செய்திகள்

போலி வெடிகுண்டு பெல்ட் அணிந்து விமானத்தை கடத்திய ஆசாமி: எகிப்து அரசு தகவல்

எகிப்து விமானத்தை கடத்தியவன் அணிந்திருந்தது போலி வெடிகுண்டு பெல்ட் என்று எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “சைப்ரஸ் பாதுகாப்பு துறையின் விசாரணையில் விமானத்தை கடத்தியவன் அணிந்திருந்தது போலி வெடிகுண்டு பெல்ட் என்றும், அதில் எவ்விதமான வெடிப்பொருட்களும் இல்லை என்று தெரியவந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விமானத்தைக் கடத்தியவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக, எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை 50 வயது மதிக்க தக்க ஆண் ஒருவன் கடத்தினான்.

அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில் உள்ள லர்னாகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை கடத்தியவன் தனது இடுப்பில் வெடிகுண்டுடன் கூடிய பெல்ட்டை கட்டியிருந்தான். இதனால் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிகையில் இறங்கவில்லை.

ஆனால் விமானத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் மட்டும் வெளியே செல்ல கடத்தல்காரன் அனுமதி அளித்தான். இதையடுத்து, சுமார் 40 பேர் வெளியேறினர். ஆனால் விமான ஊழியர்கள் மற்றும் சில பயணிகளை கடத்தல்காரன் பிடித்து வைத்திருந்தான்.

கடத்தல்காரன் தனக்கு சைப்ரஸ் தீவில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், விமானத்தை தகர்த்து விடுவேன் என  சைப்ரஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்தான். சைப்ரஸ் நாட்டு பெண்ணான தனது முன்னாள் மனைவியை சந்தித்துப் பேச வேண்டும் எனவும் அந்த கடத்தல்காரன் கோரிக்கை விடுத்தான்.

இதனை அடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு விமானத்தை கடத்தியவன் சைப்ரஸ் போலீசாரிடம் சரண் அடைந்தான். இதனை அடுத்து பல மணி நேரமாக நடந்து வந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது.