக்களுக்கு நாராயணதாஸ் (கட்டுப்பெத்த தொழில்நுட்ப கல்லூரியில் படிதுக்கொண்டிருந்தவர் -தற்போது நாடுகடந்த அரசாங்கத்தின் ஒரு எம். பி ஆக இருக்கிறார்), சபாலிங்கம் (கட்டுப்பெத்த தொழில்நுட்ப கல்லூரியில் படிதுக்கொண்டிருந்தவர்), மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோரை நியமனம் செய்தேன்.

OLYMPUS DIGITAL CAMERA

முத்துப்பேட்டை

1971 யூலை மாத   ஆடி அமவாசை நாளன்று வல்வெட்டித்துறையில் இருந்து வந்த  அமிர்தலிங்கம் என்பவர் என்னை  திருநெல்வேலியில் இருந்து   அழைத்துச் சென்றார். பின்னர் வல்வெட்டித்துறையில் இருந்து பெரியசோதி என்னை கடல்வழியாக  தமிழகத்திற்கு வள்ளத்தில் அழைத்துச்சென்றார். வங்கக் கடல்கடந்து செல்லக்கண்ணிஆற்றின் ஊடாக பணயம்செய்த நாம்  கோடியக்கரையின் மேற்காக அமைந்திருந்த முத்துப்பேட்டையில் இறங்கினோம்.

தமிழ் நாட்டிற்கு வந்த நாம் வேதாரணியம் ஊடாக திருச்சி சென்று அங்குள்ள மீலத் மஹால் விடுதியில்  அறையொன்றை வாடகைக்கு எடுத்து  தங்கினோம். எமது அறைக்கான வாடகை மற்றும் உணவுக்கான செலவுகளை   பெரியசோதியின் நண்பர்களான ஹரீந்திரனும் சந்திரலிங்கமும் மற்றும் அவர்களுக்கு தெரிந்த சில வல்வெட்டித்துறை வியாபாரிகளும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

முன்னர் திட்டமிட்டிருந்தபடி, நாம் திருச்சியை வந்தடைந்தபின்னர் மாணவர் பேரவை உறுப்பினர்களான தவராஜா ( தற்போதைய  வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்), ஞானம் அண்ணா என்று அழைக்கப்படும் சிவஞானசுந்தரம்  (முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) மற்றும்  மகா உத்தமன் (சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் ) ஆகிய மூவரையும் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக திருச்சி வருமாறு தகவல் அனுப்பினேன். அவர்களும் 1971  ஜூலை மாதம் திருச்சி வந்தடைந்தனர். இவர்கள் வந்ததும் நாம் தமிழ் நாட்டில் என்னென்ன வேலைகள் செய்யவேண்டும் யாரை எல்லாம்  சந்திக்க வேண்டும் என்பவை பற்றி கூடி ஆராய்ந்தோம்.

இந்த கூட்டத்தில் நாம் என்ன முடிவுகள் எடுத்தோம் பின்னர் யார் யாரை எல்லாம் தமிழ் நாட்டில் சந்தித்தோம் மற்றும் அந்த சந்திப்புக்கள் என்பவை பற்றி அடுத்த பகுதியில் பதிவிடுகிறேன்.