செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்படுத்துவதற்காக   நாடாளுமன்றம் இன்று அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது.

அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றியமைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று முதல் தடவையாக கூடியது. இந்த பேரவைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைவராக செயற்படவிருக்கிறார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் உள்ளிடக்கிய, 21 பேர் கொண்ட வழி நடத்தல் குழுவொன்றும் இன்று ஏற்படுத்தப்பட்டது.

நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பை ஏற்டுத்துவதற்காகவே நாடாளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டதாக பேரவையின் இன்றைய முதலாவது அமர்வில் பேசிய தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், புதிய தேர்தல் முறையொன்றை உருவாக்குதல் ஆகிய முக்கிய விடயங்கள் புதிய அரசியல்யாப்பின் முலம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டதாகவும் பேரவையின் தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர்களாக எழு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் நியமித்தார்.

இதன்படி துணைத் தலைவர்களாக திலங்க சுமத்திபால, செல்வம் அடைக்கலநாதன், கபிர் ஹசிம், சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, திலக் மாரப்பன, மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அரசியலமைப்பு பேரவையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களாக 21 நாடாளுமன்ற உறுபப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், டி.எம்.சுவாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்லஸ் தேவானந்தா, அனுரா குமார திசாநாயக்க உட்பட 21 உறுப்பினர்கள் நிறைவேற்று குழுவின் உறுப்பினர்களாக நிமைக்கப்பட்டனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்துக்களை பதிவுசெய்யும் விசேட குழுவின் அறிக்கை, இம்மாத இறுதிக்குள் வழங்கப்படுமென்று அந்த குழு அறிவித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் அரசியல் அமைப்பு பேரவையின் குழுக்கள் நிமைக்கப்படுமென்றும் அமைச்சர் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவையின் நடவடிக்கைகள் நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

n10