செய்திகள்

பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் வக்கார் யூனிஸ்

இந்தியாவில் நடைப்பெற்ற டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு சாகித் அப்ரிடி கேப்டனாக இருந்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தான் விளையாடிய ஒரு போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் அப்ரிடியின் தலைமை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் பயிற்சியாளர் வக்கார் யூனிசும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இந்நிலையில் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் “பயிற்சியாளர் பதவியில் இருந்து கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன். 2015-ம் ஆண்டு நடைப்பெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு நான் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவறிவிட்டது.
மேலும் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தோல்விக்கான காரணம் குறித்து நான் அளித்த ரகசிய அறிக்கை ஊடகங்களில் கசிந்ததும், நான் பதவி விலகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னேற்றம் அடையவேண்டும். எனவே தான் நான் பதவி விலகுகிறேன். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவி செய்ய தயாராகவே உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.