செய்திகள்

விளையாட்டு நலனுக்காக எதுவும் செய்யவில்லை: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

விளையாட்டு நலனுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் எதுவும் செய்யவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி பல்வேறு சிபாரிசுகளை செய்து இருந்தது.

இந்த சிபாரிசுகளை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் எந்தவித கணக்கும் கேட்காமல் ஆண்டுதோறும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பெருந்தொகை கொடுத்து வருவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:-

BCCI-Manohar-Anurag-Thakur-960x576
இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கான பரஸ்பர நல உதவி அமைப்பு போல் செயல்பட்டு வருகிறது. அதுவும் மாநில சங்கங்களுக்கு கொடுக்கப்படும் தொகையில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று கணக்கு கேட்பதில்லை. இது நடைமுறையில் ஊழலுக்கு வழிவகுப்பதாகும். மாநில சங்கங்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அவர்களுக்கு அளிக்கும் தொகைக்கு கேள்வி கேட்பதில்லை என்ற நடைமுறையை இந்திய கிரிக்கெட் வாரியம் பின்பற்றுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கும் நிதி, ஆட்டத்தின் நலனுக்காக அளிக்கப்படுவதாக தெரியவில்லை. அத்துடன் இதற்கான நடைமுறை வெளிப்படை தன்மை கொண்டதாக இல்லை. தேவைப்படும் மாநிலங்களுக்கு விளையாட்டு வளர்ச்சிக்கு நிதி அளிக்காமல், தங்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் நிதி உதவி அளித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களது 29 உறுப்பு மாநிலங்களில் 11 மாநிலங்களுக்கு எந்தவித தொகையும் வழங்காமல் புறக்கணித்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.572 கோடி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது ரூ.1,000 கோடிக்கு அதிகமாகக்கூடும்.
இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.